பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 10 மார்ச், 2015

சின்ன மனுஷன் - பெரிய 'மன'சன்!!

விளையும் பயிர்

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் இங்கே இங்கிலாந்தின் தென்மேற்கு மாகாணத்தில் ஒரு பள்ளியில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.

இங்கே நம்ம ஊர்போல ஆரம்பபள்ளி ஐந்தாம் வகுப்புவரையிலும் உயர் நிலை ஆறாம் வகுப்பு முதல் ஆரம்பிப்பதுபோல் அல்லாமல், ஆரம்ப பள்ளிகூட கல்வி ஆறாம் வகுப்பு வரையிலும் உயர் நிலை கல்வி ஏழாம் வகுப்பு முதல் தொடங்கி பதினோராம் வகுப்பு வரை நடைபெறும். 

பின்னர் பதினோராம் வகுப்பு GCSE (The General Certificate of Secondary Education) தேர்வுகள் பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகளாகவும்  அதன் பின்னர் இரண்டாண்டுகள்  சிக்ஸ்து பார்ம்(SIXTH FORM) என்றழைக்கப்படும் - காலேஜ் படிப்பும் அதற்க்கு பின்னர் பல்கலைகழக படிப்புமாக  தொடரும்.

நகரின் பல்வேறு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு வரை பயின்றவர்கள் உயர்நிலை பள்ளி படிப்பிற்காக  சிறந்த பள்ளிகளை  தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்ப படிவங்கள் அரசு கல்வி துறையினால் பரிசீலிக்கப்பட்டு நாம் கேட்க்கும்  பள்ளிகளில் இடமிருந்தால் அந்தபள்ளியிலோ அல்லது வேறு பள்ளியிலோ இடமளித்து ஆணைகள் அனுப்பப்படும்.

நாம் கேட்க்கும் பள்ளியில் இடம் வேண்டுமானால் அந்த பள்ளிகள் விதித்திருக்கும் சில தகுதிகள் பிள்ளைகளுக்கு இருந்தால், அதே சமயத்தில் பள்ளியில் இடமிருந்தால் கிடைக்கும்.

இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம்:

இங்கே எல்லா பாடங்களுக்கும் மாணவர்கள் ஒரே வகுப்பறையில் அமர்ந்து கல்விகற்கும் வழக்கம் இல்லை, மாறாக, ஒவ்வொரு பாடத்துக்கும் வேறு வேறு வகுப்பறைகளுக்கு மாணவர்கள் இடம் பெயர்ந்துகொண்டு இருப்பார்கள். இது அந்தந்த பாடதிட்டங்களுக்கு ஏற்ப வடிவும் வசதிகளும் செய்யப்பட்ட வகுப்பறைகள் என்பதால் மாணவர்கள் இவ்வாறு இடம் மாறி மாறி செல்லவேண்டும்.

அதிலும் ஒரு வகுப்பில் ஒரு செக்க்ஷனில் இருபது மாணவர்கள் இருந்தால் அவர்களுள் மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் -நன்றாக படிக்கும் மாணவர்கள் -சுமாராக படிக்கும் மாணவர்கள் என்று தரம் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இவர்கள் வகுப்புகள் மாறி செல்ல வேண்டி இருக்கும்.  

உதாரணத்துக்கு, ஏழாம் வகுப்பு மாணவர்களுள் கணித பாடத்தில் நன்றாக படிக்கும் மாணவர்கள் எல்லா செக்க்ஷனிலும் இருந்து ஒரு குறிப்பிட்ட வகுப்பறைக்கு செல்லவேண்டும், அதேபோல எல்லா செக்க்ஷனிலும் இருக்கும் சுமாராக படிக்கும் மாணவர்கள் அனைவரும் வேறு ஒரு வகுப்பறைக்கு செல்லவேண்டும் , ஏனென்றால் அந்ததந்த மாணவர்களின் விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கேற்ப பாடங்கள் சொல்லிகொடுக்கபடும்.

பள்ளி வளாகத்திற்குள்ளேயே சில சமயங்களில் வேறு கட்டிடத்தில் அமைந்திருக்கும் வகுப்புகளுக்கும் மாணவர்கள் அவ்வப்போது மாறி மாறி செல்லவேண்டியிருக்கும் , அதே சமயத்தில் துரிதமாகவும் வேகமாகவும் குறித்த நேரத்திற்குள்  இந்த இடபெயர்ச்சி நடந்தாக வேண்டும்.

Image result for picture of school BOYS IN UNIFORM

இப்படி மாணவர்கள் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றபோது கொஞ்சம் தள்ளு முள்ளு நடப்பது சகஜம் தான். 

இதுபோன்றதொரு இடபெயர்ச்சி நடந்தபோது புதிதாக ஏழாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுள் ஒருவனை சக மாணவர்கள் பிடித்து தள்ளியதில் அந்த மாணவன் முன்னால் இருந்த ஒரு பதினோராம் வகுப்பு மாணவன்மேல் மோதிவிட அந்த சீனியர் மாணவன் கோபப்பட்டு இந்த மாணவனின் சட்டையை பிடித்து உலுக்கி, " என்ன அறைவேண்டுமா" என மிரட்டலுடன் அதட்டிகேட்க்க, கொஞ்சம் பயந்துபோன இந்த சின்ன பையன் நடுக்கத்துடன், "என்னை பின்னால் இருந்தவர்கள் பிடித்து தள்ளியதால்தான் உங்கள் மேல் இடித்துவிட்டேன் , மன்னித்துக்கொள்ளுங்கள் " என சொல்லியும் அந்த சீனியர் மாணவன் இவன் சட்டையை விடாமல் , நீ இடித்ததுமில்லாமல் பதில்வேறு பேசுகின்றாயா உனக்கு அறை கொடுக்கவேண்டும் "என சொல்ல இந்த சின்ன பையனும், "சரி அறைந்து கொள்" என சொல்ல  இந்த சின்ன பையனை கன்னத்தில் 'பளார்' என அறைந்து இருக்கின்றான் அந்த பெரியபையன். 

அதிர்ச்சி அடைந்த மாணவன் அதுவும் எல்லோர் முன்னிலையிலும் தன்னை அறைந்து விட்டானே என அவமானத்தால் கூனி குறுகி  இருக்கின்றான். 

இதை கண்ட அனைத்து புதிய மாணவர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர், எனினும் அடி வாங்கிய மாணவனிடம் நீ திருப்பி அடி என சொல்லி உற்ச்சாக படுத்தியும் இந்த சின்னபையன் தனது அடுத்த வகுப்புக்கு நேரத்தோடு செல்லவேண்டுமே என்பதில் குறியாக இருந்ததினால் மனகஷ்ட்டத்துடன் அந்த இடம் விட்டு வேகமாக சென்று விட்டிருக்கின்றான்.

நடந்தவற்றை ஆசிரியர்களிடம் சொல்ல சொன்னார்களாம் நிகழ்ச்சியை பார்த்தவர்கள்.

ஆனால் அந்த மாணவன் சொன்ன பதில் எல்லோரையும் நெகிழ செய்திருக்கின்றது.

"வேண்டாம் அந்த மாணவனுக்கு இதுதான் கடைசி பள்ளி ஆண்டு, இப்போது நான்போய் அவன் மீது புகார் கொடுத்தால் அவனது நன் நடத்தை சான்றிதழில் கருப்பு புள்ளி விழுந்து விட்டால் அது அவனுக்கு அடுத்த ஆண்டு மேற்படிப்புக்கு செல்லும்போது பாதிப்பாகி விடும் எனவே இதை ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டாம்"என்றானாம்.

அதேபோல , நிகழ்ச்சியை அறிந்து ஆவேசப்பட்ட அவனது பெற்றோரிடமும் இதே காரணத்தை கூறி அவர்களையும் புகார்கொடுக்காமல் தடுத்துவிட்டானாம்.

இந்த பன்னிரண்டு வயது மாணவனின் பெருந்தன்மையையும் தொலைநோக்கு பார்வையையும் நினைத்து மிகவும் பெருமையாக  - ஆச்சரியமாகவும்  இருந்தது.

"இன்னா செய்தாரை ஒருத்தல் ;அவர் நான
நாணயம் செய்துவிடல்"

எனும் குறளையோ அதன் பொருளையோ அறியாத அந்த பன்னிரண்டு வயது சிறுவனின் செயல் பல எதிர்விளைவுகளை தடுத்திருக்கின்றது.

பள்ளிக்கு வரும் புதிய மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் அன்போடும் நட்போடும் தோழமையோடும் பழக - பழக வேண்டும்.

அதே சமயத்தில் காரணமில்லாமல் கோபப்பட்டு சிறுவன் என்றும்  பாராமல் கன்னத்தில் அறைந்த அந்த பதினோராம் வகுப்பு சீனியர் மாணவன் மேல் கோபப்படுவதைவிட அவனை ஒழுக்கம் தவறி வளர்த்துவரும் அவனின் பெற்றோரை குறித்தே எனக்கு கோபம் ஏற்பட்டது.

"குலகல்வி கல்லாமல் பாகம்படும்" என்பதுபோல் பிள்ளைகளின் நல்லொழுக்கம் அவர்களின் பெற்றோரின் வளர்ப்பினால்தான் பக்குவபடும்.

அடித்தவன் யார் என்பதைவிட யாருடைய  மகன் என்பதைத்தான் கேட்க்க தோன்றும்.

