பின்பற்றுபவர்கள்

புதன், 27 ஏப்ரல், 2016

வியாபாரம் - துலாபாரம்!!

லாபம் யாருக்கு?

நண்பர்களே,

போட்ட முதலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்குமா, அதில் செலவுகள் போக எவ்வளவு லாபம் கிடைக்கும் அல்லது லாபம் கிடைக்காமல் வெறும் அசலாவது திரும்புமா அல்லது நஷ்டம் ஏற்பட்டு கையை கடிக்குமா என்றெல்லாம் கணக்குபோட்டு பார்த்து செய்யும் செயலுக்கு வியாபாரம் என்று பெயர்.


அப்படி வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது லாபம் , தங்களது முன்னேற்றம், தங்களது வளர்ச்சி என்பதில் மட்டுமே குறியாக இருப்பார்கள்.

இவர்களுள் நூற்றுக்கு நூறு எந்த காரணத்திற்காகவும் தங்களது லாபத்தை யாருக்காகவும் விட்டு கொடுத்து நஷ்டமடைய விரும்பமாட்டார்கள்.

வேண்டுமென்றால் அத்தி பூத்தாற்போல , மிக மிக அரிதாக தங்களது லாபத்திலிருந்து கொஞ்சம் குறைத்துக்கொண்டு வியாபாரம் செய்வார்கள், அதிலும் தங்களுக்கு மிகவும் வேண்டபட்டவருக்கே அப்படி செய்வார்கள்.

மேலும் அவர்கள் தாங்கள் விற்கும் பொருளுக்கோ செய்யும் சேவைக்கோ(??) ஏக போக(monopoly) வியாபாரிகளாக இருக்கும் பட்ச்சத்தில், அவர்கள் சொல்வதுதான் விலை அவர்கள் வைப்பதுதான் சட்டம்.

அவர்களிடம் யாரும் எதுவும் எதிர்த்து கேட்க்க முடியாது, பேரம் பேச முடியாது. வேண்டுமென்றால் வாங்குங்கள் இல்லை என்றால் நடையை கட்டுங்கள் என சொல்லிவிட்டு தங்கள் வியாபாரத்தில் குறியாய் இருப்பார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எவன் ஒருவன் தான் செய்யும் எந்த செயலையும்  பணத்தை மூலதனமாக வைத்து தொடங்கி நடத்துகின்றானோ, அவன் வியாபாரி, அவன் போட்ட முதலுக்கு பலமடங்கு வருவாயைதான் எதிர்பார்ப்பான் என புலபடுகிறது.  

இப்படி இருக்க அவ்வப்போது நமது நாட்டில் வந்து போகும் தேர்தல்களில் போட்டி இடும் வேட்பாளர்கள், தங்களால் முடிந்த அளவிற்கு பணத்தை வாரி இறைத்து, விளம்பரங்கள், தோரணங்கள், கட் அவுட்டுகள், கூட்டங்கள், போன்றவற்றை நடத்துவதோடல்லாமல் வாக்காளர்களுக்கு தலைக்கு இவ்வளவு ரூபாய் என கொடுத்து கூட்டங்களுக்கு ஆட்கள் சேர்க்கவும், ஒரு வாக்காளருக்கு இத்தனை ரூபாய், வெள்ளி பொருள்  , தங்கம்(??), மிக்சி, கிரைண்டர், சுவர் கடிகாரம், குடம்...... என கொடுத்து ஓட்டுகளை வாங்குவதற்கு செய்யும் அனைத்து செலவுகளும், லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து  ஒரு வியாபாரி தன் வியாபாரத்திற்கு செய்யும் முதலீடுக்கு ஒப்பானதுதான்.

அப்படி முதலீடு செய்பவன் எப்பேர்பட்ட வடிகட்டிய ஞான சூன்யமாக இருந்தாலும் ஒருபோதும் நஷ்ட்டபட விரும்பமாட்டான். இப்படி செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஆயிரம் மடங்கு திருப்பி வசூலிக்கவே தன்னால் ஆனா முயற்சிகளை செய்வான்.

இப்படி பணத்தை வாரி இறைத்து தேர்தலில் நின்று வெற்றியும் ஒருவன் அடைந்துவிட்டால், அடுத்துவரும் ஐந்தாண்டுகளில் அவன் மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்வான்  என்று எதிர்பார்ப்பது காற்றில் சித்திரம் வரைவதற்கும் ஆற்று நீரில் சிலை வடிப்பதற்கும்  சமமாகும்.  

தேர்தலில் நிற்பவர்களுள் 98 சதவீதம்பேர் இப்படி இந்த பதவிகளை  வியாபார சிந்தையுடன் வகிப்பவர்களே என்றாலும் தேவை இல்லாமல் பணத்தை வீணாக செலவு செய்து பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்றாமல், தங்கள் கொள்கைகளையும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நன்மைகளை மக்கள் நலனுக்காக செய்வோம் என்பவற்றை மட்டும் சொல்லி எளிய முறையில் தேர்தலை அணுகும் பொதுநல நோக்கம் கொண்ட வேட்பாளர்களும் இல்லாமல் இல்லை.  

அத்தகைய வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் நிறைகுறைகளை சிந்தித்து சீர்தூக்கி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது பொன்னான வாக்குரிமையை ஞானத்துடன் பயன்படுத்தி, காசுக்கு மயங்காமல் கண்ணியத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம்.

நாம் இதுபோன்ற தேர்தல் சமயத்தில் செய்யும் சில சிறு தவறுகள் நம்மையும் நம் குடும்பத்தையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைந்த பட்சம் அடுத்துவரும் ஐந்தாண்டுகளாவது பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை தெளிந்த அறிவுடன் சிந்தித்து செயல்படுவது நம் எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

பசுதோல் போர்த்திய புலிகளும் இந்த காலகட்டத்தில் சமூகத்தில் உலாவரும், கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

இன்று நல்லவர்களாக இருப்பவர்கள்கூட கால சூழ்நிலையால் நாளை மாறிவிடுவார்கள் என்பதற்கு நம்மிடையே பல முன் உதாரணங்கள் இருப்பதையும் கொஞ்சம் பரிசீலிக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது என்பதையும் மறக்க வேண்டாம்.

எந்த ஒரு அரசியல் தலைவருக்கு பின்னால் கண்மூடித்தனமாக "நடை" போடுவதற்குமுன் அவர்களின் நடந்த- கடந்த கால ஆட்சி முறை அல்லது நிகழ்கால அணுகுமுறை போன்றவற்றை அனுபவ  கண் திறந்து "எடை" போட்டு அடுத்த அடி எடுத்து வைப்பது அவசியம்.

ஓட்டு கேட்டு வருபவர் வியாபாரியா அல்லது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட உபகாரியா என துலாபார பரீசீலனை செய்து செயல்படுவோம், நல்லாட்சியும் சுபீட்ச்சமும் நம்மை சுவிகரிகட்டும் - நாட்டை சுத்திகரிக்கட்டும் 

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

 1. மருத்துவர்களை பற்றி எழுத இருப்பீர்கள் வாசித்து வந்தால்
  வேட்பாளரை பற்றி பதிவு.

  சமீபத்தில் நிசப்தம் தலத்தில் ஈரோடு மாவட்ட கோபி தொகுதியில் ஒரு வேட்பாளரை பற்றி படித்தேன்.
  நம் ஒவ்வொரு தொகுதியிலும் நல்லதொரு மனிதரை ஆதரித்தால்போதும்
  மாற்றம் தானாகவே...
  நிகழும்:)

  சுட்டி1
  சுட்டி2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   வருகைக்கு மிக்க நன்றி , உங்கள் எதிர்பார்ப்பு என் அடுத்த பதிவில்.

   நன்றி.

   கோ

   நீக்கு
 2. வணக்கம் அரசே,
  நல்ல தெளிவான அலசல் தான். என்ன செய்வது பிரியானி பொட்டலத்திற்கும், 200 ரூபாய் பணத்திற்கம் நாங்கள் விலைப்போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது. நாங்கள் உருவாக்கிய வியாபாரிகள் ,,,,

  தங்கள் ஆசை நிறைவேறினால் எங்களுக்கு நல்லது தான்,,

  பதிவு பொருத்தமான தேவையான ஒன்று,,

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியருக்கு,

   வருகைக்கு மிக்க நன்றி. பிரியாணிக்கு மிஞ்சி இந்த உலகத்தில வேற என்னங்க இருக்கமுடியும்?

   நன்றி.

   கோ

   நீக்கு
 3. தேர்தல் நேரத்தில் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு!

  பதிலளிநீக்கு