பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

பாய் மண்ணே! வணக்கம்!! -2

Hats off!!!!

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க ........பாய் மண்ணே! வணக்கம்!!

ஏற்கனவே   இருக்கும் பெரிய நிலப்பரப்பை பிரித்து சிறு சிறு துண்டுகளாக்கி புதிய நாடுகள் உருவாவது இப்போது அங்கங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒன்றுதான்.
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்புகூட நம் நாடு இந்தியா , பாக்கிஸ்தான், வங்காள தேசம் என்று பலவாறாக பிரிந்து தனித்தனி நாடக விளங்குவது நாம் அறிந்ததே.

அப்படி பிரிந்த நாடுகளின்   ஆக்கபூர்வமான , பொருளாதார , விவசாய, தொழில்துறையில் தனித்தன்மையுடனான  வளர்ச்சியின் வேகம் என்பது இப்போதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.

 காரணம் கேட்போமானால், வளமான பகுதி ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு பிரித்து கொடுக்கப்பட்டதென்றும் ,வளமற்ற பகுதிகள் வேறு நாடுகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன  என்றும் ஒருவர் மீது ஒருவர் குற்றங்களையும் குறைகளையும், நாடுகள் பிரிந்து பல ஆண்டுகள் ஆனபிறகும், வாக்குவாதமும் பிடிவாதமும், போர் ஒத்திகைகளையும் செய்துகொண்டிருக்கின்றன.

ஆனால் உண்பதற்கான  உணவை பயிரிட உகந்த நிலங்களோ  குடிப்பதற்கான தண்ணீரை பெறுவதற்கான  இயற்கையான ஆறுகள், குளங்கள், நீரூற்றுகள் ஏரிகள் போன்றவைகளோ , அல்லது மற்ற நாடுகளைப்போல மிதமான தட்பவெட்ப நிலை நிலவும்படியாகவோ, மாமாங்கத்திற்கு  ஒருமாரி  பொழியக்கூடி பிரதேசமாகவும்கூட இல்லாமல் , வறண்ட பாலை நிலமாக காட்சிதந்த - தருகின்ற மணல்  பிரதேசத்தை மட்டுமே கொண்டிருக்கும் நாடு எப்படி தம்மால்  முன்னேற்ற பாதையில் அடி  எடுத்து வைக்க முடியும்.?

இல்லாதவற்றை நினைத்து கவலை படாமல், இருப்பவர்களை குறித்து பொறாமை படாமல் தன்னிடம் என்ன இருக்கின்றது என்பதை உணர்ந்து அதை எப்படி ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதென்பதை பகுத்துணர்ந்து பல இன்னல்களை, சவால்களை சந்தித்து - எதிர்கொண்டு   கடின உழைப்பாலும் கூறிய தொலைநோக்கு பார்வையாலும் , மக்களின் நலனை நடு நாயகமாக வைத்து செயல் திட்டங்களை தீட்டியதாலும், இருக்கும் வளத்தை சரியாக பயன்படுத்துவதாலும்  இன்று எல்லாவிதத்திலும் உலகின் முன்னணி நாடாக திகழும்  ஒரு ஒப்பற்ற  நாடு  கட்டமைக்கபட்டிருக்கின்றது என்றால் அது வெறும் மணலின்மீதுதான்.

அதுவும் ஆற்று மணலல்ல, ஈரப்பதம் சிறிதும் அற்ற கடும் பாலை மணல்.

வானம் வேண்டுமென்றால் அந்த நாட்டை  குனிந்து பார்க்கலாம், ஆனால் நிலவும் நிமிர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு, உயர்ந்தோங்கிய கட்டிடங்கள், அதிலும் உலகத்திலேயே இன்றைய தேதிக்கு மிக மிக உயரமாக  , கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் , பல நவீன தொழில் நுட்பங்களோடு   2716 .5 அடி உயரமும் 160  மாடிகளையும் கொண்ட எழில் கொஞ்சும்  கட்டிடமாக  நிறுவப்பெற்று நிலைபெற்றிருக்கும் "புர்ஜ் கலீபா" கட்டிடத்தை மூக்கின்மீது  மட்டுமல்ல சிந்தைமீதும் விரல் வைத்து வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

