பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

போயே போச்சாமே ?

நெசம்தானா?


நண்பர்களே,

கடந்த  சில நாட்களுக்கு முன் ஒரு பட்டி  மன்ற நிகழ்ச்சி குறித்து நண்பர்களோடு பேசிகொண்டிருந்தபோது;
அந்த பட்டி மன்ற பேச்சாளர் ஒருவர் குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் மருந்து மாத்திரைகளில் எத்தனை கலப்படமும் போலி தயாரிப்புகளும் சமூகத்தில் உலாவருகின்றன என்ற ஆதங்கத்தை வெளிபடுத்த  சிறிய கவிதை நடையிலான  ஒரு கருத்தை தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக இளம்பிள்ளை வாத நோய்தடுப்பு சொட்டு மருந்திலும்  கலப்படங்களும் போலி மருந்துகளும் நாட்டில் பெருமளவு மண்டி  கிடப்பதாக சொல்லும்போது: 

"ஊருக்குள்ளே ஊடுருவிய போலியோ
இன்னும் நம்ம ஊரை விட்டு போலியோ?-கொடுத்த
சொட்டு மருந்து தொண்டைக்குள்ளே போலியோ?-உள்ளே
  போன மருந்தும் ஒரு வேளை போலியோ?
தப்பு செய்தவன் ஜெயிலுக்குள்ளே போலியோ? - அதை
தட்டி கேட்க்க நீங்க யாரும் போலியோ ? "

இந்த கவிதையின் முதல் நான்கு வரிகளை  நாம் வேறு வேறு சந்தர்பங்களில் ஆங்காங்கே கேட்டிருக்கலாம், ஆனால் கடைசி இரண்டு வரிகள் எனக்கு புதிதாக தோன்றியது.

இது போன்ற அவலங்களும்,சீர்கேடுகளும்  சமூகத்தில் புரையோடி போய் இருக்கும் ஆதங்கம்  இந்த வரிகளில் இழையோடி இருப்பதை உணர முடிகிறது.

நாட்டில் உண்மை, நீதி, நியாயம்,  நேர்மை எந்த அளவிற்கு இருக்கின்றன, தவறு என்றும் தெரிந்தும் அதை செய்கின்ற ஒரு கூட்டம் இருப்பதுபோல அந்த தவறை செய்தவருக்கு எதிராக குரல் கொடுப்பவரும் , அவர்களை எதிர்த்து போராடுபவர்களும் இந்த சமூகத்தில் எத்தனை பேர்.

அப்படியே தவறை சுட்டி காட்டி போதுமான ஆவணங்களை , ஆதாரமாக கொடுத்தாலும் அவர்களுக்கு நீதியின் பார்வையில் சட்டத்தின் வாயிலாக தண்டனை பெற்று கொடுக்க முடிகின்றதா? சட்டத்தின் பார்வை குற்றவாளிகளை பாதுகாக்கும் போர்வையாக செயல் படுகின்றதா?

சட்டங்கள், பணத்தினாலும் , "செல்"வாக்கினாலும் , பல வழக்கறிஞர்களின் "சொல்"வாக்கினாலும்   அரசியல் பலத்தாலும் பலம் இழக்கப்பட்டு -  வளைக்கப்பட்டு குற்றவாளிகள் நிரபராதிகளாக்கப்பட்டு விடுகிறார்கள். 

இந்த பதிவில் குறிபிடபட்டிருக்கும் கவிதை ஒரு உதாரணம் தானே தவிற இளம்பிள்ளை வாத தடுப்பு சொட்டு மருந்தை மட்டும் குறிப்பதல்ல, இது போன்ற எண்ணற்ற உயிர் காக்கும் மருந்து மாத்திரைகளில் எல்லாம் போலிகள் நிறைந்திருப்பதை அவ்வப்போது ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டு தான் இருக்கின்றோம்.

போலியோ  சொட்டு மருந்தை போலியாக தயாரித்தவர்கள் ஜெயிலுக்கு "உள்ளே" போனார்களா இல்லையா என தெரியவில்லை ஆனால் இந்த போலியோ எனும் இளம்பிள்ளை வாதம் நம் இந்தியாவைவிட்டே  "வெளியே" போய்விட்டதாக யுனெஸ்கோ   அறிவித்ததாக நண்பர்கள் செய்தி சொன்னார்கள்.