பள்ளி , கல்லூரி வயதில் பிள்ளைகள் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தை, குணநலன்களை அவ்வப்போது கொஞ்சம் கூர்ந்து கவனித்து தேவை  இருப்பின் அறிவுரை வழங்கி பிள்ளைகளை பக்குவபடுத்தி நல்வழி நடத்துவது பெற்றோரின் தலையாய கடமையாக , வருங்கால சந்ததியரை சமூக அக்கறையும் , பொறுப்பும், ஜாதி, மத, நிற சகிப்பு தன்மை மிக்கவர்களாகவும் எல்லோரையும் சமமாக மதிக்க தெரிந்தவர்களாகவும் வளர்ப்பதை தமது சமூக பொறுப்பாகவும் கருதவேண்டுமே என்பதே இந்த பதிவின் ஆதங்கம்.

அந்த சிறுவன் பள்ளி மாணவ பிரதிநிதியாகவும்(Students' Representative) கவுன்சிலராகவும்(School Counselor) இருக்கிறான் என்பது அவனது உயர் குணத்துக்கு பெரிய சான்றாக அமைந்திருக்கின்றது என்பது உபரி தகவல்.

Image result for school counselor badge
இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த மாணவன் ஒரு இந்திய மாணவன் அதிலும் குறிப்பாக  தமிழ் நாட்டை சார்ந்தவன் என்பதுதான்.

அந்த பெரிய மனதுகொண்ட பன்னிரண்டு வயது தமிழ் சிறுவனுக்கு இந்த பதிவு வாழ்த்துக்களுடன் சமர்ப்பணம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


11 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

   ஆம் அவன் போற்றுதலுக்கு உரியவன்தான்.
   .
   வருகைக்கு மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 2. சிறப்பான ஆதங்கம்...

  சிறுவர் வாழ்க வளர்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனப்பால்,

   ஆதங்கத்தை வழிமொழிந்தமைக்கு மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 3. இன்றைய இளைய தலைமுறை எதை நோக்கி செல்கிறது, தாங்கள் சொல்வது உண்மையே பெற்றோர் சொல்லிக் கொடுக்கனும், இருப்பினும் சில மாணவர்கள் மாறுவது கொடமைதான், அந்த பெரிய மனதுகொண்ட பன்னிரண்டு வயது சிறுவனுக்கு என் வாழத்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, அவனொரு தமிழ் மாணவன் என்பதை வாசித்தீர்களா?

   நட்புடன்

   கோ

   நீக்கு
 4. "வேண்டாம் அந்த மாணவனுக்கு இதுதான் கடைசி பள்ளி ஆண்டு, இப்போது நான்போய் அவன் மீது புகார் கொடுத்தால் அவனது நன் நடத்தை சான்றிதழில் கருப்பு புள்ளி விழுந்து விட்டால் அது அவனுக்கு அடுத்த ஆண்டு மேற்படிப்புக்கு செல்லும்போது பாதிப்பாகி விடும் எனவே இதை ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டாம்"என்றானாம்.

  அதேபோல , நிகழ்ச்சியை அறிந்து ஆவேசப்பட்ட அவனது பெற்றோரிடமும் இதே காரணத்தை கூறி அவர்களையும் புகார்கொடுக்காமல் தடுத்துவிட்டானாம்.//

  ஹேட்ஸ் ஆஃப் டு த பாய்! அந்த மாணவனுக்கு எங்கள் வாழ்த்துக்களும். அந்த மாணவன் எதிர்காலத்தில் ஒரு நல்ல தலைவராக வருவதற்கு சில லட்சணங்கள் இருப்பதாகத் தெரிகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   பெரிய மனசனை பாராட்டிய உங்கள் பெரிய மனசுக்கு நன்றிகள்.

   கடைசி வரிகளை படித்தீர்களா? இல்லையேல் மீண்டும் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு வரவும்.

   நட்புடன்

   கோ


   நட்புடன்

   கோ

   நீக்கு
 5. அந்த அடித்த மாணவன் ஆங்கிலேயராக இருப்பார் என நினைக்கிறேன். அவர் அடித்ததற்கு நிறப்பாகுபாடு காரணமாக இருக்கலாம். இன்னும் அது இங்கு உண்டு.
  அந்த மாணவன் எதிர்காலம் கருதி , முறைப்பாடு செய்யவில்லை என்பதனையாவது, குறைந்த பட்சம் அவருக்குப் புரிய வைத்தார்களா?

  பதிலளிநீக்கு
 6. யோகன்,

  வருகைக்கு மிக்க நன்றி.

  இதில் வேதனையான விடயம் என்னவென்றால், அடித்தவனும் பாரதமாதாவின் வாரிசுதான், என்ன ஒரு வித்தியாசம் அவன் சந்திர மண்டலத்திலும் வியாபித்திருக்கலாம் என யூகிக்கப்படும் வம்சா வழியை சார்ந்தவன் என்ற செய்தி கிடைத்தது.

  மனசிலாச்சா?

  பாரீசில் இவர்கள் ஆதிக்கம் எப்படி?

  நட்புடன்,

  கோ

  பதிலளிநீக்கு