பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 23 ஜூன், 2017

பெண்மேற்கு பருவக்காற்று!

உயரத்தில்!!

நண்பர்களே,

முன்பொரு காலத்தில் மக்கள், வீடுகளை தங்கள் இஷ்டத்திற்கும் தங்கள் வசதிக்கும் ஏற்ப கட்டி அதில் வாழ்ந்து வந்தனர்.

ஒரு சில குடும்பங்கள் தங்கள் பூர்வீக  வீடுகளிலும் பாரம்பரியமான வீடுகளிலும் பரம்பரை பரம்பரை யாக வாழ்ந்து வந்தனர்.

மன்னர்கள் காலத்தில் கூட, போரிட்டு மாற்று தேசத்து அல்லது ராஜ்ஜியத்தை வென்றாலும் அங்குள்ள அரண்மனைகளில் வாழாமல், தங்களுக்கென்று பிரத்தியேகமாக கட்டப்பட்ட அரண்மனைகளில் தான் வாழ்ந்தார்கள் என்று பெரும்பான்மையான மன்னர்களின்   வரலாறுகள்  சொல்கின்றன.

ஆனால் தற்போது அப்படி தங்களுக்கென்று புதிதாக வீடு கட்டி அதில் குடியேறி வாழும் மக்கள் எண்ணிக்கைக்கு சரிசமமாக  அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் ஏற்கனவே வேறு யாரோ வாழ்ந்துவந்த வீடுகளை வாங்கி அதில் குடியேறி வாழும் முறைமை இப்போது பரவலாக காணபடுகின்றது.

குறிப்பாக, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் குறைந்தது 98 சதவீதம் மக்கள் ஏற்கனவே கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பலரின்  கைகள்   மாறி மாறி  புழங்கப்பட்ட வீடுகளே அதிகம்.

இப்படிபட்ட பழைய வீடுகளில் புதிதாக குடியேறுபவர்கள் வீட்டை சுத்தபடுத்தி தேவையான அலங்காரங்களை செய்தபிறகுதான் வாழ துவங்கவேண்டிய அவசியம் இல்லை.

பெரும்பான்மையான வீடுகள் சுத்தமாகவும் அலங்கரிக்கபட்டும்  இருக்கும்.

எனவே புதிதாக வருபவர்கள்  தங்களின் பொருட்களை எங்கெங்கே வைக்கவேண்டுமோ அங்கெங்கே வைத்துவிட்டு  தங்கள் வாசத்தை தொடர்வார்கள்.

பெரும்பான்மையான வீடுகளில் மேற்கூரைக்கும் மேல் தளத்திற்கும் இடையில் அட்டிக் (Attic) எனும் ஒரு பகுதி இருக்கும்.

அதை பொதுவாக தேவை இல்லாத பொருட்களை அல்லது அடிக்கடி பயன் படுத்தாத பொருட்களை வைப்பதற்கு பயன்படுத்திகொள்வார்கள்.

வீடு மாறி போகும்போது சில நேரங்களில் இந்த அட்டிக்கில் இருக்கும் பொருள்களை எடுத்துசெல்ல மறந்து போய்விடுவதும் உண்டு.

இப்படி மறந்து போய், விட்டு சென்ற பொருட்கள்தான் எத்தனை அந்த  பொருட்களின் பின்னணியில்தான் எத்தனை எத்தனை  சுவாரசியங்கள்?.

இப்படி புதிதாக தான் குடிபுகுந்த ஒரு பழைய வீட்டின்  அட்டிக்கில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை அதற்கு முன் குடி இருந்தவர்களிடம் ஒப்படைக்க தொடர்பு கொண்டபோது அது தங்களுடையது அல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு முன்பு குடி இருந்தவர்களிடம் கேட்டுபாருங்கள் என கூற அவர்களை பற்றிய தகவல் சேகரித்து தொடர்பு கொண்டால் அவர்களும் எங்களுடையது அல்ல என சொல்லி விட்டனர்.

இப்படியாக முடிந்த மட்டும் தங்களுக்கு முன்பு குடி இருந்த ஆறு உரிமையாளர்களின் உறவினர்கள் வாரிசுகளை தொடர்புகொண்டும் எவரும் அந்த பொருளுக்கு உரிமை கொண்டாடவில்லை.

அந்த பொருளை இன்னும் கொஞ்சம் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்வது என முடிவெடுத்த இந்த புதிய வீட்டு உரிமையாளர்களான இளம் தம்பதியினர், அந்த கலை வேலைபாடுகள் செய்யப்பட்ட  வெண்கல  பெட்டியின் பித்தளை பூட்டை சிரத்தையுடன் இளக்கி உள்ளே பார்த்தனர்.  

அதனுள்ளே, சிதிலமடைந்த ஒரு நாட்குறிப்பு புத்தகமும் அதற்கிடையில் யார் விரலும் பட்டுவிடாதபடி பட்டுத்துணியால் சுற்றி பத்திரபடுத்தபட்ட பெரியதும் சற்று சிறியதுமான பட்டுப்போன மேப்பிள் மர இலைகள் இரண்டு  இருந்தனவாம்.

அப்படி என்ன புனிதம் அந்த இலைகளில்?  மேலும் அந்த நாட்குறிப்பு புத்தகத்தை அலுங்காமல் குலுங்காமல் நிதானமாக ஒவ்வொரு பக்கமாக முதலில் இருந்து வாசிக்க திறந்தபோது,முதல் பாதி புத்தகத்தில் எந்த குறிப்புகளும் இல்லாமல் இருந்தது.

நாட்குறிப்பு புத்தம் 1928 ஆம் ஆண்டுக்குரியதாக இருந்தாலும் அதில் குறிப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்துதான் ஆரம்ப மாகிறது.

என்ன குறிப்புகள்?

ஆகஸ்ட் மாதம் வரை காத்திருங்களேன் என்று வழக்கம்போல் காக்க வைக்காமல் மேப்பிள் மர இலைகளின் பின்னணியை  குறித்தும் மேற்கொண்டு அறிந்த செய்திகளின் முன்னணி சாராம்சத்தையும் இந்த ஜூன்  மாதத்திலேயே சொல்லி முடிக்க முயற்சிக்கின்றேன்.

கொஞ்சம் ஒதுங்குங்கள் அட்டிக்கை மூடனும், பிறகு திறப்பேன் கண்டிப்பாக வந்து விடுங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ



8 கருத்துகள்:

  1. ஆஹா இது ட்ரைலரா ?
    நடக்கட்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி நண்பரே.

    கோ

    பதிலளிநீக்கு
  3. ஆவலை தூண்டி விட்டீர்கள்...

    காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு மிக்க நன்றி தனப்பால்.

    கோ

    பதிலளிநீக்கு
  5. அருமையான தொடக்கம் போல் உள்ளது. மேப்பிள் பற்றியும் அறிய ஆவல்...தொடர்கிறோம்..

    பதிலளிநீக்கு
  6. அழகான, ஏதோ ஒரு நல்ல நட்பு அல்லது காதல்??!! டைரிக் குறிப்பென்றும் தெரிகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பில் பெண்ணும், பருவமும் இருக்கும்போதே அது காதல் அல்லது நட்பாகத்தான் இருக்கும் என்பது யூகிக்க முடிந்ததுதானே, இதற்கு ஒரு 007 தேவையா?

      கோ

      நீக்கு