கை கொடுப்போம்.
நண்பர்களே,
கடந்த சில தினங்களுக்கு முன் நமது அண்டை, அதே சமயத்தில் நேச நாடான நேபாளத்திலும் ஏனைய பிற பிராந்தியங்களிலும் ஏற்பட்ட அந்த கொடூரமான நில நடுக்கத்தின் விளைவாக அந்த நாட்டு மக்கள் சந்தித்து கொண்டுவரும் பேரிடரின் பாதிப்புகளை நினைக்கும் போது, தொலை காட்சி , பத்திரிகை, வானொலி ஊடகங்களின் மூலம் அறியும்போது நெஞ்சம் பதை பதைக்கின்றது, கண்கள் குளங்கள் ஆகின்றன. இதயம் ரத்தம் சிந்துகின்றது.
இப்படியாக அவ்வப்போது ஏற்படும் இயற்க்கை சீற்றங்களின் இனம் புரியாத கோர பாய்ச்சலினால் உலகெங்கிலும் அவதிபடுவோர் ஏராளம்.
அந்த வகையில் இப்போது நேபாள நாட்டினை தன்வசபடுத்தி இருக்கும் இந்த பேரிடரிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பாதுகாப்பும், உணவும் அளிக்கும் வகையில், நம் பாரத நாடும் உலகின் பல்வேறு நாடுகளும் அவர்களது நேச கரம் நீட்டி நேபாள மக்களின் கண்ணீரை துடைக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவது, உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றது.
அதே போல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் ஆன உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் தங்களை அர்பணித்து உதவிவருவது பாராட்டுக்குரியது.
உறவுகளை இழந்தனர், உடலுறுப்புகளை இழந்தனர், வீடு, சொத்துக்கள்,வாகனங்கள் போன்ற அவர்களது வாழ்வாதாரத்திற்கு துணை புரிந்த அத்தனை அடிப்படை பலத்தையும் இழந்தபின்னும் எஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றிகொள்ள அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.
பச்சிளங் குழந்தைகள், சிறுவர், பெண்கள் வயோதிகர்,.விலங்குகள் என சாலைகளிலும், சிறிய அளவிலான, பிளாஸ்டிக் கூடாரங்களிலும், உண்ண உணவோ பாதுகாப்பான உடைகளோ ,மருத்துவ உதவிகளோ இன்றி தவிக்கும் நமது சக மனித சகோதர சகோதரிகளின் துயர் துடைக்கும் ஒரு உதவியாக எத்தனையோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடைகளை சேகரித்து வருவதும் ஆங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அவ்வகையில் இங்கிலாந்து நாட்டில் லண்டனை மையமாக கொண்டு செயல் படும் பேரிடர் துயர் துடைக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் (DISASTERS EMERGENCY COMMITTEE) கடந்த செவ்வாய் கிழமை 28 ஆம் தேதி காலையில், "தயாவாக உதவுங்கள்" என்றதொரு அறிவிப்பினை செய்திருந்தது.
அந்த அறிவிப்பு வந்த கொஞ்சம் நேரத்திற்கெல்லாம் நாட்டின் எட்டு திக்கிலும் இருந்து நன்கொடைகள் கொட்ட ஆரம்பித்து விட்டன. எண்ணி 24 மணி நேரம் கூட முடிய வில்லை அதற்குள் சுமார் பத்தொன்பது மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் வந்து குவிந்தன.
நன்கொடையாக குவிந்த இத்தனைபெரிய தொகையினை தங்கள் கரங்களால் வாரி கொடுத்து குவித்த மனங்களை வாழ்த்தி என் கரம் குவிந்தது, நெஞ்சம் மகிழ்ந்தது,
எத்தனை பெரிய பண உதவியும் மாண்ட உயிர்களை மீண்டும் கொண்டுவர முடியாத போதும் இடரில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கான ஒரு சிறு உதவியாக அமையபோகும் இந்த பணம் நல்லபடியாக அவர்களை சென்றடையும் என்று நம்புகின்றேன்.
இந்த உதவிகளினால் மக்களின் மனதில் நீருபூத்த நெருப்பாக தனன்று கொண்டிருக்கும் மனிதாபிமானமெனும் பெருங்குணம் இப்படி தேவையான நேரத்தில் வெளிபட்டிருக்கும் இந்த தருணத்தில், அழுகை குரலும் வேதனை பெரு மூச்சுகளும் , வலியின் தாக்கமும் தழும்புகளும் மறைந்து புத்தம் புது காலை நேபாளத்தில் பூபாளத்துடன் புலரட்டும்.
இது போன்று இன்னும் நம்மால் ஆன உதவிகளை தொடர்ந்து செய்வோம் நாமும் இதயமுள்ள மனிதர்களென்றும் மனிதம் மரிக்கவில்லை என்றும் மீண்டும் நிருபிப்போம்.
இயற்க்கை சீற்றங்களை மனித சக்தியால் தடுக்க முடியாது உண்மைதான் அவை நம் கட்டுபாட்டில் இல்லைதான் ஆனால் மற்றவர்க்கு உதவுவதில் நாம் ஒன்றிணைவதை எந்த இயற்க்கை சக்தியும் தடுக்க முடியாது.
நேபாள மக்கள் துயரிலிருந்து மீண்டு, மீண்டும் தங்களது வாழ்வை கட்டி எழுப்பி மகிழ்வுடன் வாழ இயற்கையின் அதிபதி இறைவனை, அருள்புரிய வேண்டிக்கொள்வோம்.
கரம் இணைவோம் கரம் கொடுப்போம்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