பின்பற்றுபவர்கள்

சனி, 26 ஆகஸ்ட், 2017

மலைப்பூட்டும் சிலை கூட்டம்!! - 2

அரசருக்கு தலை வணக்கம்!.

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க மலைப்பூட்டும் சிலை கூட்டம்!!

எந்த ஒரு கோயிலையும் அதிலுள்ள சாமியின் பெயரை முன்னிட்டு ஒரு பெயரால்தான் அழைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த கோவிலை பலரும்  பல   தெய்வங்கள் பெயரில் அழைக்கின்றனரே  .... ஒரே குழப்பமாக இருந்தது உள்ளே சென்று பார்க்கும் வரை.


ஒட்டுமொத்த அரேபிய ஐக்கிய நாட்டின் அங்கங்களான  துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம் அல்குவைன் , புஜைரா மற்றும் ராஸ் அல் கைமா போன்ற ஏழு மாநிலங்களுக்கும்  இங்கே இருக்கும் இந்த கோயில் தான் ஒரே ஹிந்து கோவில்.

எனவே தான் விடுமுறை தினமான  வெள்ளிக்கிழமைகளில் ஐக்கிய அரபு நாடுகளின் எல்லா பகுதிகளிலும் வாழும் இந்து மக்கள் இங்கே வந்து வழிபடுகின்றனர்.

கீழ் தளத்தில், சிவன் கோவில் ஒருபுறமும், வெங்கடாச்சலபதி ஒருபுறம் சாய் பாபா, பிள்ளையார், அம்மன்  ஒருபுறமாக ஒரே தளத்தில் இத்தனை சிலைகள் அவற்றிற்கான தனித்தனி பூசைகள், பாலாபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடக்கின்றன. பாலாபிஷகத்திற்கான பாலை அங்கேயே செம்பு பாத்திரங்களில் கொடுக்கின்றனர் இலவசமாக.

சிலைகளாய் இருக்கும் தெய்வங்கள் தவிர படங்களாகவும் ஓவியங்களாகவும் எண்ணிடங்கா தெய்வ உருவங்கள்  இங்கே வைத்து  பூசிக்கப்படுகின்றன.

பிரசாதங்களை கொடுக்கின்றனர், நிறம்பி வழியும் கூட்டத்தினர் அபிஷேகிக்கும் பால் வழியும் சாமி சிலைகளை கண்டபின், அதே தளத்திலிருந்து மேல் நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகள் மூலம் இரண்டாவது தளம் சென்றால் அங்கே சீக்கியர்களின் புனித வழிபாட்டுத்தலமான குருத்வாரா அமைந்திருக்கின்றது.

இந்து கோவிலுக்கு போகுமுன் பாதரட்சைகளை கழற்றி விட்டு வெறும் காலால் நடந்து செல்வதுபோல் இந்த குருதுவாரத்திற்கு செல்லும்போது தலையை மூடி இருக்கவேண்டு,  அதற்கான காவி நிற துண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன அவற்றை அணிந்துதான் செல்லவேண்டும்.

ஏற்கனவே தொப்பி கொண்டு சென்றிருந்தாலும் அவர்கள் சொல்லும் அந்த துணியையை தலையில் அணிவதுதான் அந்த மதத்திற்கு நாம் செய்யும் மரியாதை.

அங்கே இசை கருவிகளை வாசித்து பஜனை நடக்கின்றது.

இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்பதையும் தாண்டி மனம் அந்த ஏகாந்த சூழலோடு இசைந்து அமைதியை அசைபோடுகிறது.

சிறிது நேரம் அங்கே அமர்ந்து பஜனை கேட்டுவிட்டு மீண்டும் அந்த சிறிய பாதை வழியே வெளியில் வந்தேன்.

இந்த கோவில் நம்ம ஊர்களில் பார்க்கும்படியாக பாரம்பரிய ஆகம விதிகள்படி கட்டப்பட்ட கட்டட அமைப்புகொண்டதாக இல்லை என்றாலும் உலகில் வேறு எங்குமே காண கிடைக்காத பல தெய்வங்களின் சிலைகளும் ஒரே இடத்தில் வைத்து பூசிக்கும்படியான  வகையில் அமைந்திருப்பது சிறப்பு.

அளவில் மிக சிறியதாகவும் குறுகியதாகவும் அமைந்திருக்கும் இந்த இந்து கோவிலின் முகப்பில் அமைந்திருக்கும் ஒரு பிரமாண்டமான கட்டிடம் , இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான மசூதி, இந்த மொத்த இடத்தின் முக்கியத்துவத்தையும் புனிதத்தையும் பறை சாற்றுவதோடு  மனிதகுலம்   துண்டாடப்படும் மத பேதமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மத நல்லிணக்க சகிப்புத்தன்மையை உலகுக்கு பாசனம் செய்யும் சாசன பூமியாக காட்சி அளிக்கின்றது.

உலகிலுள்ள  எத்தனையோ நாடுகளில் மத நல்லிணக்க சகிப்புத்தன்மை எள்ளளவேனும் இல்லாத இந்த கால கட்டத்தில் பல பத்து வருடங்களாக, தமது நாட்டை வளம் கொழிக்க செய்ய கடல் கடந்துவந்து  வாழும் நமது  இந்து மற்றும் சீக்கிய சகோதரர்களும் சகோதரிகளும் தங்கள் மதத்து தெய்வங்களை பூசித்து வணங்கி வழிபட வாசல்களை திறந்து கொடுத்திருக்கும் துபாய் தேசத்து அரசரும் அவரது அரசும் நமது சிரங்களில்   தாங்கி  கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

அடுத்து எங்கே... பிறகு பார்க்கலாம்.

அதுவரை.....

நன்றி..

மீண்டும்  ச(சி)ந்திப்போம்.

கோ

10 கருத்துகள்:

  1. அட இப்படி ஒரு வழிபாட்டுத் தலமா? பிரமிப்பு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      பிரமிப்பின் ஒரு பிம்பம் மட்டுமே மசொல்லி இருக்கின்றேன்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. kovil patriya vivaram arumai sir.


    adutha pakuthikkaka waiting:)

    பதிலளிநீக்கு
  3. நண்பரே ஏழு நாடுகள் என்பது தவறு ஏழு மாநிலங்கள் சேர்ந்ததே யூ.ஏ.ஈ. என்ற நாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      நாடுகளிப்போது மாநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

      பிழைத்திருத்தம் செய்து விட்டேன்.

      நன்றி.

      கோ

      நீக்கு
  4. அருமையான ஒரு கோயிலைப் பற்றி அதுவும் அரபு நாட்டில்!! அரபு மன்னரைப் போற்றுவோம்...மத நல்லிணக்கத்தையும் போற்றுவோம். தொடர்கிறோம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள் , ஆம் மன்னரின் பெருந்தன்மைக்கு இன்னொரு மகுடம் சூட்டலாம்.

      கோ

      நீக்கு
  5. 'நான் இப்போதான் படித்தேன் கோயில் பிள்ளை.

    "ஏழு மாநிலங்களுக்கும் இங்கே இருக்கும் இந்த கோயில் தான் ஒரே ஹிந்து கோவில்" - இல்லை. துபாயில் அருகருகே இரண்டு கோவில்கள் இருக்கின்றன. ஒன்று கிருஷ்ணன் கோவில். இரண்டாவது நீங்கள் குறிப்பிட்டுள்ள சிவன் கோவில், அங்கேயே Sideல் மேல் தளத்தில் குருத்வாராவும், சிவன் சன்னதிக்கு அருகிலேயே முருகன் போன்ற மற்ற சன்னிதிகளும் இருக்கின்றன. இந்தக் கோவில்லதான் வெள்ளிக்கிழமைகளில் மாலையில் இலவச பிரசாதம் (பிரெட்/சென்னா போன்றவை) வழங்குகிறார்கள். இந்தக் கோவிலின் இன்னொரு சிறப்பு, 'உருவ வழிபாடு' நடத்த அனுமதிபெற்றுள்ள கோவில் இது. (இதுக்கு துபாய் மன்னரை-அதாவது இதற்கு முன்னால் இருந்த மன்னருக்கும் முன்னால் இருந்தவர் கொடுத்த அனுமதி, அவரைப் பாராட்டலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை தமிழருக்கு வணக்கங்கள்.

      கூடுதல் தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

      நான் சென்றது வெள்ளிக்கிழமைதான் என்றாலும் காலை நேரமென்பதால் ரொட்டியும் சென்னாவையும் கண்ணால் கூட பார்க்க முடியவில்லை.

      கண்டிப்பாக முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களை பாராட்டியே தீரவேண்டும்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு