பின்பற்றுபவர்கள்

வியாழன், 19 மார்ச், 2015

சமரசம்!!

கார சாரம்!!

நண்பர்களே,

கல்லூரி  முதுகலை பட்ட  படிப்பிற்காக வெளி ஊர்களில் இருந்து மட்டுமல்ல வெளி மாநிலங்களில்  இருந்தும் மாணவ மாணவியர் (ஆமாம்  இதுதான் எனது முதல்  அனுபவம் மாணவியருடன் சேர்ந்து கல்வி கற்றது) எங்கள் ஊரிலுள்ள  கல்லூரிகளுக்கு வருவது கொஞ்சம் சாதாரணம் தான்.

அப்படி வெளி ஊர்களில்   இருந்து வரும் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பது வழக்கம்.  மாணவியர் அவர்களது நெருங்கிய உறவினர்களின் வீட்டில் தங்கி படிப்பார்கள்.

சில நேரங்களில் சில மாணவர்கள் விடுதியில் தங்காமல் தனியாக அறைகள் எடுத்து அங்கிருந்து கல்லூரிக்கு வந்து பயிலுவார்கள்.

இப்படி தனியாக அறை எடுத்து தங்குவதில் சில அசௌகரியங்கள   இருந்தாலும், அதில் பெரிதான அனுகூலங்களே அதிகம்.

எத்தனை நேரமானாலும் விழித்திருந்து படிக்கலாம், விருப்பம் போல் உணவருந்தலாம், நண்பர்களோடு இணைந்து படிக்கலாம், எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு செல்லலாம், வரவு செலவுகளை தானே நிர்வகிக்கலாம்,சினிமா, ரேடியோ, தொலைக்காட்சி போன்றவற்றை அனுபவிக்கலாம்.

ஊரிலிருந்து தம்மை பார்க்க வரும் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள், நண்பர்கள் தம்மோடு தங்கலாம் இது போன்ற எத்தனையோ நன்மைகள் கருதி சில மாணவர்கள் கல்லூரி விடுதியை தவிர்த்து தனியாக அறைகளோ அல்லது அப்பார்ட்மெண்ட்களையோ வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தனர்.

நாங்கள் எல்லோரும் இளங்கலை பட்ட படிப்பை அதே கல்லூரியில் பயின்றிருந்ததாலும், அதே மண்ணின் மைந்தர்கள் என்பதாலும் எங்களின் செல்வாக்கு கொடி  அந்த கல்லூரியில் கொஞ்சம் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.

முதல் நாள் எல்லா மாணவர்களும் தங்களை அறிமுக படுத்திக்கொண்டு அன்று முழுவதும் கல்லூரியை, நூல் நிலையத்தை,உடற் பயிற்சி கூடத்தை,முதல்வர் அலுவலகத்தை, தியான கூடத்தை மற்றும் சில முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் எனக்கு அருகில் ஒரு மாணவன் தயங்கி தயங்கி என்னிடம் வந்து, தனது பெயரை மீண்டும் சொல்லி கைகுலுக்கிவிட்டு, தான் எங்கிருந்து வந்திருக்கின்றேன் என்பதையும், தமக்கு கல்லூரி விடுதியில் தற்போது தங்குவதற்கு இடமில்லை என்றும் தமது பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும்,விடுதியில் இடம் கிடைக்கும் வரை இங்கே ஏதேனும் வாடகைக்கு அறைகள் கிடைக்குமா என கேட்டார்.

அவர் நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து, தமது பட்ட மேற்படிப்பிற்காக எங்கள் கல்லூரியில் சேர்ந்தவர்.

ஊரும் உலகமும் அறிந்தவண்ணம் நாம் எல்லோரும் வந்தாரை வாழவைக்கும் பரம்பரையில் பிறந்து விட்டதாலோ என்னவோ அந்த மாணவனுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் உதயமானது.

அவ்வகையில், அந்த புதிய மாணவ நண்பனிடம், அதற்கென்ன தற்போது  வேண்டுமானால் எங்கள் வீட்டில் தங்கிக்கொள் , இன்னும்  இரெண்டொரு நாட்களில் வீடோ அல்லது அறையோ பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.

உடனே அந்த மாணவ நண்பன் என் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கொஞ்சம் கண்கள் கலங்கிய வண்ணம்  சொன்னார், இதுபோன்றதொரு பதிலையும் (பெரிய) மனதையும் தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, உங்களின்பரந்த மனதுக்கும் நட்புக்கும் மிக்க நன்றி, இன்று மாலை நான் ஊருக்கு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்கின்றேன் மேலும் நான் இன்று இங்கே தங்குவதற்கான எந்த ஏற்பாட்டுடனும் வரவில்லை, எனவே இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தினமும் வீட்டிற்கு சென்றுவருவதாக நினைத்திருக்கின்றேன் வார கடைசி நாளான வெள்ளி கிழமைக்குள் வீடு கிடைத்தால் போதுமானது என சொல்லி விட்டு மீண்டும் என் கைகளை குலுக்கி தமது நன்றியை தெரிவித்துவிட்டு தாம் செல்ல வேண்டிய ஊருக்கான பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அவர் வீட்டுக்கும் கல்லூரிக்கும் இடைப்பட்ட பயண தூரம் அதிக பட்சம் மூன்று மணி நேரம்தான்.

இவ்வாறாக முதல் நான்கு நாட்கள் அவர் தமது வீட்டிலிருந்து வந்து போய்கொண்டிருந்தார்.

அந்த நண்பனின் தேவையை அறிந்த முதல் நாள் முதலே நான் என் வீட்டில் சொல்லி எங்கள் குடியிருப்பு பகுதியில் ஏதேனும் வீடோ அல்லது பேச்சிலர்கள் தங்கும் அறையோ இருக்கின்றதா என விசாரிக்க சொல்லி இருந்தேன். அப்போது கிடைத்த தகவலின் பேரில் எங்கள் வீட்டிலிருந்து சுமார் நானூறு அடி தூரத்தில் இருந்த ஒரு வீட்டின் மேலே புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு  எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஆசிரிய பயிற்சி மாணவர்கள் கொஞ்சம் பேர் தங்கி படித்துவருவதாகவும் அங்கே வேறு ஏதேனும் அறைகள் காலியாக இருக்கின்றனவா என விசாரிக்கும்படியாக தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து அன்று இரவே அந்த வீட்டு உரிமையாளரிடம் போய் பேசி ஒரு அறையை இன்னும் நான்கு நாட்களுக்குள் தயார் செய்ய சொல்லிவிட்டு வந்தேன்.

அதன்படி வீடு தயாராகிகொண்டிருந்தது, அதை நண்பரிடம் சொல்லி அவரும் அந்த வீட்டை வந்து பார்த்து மிகவும் பிடித்துபோக அடுத்த வாரத்திலிருந்து அந்த புதிய வீட்டில் 'குடி'யில்லாத  குடுத்தனம் நடத்த ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் நாங்கள் இருவரும் இணைந்தே கல்லூரிக்கு சென்று வந்தோம்.

அதேபோல் மாலையில் கல்லூரி முடிந்ததும் நேராக எங்கள் வீட்டிற்கு வந்து தேநீர் அருந்திவிட்டு இருவருமாக அவர் வீட்டிற்கு சென்று கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அன்றைய பாடங்களை கொஞ்சம் அலசிவிட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

இதற்கிடையில் அவருக்கு வேண்டிய தட்டுமுட்டு சாமான்களை அவர் வீட்டிலிருந்து கொண்டுவந்து சமைக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

அவரின் சமையல் மிக எளிதான சமையலாக இருந்தாலும் சுவை மிகுந்ததாக இருக்கும். குறிப்பாகஅவரது சமையலில்  வாரத்தில் நான்கு நாட்கள் கண்டிப்பாக வெண்டைக்காயும் ஓரிரு நாட்கள் கத்தரிக்காயும் இடம் வகிக்கும்.  என்னோடு இணைந்து மற்றுமொரு நண்பரும் அந்த ஆந்திர நண்பரோடு நெருங்கி பழக ஆரம்பித்தார்.

இப்போது நாங்கள் மூவரும் நெருக்கமாகிவிட்டோம்.  அவ்வகையில் சில நேரங்களில் அவரோடு அவர் அறையில் நாங்கள் மூவரும் இரவு முழுவதும் படித்துவிட்டு அங்கேயே உறங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் அவரவர் வீட்டுக்கு செல்லுமளவிற்கு நட்பு விரிவானது விரிசலில்லாமல்.

ஆந்திர நண்பர் ஒவ்வொரு வார இறுதியிலும் ஆந்திராவில் இருக்கும் தமது வீட்டுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்து விடுவார் வரும்போது அந்த வாரத்திற்குரிய உணவு பொருட்களை வீட்டிலிருந்தும் தமது தோட்டத்திலிருந்தும் கொண்டு வருவார் இப்படித்தான் வெண்டைகாயும் , கத்தரிக்காயும் வாரம் முழுவதும் அவரது சமையலை ஆக்கரமிக்கும்.

இப்படியாக போய்கொண்டிருந்த வேளையில், ஒரு திங்கட்கிழமை ஊரிலிருந்து வந்ததும் அவர் சொன்னார் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஊருக்கு போகும்போது நீங்கள் இருவரும் என்னோடு எங்கள் வீட்டுக்கு வரவேண்டும் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களை அழைத்து வர சொல்லி இருக்கின்றனர் என்றார்.

என்ன விசேஷம் என்றோம், விசேஷம் ஒன்றுமில்லை சும்மாதான் என்றார்.

நாங்களும் அந்த வெள்ளிகிழமை கல்லூரி முடிந்த பிறகு அவரவர் வீட்டில் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்ததால் ஆந்திரா சென்றோம்.

நேராக அவர் தமது அப்பா வழி பாட்டி தங்கி இருந்த ஒரு பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று தமது பாட்டியிடம் அறிமுகபடுத்தி வைத்தார்.

பாட்டியும் எங்களை அன்போடு வரவேற்று , அன்று இரவு  உணவு ஆயத்தபடுத்தி அமர்க்களம் படுத்திவிட்டார், அவரது அன்பு எங்களை நெகிழவைத்தது  அவர் சமைத்து பரிமாறிய  உணவு எங்கள் கண்களை  கலங்க வைத்தது.

  நாட்டு கோழி குழம்பும், சோறும், சோள  களி உருண்டயும்.

 அந்த கோழி எத்தனை கிலோ இருந்ததோ அதற்க்கு சற்றும் குறையாமல் பச்சை மிளகாய் போட்டிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை , அப்பப்பா.... காரம் சும்மா தூக்கலாக இருந்தது, அத்தகைய காரத்தை இதுவரை அறிந்திராத நாங்கள் இருவரும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு போதும் என்றோம் ஆனால் பாசம் மட்டுமே தெரிந்த பாட்டிக்கு எங்கள் பாஷை தெரியாமல் மேலும் குழம்பை அள்ளி எங்கள் இலைகளில் போட்டுவிட்டார், எவ்வளோவோ சமாளித்தும் முடியாததால் இலையில் இருந்த அனைத்தையும் சாப்பிடவேண்டியதாயிற்று.

இதைதான் பெரியவர்கள், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்... என்று சொல்லுவார்கள் போல.

எங்களின் இருவரின் வயிறுகளும் ஏறக்குறைய இரண்டு உலகங்கள் போல ஆகி விட்டன, அதாவது வடிவத்தில் மட்டுமல்லாமல் தன்மையிலும்தான்.

உலகத்தின் மூன்று பாகம் தண்ணீர் ஒருபாகம் தானே நிலம் அதுபோல உண்ட உணவின்  அளவைவிட குடித்த தண்ணீரின் அளவு அதிகம்.

உணவிற்கு பிறகு படுக்கபோகும்போது நண்பரிடம் நாங்கள் இருவரும் கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னோம் கோழி குழம்பு கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தது நாக்கெல்லாம் எரிகிறது என்று. அவர் உடனே வேறொரு அறையில் அடுக்கி வைக்கபட்டிருந்த வெல்ல உருண்டையை உடைத்து எங்களுக்கு கொடுத்து சாப்பிடசொன்னார்,

அது கொஞ்சம் நாக்கிற்கு நலமாக இருந்தது. எனினும் அடுத்தநாள் கோழி கூவும் முன்னே அதற்க்கு முந்தின இரவு சாப்பிட்ட கோழி எங்களை பலமுறை கூவி கூவி எழுப்பி பாத்ரூம் போகவைத்தது ஒரு தனிக்கதை.

காலையில்  பாட்டி எங்களுக்காக வடை சுட்டு கேழ்வரகு மாவில் தோசை செய்து காத்திருந்தார், வேண்டாம் நாங்கள் கொஞ்சம் தாமதமாகத்தான் காலை உணவு சாப்பிடுவோம்; நாங்கள் நண்பரின் வீட்டுக்குத்தானே செல்கிறோம் அங்கேயே சாப்பிட்டுகொள்கிறோம் என்று சொன்னதை மொழிபெயர்ப்பு வாயிலாக அறிந்த பாட்டிக்கு மனசு வருத்தமானதை புரிந்துகொண்ட நாங்கள் இருவரும், சரி பாட்டி வருத்தபட்றாங்க கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு போகலாம் என பேசி முடிவெடுத்து, சரி பாட்டி எடுத்து வையுங்கள் என சாப்பிட தயாரானோம்.

தோட்டத்து வாழை இலையில் வடை வைத்தார்கள், பிறகு தோசை வைத்தார்கள் (கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது) பிறகு தோசைக்கு தொட்டுக்கொள்ள மூடிவைத்திருந்த பாத்திரத்தை திறந்தார்கள், ஆவலுடன் பத்திரத்தை பார்த்த எங்கள் இருவருக்கும் பார்த்த மாத்திரத்திலேய கண்கள் கலங்கி கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது, ஏனென்றால் அந்த பாத்திரத்தில் இருந்தது நேற்று இரவு சாப்பிட்ட அதே மிளகாய் மன்னிக்கவும் கோழி குழம்பு.

சாப்பிடுவதா வேண்டாமா என குழம்பி , இரவு பட்ட பாட்டை நினைத்து ஒரு விதமாக பட்டும் படாமல்  சாப்பிட்டு விட்டு கலங்கிய கண்களோடு (பாட்டி நினைத்திருப்பார்கள் பாசகார  பசங்க இவன்க என்று) பாட்டியிடமிருந்து விடைபெற்று நண்பன் வீட்டை நோக்கி பயணித்தோம்.


 ஒரு 40 நிமிட பேருந்து பயண தூரத்தில்  இருந்த நண்பரின் பெற்றோர் இருக்கும் வீட்டிற்கு சென்றோம்.

நண்பனின் பெற்றோர்,சகோதரி யாவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அவர்களோடு பேசிகொண்டிருந்தோம், நண்பனின் பெற்றோருக்கு தமிழ் ஓரளவிற்கு தெரிந்திருந்தது. அதற்குள் நண்பனின் வீட்டு தோட்டத்திலிருந்து இளநீர், பப்பாளி பழம், சீத்தா பழங்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள்.


நண்பனின் அப்பாவும் அம்மாவும் எங்களுக்கு தங்களின் மகன்பாலுள்ள அக்கறைக்காகவும் அவருக்கு நாங்கள் ஒத்தாசையாக இருப்பதையும் குறித்து மிக்க மகிழ்ச்சி என்று கூறி நன்றி சொன்னார்கள்.  நாங்களோ என்னங்க இதுக்குபோய் பெரியபெரிய வரத்தை எல்லாம் சொல்லறீங்க நீங்க எவ்வளவு பெரியவங்க இதுக்கெல்லாம் எங்களுக்கு நன்றி சொல்றீங்க?

இப்படி பேசிசிகொண்டிருந்தபோதே நண்பனின் அம்மாவும் அவரது சகோதரியும் சேர்ந்து மத்திய உணவு தயாரித்துகொண்டிருந்தனர்.

நண்பனின் அப்பா, அவர் தமது கல்லூரி வாழ்க்கையையும் அவரது நண்பர்களை குறித்த நினைவலைகளையும் எங்களோடு பரிமாறிகொண்டிருந்த நேரம் உள்ளே நண்பனின் அம்மா எங்களுக்காக உணவு பரிமாற காத்திருந்தார்.

சரி வாங்க சாப்பிடலாம் என உள்ளே அழைத்து சென்றார்.

வாழை இல்லை, வெண்டைக்காய் பொறியல், கத்தரிக்காய் கூட்டு,கோங்குரா சட்டினி, வெள்ளை சாதம், அப்பளம் பரிமாறப்பட்டது.

குழம்பு ......... என்னவாக இருக்கும்? ......  சிந்தை குழம்பியது ........கண்கள்  மூடி வைக்க பட்டிருந்த   குழம்பு பாத்திரத்தில் நிலை குத்தி நின்றது வர இருக்கும் பேரதிர்ச்சியை அறியாமல்.. திரை விலகியதுபோல பாத்திரத்தின் மூடி திறக்கப்பட்டது.

உலகமே இடிந்து போனதுபோல் கண்கள் இருண்டுபோனது .... காரணம்... இங்கேயும் நாட்டு கோழி குழம்புதான்.

Image result for PICTURE OF CHICKEN KUZHAMBU

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்க எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஆந்திர நண்பன் சொன்னார்  பயப்படாதீர்கள் அம்மாவிடம் நான் ஏற்கனவே காரம் குறைத்து சமைக்கும்படி சொல்லிவிட்டேன் எனவே தைரியமாக சாப்பிடுங்கள். இருந்தாலும் முதலில் கொஞ்சமாக சுவை பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தோம், நண்பன் சொன்னது போல் பாட்டியைவிட ஒரு சில(!!!!!) பச்சை மிளகாய்கள்  குறைத்துதான் சமைத்திருந்தார்கள்.

குழம்பை விட தயிரையே அதிகம் போட்டு குழைத்து  சேர்த்து சாப்பிட்டோம்.

இறுதியாக நண்பனின் அம்மா ரசம் கொண்டுவந்தார்கள் முதலில் அமர்ந்திருந்த எனக்கு முதலில் ஊற்றினார்கள் , அடுத்து அமர்ந்திருந்த   அவரது மகனுக்கு ஊற்றினார்கள் அடுத்து அமர்ந்திருந்த என் நண்பனுக்கு ஊற்ற கரண்டியை நீட்டும்போது நண்பன் சொன்னான்:

 "இருங்க இருங்க நல்லா  இருந்தா ஊத்திக்கிறேன்".

 எனக்கு நண்பன் சொன்னதை கேட்டதும் கோழிகுழம்பை பார்த்து ஏற்பட்ட அதிர்ச்சியைவிட பேரதிர்ச்சியாக இருந்தது.  அதுவரை சந்தோஷமாகவும்  மகிழ்ச்சியோடும் கலலப்பாக இருந்த நண்பனின் அம்மாவின் முகத்தில் ஒரு வாட்டம் தோன்றியது, அவர்களுக்கு மனசு வலித்திருக்கும் , ஆனாலும் என் நண்பன் அதை உணராமல் சாதாரணமாக , கொஞ்சம் ஊறுங்கள் என சொல்லி தனது உள்ளங்கையை குவித்து நீட்டினார்.

Image result for PICTURE OF RASAM

சாப்பாடு முடிந்து மீண்டும் வெளியில் வாசலில் போடபட்டிருந்த இருக்கைகளில் நாங்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருந்தோம் ஆந்திர நண்பன் அருகிலிருக்கும் கடைக்கு சென்று வருவதாக சொல்லி சென்றுவிட்டார்.

அப்போது நான் என் நண்பனிடம் நடந்த விஷயத்தை சொல்லி நீங்கள் அந்த அம்மாவிடம் சொல்லிய விதம் சரியில்லை என கூறினேன், அதற்க்கு அந்த நண்பன் , நான் அவர்களது மனம் புண் படும்படியா எதுவும் சொல்லவில்லையே, எங்கள் வீட்டிலும் எங்க அம்மாவிடம் ரசம் ஊற்றுவதற்கு முன்னால், இருங்க இருங்க நல்லா இருந்தா ஊத்திக்கிறேன் என்றுதான் சொல்லுவேன், ஏன்னா ரசம் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான ருசியாக இருக்காது.

அது சரி அவரவர் அம்மாவிடம் நாம் எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் , ஆனால் அடுத்தவர் வீட்டில் அவர்கள் மனம் புண்படுமோ என யோசித்துதானே பேசி இருக்கவேண்டும் என்றேன்.

ஒருவேளை கொஞ்சம் ருசிபார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லி இருந்திருந்தால் ரசம் நன்றாக இல்லை என்றும் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றுதானே அர்த்தமாகும், அப்படி சொல்லிய பிறகு சரி ஊற்றுங்கள் என சொல்லி இருந்தாலும் ஒருவேளை நன்றாக  இல்லாவிட்டாலும் இப்படி சொல்லிவிட்டபிறகு தவறாக போய்விடுமோ  என்றெண்ணி ஊற்றுங்கள் என்று சொல்வதாகவும்  நினைப்பார்களே, எனவே நீங்கள் அப்படி சொல்லி இருக்க கூடாது எனவும்  நீங்கள் சொல்லிய மாத்திரத்தில் அவர்கள் முகம் சோர்வடைந்ததையும் அதற்க்கு பின்னால் அவர்கள் நம்மிடம் அவ்வளவாக ஈடுபாட்டுடனும், கலகலப்பாகவும் இல்லையே அதை கவனித்தீர்களா என்றும் கேட்டேன்.

அப்போதுதான் நண்பன் தன் தவறை உணர்ந்து; "ஆமாம் , தவறு செய்துவிட்டேன்" ஒவ்வொருமுறை நான் என் அம்மாவிடம் சொல்லும்போதுகூட என் அம்மாவும்  இதேப்போலதானே வருத்தமடைந்திருப்பார்கள் ,  தவறு செய்துவிட்டேன் " என சொல்லி விறு விறு என வீட்டின் உள்ளே சென்று சமையல் அறையில் மாலை சிற்றுண்டிக்கான ஆயத்தம் செய்து கொண்டிருந்த நண்பனின் அம்மாவிடம் சென்று அவர்களின் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு தமது தவறுக்காக தம்மை மன்னிக்கும்படி உண்னையிலேயே மனதுருகி மன்னிப்புகேட்டார்.

 அந்த தாயோ " பரவாயில்லப்பா இதுக்குபோய் என்னப்பா நீ மன்னிப்பெல்லாம் கேட்கணுமா, நீயும் என் பிள்ளைதானே" என அவர்கள் கூறியதை கேட்டு எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. இந்த முறை வந்த கண்ணீர் ரசத்திலிருந்த  பச்சை  மிளகாயின் கைங்கரியமல்ல ,ரசத்தினால் ஏற்பட்ட மனகசப்பிலிருந்து  நண்பனின் அம்மாவின் பெரிய மனதிநிமித்தம் என் நண்பனுக்கும் அந்த அம்மாவிற்கும் ஏற்பட்ட சமரசத்தினால்.

எங்களோடு இரண்டாண்டுகாலம் இணைபிரியாமல் நட்புபாரட்டிய எண்களின் சுந்தர தெலுங்கு நண்பன் இந்த நிகழ்ச்சியை குறித்து ஏதும் அறியாதவராகவே கல்லூரி படிப்பை முடித்து வெற்றி வகை சூடி தாயகம் (தெலுங்கு தேசம்) திரும்பினார்.

அன்று முதல் இன்றுவரை எந்த உணவையும் சமைத்தவர்களின் மனம் நோகும்படி விமரிசித்து  பேசகூடாது என்னும் பாடத்தை கல்லூரி வாழ்வில் கற்று கொண்டதை கடைப்பிடித்து வருகின்றேன் அந்த நண்பரும் கடைபிடிப்பார் என நன்புகின்றேன்.

இன்றைக்கும் எப்போதெல்லாம் ரசம் சாப்பிடுகின்றேனோ அப்போதெல்லாம் இந்த ரசமான நிகழ்ச்சி என் நினைவில் ரசம் ஊற்றும்,பழைய ரசம் தான் ஆனாலும் அந்த காலங்களை  நினைத்தாலே இனிக்கும்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ
.14 கருத்துகள்:

 1. ஆஹா ரசமான பதிவு
  ச்சே டங் சிலிப்பாயிட்டுச்சே
  ரசனையான பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பே (சிவம்),
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, பதிவினை ருசித்து படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் அதனாலோ என்னவோ கோழி பச்சை மிளகாய் ருசியில் எந்தன் டங்குவார் அருந்ததுபோல் உங்கள் டங் சிலிப்பாயிடுச்சோ?

   நட்புடன்

   கோ

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி தனப்பால்.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 3. aandukal pala mudinthum, nikalvukal marakkamal ninaivil kondu ezuthiya vitham arumai sir.


  kadaisivarai ungal nanpar vidu andhrala enga irukkunu sollaliye sir.

  adutha maatham ennudaiya pg vazkai mudikka irukkiren ithu pondra suvaiyana sampavangalo nikalvukalo nadakkaliyenu poramiyaaka irukkirathu.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   கல்லூரி வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பல பதிவுகள் நெஞ்சின் ஆழத்தில் பொக்கிஷமாக புதைக்கபட்டுள்ளவைதான் அவ்வப்போது வெளி வருகின்றது. உங்களுக்கு வாய்க்கவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தமானாலும் இதுபோன்ற பதிவுகள் உங்களை மகிழ்விப்பதை எண்ணி மகிழ்கின்றேன்.

   முதுகலை பட்டம் சிறப்புடன் தங்களை வந்தடைய எமது வாழ்த்துக்கள்.

   ஆல் தி பெஸ்ட்.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 4. வருகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையார் அவர்களே.

  நினைத்தாலே (மிளகாய்) இனிக்கும்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 5. என்ன ஒரு அருமையான அனுபவம் நண்பரே! வயிற்றிற்குள் சென்ற கோழி இன்றும் கூவிக் கொண்டு இருக்கின்றதோ??!!!!!! அதனால்தான் பதிவாக வெளி வந்திருக்கின்றது போலும்.....ஹஹஹ

  இறுதியில் சொன்னீர்கள் பாருங்கள் //அன்று முதல் இன்றுவரை எந்த உணவையும் சமைத்தவர்களின் மனம் நோகும்படி விமரிசித்து பேசகூடாது என்னும் பாடத்தை கல்லூரி வாழ்வில் கற்று கொண்டதை கடைப்பிடித்து வருகின்றேன் // மிக நல்ல பண்பு.....நாங்களும் இதைக் கடைப் பிடித்து வருகின்றோம். ஆனால் பாருங்கள் பலர் பொதுவான இடத்தில் கூடச் சத்தமாக ஒவ்வொரு அயிட்டத்திலும் ஏதேனும் ஒரு குறை சொல்லிக் கொண்டே சாப்பிடுவார்கள்...ஏன் இந்த நெகட்டிவ் சிந்தனைகளுடன் சாப்பிடுகின்றார்கள் என்று நினைப்பது உண்டு. நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும், உணவிலும் கடவுளின் அருள் இருக்கிறது . அவரின் அருள் இல்லை என்றால், இந்த ஒரு வேளை உணவு கூடக் கிடைத்திருக்காது. என்று நம்புவதால்....

  அருமையான பாடம் சொல்லும் பதிவு நண்பரே! தங்கள் நண்பருடன் இப்போதும் தொடர்பு இருக்கிறதா?! இனிமையான நினைவுகள்...ரசனையுடன் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கும் பதிவினை பின்னூட்டம் வாயிலாக பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

   நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவிலும் இறைவனின் அருள் இருக்கின்றது என்வதை பரிபூரணமாக நம்புகின்றவன் நான்.

   அப்படி இறைவனால் கொடுக்கப்படும் உணவினை குறை சொல்லுதல் சரியானதல்ல என்பதை சரியாக சொன்னீர்கள்.

   அந்த நண்பரின் தொடர்பு இழந்து பல பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்கோ வாடா நாட்டில் பணிபுரிவதாக நினைவு.

   பார்க்கவேண்டும்போல் இருக்கின்றது. இன்னொரு நண்பர் அவரை உங்களுக்கு தெரியும், ஆம் "அவர் பெயர் தங்கமணி"யில் வருவாரே அவர்தான், சென்னையில் தான் இருக்கின்றார் என நினைக்கின்றேன்,அவரையும் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன.

   நட்புடன்

   கோ

   நீக்கு
  2. சென்னையில் தான் இருக்கிறார் என்றால்....பார்க்க முயற்சிக்கலாமே நீங்கள்....007 இருக்க..தயக்கமென்ன...

   நீக்கு
  3. ஒவ்வொரு முறை நான் விடுமுறையில் தாயகம் வரும்போதெல்லாம் அவரை குறித்து விசாரிப்பதுண்டு, எனினும் தொலைபேசி தொடர்போ விலாசமோ இல்லாததால் சந்திக்க இயலாமல் போகின்றது.

   பார்க்கலாம் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக சந்திப்போம்.

   கல்லூரி முடிந்தபிறகும் கூட என்னையும் அவரையும் ஒன்றாக பார்ப்பவர்கள் இன்னும் நீங்கள் இப்படித்தான் இணைபிரியாமல் இரும்க்கின்றீர்களா என்றும் என்னை தனியாக பார்பவர்கள் எங்கே உங்கள் நண்பர் சசி என்றும் அவரை தனியாக பார்ப்பவர்கள் எங்கே உங்கள் நண்பர் கோ என்றும் கேட்க்கும்படியான நட்புடன் இருந்தவர்கள் நாங்கள்.

   தங்களின் உள்ளார்ந்த உதவும் எண்ணத்திற்கு மிக்க நன்றி, தங்களின் உதவிகள் எமக்கு எப்போதும் இருக்கும் என்று நம்புகின்றேன், வேளை வரும் அப்போது உங்களுக்கான வேலை வரும்.

   அதுவரை காத்திருப்போம்.

   நன்றி

   நட்புடன்

   கோ

   நீக்கு
 6. //அடுத்தநாள் கோழி கூவும் முன்னே அதற்க்கு முந்தின இரவு சாப்பிட்ட கோழி எங்களை பலமுறை கூவி கூவி எழுப்பி பாத்ரூம் போகவைத்தது ஒரு தனிக்கதை// நன்கு ரசித்தேன்.
  விருந்தினர் வீட்டில் குறை கூறுவதில்லை. ஆனால் வீட்டில் இனிமேல் திருத்தக் கூறுவேன்.

  பதிலளிநீக்கு
 7. யோகன்,
  பதிவினை ரசித்தமைக்கு நன்றிகள்.
  நம் வீட்டில் கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு அம்மாவிடமோ மனைவியிடமோ சமையலில் குறை இருந்தால் சொல்வது ஏற்க்கப்படலாம் ஆனால் அடுத்தவர் வீட்டில் .......

  எனினும் இந்த ரசம் இருக்கே.... அது எல்லா நாட்களிலும் ஒன்றுபோல் வருவதில்லையே என்ன காரணம்?

  பாரீசில் எப்படி?

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு