பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தலை(கால்)தீபாவளி!!

காலுக்குமா??

நண்பர்களே,

"தலை" என்ற  சொல்லுக்கு, பிரதானம், முதன்மை, தலைமை,முக்கியமான, பிரத்தியேகமான,சிறப்பான குறிப்பிடத்தக்க...போன்ற எத்தனையோ வார்த்தைகளை அதன் பொருளாக கருதலாம்.

இந்நிலையில், திருமணமான புதுமணத்தம்பதியினர் இணைந்து கொண்டாடும் முதல் தீபாவளியை மட்டும் பிரதானப்படுத்தி தலை தீபாவளி என்று அழைப்பதுண்டு.

நல்லதுதான்.

"நேற்றுவரை நீயாரோ நான் யாரோ" , என்றிருந்த இருவேறு நபர்கள் "இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ" என்று சொல்லுமளவிற்கு கரம் பிடித்து இணை சேர்ந்து வாழ்க்கை துணையான பின் வரும்  முதல் பண்டிகையான , தீபாவளி,   ரம்சான்,  கிறிஸ்மஸ்  போன்ற பண்டிகைகளை குறிப்பிடும்போது , அந்தந்த பண்டிகைகளுக்கு முன் "தலை" என்று சொல்லை இணைத்துக்கொள்வது வழக்கம். 

இந்த தலை தீபாவளி, அல்லது தலை ரம்சான், அல்லது தலை கிறிஸ்மஸ் போன்ற வார்த்தைகளை ஏன்   திருமணங்களோடு  மட்டும் நிறுத்திக்கொள்ளவேண்டும் , ஏனைய மற்ற நிகழ்வுகளுக்காகவும்கூட பயன்படுத்திக்கொள்ளலாமே.

அதேபோல படித்து முடித்து நல்ல ரிசல்ட் வந்து, தான் ஒரு பட்டதாரி, அல்லது மருத்துவர், அல்லது ஆடிட்டர், அல்லது இன்ஜினீயர் , அல்லது ஒரு ஆசிரியர்,அல்லது தொழில்நுட்ப வல்லுநன் என்று தகுதி கிடைத்தபின் வரும் முதல் பண்டிகையை "தலை" சேர்த்து அழைப்பது ஏற்புடையதாகவே இருக்கும் என நினைக்கின்றேன்.

அதேபோல கடந்த வருடம் வரை வேலைக்கு முயற்சித்து இந்த ஆண்டு நினைத்த வேலை நினைத்த நிறுவனத்தில் கிடைத்ததை எண்ணியும் இந்த முதல் பண்டிகையை தலை பண்டிகை என்று சொல்லலாமே.

குழந்தை பிறந்த முதல் ஆண்டு வரும் பண்டிகைகள்  உண்மையிலேயே, ஒரு புதிய அப்பா அம்மாவிற்கு தலை பண்டிகை தானே. (தலைமுறை உருவானதால்..)

பொதுவாக இந்த தலை பண்டிகைகளை சுப நிகழ்வுகளுக்கு மட்டுமே குறிப்பிடுவது மரபு, எனவே எதிர்மறையான நிகழ்வுகளை இங்கே இதில் சேர்க்கவேண்டாம்.

ஒருவேளை விருப்பமில்லாத காதலன் காதலி, அல்லது மனம் ஒத்துப்போகாத கணவன் மனைவி, அல்லது  பிடிக்காத நிறுவனத்தில்  செய்து வந்த வேலை, பிடிக்காத இடத்தில் வசித்துவந்த வாழ்க்கை போன்றவற்றில் இருந்து முறையாக - முழுமையாக விடுபட்டபின் வருகின்ற பண்டிகைகளைக்கூட ஒருசிலர்  தலை பண்டிகை என்று கொண்டாடி  மகிழக்கூடும்.

அதேபோல உயிருக்கு போராடி, மருத்துவம் பார்த்தோ அல்லது நமக்கும் மேலான இறை மற்றும் இயற்கை  சக்தியின் அனுகிரகத்தாலோ , நல்ல நிலைக்கு திரும்பியபின் வரும் பண்டிகைகளையும் கூட இறைவனுக்கு - இயற்கைக்கு நன்றி செலுத்தி தலை பண்டிகைகளாக கொண்டாடுவதும் ஏற்புடையதே.

எது எப்படியோ தலை பண்டிகை என்பதற்கு கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே அவரவருக்கு எந்த நிகழ்ச்சி மன அமைதியையும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் கூட்டுகின்றதோ அந்த நிகழ்ச்சியின் பேரில் இந்த தீபாவளியையும் இனி  வர இருக்கும் மற்ற   பண்டிகைகளையும் தலைமேல் தூக்கி கொண்டாடி மகிழுங்கள்.

புதுமண தம்பதியினருக்கும் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கும் புதிதாக அப்பா அம்மா ஆனவர்களுக்கும்  சிறப்புடன் பணிபுரிந்து இந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கும் இன்னும் நேர்மறையான நிகழ்வுகள் தமது வாழ்வில் நடந்த அனைவருக்கும் இந்த தீபாவளி இனிய தலை தீபாவளியாக சிறக்கட்டும் இனிக்கட்டும்.  

மேற்சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்றையோ அல்லது பலவற்றையோ அனுபவித்தவண்ணம் கொண்டாடும் சிலருக்கு இந்த ஆண்டு தலைகால் புரியாத தீபாவளி கொண்டாட்டமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

2 கருத்துகள்: