வாசம் வானிலா?
கதைகளாக கேட்டும் கதைகளில் படித்தும், படங்களில், ஓவியங்களில் சிலைகளில், சிற்பங்களில் பார்த்தும் , நாம் அறிந்தவண்ணம் தேவதைகள் அல்லது தேவதூதர்களுக்கு பறவைகளைப்போல பறப்பதற்கு ஏதுவாக "சிறகுகள்" இருப்பதாக நம் இதயங்களில் விதைக்கப்பட்டு வேரூன்றி இருக்கும் ஒரு நம்பிக்கை விருட்சம்.
துன்பத்தில், துயரத்தில், வேதனையில், இக்கட்டில் சிக்கி இருக்கும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்களுக்கும் - குழந்தைகளுக்கும் தேவைப்படும் நேரங்களில் ,மனித பலம் உதவாத தருணங்களில் "நல்லோரை"காக்க (அப்படியானால் உதவி கிடைக்காமல் , காப்பாற்ற படாமல் கைவிடபட்டவரெல்லாம் கெட்டவரா என்ற கேள்வியும் எழத்தான செய்கிறது) வானம் விட்டு இறங்கி வந்து உதவிவிட்டு மீண்டும் சிறகடித்து வானம் நோக்கி பறந்து சென்றுவிடுவர் என்றும் செவி வழியாக செய்தி அறிந்திருக்கின்றோம்.
அவ்வாறு அவர்கள் வருவதையும் உதவுவதையும் மறைந்துபோவதையும் சம்பந்தப்பட்டவர்களை தவிர எல்லோராலும் பார்க்க முடியாது என்பதும் செவி வழி கூற்றுதான்.
சரி எதற்கு இப்போது தேவதைகள் குறித்த பேச்சு?
அது ஒரு மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவி விரவி இருக்கும் வளாகத்தில், வான் முட்டும் பல அடுக்கு மாடிகள் அடங்கிய பல கட்டிடங்களில் அமைந்திருக்கும் பிரமாண்டமான ஒரு அரசு மருத்துவமனை.
அங்கே பல தரப்பட்ட நோயாளிகள், பலதரப்பட்ட பார்வை யாளர்கள், மருத்துவர்கள், தாதியர், பணியாளர்கள், ஆம்புலன்ஸ் வண்டிகளின் சைரன் ஒலியோடு உள்ளே வருவதும் வெளியே போவதுமான வாகன நடமாட்டம், சிற்றுண்டி சாலைகள், தொலைபேசி பூத்துகள் வாழ்த்து அட்டை, மலர் செண்டு, இனிப்புகள்,பொம்மைகள் போன்றவற்றை விற்கும் கடைகள், அதனுள்ளும் வெளியேயும் காணப்படும் பெரும் கூட்ட மனிதர்கள் என மிகவும் பரபரப்பாக இருந்தது அந்த மருத்துவ மனை வளாகம்.
அந்த கூட்டத்தில் நடுத்தர வயதை கடந்த ஒரு மனிதர் யார் துணையும் இன்றி மருத்துவமனை வெளி வராண்டாவில், தட்டுத்தடுமாறி, மிக மிக குறைந்த வேகத்தில்,மிகுந்த வேதனை உள்ளவராக நடக்க கூட திராணி அற்றவராக ஏறக்குறைய ஊர்ந்த நிலையில் கூனி, தளர்ந்து நடந்துகொண்டிருந்தார்.
அந்த கூட்ட நெரிசலில் அவரின் அருகில் வந்த ஒரு பெண்மணி , "ஐயா உங்களுக்கு உடம்புக்கு என்ன, ஏன் இப்படி நடக்கின்றீர்கள், மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்" என கேட்க்க , தம்மிடம் முன் பின் தெரியாத ஒரு பெண் இப்படி கேட்கின்றாரே என கொஞ்சம் திகைத்த அந்த மனிதர், கடந்த ஒரு வாரமாக தன்னால் சரியாக நடக்க முடியவில்லை என்றும்,நாளுக்கு நாள் தன் சரீரம் பலம் இழந்துகொண்டிருப்பதாகவும், மிகவும் சோர்வாக இருப்பதாகவும், தலையிலும் முதுகு தண்டிலும் பெரிய வேதனை ஏற்படுவதாகவும் சொல்லி இருக்கின்றார்.
மேலும் தன்னை பல சோதனைகளுக்கு உட்படுத்தியும் மருத்துவர்களால் எந்த முடிவும் எடுக்கமுடியாததால் தமக்கு எந்த மருந்தோ சிகிச்சையோ இன்று வரை அளிக்க வில்லை என்றும் தமது உடலின் ஆரோக்கியமும் மனதின் ஆரோக்கியமும் நாளுக்கு நாள் சீர்குலைந்து போவதாகவும் தமது வேதனையை தம்மால் தாங்க முடியவில்லை என்றும் கூறி இருக்கின்றார்.
