கதைக்கும் பொய்யழகு
அன்பு இணைய தள - எழுத்துலக குடும்ப உறவுகளே,
வடுகபட்டி வைரமுத்து பேசுகின்றேன்.
தமிழ் சமுதாய பாரம்பரிய , நாகரீக,கலாச்சார, பண்பாட்டு மேன்மையினை உலகறிய நீங்கள் மெளனமாக "மௌஸ்" மூலம் செய்துவரும் சேவை அன்னை தமிழுக்கு நீங்கள் ஆற்றும் அளப்பறிய தொண்டு, ஒருவகையில் யாகம் என்றுகூட சொன்னால் அது மிகை அல்ல.
என்னைபோன்ற - உங்களால் கவிஞர் என்று ஏற்றுகொள்ளபட்ட திரை உலக கவிஞர்கள், கருத்தில் உடன்பாடு இல்லை என்றாலும் இசைத்துறையில் உடன் பாடும் கலைஞர்களின் கட்டளைக்கும் அவர்களால் கொடுக்கப்படும் "கட்டு"களுக்கும் கட்டுப்பட்டு ,பிள்ளை பருவத்தில் கொஞ்சம் இருந்த, வெட்கத்தை விட்டு சொல்லவேண்டுமானால், பணமென்னும் வசீகர தாரகையின் வசந்த கரங்களால் கட்டப்பட்டவர்களாய் நாங்கள் எழுதிகொண்டிருப்பது வணிகம், வியாபாரம், தொழில்,ஒருவகையில் விவேக விபச்சாரம்.
ஆனால் நீங்கள் செய்யும் இந்த உன்னத பணி, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, யாருடைய கட்டாயத்தின் பேரிலுமின்றி, எந்த ஒரு நிர்பந்தத்துக்கும் கட்டுபடாமல், உள்ளார்ந்த கருத்துக்களை, உங்கள் வெள்ளை மனதின் பிரதிபலிப்பாக "மௌஸ்" என்னும் எழுதுகோலின் துணையுடன்,கணனியின் திரையில் வெள்ளோட்டம் நிகழ்த்தி பின்னர் வெளி உலகோடு பகிர்ந்து கொள்ளும் உங்கள் வெள்ளந்தியான மனதுக்கு என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துரைக்கும் அளவிற்கு வளர்ந்தவன் என்ற நினைப்பில் அல்ல நீங்களும் எழுத்துலகில் என்னோடு வாழ்கின்றீர்கள் - அடிப்படையில் பல்வேறு விஷயங்களை பலரும் அறியும் வண்ணம் உங்கள் கணனிகளில் கர்ப்பம் தரிக்கும் உங்களுக்கு வாழ்த்து சொல்லவதில் கர்வமடைகின்றேன்.
கடந்த சில நாட்களாக பூவுக்குள் பூகம்பம்போலவும்,சிறகடிக்கும் வண்ணத்து பூச்சிகளின் இறகுகளில் கந்தகமூட்டைகளை கட்டி எனை நோக்கி பறக்க விட்டதுபோலவும் உங்களில் ஒருசிலர் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டு வருவதை அறிந்து நான் படும் வேதனை சவபெட்டியில் இறுதியாக சந்திக்கும் ஆணியும் சுத்தியும் இணைந்து எழுப்பும் ஓசைபோல் என் உள்ளத்தில் தாளமிடுகின்றது.
உண்மை அறியாமல் நீங்கள் எல்லோரும் அவசரப்பட்டு விட்டீர்களோ என அச்சப்படுகின்றேன்.
இதற்கிடையில் தம்பி விசுவிற்கு ஒரு செய்தி:
வடுகபட்டியில் இருந்து வட சென்னை வரை என நீங்கள் எழுதி இருப்பதில் ஒரு திருத்தம், வடுகபட்டியில் இருந்து நான் வட சென்னை வருவதற்கு முன்னால் சில காலங்கள் தென் சென்னையிலும் வாசம் செய்தவன் என்ற வரலாறு பாசமிகும் தம்பி விசுவாசம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சொல்கிறேன் கேளுங்கள்:
அது ஒரு கனா காலம் என்றோ கந்தர்வ காலம் என்றோ,நினைத்த நிமிடத்தில் நினைத்த வெற்றி தேவதை மடியில் வந்தமர்ந்த காலம் என்றோ சொல்ல நினைத்தாலும் வார்த்தை பஞ்சமும் வசதி கொஞ்சமுமாக இருந்த காலம் அது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற அந்த ஏகாந்த காலம் கற்றுகொடுத்த இலக்கிய பாடங்களின் படிவங்களை மூளையில் சுமந்ததை விட நான் தங்கி இருந்த அந்த ஒற்றை அறையின் மூலையில் இருந்த அந்த கிழிந்துபோன ஜோல்னா பையில் சுமந்ததுதான் அதிகம் .
அப்படி சுமக்கப்பட்ட அந்த மை நிரம்பிய - பொய் நிரம்பிய , அதாவது கவிதைகள் நிரம்பிய காகித மூட்டைகளோடு நான் தென் சென்னை, தெருக்களிலும் பூங்காக்களிலும் சுற்றிதிரிந்த அந்த காலங்களை தம்பி விசு அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பைகள் சுமந்த அந்த பொய்களை என் தோளில் சுமந்து நான் ஏறி இறங்கிய திரைபட நிறுவனங்கள் எத்தனை எத்தனை.
அந்த நிறுவனங்களின் அலுவலகம் உள்ளே செல்லும்போது இருந்த என் பையின் எடை நான் திரும்பி வரும்போது கூடி இருக்கும், மீசை அரும்பி வெளிச்சம் தேடி விரும்பி வெளி வர துடித்திருக்கும் அந்த காலத்தில் அந்த திரைப்பட அலுவலகங்களில் நான் பட்ட அவமானங்கள் என் நெஞ்சு நிறைந்ததுபோக எஞ்சி இருக்கும் மிச்சத்தை என் பயிலும் சுமந்து வந்ததால் அந்த பையின் சுமை அதிகரித்திருந்த வரலாறு தம்பி விசு விற்கு அறிந்திருக்க ஞாயமில்லை.
இதற்கிடையில், கற்ற கல்வியின் பயனாக காய்ந்திருந்த இந்த வடுகபட்டியின் மன மென்னும் மன்றத்தில் அந்தி மழையின் சில துளிகள் விழுந்தாற்போல எனக்கு மொழிபெயர்பாளன் வேலை கிடைத்தது. அது இரண்டு வேளைகள் அரை வயிறு குளிர்விக்க போதுமானதாக இருந்தாலும் என் பயணத்தின் பாதை அதுவல்ல என்றே என் ஆழ் மனது சொல்லிக்கொண்டிருந்ததை எனை அன்றி யார் அறிவார்.
கள்ளிக்காட்டு கனவான் பாரதி ராஜாவின் கடைக்கண் பார்வை என் மீது விழும் வரை, பண்ணைபுரத்து இசை வேந்தன் இளையராஜாவின் சங்கீத சாரல் என் அடி மனதில் அடிமைபட்டிருந்த கவிதை ஊற்றின் தெள்ளிய நீரோடு சங்கமிக்கும் வரை வசந்த காலங்கள் பாமரன் என் வருகைக்கு சாமரம் வீசி வீதி உலா அழைத்து செல்லும் வரை ஒரு மொழி பெயர்பாளனாக இருந்த என் வரலாறு இந்த மொழி பெயர்பாளன் தம்பி விசு விற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனினும் ஆரம்ப காலத்தில் எனக்கு இரண்டு வேளைகள் வாய்க்கும் வயிற்றுக்கும் சுவைகூட்டிய மொழிபெயர்பாளன் பணியினை சிறப்புடன் செய்திருக்கும் தம்பிக்கு என் வாழ்த்துக்கள்,உங்கள் எழுத்து நடை பழுத்த பலாவினும் சுவையாக உள்ளதை உணர்கின்றேன்.
காகித காலணிகளை அணிந்துகொண்டு பேனாவின் மூடியை குடையாக்கி முற்பாதைகளிலும் கற்பாதைகளிலும்,புயல் சூராவளிகளிலும் வலியோடு நான் நடந்து வந்த வரலாறு படிக்கும் கண்களிலும் கேட்க்கும் செவிகளிலும் உதிரம் உதிரும், நெஞ்சம் அதிரும்.
"புல்லு கொடுத்தால் பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி" என்ற ஒப்பற்ற கருத்தையும், "தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து" எனும் அறிய தொரு அறிவியல் உண்மையை கண்டறிந்து பாட்டில் சொன்னபோதும்,பிறவியிலேயே பார்வை அற்ற ஒருவனுக்கு இடையில் கிடைத்த காதலியின் முகம் அந்திமழையின் ஒவ்வொரு துளியிலும் தெரிவதாக பாட்டெழுதியபோதும் - பொய்பூசி கவிதை செய்த வரை எந்த ஒரு விமர்சனத்திற்கும் ஆளாகாத நான், சிறுகதை எழுதும்போது பல சில்லுகளாக உடைக்கபட்டேன்.
என் கதைகளை பாராட்டி பல பெரியவர்கள் தந்த பாராட்டு பட்டயங்கள் போலி என்றதொரு செய்தி நிலா வெளிச்சத்தில் உலா வருவதை கண்டு மிகவும் வேதனை அடைகின்றேன்.
இந்த பாராட்டு பத்திரம் என்னிடம் பத்திரமாக இருப்பதுபோல் இன்னும் பல வரலாற்று சிறப்பு மிக்க பெரியவர்கள் சரித்திர புருஷர்களின் பாராட்டுகளும் என்னிடம் பொக்கிஷமாக உள்ளதை சொன்னால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா என்பது ஐயமே.
அதிலொன்று, சில வருடங்களுக்கு முன் எனது அடுத்த நாவலுக்கான செய்தி திரட்டும் பொருட்டு அகத்திய மாமுனியின் ஓலை சுவடுகளின் நகலை அரசு ஓலை சுவடி காப்பகத்தில் இருந்து பெற்று அதை ஆய்வுக்கு அனுப்பி இருந்தேன்.
அந்த ஆய்வை மேற்கொண்ட எனது எழுத்துகளை கொண்டாடும் -என் புகழ் பாடும்- தோழன் ஒரு செய்தி சொன்னார், எனக்கே அது பெரிய ஆச்சரியமான செய்தி அது.
அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுத்தாணி கொண்டு பதபடுத்தபட்ட ஓலை சுவடிகளில் எழுதப்பட்ட அந்த செய்தியில் வடுகபட்டியில் இருந்து ஒரு கவிதை புயல் சென்னையில் மையம் கொண்டு தமிழர்களை மையல் கொள்ள வைக்கும் என்று எழுதப்பட்டதாக சொன்னது அந்த செய்தி.
அவை அனைத்தும் பழங்கால தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டது என்பதால் அதை நான் எந்த பத்திரிக்கைகளுக்கும் கொடுக்காமல் எனது பொக்கிஷ பெட்டகத்தில் பத்திரபடுத்தி வைத்திருக்கின்றேன்.
இதை பட்டினத்தாரும் சிலேடையாக தமது படைப்புகளில் வழி மொழிந்திருப்பதை பின்னாளில் சிங்கப்பூரில் நடந்த ஒரு தமிழ் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளும்போது என் செவி சேர்த்தார்கள் சிங்கபூர் தமிழர்கள்.
அதேபோல கள்ளிக்காட்டு இதிகாசங்கள் எனும் ஒரு தமிழிலக்கியம் உருவாகும் என்பதை எல்லோரும் அறியும் வண்ணம் "எல்லோரா" குகை ஓவியங்களில் காணபடுவதாக மலேஷியா தமிழ் மாமன்ற மாநாட்டு அரங்கில் பிரகனபடுத்திய செய்தியையும் தலைகனமின்றி உங்களுக்கு தெரிவிக்க கடமை பட்டிருக்கின்றேன்.
