பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

"தமிழ் வந்த கதை - உயிர்புகுந்தது!!"

உணர்வானது!!

தொடர்கிறது ...

முதலில் இருந்து வாசிக்க இங்கே சொடுக்கவும்:  தமிழ் வந்த கதை

ஆண் குரங்குகள் நன்றாக பழுத்த சுவை மிக்க கனிகளை , இயற்கை சூழல் நிறைந்த அடர்ந்த காட்டுபகுதிலிருந்து பறித்து வந்து
தன் மனம் கவர்ந்த பெண் குரங்குகளுக்கு கொடுத்து பின்னர் தமது அன்பை காட்டும் வகையில் அந்த பெண் குரங்குகளுடன் கொஞ்சி மரத்துக்கு மரம் தாவி, ஓடி பிடித்து விளையாடி கொஞ்சி மகிழும் தருணத்தில் அந்த பெண் குரங்குகள் சிந்துகின்ற அந்த பழ மிச்சத்தை பெறுவதற்கு வான் கவிகள் கெஞ்சுமாம்.

" வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்........".  

எனும் திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றால குறவஞ்சியை அவர் நடத்தும்போது, குற்றால குளிர் காற்று எங்கள் வகுப்பறை சன்னலின் வழிபுகுந்து சில்லென வீசி மனதை குளிரப்பண்ணும் .


மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சுவதைபோல் அந்த ஆசிரியரின் திருவாய் சிந்தும் அமுத வார்த்தைகளுக்கு எங்கள் மனங்களும் கெஞ்சும்.

கோவலனும் கண்ணகியும் பூம்புகாரை விட்டு வெளியேறி மதுரைக்கு வருகின்றனர், மதுரை மாநகர் நுழைவு வாயிலின் மண்டப த்தூண்களின்மேல்   படர்ந்து நிற்கும் அந்த அக்றிணை மலர்க்கொடிக்கு தெரிந்து விட்டதாம் இந்த உயர்திணை மரகத மலர்க்கொடியின் மங்கள மாங்கல்ய திருகொடிக்கு இந்த மதுரை மாநகரில் ஆபத்து காத்திருக்கின்றதென.

வாயில்லா அந்த மலர்கொடி இவர்களை இந்த நகரத்திற்கு வரவேண்டாம் என சொல்ல தனது கொடியினை அசைத்து,


 "வாரேல்  என்பனபோல் மறித்து கைகாட்ட" 

என இளங்கோவடிகளின் செய்யுள் அடிகளை அந்த ஆசிரியர் சொல்லியபோது இளங்கோ அடிகளே நேரில் வந்து  எங்களுக்கு பாடம் நடத்தியதான உணர்வினை எற்படுத்தியதோடல்லாமல் அந்த மதுரை மலர்கொடிபால் ஒரு பாசத்தையும் எங்கள் மனதில் படர வைத்தவர்.

தன்னை சபையில் எல்லோர்  முன்பும் அவமதித்து கேவலபடுத்தி, ஒரு பெண்ணென்றும் பாராமல்தன்னை தனது மடியில் அமர சொன்ன அந்த பாவி துச்சாதனனின் ரத்தத்தையும் , தனது துகிலை உரித்த அந்த பாழ் துயோதனின் புஜங்களை முறித்து  அதில் வழியும் ரத்தத்தையும் கலந்து என் கூந்தலில் பூசி , நறு நெய் நீராடி பின்னரே என் கூந்தலை முடிப்பேன், அதை செய்யுமுன் என் கூந்தலை முடிக்கமாட்டேன் ,


 " பாவி துச்சாதனின் செந்நீர் அந்த 
பாழ் துரியோதனின் ஆக்கை ரத்தம்
மேவி இரண்டும் கலந்தே -என் 
மேனியில்  பூசி நறு நெய்குளித்தே
சீவி குழல் முடிப்பேன் யான் - இதை 
செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்".

என்ற சூளுரை   வாக்கினை அவர் நடத்தும்போது எங்களால் அந்த இறுக்கமான  சமயத்தில் கோபமான பாஞ்சாலியின் கண்களில் கனன்றெழுந்த நெருப்பின் உஷ்ணத்தை உணர முடிந்தது, அந்த அரச சபையில் நடந்த நிகழ்ச்சிகளை எங்களின் கண் முன்னே காட்சிகளாக பார்க்கமுடிந்தது.


இப்படி, குற்றால குறவஞ்சி, மிதிலை நகரத்து அழகு, இளங்கோ அடிகளின் சிலபத்திகாரம், கம்பனின் ராமாயணம் திருக்குறள், மகாபாரதம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பாரதி பாடல்கள், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் என எது நடத்தினாலும் அதில் எங்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த தவறாதவர்.

பாடத்திட்டத்தில் உள்ளவை மட்டுமின்றி ஏனைய மற்ற இலக்கியங்களையும் எங்களோடு பகிர்ந்து எங்களுக்கு தமிழ் ஆர்வம் ஊட்டினார்.

பல வேளைகளில்  இவர் அன்று நடத்திய பாடங்களின் , செய்யுள்களின் , கவிதைகளின் தாக்கத்தை சுமந்து எந்தன் தூக்கத்தை துறந்திருக்கின்றேன்.

இப்போது நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் அனைத்து இலக்கிய நிகழ்ச்சிகளும் அவை தொடர்பான செய்யுள் வரிகளும் என் மனதின் ஆழத்தில் எப்போதோ புதைத்து வைக்கப்பட்ட ஞாபக  பதிவுகள்தானே  தவிர புதிதாக எங்கிருந்தும் எடுக்கப்பட்டவை அல்ல என்பதே அந்த ஆசிரியர் எப்படி நடத்தி இருப்பார், என்றுமே  நினைவில் கொள்ளும் விதமாக பயிற்றுவித்தார் என்பதை சொல்லும் அத்தாட்சியின் நற் சாட்சியே.

அவரோடு எனக்கிருந்த தொடர்பு ஏழாம்  வகுப்புமுதல் பத்தாம் வகுப்புவரை மட்டுமே அதன் பின்னர் இரண்டாண்டுகள் வேறு ஆசிரியர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்.

இப்படி இவரின் பாடம் நடத்தும் விதத்தில்  வசப்பட்டு,உந்தப்பட்டு  கொஞ்சம் கொஞ்சமாக எழுதவும், கவிதை நெய்யவும் ஆர்வம் கொண்டு , தமிழின் தடம்(கள்)  கொஞ்சமும் இல்லதா அந்நிய நாடுகளில் கடந்த 20க்கும் மேலான வருடங்களாக வாழ்ந்து வந்தாலும் தமிழை மறக்காமல் அதன்பாலுள்ள முழுமையான காதலால் இன்றளவும் பலர் பாராட்டும்படி அதனோடு வாழ்ந்து வருகின்றேன்.

இப்படி எனக்கு கவிதையின்பாலும் தமிழின்பாலும் ஒரு மாறாத பற்றை ஏற்படுத்தித்தந்த அந்த ஆசிரியர் எமது முதல் கவிதை நூலான "நினைவலைகள்" வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து எம்மை பாராட்டி மேலும் ஊக்குவித்ததை இந்த நேரத்தில் நினைவு கூறுகின்றேன்.

இப்படி அந்த ஆசிரியர், அவர் பாடம் நடத்தும்போதும், சொற்பொழிவு ஆற்றும்போதும் மாணவர்களையும், கேட்பவர்களையும் மகுடிக்கு மயங்கும் பாம்புகளை போலவும், மது உண்ட வண்டுகளாகவும் மயக்க நிலைமைக்கு கொண்டு சென்றதற்கு - தமிழ் மயக்கத்தில் தள்ளாட வைத்ததற்கு  அவர் பெயரும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ?

அப்படி என்ன தான்அவர் பெயர்.?

புலவர் "நெப்போலியன்"!!!

இந்த பதிவினை  அந்த தமிழ் ஆசிரியருக்கு நன்றியுடன் அர்ப்பணம் செய்கின்றேன்.

பி.கு:
இப்போதும் ஏதோ ஆர்வகோளாறினால் அவ்வப்போது எழுதும் என் எழுத்துக்களில் சொற்பிழை, பொருட்பிழைகள் இருக்கு(ம்)மாயின் பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் நான் இன்னும் மாணவனே.

உங்களின் தொடர் ஊக்கத்திற்கும் பாராட்டுகளுக்கும்,ஆதரவிற்கும் மிக மிக நன்றிகள்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ



6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. என்னங்க நண்பரே,

      நீங்களும் மயங்கிடீங்களா?

      பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல?

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. தனப்பால்,

      வருகைக்கு மிக்க நன்றி.

      இன்றளவும் நுகர்ந்ததுமில்லை, முகர்ந்ததுகூட இல்லை, இனியும் இருக்காது.

      புகையும் எனக்கு பகைதான்.

      கவலை வேண்டாம்.

      பரிவிற்கும் நலம் நாடலுக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. தாங்கள் மேற்கோள் சொன்ன பாடல்கள் ஒவ்வோன்றும் அருமை, புரிந்தது தமிழ் ஆர்வம். பிறகு ஆன் குரங்கு ஏதேனும் குறிப்பு உள்ளதா? ஆண் மாறி டைப்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி..
      அது இங்குள்ள ஒரு டைப்பான ஆண் குரங்கு டைப் பண்ணும்போது ஒரு டைப்பா டைப் பண்ணதினால ஆண் குரங்கு ஆன் குரங்காக தாவிப்போனது.

      உங்கள் கண்ணில் பட்ட தவறை சுட்டிகாட்டிய உங்கள் சுட்டு விரலுக்கு கொஞ்சம் சுற்றி போடசொல்லுங்க கண்ணுபடபோகுது. தவறை இதோ திருத்திவிடுகின்றேன்.

      நட்புடன்

      கோ

      நீக்கு