Image result for burj khalifa

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கட்டிடத்தை புகைப்படத்தில் பார்த்தாலே பரவசப்படும் எத்தனையோ பேர்களின் மத்தியில் அதை நேரில் சென்று பார்க்கவும் அதன் உள்ளே பிரவேசிக்கவும் அதன் உச்சிக்கு சென்று   அங்கேயே ஒரு நாள் பகல் முழுதும் தங்கி இருக்கவும் கிடைத்த வாய்ப்பை எண்ணி எண்ணி மகிழ்வதோடு என் இதய புத்தகத்தின் ஞாபக பக்கக்களில் செதுக்கி  மட்டுமல்ல பதுக்கியும்  வைத்திருக்கின்றேன்.

செங்கல் சிமெண்டு இரும்பு கொண்டு கட்டப்பட்டிருக்கும் ஏனைய  சாலைகள் , மேம்பாலங்களை, குடியிருப்பு, அலுவலக, பள்ளி, கல்லூரி, பல்கலை கழக , மருத்துவ கட்டிடங்களை மட்டுமல்லாது,  அங்கே நிலவும் பன்னாட்டு  மனித வளத்திற்கும் மனித நலத்திற்குமான தொலைநோக்கு பார்வையுடனும் கட்டப்பட்டிருக்கும் infrastructures - செயல் திட்டங்களையும் பார்த்து வியந்த எனக்கு , பள்ளியில் கற்றுக்கொடுத்த பாடலின் முற்பகுதியின் கருத்தில் உடன்பாடு இல்லாமலும் அதன்மீது  இருந்த நம்பிக்கையையும்   இழந்தேன்.

பாடலின் முற்பகுதி இதுதான்: 

The wise man built his house upon the rock

And the rain came tumbling down

Oh, the rain came down

And the floods came up

And the wise man's house stood firm.

The foolish man built his house upon the sand

And the rain came tumbling down

Oh, the rain came down

And the floods came up

And the foolish man's house went "splat!"

யார் புத்திசாலி... யார் அதிபுத்திசாலி..? 

நீங்களே சொல்லுங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 கருத்துகள்:

  1. "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்?" என்ற ஒரு பழைய பாடல் உண்டு. இருக்கும் வளத்தை வைத்து எப்படி முன்னேறுவது என்று அந்நாட்டு மக்கள் சிந்தித்திருக்கிறார்கள். ஆக்கபூர்வமான செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரித வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வளங்கள் யாரிடம் இருக்கின்றன என்பதை பொருத்தும் வளர்ச்சி பாதைக்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே..

      கோ

      நீக்கு
  3. தொலைநோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு அனைத்திலும் அரசியலையே திணித்து நம்மவர் நேரத்தையும், சமூகத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் ஐயா.

      ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எப்படியும் ஆட்சி மாற்றம் வரும் அதனால் நாம் எதற்கு தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிடவேண்டும் ? அடுத்த ஆட்சி வந்துவிட்டால் நமது திட்டத்தை அவர்கள் நிறைவேற்றப்போவதில்லை எனவே எதற்கு தொலை நோக்கு திட்டம் என்றுகூட நினைப்பதாலும் , மன்னராட்சி இங்கே இல்லாததும் இந்த அவலத்திற்கான காணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. இல்லாததைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதை எப்படித் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு உலகையே வியக்க வைக்கலாம் என்று செயல்படும் துபாய் புத்திசாலி...இருப்பதன் அருமை தெரியாமல் எதற்கோ ஏங்கி எதையோ தேடித் தேடி, எல்லாவற்றிலும் அரசியல் கலந்து, தொலை நோக்குப் பார்வை இல்லாமல் இருக்கும் அருமையானவற்றை அழித்துவருகிறோமே இங்கு இந்தியாவில் என்ன சொல்ல? என்னதான் இருந்தாலும் இந்தியாவை அந்த வார்த்தை சொல்ல மனது வரவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் தொடர் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.

      கோ

      நீக்கு