தண்ணீர் தேசம் என்னும் நாவல் உருவாவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் அதற்க்கான மானியத்தை காணிக்கையாக அளித்த செய்தியையும் கடந்த முறை கனடா நாட்டுக்கு சென்றபோது அங்கே வாழும் புலம் பெயர்ந்த தமிழர் பேரவையின் பத்தாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது என் காதுகளுக்கு கொண்டுவந்தனர் அதை அங்குள்ள அனைத்து நல்லுள்ளம் கொண்ட தமிழரும் மொண்டு பருகினர்.
இப்படி எத்தனையோ தீர்க்க தரிசன வாக்குகளும் அதற்க்கான சான்றுகளும் என்னிடம் இருக்கின்றது என்பதை தம்பி விசு அறியாமல் அவசரப்பட்டு எழுதி விட்டார் என்றே நினைக்கின்றேன்.
இதில் ஒரு சிறப்பு உண்டு கவனித்தீர்களா?
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் இது போன்ற செய்திகளை போலி செய்திகள் என்று சொல்வதன் காரணம் இங்கே தான் போலி மருத்துவர், போலி சாமியார்கள், போலி கல்லூரிகள், போலி நிதி நிறுவனங்கள் போன்றவற்றை பார்த்து பார்த்து பழகிப்போனதால் உண்மைகளையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கும் மனநிலமைக்கு தள்ளப்பட்டு விட்டனரோ?
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் அதனால் கொஞ்சம் நீண்டுபோனது எனது வரலாற்று விளக்கவுரை.
இனியும் வரலாறு தெரியாமல் தம்பி விசு இதுபோன்ற பொழிபெயர்ப்பு உதவிகளை செய்ய மாட்டார் என நம்புகின்றேன்.
தம்பி விசுவின் எழுத்துக்களை ஆர்வமுடன் படித்து வரும் எனக்கு அவரின் வர இருக்கும் முதல் புத்தகம் குறித்து திருவள்ளுவர் 1330 குறள்கள் எழுதியபின்னர் மீதமிருந்த பதபடுத்தபட்ட ஓலை சுவடுகளில் ஏதேனும் குறிப்புகள் இருந்தால் அதை கண்டறிந்து கொடுத்து உதவ நினைக்கின்றேன்.
விருப்பமிருந்தால் தொடர்புகொள்ளுங்கள் ஏற்பாடு செய்கிறேன்.
உங்களின் "விசுவாசமின் சகவாசம்" எல்லைகளை தாண்டி மக்களின் மனதுகளை கொள்ளை அடிக்க வாழ்த்தும், வடுகபட்டி வைரமுத்து.
தங்கை தீபாவுக்கு ஒரு செய்தியோடு பிறகு வருகிறேன் தீபாவளிக்கு முன்.
நன்றி,
வாழ்க தமிழ்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
.
நண்பர்களே இது முழுக்க முழுக்க கற்பனையே.
கோ.
அடே அடே அடே.. வடுகபட்டியே வந்து இருந்தாலும் இப்படி ஒரு விவரமான பதிலை தந்து இருப்பாரோ என்பது ஐயமே ... அருமையான சொல் நடை. வடுகபட்டியே படித்து போல் இருந்தது . நன்றி..
பதிலளிநீக்குசுவாசிக்க மறந்த அந்த ஒரு கனம் - "நண்பர்களே இது முழுக்க முழுக்க கற்பனையே" என்பதை படிக்கும் பொழுது...
பதிலளிநீக்குவாழ்த்துகள் கோ (வடுகபட்டியை மிஞ்சிய கோயில்பட்டி) !
பின்குறிப்பு: அரசியல் சாக்கடை என்றால், சினிமா செப்டிக் தொட்டியோ?!
பதிலளிநீக்குஅன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com