அந்த நல்ல செய்தி கேட்ட மகிழ்வுடன் எங்கள் நண்பர்கள் சந்திப்பு நிறைவடைந்தது.

(அடுத்து சந்தித்தபோது எதை பற்றி விவாதித்தோம்?  பிறகு சொல்கிறேன்).

இனி போலியோ இல்லாத இந்தியா சிறக்கட்டும் போலியோ இல்லாத குழந்தைகள் பிறக்கட்டும், வளரட்டும், வாழட்டும்  என வாழ்த்தி பதிவை நிறைவு செய்கிறேன்.

“India may be polio-free but it reports the largest number of non-polio acute flaccid paralysis.” File photo shows a child being administered polio drops by a health worker in New Delhi.
                                                                                                                                                                                                          Reuters
நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

14 கருத்துகள்:

  1. இப்போதிருக்கும் குழந்தைகளிடையே கிட்டத்தட்ட 100விழுக்காடு போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் ஐந்தாண்டுக்காவது இந்தச் சொட்டுமருந்தை விட்டு அழித்துவிட வெண்டியுள்ளது. பெரியம்மை நோய் ஒழிந்தது போல இதுவும் ஒழிந்துவிடும் நாள் விரைவில் வரும். இதுபோலவே நானும் சில கருத்துகளை மேதினத்தன்று (01-05-2016) காலை 9மணி முதல் 10-15வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் தலைமையில் நான் -அணித்தலைவராக, ஆனால் 5ஆவது பேச்சாளராகப் பேசியுள்ள பட்டிமன்றத்தைக் கேட்டு-பார்த்துக் கருத்துரைக்க வேண்டுகிறேன் நண்பரே. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பராய் எமை அங்கீகரித்த நண்பருக்கு,
      எம் தளத்தில் நிலாவென உலா வந்து முத்தொளி வீசி புத்துணர்வூட்டும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      பட்டிமன்றம் குறித்த தகவலுக்கும் நன்றி,பார்த்து கேட்டு மகிழ்ந்து கருத்துரைகின்றேன்.

      கோ

      நீக்கு
  2. தொடர் முயற்சியால் போலியோவை எதிர்கொள்ள முடிந்தது. இது ஒரு பெரிய சாதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா பெரிய சாதனைதான்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. வணக்கம் அரச,

    நல்ல விடயம் தான் போலியோ போயே போச்சே என்பது,, ஆனால் அதிலும் போலி என்பது ,,,,
    நல்ல பகிர்வு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      வருகைக்கும் போலி இல்லாத தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. உண்மைதான் கோ. இந்த போலியோ இங்கு இப்போது ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இன்னும் ஒரு சில வருடங்களில் முழுமையாக ஒழித்துவிடலாம் என்று தெரிகின்றது.

    போலியோ கவிதையை ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள். போலியோ கவிதை ரசிக்கும்படியாக இருந்ததை தங்கள் மூலம் கேட்பதுவும் மிக்க மகிழ்ச்சி.

      கோ

      நீக்கு
  5. உண்மைதான் எத்தனை மருந்துகள் போலி என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! நல்ல விழிப்புணர்வு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரேஷ்,

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள். சூரியனுக்கே டார்ச் அடிக்கும் நம் மக்கள் ஆண்டவனுக்கே வெளிச்சம் வீசுவர்களோ என்னமோ?

      கோ

      நீக்கு
  6. கவிதையின் ஒரு சில வரிகளை விசு சார் பங்கேற்ற ஒரு பட்டிமன்றத்தில்
    எப்போதோ அவரது blog.ல் கேட்ட நினைவு.

    கவிதையின் கடைசி வரி\
    தட்டி கேட்க்க நீங்க யாரும் போலியோ ?///

    சற்று யோசிக்க வைத்த/வேண்டியதொரு விஷயம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  7. அருமை...
    செதுக்கிய சிற்பிக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு