பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 மார்ச், 2015

பரிசு என்ன விலை?

அன்னையர் தினம் 

நண்பர்களே,

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் இங்கிலாந்தில் மிக விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. எமது அலுவலக நண்பர்கள் வெளி ஊர்களிலும் உள்ளூர் நர்சிங்க ஹோம்களிலும் இருக்கும் தங்களது அன்னையர்களை காண்பதற்காக கடந்த வெள்ளிகிழமையே பயண ஆயத்தங்களை செய்துகொண்டு அவரவர் அம்மாக்களை காண சென்றனர்.


Image result for MOTHERS DAY GIFTS PICTURES

இங்கே அன்னையர் தினத்தன்றும் கிறிஸ்மஸ் தினத்தன்றும் மட்டுமே சென்று பார்த்து வருபவர்கள்தான்  தான் பெரும்பான்மையானவர்கள்.

இப்படி வருடத்தில் இரண்டோ அல்லது மூன்று முறையோதான் தமது பெற்றோரை பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு பூச்செண்டுகளையும், இனிப்பு - கேக் பரிசுபொருட்களை வாங்கிசென்று அதை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களோடு ஓரிரு மணிநேரங்கள் செலவழித்துவிட்டு மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவர்.

மற்ற நேரங்களில் எப்போதேனும் தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரிப்பார்கள்.

 இதில் தினமும் தமது பெற்றோரிடம் பேசி மகிழும் பிள்ளைகளும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர்.

இப்படி ஆண்டுக்கொருமுறை அன்னையார் தினம் வருகின்றதே அந்த நேரத்தில் தமது அம்மாவுக்கு பிள்ளைகள் பரிசுபொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும், உணவு பொருட்களையும் வாங்குவதில் மிகவும் கவனமாக செயல் படுவார்கள்.

தங்கள் அம்மாவுக்கு என்ன பிடிக்கும், எந்த நிறம் பிடிக்கும், எந்த வகை உணவு பிடிக்கும் , எந்த வித உடை பிடிக்கும், அல்லது  ஒரு சில அம்மாக்களுக்கு, ஒரு சில கேளிக்கை விடுதிகள்(PUB) செல்ல பிடிக்கும், அதுபோன்று எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்றார்போல தங்களின் வசதிக்கேற்ப பரிசுகளை வழங்கி அன்னையரை மகிழ்ச்சிபடுத்துவது இங்கே மிக மிக வழக்கமானதாகவும் வாடிக்கையானதாகவும் திகழ்கின்றது.

இதுபோன்று பள்ளி செல்லும் பிள்ளைகளும் தங்களின் வயதிற்கும், அறிவிற்கும் ஏற்ப தங்களின் அம்மக்களுக்கு தங்களால் ஆன  சிறிய பரிசுபொருட்களையோ  அல்லது வாழ்த்து அட்டைகளையோ கொண்டுபோய் கொடுப்பது வழக்கம்.

இங்குள்ள பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு   பள்ளி நேரத்திலேயே தங்கள் அம்மாக்களுக்கு வாழ்த்தட்டைகளை செய்துகொள்ள அனுமதியும் வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கபடுகின்றது. எனவே மாணவ மாணவியர் தங்களின் கைவண்ணத்தில் - தங்களின் கற்பனையிலும் தங்கள் எண்ணங்களிலும்  உருவாகும் வண்ண மயமான வாழ்த்து அட்டைகளை செய்து கொண்டுபோய் கொடுப்பதும் வழக்கம்.

ஏற்கனவே சொன்னபடி வெள்ளிக்கிழமையே எங்கள் அலுவலக நண்பர்கள் கொஞ்சம் முன்னதாகவே வெளியூர்களில் உள்ள தங்களின் அன்னையரை காண  அலுவலகத்திலிருந்து கிளம்பி விட்டனர்.

சரி நமக்கு தான் கொடுத்துவைக்கவில்லை இவர்களாவது போய் பார்த்துவிட்டு வரட்டும் என மனதில் நினைத்துகொண்டு, நானும் அன்று மாலை வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் முன்னதாகவே வீடுதிரும்ப பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

இரண்டு நிறுத்தத்திற்கு அடுத்து பேருந்து நின்ற இடத்தில் இருந்து சில பள்ளி மாணவ மாணவியர் பேருந்தில் ஏறினர் - அது பள்ளி விட்ட நேரம்.

நான் அமர்ந்திருந்த இருக்கையும் எனக்கு பின்னால் இருந்த  இருக்கையும் இரண்டிரண்டு பேர்கள் உட்காரும் இருக்கைகள். 

எனக்குப்பின்னால் ஒருவர் மட்டுமே  அமர்ந்திருந்தார், அதேபோல எனக்கு பக்கத்திலும் யாரும்  இல்லை.

இப்போது பேருந்தில் ஏறிய மாணவர்களுள் சுமார் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒன்றாக பேசிக்கொண்டு தங்களின் முதுகில் புத்தக பைகள் எனும்  பார சிலுவைகளை சுமந்தவண்ணம், அமர இருக்கைகளை தேடினர்.

இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதை புரிந்துகொண்டு அவர்கள் இருவரையும் நான் அமர்ந்திருந்த இருக்கையில் அமர சொல்லிவிட்டு எனக்கு பின்னால் காலியாக இருந்த அந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

இடம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு தங்கள் சிலுவைகளை இறக்கி வைத்துவிட்டு இருவரும் ஏதே பேசிக்கொண்டுவந்தனர்.

நமக்கு அடுத்தவர் என்ன பேசுகின்றனர் என்பதை ஒட்டுகேட்க்கும் பழக்கம் இல்லை என்றாலும் இந்த சிறுவர்களின் பேச்சு என் காதுகளில் விழ மறுக்கவில்லை.

அதில் அந்த சிறுமி, நாளை கழித்து வர இருக்கின்ற அன்னையர் தினத்திற்காக தான் பள்ளியில்  விற்கப்பட்ட ஒரு சாக்லட் கேக்கை வாங்கி இருப்பதாகவும் அதை தமது மத்திய உணவு டப்பாவில் வைத்திருப்பதாகவும் கூடவே தாம் ஒரு வாழ்த்து அட்டை வரைந்திருப்பதாகவும் அதை என் அம்மாவிடம் கொடுப்பேன் அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று சொன்னதை கேட்டு எனக்கு மிகவும் சந்தோஷமானது.

 இந்த சின்ன பெண் அவரின் அம்மாவுக்காக இத்தனை மகிழ்ச்சியுடன் கேக்கையும் வாழ்த்து அட்டையையும் கொண்டு செல்கின்றாள் நாமோ அம்மாவை பிரிந்து பல ஆயிரம் மைல் தூரமிருக்கின்றோமே என ஒரு நிமிடம் என் அம்மாவை நினைத்துகொண்டேன்.

அந்த  சிறுமி தொடர்ந்து நீ என்ன செய்ய போகின்றாய் என அந்த சிறுவனிடம் கேட்டாள்.

அந்த சிறுவனோ தமது பையில் வைத்திருந்த ஒரு வாழ்த்து அட்டையை எடுத்து அந்த சிறுமியிடம்  காட்டினான் , ஆர்வ மிகுதியால்  நானும் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன் அதில் ஒரு வான வில்லை வரைந்து அதற்குண்டான வண்ணங்களிட்டு, "BEST MOM IN THE WHOLEWIDE WORLD"(உலகத்திலேய மிக சிறந்த தாய்)   என எழுதிய வாசகம் அடங்கிய அந்த வாழ்த்து அட்டையை பார்த்த எனக்கு அந்த மாணவனின் தாய்பாசம் அன்பு மரியாதையை நினைத்து  கண்ணில் நீர் கசிந்தது.

மேலும் அவன் சொன்ன ஒரு விஷயம் என்னை உள்ளபடியே உருக வைத்தது.

"என்னிடம் வேறு எதுவும் வாங்க பணமில்லை எனவே நான் வீட்டுக்கு சென்றவுடன், என்னுடைய அறையை சுத்தபடுத்தி, என் துணிமணிகளையும், என் புத்தகங்களையும், என் காலணிகளையும் என் படுக்கையையும் ஒழுங்குபடுத்தி என் லஞ்ச பாக்சை கழுவி வைத்துவிட்டு பிறகு இந்த வாழ்த்து அட்டையை கடந்த மாதம்  பிறந்த என் தங்கச்சிபாப்பா கையில கொடுத்து இதை என் அம்மாவிடம் கொடுக்க வைப்பேன், என் அம்மா மிக மிக மகிழ்ச்சி அடைவார்கள், இதுவே நான் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய கிப்டாக என் அம்மா கருதுவார்கள்".

என அந்த சிறுவன் சொல்லிகொண்டிடுக்கும்போதே என் மனம் அந்த சிறுவனை மனமார வாழ்த்தியதோடு ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது.

நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு ஒரு நான்கு நிறுத்தத்திற்கு முன்பே  இறங்கி ஓட்டமும் நடையுமாக தமது பார புத்தக சுமைகளை சுமந்தவண்ணம் அவர்கள் செல்வதை கண்ணீர் வழிந்த கண்களோடு சன்னல் வழியாக கண்ணைவிட்டு மறையும்வரை பார்த்துக்கொண்டே என் பயணத்தை தொடர்ந்தேன். 

இதைவிட ஒரு தாயிக்கு அந்த சிறுவன் என்னத்தை பெருசாக - பரிசாக கொடுத்திருக்கமுடியும் அல்லது இதைவிட எந்த பெரிய பரிசுப்பொருள் அந்த தாயை சந்தோஷபடுத்தி  இருக்க முடியும்.


அன்னையர் அனைவருக்கும் எமது அன்னையர் தின வாழ்த்துக்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 கருத்துகள்:

 1. மிக மிக அருமையான பதிவு! அந்தச் சிறுவனின் வார்த்தைகள் எங்களையும் நெகிழ வைத்தது.!

  மற்றொன்றும் மனதில் தோன்றி மறைந்தது. இன்று தாயோடு இருக்கும் அந்தச் சிறுவன் நாளை, நீங்கள் மேலே சொல்லியது போல் வருடத்திற்கு ஒரு முறை பரிசு வாங்கிச் சென்று பார்க்கும் நிலை வராமல் தினமுமே அன்னையுடன் இறுதி நாட்கள் வரை வாழ வேண்டும் என்ற எண்ணம்தான். எத்தனை பரிசுகள் வழங்கினாலும் நாம் அன்னையிடம் அன்பு செலுத்திக் கவனிக்க முடிந்தால் அதற்கு ஈடாகுமா?!

  (கீதா: அன்னையர் தினம் சத்தியமாக எனக்கு மறந்து விட்டது. ஆனால், அன்னையர் தினம் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது ஒரு நிகழ்வுதான். என் மகன் கால்நடை மருத்துவப் படிப்பி படித்துவந்த சமயம் 3 வருடங்களுக்கு முன்....இதே போன்று அன்னையர் தினம் வரவும், அவனது நண்பர்கள், நண்பிகள் அனைவரும் வகுப்பில் தங்கள் அன்னைக்கும், பின்னர் வரும் தந்தையர் தினத்திற்கு அப்பாவிற்கும் பரிசுப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்றனர், என் மகனைத் தவிர! அவர்கள் மகனிடம், "ஏன் டா நீ உங்க அம்மா, அப்பாவுக்குல்லாம் கிஃப்ட் கொடுக்க மாட்டியா? வாங்கவே இல்ல? உனக்கு ஏன் சென்டிமென்ட்ஸ் இல்லவே இல்ல? ஏன் டா இப்படி இருக்க? "

  மகனின் பதிலை அவர்கள் பின்னர் என்னிடம் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன்! அவன் என்னிடம் எதுவுமே சொல்ல வில்லை. மகன் சொன்ன பதில் : "முதலில் நான் கிஃப்ட் வாங்குவது என்றால் இப்போது நான் என் அப்பாவின் பணத்தில் தானே படிக்கின்றேன். அவரது பணத்தில் தானே நான் கிஃப்ட் வாங்கணும். அவர் பணத்திலேயே அவருக்குக் கிஃப்ட்? அம்மாவுக்கும்? இரண்டாவது எனக்கு இந்த டெம்ப்ரரி கிஃப்ட் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதில் நம்பிக்கை இல்லை. அவர்களுக்குக் இன்று (வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை-பிறந்தநாள்ம் வெட்டிங்க் டே) கிஃப்ட் கொடுத்து விட்டு, எதிர்காலத்தில், நாம் நம் காலில் நிற்கும் போது அவர்களை முதியோர் இல்லத்திற்கோ, வயதான காலத்தில் அவர்களுக்கு முடியாத போது தனிமையிலோ நிராதரவாக விடுவதை விட, அவர்களை என்றுமே மகிழ்வாக, அவர்களைக் கண்ணும் கருத்துமாக நான் எனது கண் காணிப்பில், அன்புடன் அவர்களை, அவர்களது இறுதிக் காலம் வரை வைத்திருப்பதையே அவர்களுக்கு நான் என் அன்பை சமர்ப்பணம் செய்வதாகக் கருதுகின்றேன். நம்புகின்றேன். அவர்கள் என்னை மிகவும் கஷ்டப்பட்டுப் படிக்க வைப்பதற்கு, நான் படிக்கவும், விரும்பியதை எல்லாம் எனக்குத் தருகின்ற அவர்களுக்கு, அவர்கள் விரும்புவதை நான் அவர்களுக்குச் செய்ய விழைகின்றேன். அந்த வரம் வேண்டும் என்று நான் இறைவனிடம் தினமும் வேண்டிக்கொள்கின்றேன். இதை நான் வெளியில் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். பேசுவதை விடச் செயலில் காட்டுவதே முக்கியம். நீங்கள் மிகவும் வற்புறுத்தியதால் சொன்னேன்." என்று சொல்லியதாக அவன் நண்பர்கள் என்னிடம் சொல்ல, நான் அவனைப் பாராட்டவில்லை. கடவுளுக்கு நன்றி சொன்னேன். நீங்கள் அந்தச் சிறுவனைப் பற்றிச் சொல்லியதை வாசித்ததும், எனக்கு என் மகன் நினைவுக்கு வந்ததால் இதைச் சொல்லி விட்டேன். அவனுக்குத் தெரிந்தால் நிச்சயம் என்னைத் திட்டுவான்...ஏன் பெருமை பீற்றிக் கொள்கின்றாய் என்று...- மிக்க நன்றி நண்பரே அருமையான பதிவிற்கு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

   தங்களின் மகனின் மனதெளிவையும் பக்குவத்தையும் எண்ணி மகிழ்கின்றேன், இந்த எண்ணம் சிந்தனை எல்லாம் பெற்றோரின் வளர்ப்பின் பிரதிபலிப்புதான். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாயாக உங்களை காண்கின்றேன். சான்றான்மையோடு வளர்க்கபட்டிருக்கும் உங்கள் மகனுக்கும் வளர்த்த உங்களுக்கும் எந்தன் வாழ்த்துக்கள்.

   கவலை படாதீர்கள் இந்த விஷயம் உங்கள் மகனின் காதுகளுக்கு எட்டாமல் பார்த்துகொள்கிறேன்.

   கோ

   நீக்கு
 2. அருமையான பதிவு. நீங்கள் கூறியது போல் இந்த பரிசை விட சிறந்த பரிசு ஏதாவது இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. இங்கே அம்மாவின் தினத்தை வேறொரு நாளில் கொண்டாடுவோம் ....

  பதிலளிநீக்கு
 3. கண்ணீர் தான் வந்தது, இதே நிலை தொடரனும், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஸ்வரி ,

   வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு