பின்பற்றுபவர்கள்

திங்கள், 23 அக்டோபர், 2017

கால் போன போக்கிலே....

மனம் போனதால்.....

நண்பர்களே,

கண் போன போக்கிலே கால் போகலாமா?... கால் போன போக்கிலே மனம் போகலாமா?.. என்பதான திரைப்பாடலின் வரிகளை நாம் அறிந்திருப்போம்.

அதாவது வாழ்க்கையில் ஒரு திட்டம் தீர்மானம் குறிக்கோள் இல்லாமல் ஏனோதானோ என்றதொரு பிடிப்பில்லா அர்த்தமற்ற வாழ்வை சாடும்படியான இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.

ஆனால் ஒரு மனிதரின் கால் போன போக்கிலே வேறொரு மனிதரின் மனம் போனதால் என்ன நடந்தது என்பதை சொல்வதே இந்த பதிவு. 

பரபரப்பான கடைவீதியில் அமைந்திருந்த ஒரு சிற்றுண்டி சாலையில் சன்னல் ஓரத்தில்  தனது மனைவி பிள்ளைகளுடன் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்தவண்ணம் உணவருந்திக்கொண்டிருந்தார் அந்த முப்பத்தி ஆறு வயது மனிதர்.

கடை வீதியில் நிகழ்ந்து கொண்டிருந்த பல விஷயங்கள்   அவர் கண்ணில் பட்டு மறைந்துகொண்டிருக்க ஒரு காட்சி  அவர் கண்களில் பட்டதுமின்றி அவரது நெஞ்சிலும் பட்டது -   சுட்டது என்று கூட சொல்லலாம். 

இரு மருங்கிலும் அமைந்திருந்த கடைகள் நிரம்பியிருந்த அந்த கடைவீதியில் எத்தனையோ  நூற்றுக்கணக்கானோர் நடந்து சென்றுகொண்டிருக்க அவர்களுள் ஒரு மனிதர் மட்டுமே  இந்த மனிதனின் கண்களையும்  கருத்தையும் சட்டெனெ ஈர்த்தது.

எத்தனையோ விதவிதமான மனிதர்கள், விதவிதமான ஆடைகள், மேலாடைகள், காலணிகள் அணிந்து அந்த கடை வீதியில் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருக்க அந்த குறிப்பிட்ட மனிதர் மட்டும்  முறைப்படுத்தப்படாத தலை முடியுடனும் , அழுக்கேறிய அரைகுறை ஆடைகளுடனும் குளிரிலிருந்து ஓரளவிற்கு தம்மை காத்துக்கொள்ளும்படிக்கு ஒரு அழுக்கேறிய குளிர் தாங்கும் மேலாடையை தோளில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றார்.

தமது புறத்தோற்றம் அவர் சாலை ஓரங்களில் , மரத்தடிகளில், பூங்காக்களில், மூடப்பட்ட கடைகளின் கதவுகளுக்கு வெளியில் படுத்துறங்கும் வீடு அற்ற மனிதர் என்பதை பறை சாற்ற தவறவில்லை.

இதிலென்ன புதுமை?, நாட்டில் எத்தனையோ பேர்கள் இதுபோன்று ஹோம் லெஸ் மனிதர்கள் இருக்க இவரின் மீது மட்டும் அந்த மனிதரின் கவனம் திரும்ப என்ன காரணம்?

மேற் சொன்ன அத்தனை வெளி தோற்றத்தினூடே மற்றுமொரு செய்தியும் அவரது புறத்தோற்றம் வெளிப்படுத்தியதே இந்த மனிதரின் கவன ஈர்ப்பிற்கு காரணம்.

அதாவது அந்த குளிர் நிலவும் சூழலில் தன் கால் விரல்களில் ஒன்றிரெண்டு வெளியில் துருத்திக்கொண்டு வரும்  பல ஓட்டைகள் நிறைந்த   சாக்ஸ் மட்டுமே அணிந்துகொண்டு நடந்து சென்றதுதான் இந்த மனிதரை பாதித்த ஒன்று.

சற்றும் யோசிக்காமல்   தனது குடும்பத்தினரிடம் , " இதோ வருகிறேன்" என சொல்லிவிட்டு வேகவேகமாக உணவகம் விட்டு வெளியேறி ஓட்டமும் நடையுமாக சென்று அந்த மனிதர் தனது பார்வையில் இருந்து மறைவதற்குமுன் அவரை வந்தடைந்தார்.

வந்தவர் அந்த காலணி இல்லாம இருந்த மனிதரிடம் கேட்ட கேள்வி, உங்களின் பாதத்தின்  அளவு என்ன.

திடீரென்று ஒரு சம்பந்தமும் இல்லாமல், யாரோ ஒருவர் தன்னிடம் வந்து பாதத்தின்  அளவு கேட்டதும் சற்று திடுக்கிட்ட அந்த மனிதர் சொன்னார் , ஒன்பது.

உடனே இந்த மனிதர், நல்லது என்னுடைய பாதத்தின் அளவும் ஒன்பதுதான் என சொல்லிக்கொண்டே, ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து வாங்கியது மட்டுமல்லாமல், தனது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் காட்டி காட்டி மகிழ்ச்சியுடன் வாங்கி தற்போது அணிந்திருந்த அந்த விலை உயர்ந்த புதிய காலனியை உடனே கழற்றி அந்த மனிதருக்கு கொடுத்து அணிந்துகொள்ளவைத்திருக்கின்றார்.

அந்த புதிய காலணியின் மதிப்பு நம்ம ஊர் கணக்குப்படி பன்னிரெண்டாயிரம் ரூபாய்.

சற்றும் எதிர்பாராது ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அந்த வீடில்லா மனிதர் உண்மையாகவா..  ???? என கேட்க, அந்த மனிதரின் தோளில்  கைபோட்டு உண்மைதான் நண்பரே, அணிந்துகொள்ளுங்கள் என சொல்ல, இன்ப அதிர்ச்சியில் கிரங்கிபோன அந்த மனிதன் காலணி கொடுத்த மனிதரை கட்டிப்பிடித்து கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, தனது நன்றியை தெரிவித்திருக்கின்றார்.

தமது வாழ் நாளில் இப்படி தமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தை எண்ணி மகிழும் அதே தருவாயில் அந்த வீடில்லா மனிதரின் கண்ணீர் மூழ்கிய நன்றி உணர்வும் தம்மை திக்குமுக்காட வைத்துவிட்டது என கூறும் முப்பத்தாறு வயது மனிதரின் பெயர் கிரேக்.

எதை எங்கு வைக்கவேண்டுமோ அதை அங்குதான் வைக்கவேண்டும் என்று சொல்வதை கேட்டிருப்போம் அல்லது நாமே கூட பல சந்தர்ப்பங்களில் சொல்லி இருப்போம்.

அவற்றுள் இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமாயின்  எத்தனை விலைகொடுத்து வாங்கினாலும் செருப்பை தூக்கி தலையில் வைத்துக்கொள்ள கூடாது என்றும் சொல்ல கேட்டிருப்போம்.

செருப்பை எங்கு வைக்கவேண்டும் என்றறிந்த அந்த நல்ல மனிதரின் மனிதாபிமான செயலால் இப்போது அவர் எல்லோராலும்  தலையில் வைத்து கொண்டாடப்படுகிறார்.

Image result for picture of the man helps homeless with shoes in nottingham

கடந்த பதினான்காம் தேதி இங்கிலாந்து நாட்டிங்கம் நகர் மைய அங்காடி தெருவில்  நடந்த இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களால் படம் பிடிக்கப்பட்டு குளிர் தென்றலாய் பரவிவரும் இந்த மனிதாபிமானத்தை  செய்தித்தாளில் வாசித்து உள்ளம் உருகினேன், மனித நேயத்தை செயலில் காட்டிய  அந்த வள்ளலின் உள்ளத்தை பாராட்டியவண்ணம். 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ4 கருத்துகள்: