பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 மார்ச், 2017

கங்கை தழுவும் சாக்கடை??

பாடு! - படு!!
நண்பர்களே,

குறைந்த பட்ச தகுதிகள் என்று ஏதும் தேவைப்படாத பல தொழில்களில் சமீப காலங்களில் அரசியலும் ஒன்று என்றால் அது மிகை அல்ல.

ஏன் சமீப காலம் என்று குறிப்பிடுகின்றேன் என்றால், கடந்த காலங்களில் நம் முன்னோர்கள், குறைந்த பட்சம் மனிதாபிமானம் , தேச பற்று, சேவை மனப்பான்மை, நேர்மை போன்ற குணங்களை தமது அரசியல் பிரவேசத்திற்கான தகுதிகளாக கொண்டிருந்தனர் என்பது , பெருந்தலைவர் காமராஜர், திருமிகு கக்கன் இன்னும் பிற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில் அறிந்துகொள்ளமுடிகிறது.

ஆனால் தற்போதைய  நிலவரப்படி அரசியலுக்கு வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் அடிப்படியாக இருக்கவேண்டும் என்பதில் பல்வேறு கருத்துக்களும் அளவுகோல்களும் நேரத்திற்கு ஏற்றாற்போலவும் , சமயத்திற்கு ஏற்றாற்போலவும்  வளைக்கப்படுவதையும் நாம் அறிவோம்.

எது எப்படி இருந்தாலும் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் "மக்கள் சேவை ஆற்ற" அரசியலில் ஈடுபடலாம் எனும் விதி தளர்வை பயன்படுத்தி பலரும் அரசியல் களத்தில்  இறங்கி இருப்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

அவ்வகையில் அரசியலுக்கான நேரடியான எந்த தகுதியும்(!!) அரசியலில் ஆழ்ந்த   அனுபவமும் இல்லாவிட்டாலும், ஏதோ ஒருவகையில் சில அரசியல்வாதிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்ற வகையில் , அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக  , தற்போது அரசியல் களத்தில் இறங்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்தலில் நின்றிருக்கும்   ஒரு சிலரை நாம் அறிவோம்.

இந்த ஒரு சிலரில்,  பல கலைகளில் சிறந்தவரும் பிரபல பாடகரும் , இசையமைப்பாளரும், கவிஞரும் , திரைப்பட இயக்குனருமான திரு. கங்கை அமரன் அவர்களும் ஒருவர் என்று அறிந்தபோது , மேற் சொன்ன காரணங்களால் பெரும் அதிர்ச்சி ஒன்றும் ஏற்படவில்லை.

அவர் நன்றாக பாடக்கூடியவர், ஆழ்ந்த இசை அறிவு உள்ளவர்,மேடையிலோ அல்லது ஊடகங்களிலோ பேசும்போது கேட்பவரை கட்டிபோடவைக்கும்படியான  கலகலப்பான பேச்சுக்கு சொந்தகாரர்     என்பது  நாடறிந்த விஷயம். 

எத்தனை காலத்திற்கு இப்படியே பாட்டுபாடிக்கொண்டிருப்பது என்றெண்ணி, பாடுவதோடு கொஞ்சம்       (அவஸ்த்தை)  படுவதையும் சேர்த்து மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் என்று  தன்னை நேரடி அரசியலுக்குள் இணைத்துக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

எந்த கட்சி சார்பாக என்பதை தவிர்த்து , அவரது அரசியல் பிரவேசம் முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்ததாக, பாகுபாடற்றதாக  அமையும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.

யார் யாரோ அரசியலில் குதிக்கும்போது அதில் நீங்களும் குதிப்பதில் தவறில்லை, தனிக்கட்சி ஆரம்பிக்காதவகையில்.

அதே சமயத்தில் அரசியல் ஒரு சாக்கடை என்று பலர் சொல்ல கேட்டு இருப்பீர்கள் எனவே, அந்த சாக்கடையில் குதிக்கும்போது  தக்க முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் குதிப்பது நல்லது.

கங்கை,  சாக்கடையை புனிதப்படுத்துவதற்குப்பதில்  சாக்கடை கங்கையை தூய்மைகேடாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

(ஆமாம் அரசியல் ஒரு சாக்கடை என்று யார் சொன்னது?)

தமிழோடும் இசையோடும் தொடங்கிய உங்கள் பயணம் , இன்றும் தமிழிசையோடு தொடர்வதை நினைக்கும்போது நீங்கள் ஒருவர் மட்டுமே பழைசை மறக்காமல்  என்றைக்கும் ஒரே மாதிரியாக இருப்பவர் என்பது புரிகிறது. 

மக்கள் நலன் காக்க  அரசியலில் வேகமாக நுழைந்திருக்கும் நீங்கள் கொஞ்சம் உங்கள் தேக நலனிலும் அக்கறை செலுத்துங்கள்.  

உடனடியாக தேர்தலில் வெற்றி பெற்றாலும்  பெறாவிட்டாலும் தொய்வின்றி நீங்கள் மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

Best wishes!! திரு கங்கை அமரன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம். 

கோ. 

4 கருத்துகள்: