பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

"ஆசை முத்தம் தா".

ரொம்ப அவசரம்....

நண்பர்களே,

பணம் இல்லை வசதி இல்லை என்றாலும், இருக்கும் சொற்ப பணத்திலும் சுகமாக வாழும் மனிதர்கள்தான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் என்றால் அது மிகை அல்ல.

எத்தனை பணம் இருந்தாலும் எப்போதும் நோயுடனும் சுகவீனத்துடனும் மருத்துவ மனையில் அடைக்கலம் புகுந்தவர்கள் , அறுசுவை உணவு  தமக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்தும் அவற்றை எடுத்து உண்ண முடியாமல் தங்கள் கைகளை இரும்பு சங்கிலியால் கட்டிபோடபட்டதற்கு  சமமாக கருதுவர்.

அவர்கள் மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களும் நினைப்பதெல்லாம்,"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" எனும் முதுமொழி தான்.

சரி நோய் எப்படி ஏற்படுகிறது?

ஒரு சிலருக்கு இது மூப்பின் காரணத்தால் வந்திருக்கலாம்,  சிலருக்கு தங்களின் முன்னோரின் தொடர்ச்சியாக வந்திருக்கலாம். (முன்னோர்களுக்கு எப்படி வந்தது என்பது வேறு விஷயம்.)

பலருக்கு  இப்போது சமூகத்தில் இருக்கும் சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டினாலும்,தரமற்ற உணவு,தண்ணீர் அருந்துவதாலும் , தவறான பழக்க வழக்கங்களாலும் நோய் உண்டாகும் வாய்ப்பு இருக்கின்றது.

நோய் ஏற்பட எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் எல்லா நோய்களுக்கும் தொன்றுதொட்டு கூறப்படும் அடிப்படை காரணம் சுகாதாரமின்மையே என்பது கடந்த வாரம் எனக்கு ஒரு சிறு குழந்தை மூலம் புதிய கோணத்தில் நினைவூட்டபட்டது.

அந்த குழந்தை ஒரு நிகழ்ச்சியில் பாடிய ஒரு பழமையான பாடல் எனக்கு இந்த உண்மையை புலபடுத்தியது.

சரி அதற்கும் இந்த தலைபிற்கும்  என்ன சம்பந்தம்?  .... சம்பந்தம் இல்லாமலா?

அது என்ன பாடல்?.

வேறு ஒன்றும் இல்லை, அவ்வையார் பாடிய ஆத்தி சூடியை எளிமை படுத்தி இயற்றப்பட்ட புதிய ஆத்தி சூடிதான் அது.

அதில் ,

"அம்மா இங்கே வா வா..." என ஆரம்பித்து ஆசை முத்தம் தா தா...என தொடர்ந்து...இலையில் சோறு போட்டு.... ஈயை தூர ஓட்டு.. என்று பாடி கொண்டே இருந்த போதுதான் சட்டென என் நினைவில் உதித்தது இந்த ஞானோதயம்.

அதாவது காலா காலமாக ஈயை ஓட்டிவிட்டுதான் சாப்பிடும் நிலை தொடரும் அவலம் நம் நாட்டில் இருந்து வருவதை இந்த புதிய ஆத்திசூடியின் வரிகள் புலபடுத்துகின்றது. (இந்த புதிய ஆத்தி சூடியை இயற்றியவர் யார்?)

அம்மாவை அழைத்து  முத்தம் கேட்டு பெறும் குழந்தைகள், அழைக்காமலே வந்து  சாப்பாட்டை முத்தமிடும்  ஈக்களின் அபரிமிதமான அன்பின் மிகுதியால் சாப்பிடும் உணவில் நச்சு  கலக்கபடுகின்றது , அதனால் நோய் கிருமிகள் நாம் உணவு உட்கொள்ளும்போதே நமக்கு உள்ளே செல்கின்றது அதனால் நம் ஆரோக்கியம் கெடுகின்றது.

இந்த எதிர்மறையான, சமூக அவலத்தை , சுகாதார சீர்கேட்டை இதுபோன்ற குழந்தைகள் படிக்கும் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது எனக்கென்னவோ ஏற்புடையாதா தெரியவில்லை.

உயிரெழுத்தில் "ஈ" என்ற எழுத்தில் தொடங்கும் வேறு எந்த மாற்று சொல்லும் தமிழில் இல்லையா? அல்லது மாற்று சொல் இருந்தும் நம் நாட்டின் சுகாதார கேட்டினையும் அவலத்தையும் , அது நானக்கேடாகவே இருந்தாலும்கூட வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்ற உள் நோக்கத்துடன்  இதை மாற்றாமல் இருக்கின்றார்களா?

ஈவது விலக்கேல் என்பதற்கு மாற்று ஈயை தூர ஓட்டு தானா?

இந்த உயிர் எழுத்து நம் உயிர்  போக்கி  நம் தலை எழுத்தை மாற்றும் எழுத்தாக உருவகபடுத்தபட்டிருப்பது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கின்றது.

இந்த பாடம் குழந்தைகளின்  பாடத்திட்டத்தில் இன்னும் இருக்குமானால் - அது அழகல்ல. அதை உடனடியாக மாற்றுவதும் இந்த ஈ, கொசுக்களினால் பரவும் நோய்களை தடுக்க முயற்சிப்பதோடு நோய் பரப்பும் ஈக்களையும் கொசுக்களையும் முற்றிலுமாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் ஆவலும் ஆதங்கமும்.

தமிழறிஞர்களின் ஆசைமுத்தம் இந்த பதிவின் நிதர்சன ஆதங்கத்தின் கன்னங்களில் பதியவேண்டும் என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள்.

வளரும்  குழந்தைகளின் மனதில் இந்த சீர்கேடான சுகாதார அவலத்தை இந்த பாடல் மூலம் விதைக்காமல் பார்த்துகொள்வது நல்லது.

வரவிருக்கும்(??) புதிய அரசுகள் இதனை கவனத்தில் எடுத்துகொள்ளுமா அல்லது இன்னும் நம்மை ஈயை வைத்து கொல்லுமா?  

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி என்பதுபோல் தமிழகத்தில் - இந்தியாவில்  யை ஓட்டிவிட்டுதான் சாப்பிடவேண்டும் என்பதும் முதுமொழியாகிவிடகூடாது"

சரி... பதிவின் சுவாரசியத்தில் உங்கள் சாப்பாட்டு தட்டில் அமர்ந்திருக்கும் ஈயை ஓட்ட மறந்திடாதீங்க.

சூ .....சூ...... இந்த "ஈ" தொல்ல தாங்கலப்பா.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ
2 கருத்துகள்:

 1. வணக்கம் அரசே,

  ஈ காபி குடிக்குது,, தெரியாதா?

  ஆனால் தாங்கள் சொல்ல வந்த கருத்து அருமை,, எங்கள் தேசம் இன்னும் அப்படியே தான் அரசே,,

  எங்களைச் சுற்றி ஈ கொசு,,

  அருமையான பகிர்வு, தொடருங்கள்.

  பதிலளிநீக்கு