பின்பற்றுபவர்கள்

வியாழன், 16 ஏப்ரல், 2015

."நம்பிக்கை தளர்ந்த தும்பிக்கைகள்"

தள்ளி விட்டது தள்ளி நின்றது

நண்பர்களே,

சமீபத்தில் எங்கள் கல்லூரி பேராசிரியர் எழுதிய "புள்ளி வச்ச ராஜா" எனும் புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கையில், பாரதியை குறித்த ஒரு குறிப்பு ஏற்படுத்திய  சிந்தனையின் கலவையே இன்றைய பதிவு.

 பாப்பா பாட்டு பாடினான், குயில் பாட்டு பாடினான், காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான், இன்னும் எத்தனையோ உயிர்களை குறித்து பாடினான், நதிகளை இணைக்க -தேசியம் ஒருமைப்பட, சிங்கள தீவினுக்கு பாலம் அமைக்க , தனிமனித பசி பிணி அகற்ற, ஜாதிகளை ஒழிக்க  சுதந்திர வேட்க்கை பாடல்களையும், சுதந்திரம் கிட்டுமுன்னே அதை அடைந்து விட்டதாக எண்ணி   ஆனந்த பள்ளும் பாடினான்.

தமக்கிருந்த  சிறு உணவினைகூட குருவிகளுக்கு கொடுத்து மகிழ்ந்தான்.

இப்படி வாழ்ந்து வந்த பாரதியின் இறுதி காலங்களில் வறுமையில் வாடிய நிலையில் கோவிலின் யானை ஒன்று இவரை தள்ளிவிட்டது என்றும் அப்படி தள்ளி விட்ட யானையை கடிந்துகொள்ளாமல், அந்த யானை பாகனை கோபித்து கொள்ளாமல், அல்லது அந்த கோவிலின் நிர்வாகத்தின் மீதோ அல்லது அந்த கோவிலின் குருக்கள் மீதோ புகார் கொடுக்காமல்,அடிபட்டு கீழே விழுந்திருந்த நிலைமையிலும்," யானை இன்னார் என்று தெரியாமல் என்னை தள்ளி விட்டிருக்கும் தாம்  யார் என்று தெரிந்திருந்தால் இப்படி தள்ளி இருக்காது, மேலும் அந்த யானைக்கு தம்மை கொல்லும்  எண்ணம் இருந்திருந்தால்,தள்ளிய பிறகு என்னை மிதித்திருக்க வேண்டுமே, அல்லது தூக்கி எறிந்திருக்க வேண்டுமே  மாறாக  அப்படியே நின்றதே"என சொல்லியதாக அந்த குறிப்பை படித்தேன்.

எத்தனை பெரிய மனது பாரதிக்கு, தம்மை தள்ளி  விட்ட பிறகும் தம்மை நிலை குலைய வைத்தபிறகும் தாம் அவமதிக்க பட்ட பிறகும் அந்த ஐந்தறிவு மிருகத்தை கடிந்துகொள்ளாமல் அதன் செயலை பெருந்தன்மையுடன் நியாயபடுத்திய பாரதி மக்களை மட்டும் நேசிக்கும் ஒரு சராசரி மனிதனாக இல்லாமல் தாம் கவிதைகளில் பாடிய வண்ணமாக பூக்களை, குருவிகளை, பறவைகளை,ஆடு மாடு, பூனை , நாய், யானை போன்ற மிருகங்களையும் உள்ளார்ந்த அன்போடு நேசித்தான் என நினைக்கும்போது பாரதி பிறந்த பாரதத்தில் நாமும் பிறந்திருக்கின்றோமே என்ற கர்வம் நமக்கு மனதினில் யானை பலம் சேர்க்கின்றது.

அதே சமயத்தில் பாரதி பாரத சுதந்திரம் , பெண்ணடிமை எதிர்ப்பு, பெண் விடுதலை குறித்தெல்லாம் பாட்டெழுதி இருக்கின்றார் மேலும்  அவர் மற்ற உயிர்களை குறித்து பாடல் எழுதி விட்டு தம்மை பற்றி எழுத மறந்து போனதை நினை ஊட்டும் வகையில் அவரை கொஞ்சம் தள்ளி விட்டிருக்குமோ? 



தம் இனம் சுதந்திரமாக காட்டில் தன்னிச்சையாக தமது குடும்பங்கள் தமது கூட்டத்தாருடன் வனத்தில் சுற்றி திரிந்து சுக ஜீவனம் நடத்திகொண்டிருந்த தம் இனத்தவரில் பலரை கோவில்களில்  , கால்களில் புண்ணும் ரத்தமும் , சீழும் உண்டாகும் அளவிற்கு சங்கிலியால் கட்டிபோட்டு அளவாக உணவளித்து - அளவுக்கு மீறி வேதனை அளித்து, சில வேளைகளில் கோவில்களுக்கு வரும் பக்கதர்கள் கொடுக்கும் ஓரிரு வாழை பழங்களுக்காகவும் பொறி உருண்டைகளுக்காகவும் (தும்பி) கையேந்த வைக்கும் இந்த அடிமை தனத்தை ஒழிக்க - நம்மை விடுவிக்க ஒரு பாட்டெழுத மாட்டாரா - மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மாட்டாரா?என ஏங்கி அதை அவருக்கு நினைவு படுத்தவே அந்த வாயில்லா ஜீவன் பாரதியை கொஞ்சம் தள்ளி விட்டு அவரது கவனத்தை தம் பக்கம் இழுக்க நினைத்ததோ என்னவோ,அந்த யானையின் போதாத காலம் , அந்த ஆசை நிறைவேறாமலேயே ...பாரதியின்  கவிதை பேரூற்று   அவரது முப்பத்தி எட்டாவது வயதில் முற்று பெற்று  விட்டது.

Image result for IMAGES OF ELEPHANTS TIED UP WITH CHAINS


இனி யாரையும் தள்ளிவிட்டு எந்த பிரயோஜனமும் இல்லை இனி எவரும் தம் இனத்து மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடு படபோவதுமில்லை குறைந்தபட்சம் பாட்டெழுத போவதுமில்லை என்று எண்ணி நம்பிக்கை இழந்த நிலையில் எல்லா கோவில் யானைகளும் தும்பிக்கையை முடக்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளியே நிற்கின்றன.

 கணேசரின் மறுவுருவமாக காட்சி அளிக்கும் அந்த "கோயில்பிள்ளையார்" -யானைகளுக்காக மனம் உருகும் இந்த "கோயில்பிள்ளை(யார்?) "

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ




5 கருத்துகள்:

  1. நமக்கும் அன்றிலிருந்து போதாத காலம் தான்...

    பதிலளிநீக்கு
  2. தனப்பால்,

    வருகைக்கு நன்றி,

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  3. பாரதியின் கவிக்கு ஏங்கிய கோயில்பிள்ளையாரை எமக்கு விளக்கிய இந்த கோயில்பிள்ளையாருக்கு நன்றி. வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  4. திண்டுக்கல்லார் சொல்வது
    உண்மைதான்

    பதிலளிநீக்கு
  5. நாம் எப்போதுமே நம் சுற்றுப்புறத்தோடு,இயற்கையோடு ஒன்றி வாழக் கற்றுக் கொண்டால், அவ் உயிர்களையும் மதிக்கக் கற்றுக் கொண்டால் மனிதன் இன்னும் சுக ஜீவிதம் நடத்தலாம்....ஆனால் மனித மனம் கொடூரமானதே....பிற உயிர்களைச் சீண்டிப் பார்த்துத் தனக்கு அடிமைகளாக நடத்துவதுதானெ மனித குணம்...சிறிய இடைவெளி கிடைத்தால் போதும் மனிதன் பிறரை அடிமைப் படுத்தத் தயங்க மாட்டான்....நல்ல இடுகை....

    அது சரி கணேசரின் மறுவுருவமாக காட்சி அளிக்கும் அந்த "கோயில்பிள்ளையார்" -யானைகளுக்காக மனம் உருகும் இந்த "கோயில்பிள்ளை(யார்?) "//

    அதை "கோ" தான் சொல்ல வேண்டும். இந்தக் கோ அரசனா? பசுவா?

    பதிலளிநீக்கு