முறையான வாழ்த்து?
நண்பர்களே,
இந்தப்பதிவில், என் மனதில் பட்ட ஒரு சிந்தனையை உங்களோடு பகிர்ந்துகொள்ள வாஞ்சிக்கிறேன்.
பொதுவாக பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதும் அந்த வாழ்த்துக்களை முன் காலத்தில் நேரில் சந்தித்தும் வாழ்த்து அட்டைகள் மூலமும் அனுப்பி மகிழ்ந்ததுபோல இப்போதிருக்கும் நவீன தொழில் நுட்ப தகவல் தொடர்பு வசதிகளை - தளங்களை பயன்படுத்தி வாழ்த்துபரிமாற்றங்கள் நடந்துகொண்டிருப்பதை நாம் அறிவோம்.
அப்படி வாழ்த்து அட்டை கலாச்சாரம் கோலோச்சி இருந்த காலத்தில், ஒருவர் மற்றவருக்கு வாழ்த்து அட்டை அனுப்பினால் பதிலுக்கு அல்லது எதிர்பார்ப்பு ஏதுமின்றி மற்றவர்களும் தமக்கு வேண்டியவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோருக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி தங்கள் மகிழ்ச்சியையும், பண்டிகை சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
(இப்போதும் இந்த வாழ்த்து அட்டை கலாச்சாரம் ஆங்காங்கே புழக்கத்தில் இருப்பது சிறப்பு).
ஆனால், இப்போது பரவலாக, தொலைபேசி மூலம், தொலைபேசி குறுஞ்செய்திகள் மூலம், ஈ மெயில் மூலம், வாட்ஸ்ஆப் போன்ற அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் ஊடாய் வாழ்த்து செய்திகள் பரிமாறப்பட்டு வருவது வழக்கமாகிப்போய்விட்டது.
இந்த வகையில், துரிதம், நேரம் மிச்சம், ஒரே நேரத்தில் எத்தனை பேருக்கும் இருந்த இடத்திலிருந்து வாழ்த்து அனுப்பும் வசதி, பணச்செலவு இன்மை போன்ற அனுகூலங்கள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது.
சரி இதில் என்னுடைய சிந்தைக்குள் சிக்கி இருக்கும் செய்தி என்ன?
அப்படி நமக்கு தொலைபேசி குறுஞ்செய்திகள் வாயிலாக வரும் வாழ்த்து செய்திகள் பெரும்பாலும் FORWARDED செய்திகளாகவே வருகின்றது என்பது என்னைப்பொறுத்தவரை ஏற்புடையதாக இல்லை.
நாம் ஒருவருக்கு வாழ்த்து சொல்லவேண்டி இருந்தால் ஏதோ ஒரு ஆடம்பர - அலங்கார செய்தியையோ அல்லது படத்தையோ தேடி அல்லது யாரோ நமக்கு அனுப்பிய செய்தியை அப்படியே மடை மாற்றி மற்றவர்களுக்கு அனுப்புவது எந்தவகையில் நம் வாழ்த்தாக அமையும் ?
அதே போல யாரேனும் நமக்கு இது போன்ற ஊடகங்கள் வாயிலாக வாழ்த்து அனுப்பி இருந்தால் , நாமும் அதை அப்படியே மற்றவர்களுக்கு எந்த கூடுதல் செய்தியையும் சேர்க்காமல் அல்லது நாம் யாருக்கு அனுப்புகிறோமோ, அவர்கள் பெயரையோ அல்லது அவரது குடும்பத்து நபர்களின் பெயரையோ சேர்த்து எழுதாமல் அப்படியே ஏதோ கடமைக்கு அல்லது ஏதோ நாமும் அனுப்பிவிட்டோம் என்கின்ற அளவிற்கு கடத்துவது முறையாகாது.
முக்கியமாக நாம் யாருக்கேனும் வாழ்த்துக்கள் அனுப்புவதாக இருந்தால் அது அவர்களது பெயரை முன்மொழிந்து மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அறிந்திருந்தால் அவர்களையும் குறிப்பிட்டு அனுப்பினால், பெறுபவரின் மனம் இன்னும் கூடுதலாக மகிழும், தமக்கு பிரத்தியேகமாக வாழ்த்து அனுப்பி இருக்கின்றார்களே என்ற நன்மதிப்பும் பெரு மகிழ்ச்சியும் இந்த விழா காலங்களில் அமைவது நிச்சயம்.
அதே போல, யாரேனும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தால், பதில் செய்தியாக, ஆங்கிலத்தல் , "same to you" என்று மட்டுமே சொல்வதையோ அல்லது "உங்களுக்கும்" என்று பதில் அனுப்புவதுகூட சிறந்ததாக இருக்குமா என்ற சிந்தனையும் வருகிறது.
மாறாக அவர்களுக்கு நம் மனப்பூர்வமான நன்றியையும் நமது சொந்த வார்த்தைகள் கொண்டு வாழ்த்து செய்திகள் அனுப்புவதும் சிறப்பு.
ஏற்கனவே யாராலோ உருவாக்கப்பட்ட படங்களையோ வார்த்தை கோர்வைகளையோ அனுப்புவதை தவிர்த்து நம் மனதில் தோன்றும் வாழ்த்து செய்திகளை அனுப்புவது கூடுதலாகவும் பிரத்தியேகமாகவும் பெறுபவர் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அலங்கார வார்த்தைகள் தேவை இல்லை அழகான படங்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமும் இல்லை.
சாதாரணமான வார்த்தைகளாக இருந்தாலும் PERSONALISED வாழ்த்துக்களுக்கு எப்போதும் மதிப்பும் மகிழ்ச்சியும் கூடுதலாக இருக்கும் என்பது எனது சிந்தனை. அது பண்டிகை குதூகலத்தையும் பன் மடங்கு பொங்கச்செய்யும் பெறுபவரின் மனதில்.
இந்த சிந்தனையில் உடன்படுவீர்கள் என நம்புகின்றேன்.
தங்கள் அனைவருக்கும் , தங்களின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் மற்றும் சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும் எனது தைத்திருநாள், உழவர் திருநாள், அறுவடைத்திருநாள், பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .
நன்றி, வாழ்த்துக்கள்.
மீண்டும் ச (சி)ந்திப்போம்.
கோ.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக