பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 மார்ச், 2015

வி(ல)ளங்குமா?

வாயில்லா வாலண்டியர்கள் !!

நண்பர்களே,

மனித குலத்தின் பேரழிவிற்கு வித்திடுகின்ற புதிய புதிய நோய் கிருமிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகி வரும் இன்றைய சூழ் நிலையில், அந்த பேரழிவிலிருந்து மனித குலத்தை காப்பற்றும் விதமாக புதிய புதிய மருந்து மாத்திரைகளையும் சிகிச்சை முறைகளையும் கையாள வேண்டி இருக்கின்றது.

இதற்காக இரவு பகல் என்று பாராமல் மருத்துவர்களும் ,விஞ்ஞானிகளும் கடுமையான பரிசோதனைகளையும் தொய்வில்லா ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த ஒட்டுமொத்த அறிவார்ந்த விஞ்ஞானிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியினை  தெரிவித்து அவர்களுக்கு எமது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒரு காலத்தில் மனிதகுலத்தை கூண்டோடு கொத்து கொத்தாக அழித்த கொடிய அரக்கனான பெரியம்மை எனும் ஒரு கொடிய நோய் தலைவிரித்தாடிய சமயத்தில் அந்த அரக்கனிடமிருந்து மனிதனை காப்பாற்ற இங்கிலாந்தை சார்ந்த மருத்துவர் எட்வர்ட் அந்தோணி ஜென்னர் என்பவர் 1798 ஆம் ஆண்டு பசுவின் மூலம் உண்டாகும் அம்மை(cow pox) நோயினால பாதிக்கப்பட்டவர்கள் அடுத்து பெரியம்மை நோய் தாக்காமல் இருப்பதை தீவிரமாக கண்காணித்து அதை தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிக்கு பின்னர் பெரிய அம்மைக்கு வேக்சினேஷன் கண்டுபிடித்தார்.(அவரின் ஆராச்சி கூடத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கின்றேன்). அதன் மூலம் எண்ணற்ற மனித உயிர்களை காப்பாற்றினார்.


இன்று பெரியம்மை உலகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.-Hats off to Dr.Edward Jenner.

இதற்காக அவர் எந்த ஒரு விலங்கினையும் கொடுமையான முறையில் தமது ஆராச்சிக்காக பயன் படுத்தவில்லை. மாறாக ஜேம்ஸ் பிலிப்ஸ் எனும் ஒரு 8 வயது சிறுவனைத்தான் பயன்படுத்தினார்.

inquiry


அதே சமயத்தில் இப்போது நடக்கும் மருத்துவ விஞ்ஞான ஆராச்சிகளுக்கென எத்தனையோ விலங்குகள் பலி கடா க்களாக ஆக்கபடுகின்றன  என்னும் புள்ளி விவரங்களை பார்க்கும் போது மனம் கனக்கின்றது.

இதில் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் போன்ற உலகின் முன் வரிசையில் உள்ள பல்கலை கழகங்கள் நடத்தும்  நான்கு மில்லியன் அறிவியல் ஆய்வுகளுள் ஏறக்குறைய 25% ஆய்வுகள் மிருகங்களின் மீதே நிகழ்த்தபடுகின்றன எனும் திடுக்கிடும் தகவலை கேட்டு மிகுந்த அதிர்ச்சியாயிருந்தது.

இதில்  குரங்குகள், பூனைகள், எலிகள், முயல்கள், பன்றிகள் போன்ற விலங்குகள் பெருமளவில் பயன் படுத்தபடுகின்றன.

இது போன்று விலங்குகளின்மீது செய்யப்படும் சோதனைகளையும் ஆராச்சிகளையும் மனிதர்கள் மீது செய்ய முடியாது, அதற்காக தம்மை அர்பணிக்க முன் வருவதற்கு யாரும் தயாராக இல்லாத பட்சத்தில் இப்படி மிருகங்களின் மீது சோதிக்கபடுவது இன்றியமையாததாகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுபோன்ற செய்கைகளை செய்யும் விஞ்ஞானிகளை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு மாற்றுமுறையில் ஆராச்சி செய்வதற்காக பண முதலாளிகள் யாரேனும் அல்லது அரசுகளோ அதற்கான பொருளாதார பாரத்தை சுமக்க தயாராக இருக்கின்றார்களா என காட்டுங்கள் என இந்த ஆய்வாளர்கள் சவால் விடுகின்றனர்.

விலங்குகளை இப்படி பயன்படுத்தி ஆராச்சி செய்வது எனக்கு விருப்பம் இல்லைதான் ஆனாலும்,ஹிட்லர் காலத்தில் நாசி படைகளால் பிணை கைதிகளாக பிடிக்கபட்ட அடிமைகள் மீதோ,அல்லது மாற்று மனிதர்கள் மீதோ அந்த கால கட்டத்தில் செய்ததுபோல் இப்போது செய்ய முடியுமா என்ன என்று லூயிஸ் எனும் விஞ்ஞானி கேட்கின்றார்.

Image result for pictures of animALS INVOLVED IN SCIENTIFIC RESEARCHES

இப்போது பிரித்தானியாவில் நடத்தப்படும் விலங்குகள் மீதான  ஆராச்சிகள் மிகவும் கவனத்துடனும், பாதுகாப்பாகவும், ஒழுங்கு முறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மிருகங்களுக்கு மிக மிக குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்படும் விதத்திலேயும் அமைந்திருப்பதாக சொல்லபடுகிறது.

யாருமே இதுபோன்று விலங்குகளின் மீதான  சோதனைகளை விரும்பாதபோதும், மனிதகுல மேம்பாட்டுக்காகவும் , அவர்களின் வியாதிகள் சுகவீனங்களை போக்கும் வண்ணமா புதிய மருந்து மாத்திரைகள்,புதியவகை சிகிச்சைகள், அறுவை சிகிச்ச்கிகளை நேரடியாக மனிதன் மேல் செய்யாமல் முன்னோட்டமாக விலங்குகளின் மீது செய்யபடுவது இன்றியமையாததாக தவிர்க்கப்பட முடியாததாக இருப்பதாகவும் கருதபடுகின்றது.

 இதுபோன்ற விலங்குகளின் ஈடுபாடு மிக மிக கட்டுப்பாட்டுடனும் குறித்த அளவிலேயுமே செய்ய படுவதை உறுதி செய்ய அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இங்கே முன்னாள் மேயர் ஒருவர் தமது வீட்டில் எந்த ஒரு பிரத்தியேக வசதியுமின்றி 70 விலங்குகளை வளர்த்து வந்ததாக காவல் துறையினரால் "விலங்"கிடபட்டிருக்கின்றார். 64 வயதான அந்த முன்னாள் மேயரும் 24 வயதான அவரது மகளும் தங்களது வீட்டில்  வளர்த்து வந்த விலங்குகளில் 15 முயல்கள், 2 எலிகள், ஒரு பூனை, இரண்டு நாய்கள், நான்கு வாத்துக்கள், 22 கோழிகள், மற்றும் ஒரு கிளி யும் அடங்குமாம். 

இனி இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவது இதுபோன்று எந்த வீட்டு விலங்குளையும் வளர்க்க தடை விதிக்கபட்டுள்ளனராம்.

எது எப்படியோ.மனித குலத்தை காப்பாற்ற செய்யப்படும் ஆரச்சிகளுக்காகவும் சோதனைகளுக்காகவும் விலங்குகளின் உயிர்களையும் அவற்றின் உணர்வுகளையும் ,வேதனைகளையும் ஆட்படுத்துவதை  தவிர்த்து, மாறிவரும் விஞ்ஞான உலகில் அவற்றுக்கு பதிலாக மாற்று வழிகளை சிந்தித்து செயல்படுத்த அறிவார்ந்த விஞ்ஞான வல்லுனர்கள் தங்களின் அறிவையும், திறமையையும் ஆற்றலையும் பயன்படுத்தினால் அழிந்து வரும் விலங்குகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கமுடியும்.

Image result for pictures of animALS INVOLVED IN SCIENTIFIC RESEARCHES

இப்படி விலங்குகளை அறிவியல் ஆராச்சிக்காகவும், அவற்றுக்கு உண்டான  பாதுகாப்பு வசதிகள் இல்லாத இடங்களிலும் வைத்திருந்தால் இந்த விலங்குகளின் வம்ச விருத்தியும் அவற்றின் வாழ்வும்  விளங்குமா? இது இந்த விஞ்ஞான உலகுக்கு கொஞ்சமாவது விளங்குமா?

  "காக்கை குருவி எங்கள் ஜாதி;அதை
கசக்கி பிழிவதென்ன நீதி"

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ7 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

   கவலைதான்,நாம் என்ன செய்ய முடியும்?

   வருகைக்கு நன்றி.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 2. "காக்கை குருவி எங்கள் ஜாதி;அதை
  கசக்கி பிழிவதென்ன நீதி"

  //எந்த ஒரு விலங்கினையும் கொடுமையான முறையில் தமது ஆராச்சிக்காக பயன் படுத்தவில்லை. மாறாக ஜேம்ஸ் பிலிப்ஸ் எனும் ஒரு 8 வயது சிறுவனைத்தான் பயன்படுத்தினார்.//

  ஆக குரங்குக்குப் பதிலா 8 வயது சிறுவன் சரி என்கிறீர்களா?

  விலங்குகள் மீது அன்பைக் காண்பிக்கும் மக்களுக்கு மனிதர்கள் மீது அன்பு இருக்காதோ?

  //25% ஆய்வுகள் மிருகங்களின் மீதே நிகழ்த்தபடுகின்றன//
  வேறு வழி இருக்கிறதா என்ன?

  கூழுக்கும் ஆசை .. மீசைக்கும் ஆசை !!

  உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லை. மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா தருமி அவர்களுக்கு, அனேக வணக்கங்கள்.

   தங்களின் பின்னூட்டத்திற்குமிக்க நன்றி.

   கருத்தோடு ஒத்துபோகவில்லை என்று தாங்கள் சொல்லியிருப்பதை தங்களின் கருத்தாக ஏற்றுகொள்கிறேன்.

   எட்வர்ட் ஜென்னெர் அவர்கள் பசு அம்மை கிருமிகள் பெரிய அம்மை நோயிக்கான தடுப்பு மருந்தாக அமையும் என்று தீர ஆராய்ந்த பின்னரும் இந்த ஆய்வினால் சிறுவனுடைய உயிருக்கும் சுகத்திற்கும் எந்த பாதிப்போ, பக்க விளைவுகளோ உண்டாகாது என அவரது சுற்று வட்டாரத்தில் பால் பண்ணைகளில் வேலை செய்த பெண்களுக்கு பசு அம்மை (cow pox) இருந்தும் அவர்களை பெரியம்மை பாதிக்கவில்லை எனவே அந்த பசு அம்மை கிருமிகள் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தாக செயல்படுவதை பல காலம் ஆராய்ந்து தெளிவு ஏற்பட்ட பிறகே அந்த சிறுவனின் பெற்றோரின் அனுமதியுடன் இந்த முன்னூட்ட ஆராச்சியினை செய்ததாகவும் அவர் கணித்த படியே அந்த சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும், பெரிய அம்மை அவனை அணுகவில்லை எனவும் தகவல்கள் சொல்கின்றன.

   இதற்கு முன்னும் பலரும் இந்த பெரிய அம்மை நோய்குறித்து ஆராய்ந்து அதை செயல்படுத்த சிறையில் இருந்த தூக்கு தண்டனை கைதிகளிடம் அவர்களின் சம்மதத்தோடு சோதித்ததாகவும் செய்திகள் சொல்கின்றன.

   மனித குல நல வாழ்விற்கான மருத்துவ ஆராய்ச்சியினை செய்யும் போது விலங்குகளை துன்புறுத்தாமல், அவைகளுக்கு சித்திரைவதை போன்ற வேதனைகளை கொடுக்காமல், மாற்று முறைகளை அறிவார்ந்த ஆராச்சியாளர்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்பதும், அப்படி ஒருவேளை வேறு வழி இன்றி ஒரு சில பரிசோதனைக்கு மிருகங்கள்தான் உகந்தது என்னும் பட்ச்சத்தில் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் விலங்குகளை குறைந்த படச்ச பாதிப்பு
   ஏற்படும் அளவிற்கு மட்டுமே பயன்படுத்தினால் அழிந்துவரும் விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறையுமே என்பது மட்டுமே என்னுடைய ஆதங்கம்.

   வருகைக்கு மீண்டும் நன்றிகள்

   தங்களின் தொடர் வருகைக்கு காத்திருக்கின்றேன்.

   நட்புடன்.

   கோ

   நீக்கு
 3. ஐயா தருமி அவர்களுக்கு,

  வணக்கங்கள்,

  கருத்து பரிமாற்றம் சிந்தனையை தெளிவுபடுத்தும் என்கின்ற வகையில் தான் நான் உங்கள் கருத்தை கண்நோக்கினேன், ஆலமரம் நீங்கள், இன்னும் விதைக்கவே படாத விதையாகிய என்னிடம் பெரிய பெரிய வார்த்தைகள் (மன்னிப்பு) எல்லாம் வேண்டாமே.

  "(தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு, எனவே ஆங்கிலத்தில் சாரின்னு சொல்லலாம்னு நினைக்காதீர்கள்)".

  வழி காட்டுங்கள்,வெளிச்சம் பாய்ச்சுங்கள் பின் தொடர சித்தமாயிருக்கின்றேன்.

  குருவின் கண்ணோட்டத்தில் சிந்தையை சலவைசெய்து தெளிவு ஏற்படுத்தும் தங்களின் ஆலோசனைகளும் , வழி காட்டலும் வாஞ்சிக்கின்றேன்.

  தொடர்ந்து எமது பதிவுகளை கொஞ்சம் திறனாய்வு செய்து செய்தி அனுப்புங்கள் வாய்ப்புகள் வாய்க்கும்போது.

  என்றும் நன்றியுடனும் நட்புடனும்,

  கோ

  பதிலளிநீக்கு
 4. என்றும் மனிதன் விலங்குகளைத் தன் தேவைக்கு பயன்படுத்தியுள்ளான். அவற்றின் அனுமதியைக் என்று கேட்டான்.
  நம் கோவில்களில் கட்டி வை (வதை)க்கப்பட்டுள்ள யானைகள் படாத துன்பத்தையா? இந்த விலங்குகள் படுகின்றன.
  யானை போன்ற சுற்றம் சூழ வாழும் விலங்குக்கு இந்த ஆயுள் தண்டனை எவ்வளவு கொடுமை!
  இதைத் தீர்க்க உங்களாலும் என்னாலும் முடியுமா?
  அதனால் இந்தப் பரிசோதனைக்கு "உச்" கொட்டலாம். இதற்கு மேல்
  சிறியேன் என்னால் எதுவும் செய்யமுடியாது.
  நாளை மருத்துவ உலகம் , பசுக் கன்றுக்குட்டியின் ஈரலில் தயாரித்த
  ஒரு தடுப்பு மருந்தை புற்று நோய்க்குக் கண்டு பிடித்தால் இந்தியாவில் அந்த தடுப்பு மருந்து ஏற்றப்படும் முதல் நபர் நம் பிரதமரா? சங்கராச்சாரியாரா? என்ற போட்டியே நடக்கும்.
  அந்த அளவுதான் எல்லோர் "அபிமானமும்"
  நான் இவர்களைக் குறிப்பிடுவது, இவர்கள் தான் பசுக்களைக் காப்பாற்றக் கங்கணங்கட்டுபவர்கள்.
  மிருகங்கள் சோதனைக்கூடத்தில் படும் அவலம் தெரியும், ஆனால்
  இவற்றுக்கு மாற்று வழி என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகன்,

   பதிவினை அலசி, விரிவான பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றிகள்.
   அருமையான உதாரணத்துடன் கூடிய உங்கள் ஆதங்கமும் அனுதாபமும் கவனத்திற்குரியவை.

   நட்புடன்

   கோ

   நீக்கு