உடனே அந்த பெண்மணி தமது அருகிலிருந்த ஒரு சிறிய காகிதத்தில் ஒரு நோயின் பெயரை எழுதி அவரிடம் கொடுத்து இதை உங்கள் மருத்துவரிடம் காட்டி இதற்க்கான பரிசோதனையை செய்ய சொல்லுங்கள் என கூறிவிட்டு அந்த கூட்டத்தோடு கூட்டமாக கலந்து மறைந்து விட்டாராம்.
இந்த மனிதர் அந்த சீட்டை நேராக தமது மருத்துவரிடம் காட்டி இந்த நோய்க்கான பரிசோதனையை செய்யுங்கள் என கூறி இருக்கின்றார்.
பொதுவாக சில மருத்துவர்கள் நோயாளியின் ஆலோசனையை மதிப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இங்கேயும் அப்படித்தான், எனினும் சரி எல்லா சாத்தியமான பரிசோதனைகளையும் செய்தாயிற்று, இன்னும் இந்த பரிசோதனையையும் இந்த மனிதரின் திருப்த்திக்காக செய்ய மற்ற மேல்மட்ட மருத்துவ குழுவிடம் அனுமதி பெற்று பரிசோதனைக்கான நாள் குறிக்கபட்டதாம்
குறிக்கப்பட்ட நாளன்று நடத்தப்பட்ட அந்த குறிப்பிட்ட நோய்க்கான பரிசோதனையில் 100க்கு 100 சதவீதம் அந்த நோயாளி குறிப்பிட்டு கொண்டுவந்திருந்த அந்த சீட்டில் இருந்த நோய்தான் அந்த மனிதரை தாக்கி இருக்கின்றது என்று கண்டறிந்து சற்றும் தாமதிக்காமல் அதற்க்கான சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்து அந்த மனிதரை காப்பாற்றி இருக்கின்றனர்.
சிகிச்சை எடுத்துகொண்டு மருத்துவமனியில் ஓய்வில் இருக்கும் அந்த மனிதரிடம் மருத்துவ குழுவினர் சென்று, உங்களுக்கு இந்த நோய்தான் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது என கேட்டதற்கு, நடந்த வற்றை அவர் சொல்லுகையில், இவரிடம் வந்த அந்த பெண் மணி தான் இங்கே வேறொரு நோயாளியை பார்க்க வந்ததாகவும் வழியில் தம்மை கண்டு தம்மிடம் வந்து பேசி ஒரு சீட்டை எழுதிகொடுத்து அதை மருத்துவரிடம் காட்ட சொல்லி விட்டு சென்று விட்டார் எனவும் அவரை அதற்க்கு முன்னும் அதற்க்கு பின்னும் பார்த்ததே இல்லை என்றும் அவர் சொல்ல சொல்ல அந்த ஒட்டு மொத்த மருத்துவ குழுவும் பெருத்த ஆச்சரியத்துடன் கேட்டு வாயடைத்து நின்றனராம்.
இத்தனைக்கும் பன்னிரண்டு விதமான பரிசோதனைகள் செய்தும் என்ன நோய் என்று தங்களால் கண்டறிய முடியாமல் போன ஒன்றை யாரோ ஒரு பெண்மணிமூலம் அறிய நேர்ந்ததை எண்ணி வியந்தனராம்.
அந்த விந்தை பெண்மணி எழுதி கொடுத்த அந்த நோயின் பெயர் “GuillaIn Barr’e Syndrome”
இது ஒரு கொடிய கிருமியின் தாக்கத்தால், மூளையின் வெளி பகுதி மற்றும் முதுகு தண்டின் வெளி பகுதிகளை அங்குள்ள ஆரோக்கியமான திசுக்களை அழித்து மனிதருக்கு கொடிய அழிவை கொண்டுவரும் ஒரு நோயாகும் என்று மருத்துவ குறிப்புகள் சொல்கின்றன.
இந்த நோயை குறித்து அறிந்து ஏற்ற நேரத்தில் தேவைப்பட்ட அந்த மனிதருக்கு எழுதிகொடுத்த அந்த "சிறகில்லா தேவதை" யார்??
ஆபத்தில் சக மனிதருக்கு கைம்மாறு கருதாமல் உதவும் எல்லா மனிதரும் சிறகில்லாத தேவதைகளும் தேவ தூதர்களும் தான்.
தமக்கு இருக்கும் அறிவு, ஞானம், அனுபவம், பலம், பணம், நேரத்தை மற்றவர்களின் நன்மைக்கு தக்க நேரத்தில் பயன்படுத்தி மனிதர்களையும் விலங்கு , பறவைகளையும் காப்பாற்ற முன் வரும் அனைவருமே தேவதைகள் தான்,
சிறகுகள் இருப்பவர்கள் தான் தேவதைகளாக இருக்க வேண்டுமென்பதில்லையே.
நடக்க முடியாமல் தடுமாறும் மனிதனுக்கு தோள் கொடுப்பவரும் , பார்வைஅற்ற மனிதர் பாதையை கடக்க உதவுபவரும், துயரத்தில் இருப்பவர்களுக்கு உள்ளார்ந்த ஆறுதல் அளிப்பவரும், வேதனையில் பங்குகொள்பவரும், வேறொருவரின் காயங்களுக்காக தாம் கண்ணீர் சிந்துபவ ர் அனைவருமே சிறகில்லாத தேவதைகளும் தேவ தூதர்களும் ஆவார்கள்.
இந்த பதிவில் வரும் நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவில் இடம் பெற்றவர் என் நம்பிக்கைக்குரியவர் என்பதால் இந்த நிகழ்வில் என் மனம் பதிந்தது அதனால் இந்த பதிவு.
பறக்க சிறகு வளர்க்க வேண்டாம் மனதில் இறுக்கம் வளர்க்காமல் இரக்கம் வளர்ப்போம்.
இறை தூதராகவேண்டாம் குறைந்த பட்சம் மனித அந்தஸ்த்தை நிலை நிறுத்திக்கொள்வோம்.
உதவும் தேவதைகள் வானத்தில் மட்டுமல்ல நம் மத்தியிலும் - நமக்குள்ளும் தான் இருக்கின்றனர்.
நன்றி!
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
மனித நேயம் சிறக்கட்டும்...
பதிலளிநீக்குகும்பிட போன தெய்வம் குறுக்கில் வந்தது என்பதற்க்கான உதாரணம் அல்லவா இது... அருமையான பதிவு... நிறைய விடயங்களை உணர்த்தியது ...
பதிலளிநீக்குமுதலில்... நம்மால் சுமக்க முடியாதா பாரங்களை மற்றவர்களிடம் சொல்லி இறக்கி வைக்க வேண்டும்.
பின்... சோகமான முகத்தோடு இருக்கும் ஒரு சக மனிதனை சில வார்த்தைகளை சொல்லி விசாரிக்க வேண்டும் ...
மற்றும், நமக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு உபயோக படும் விதத்தில் எடுத்து கூற வேண்டும்...
சிறந்த பதிவு நண்பரே .. தொடர்ந்து எழுதுங்கள் .
கும்பிட போன தெய்வம் குறுக்கில் வந்த கதை போல் உள்ளதே...அருமையான பதிவு...
பதிலளிநீக்குகற்று கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம்...
நம் மனதில் சுமக்க முடியா சுமைகளை பிறரிடம் சொல்லி இறக்கி வைக்க கற்று கொள்ளவேண்டும் ...
பிறர் நம்மிடம் அவரால் பிரச்சனைகளை சொல்லும் போது நாம் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் ...
நாம் படித்த அறிந்த விடயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் ...
சிறந்த பதிவு.. தொடர்ந்து எழுதுங்கள் ...
மிக மிக அருமையான பதிவு! நம்மல் முடிந்தவரை எத்தனை பேருக்கு அதுவும் நலிந்தோருக்கு உத்வ முடியுமோ, பணத்தால் தான் என்றில்லை. நம் உடலாலும், உள்ளத்தாலும் உதவ முடிந்தால் அதைப் போன்ற ஒரு நல்ல விசயம் இந்த உலகில் எதுவும் இல்லை எனலாம் நண்பரே!
பதிலளிநீக்குநடக்க முடியாமல் தடுமாறும் மனிதனுக்கு தோள் கொடுப்பவரும் , பார்வைஅற்ற மனிதர் பாதையை கடக்க உதவுபவரும், துயரத்தில் இருப்பவர்களுக்கு உள்ளார்ந்த ஆறுதல் அளிப்பவரும், வேதனையில் பங்குகொள்பவரும், வேறொருவரின் காயங்களுக்காக தாம் கண்ணீர் சிந்துபவ ர் அனைவருமே சிறகில்லாத தேவதைகளும் தேவ தூதர்களும் ஆவார்கள்.// உன்னதமான வார்த்தைகள்!!!!