பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஹனி மூ(மீ)ன்!!

அமாவாசை

நண்பர்களே,

பேரை கேட்டாலேசும்மா.... அதிருதில்ல என்று ஒரு பிரபலமான வசனம் உண்டு. அதேபோல சில வார்த்தைகளை கேட்டாலே உள்ளத்திலே மகிழ்ச்சி  பொங்கும்.

அவ்வகையில் , பிறந்த நாட்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், கல்யாணம், தேன் நிலவு , சுற்றுலா,விடுமுறை, விருந்து போன்ற வார்த்தைகளை கேட்கும்போது அது யாருக்கு என்றெல்லாம் கூட சிந்திக்கும் முன் நம்  மனதிலே ஒரு மகிழ்ச்சி கீற்றை விதைத்து செல்லும்.

இவ்வரிசையில் திருமணமான புது மண தம்பதியினர் தாங்கள் இருவர் மட்டுமே தனியாக இடம் விட்டு இடம் சென்று வருவது மனித குலத்தில் வழக்கத்தில் இருக்கும் ஒரு பழக்கம்.

 புதிதாக தமக்குள்ள ஏற்பட்டிருக்கும் இந்த பந்தத்தின்  மாண்பை, தத்துவத்தை மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டு, தங்களது புதிய வாழ்வை இயல்புடனும் தயக்கங்கள், கூச்சங்கள், அச்சங்கள் தவிர்த்து தொடர்வதற்கான முன்னோட்டமா இயற்கை  சூழும் பிரதேசங்களுக்கு சென்று ஓரிரு நாட்கள் அல்லது வாரங்கள் தங்கி  இருந்து திரும்புவதை தேன் நிலவு என்று பெயரிடப்பட்டு   அழைப்பதை  நம் அறிவோம்.

இப்படிப்பட்ட தனிமையான இன்ப சூழ்நிலையில் இடி விழுந்தால் எப்படி இருக்கும்?

அதிலும் ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்து பல வருடங்கள் தனிமையில் வாடிய மனமென்னும் மலரில் மீண்டும் பல வண்ணங்களையும் , சுகந்த வாசனைகளை தெளித்தாற்போல, மீண்டும் ஒரு இனிய- ஏற்ற துணையை கண்டு மறுமணம் செய்துகொண்டு,  விட்டுப்போன தமது இன்ப பயணத்தை தொடர நினைத்த  ஒருவருக்கு ஏற்பட்ட செய்தி  கண்டு உள்ளம் வலித்தது.

அதுவும் தமது தேன் நிலவு காலத்தில் என்றபோது உள்ளத்தின் வேதனை உச்சம் தொட்டது.  

54 வயதான அந்த பெண், சாலை விபத்தில்  சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் தன் முதல் கணவரை பலிகொடுத்துவிட்டு சோகத்தில் மூழ்கி இருந்தபோது , எத்தனையோ பேர்கள் எத்தனையோ முறை சொல்லியும் மறுமணத்திற்கு உடன்படவில்லை.

இறுதியாக தமது பிள்ளைகளின் தொடர் வற்புறுத்துதலின் பேரில் திருமணம் செய்துகொள்ள சம்மதித்து சுமார் 58 வயதான ஒரு நல்லுள்ளத்தோடு தன் இதயத்தையும் சேர்த்து திருமண பந்தத்தில் இணைந்த்தார்.

திருமணம் என்பதும் குடும்ப வாழ்க்கை என்பதும் பழகிய ஒன்றுதான் எனறாலும் ,இப்போது இணைந்திருக்கும் இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் புதியவர்கள்தானே.

அந்த புதியவர்களுக்கான அச்சம் நாணம் , வெட்கம் கூச்சம்,தயக்கம்....போன்ற அத்தனை உளவியல் காரணிகளின் ஒட்டுமொத்த ஆக்கரமிப்பில் இருந்த அவர்கள் இருவரும் தனிமையில் தங்களை ஒருவருக்கொருவர் முழுமையாக புரிதலை  ஏற்படுத்தவேண்டி ,  தேன் நிலவு சென்றனர்.

சென்ற இடத்தில் அந்த பெண் உயிரிழக்க நேரிடுகிறது.

அதிர்ச்சியுற்ற கணவன் எத்தனை முயன்றும் அந்த புத்தம் புதிய மனைவியை காப்பாற்ற முடியவில்லை.

காரணத்தை  ஆராய்கையில்  அந்த பெண்  உண்ட மீனில் இருந்த பாதரசத்தின் அளவு(??) கூடுதலாக  இருந்ததே அவரின் எல்லா அவயவங்களின் செயல்பாடும் , அவரது இதயமும் செயல் இழக்க காரணமாக அமைத்து என்று சொல்லப்பட்டது. 

இந்த பரியதான சூழ் நிலையில் வாடிதுடிக்கும் அந்த புதிய கணவரும் செய்வதறியாது துடிக்கும் இந்த தருணத்தில் அந்த பெண்ணின் மூன்று குழந்தைகளும் (வயது 33,30,29) இன்னமும் அந்த மரணத்தை நம்பமுடியாமல் வேதனையில் சொல்லும் வார்த்தைகள்,"பலஆண்டுகள் இருளில் மூழ்கி இருந்த தமது தாயின் வாழ்வில் புதிய ஒளி வீச துவங்கிய இந்த பத்தாம் நாளிலேயே அவரை இருளில் மூழ்கடித்துவிட்டதே " என்பதுதான்.

இதயத்தை பகிர்ந்துகொண்டு இனிய துணையுடன் தமது விட்டுப்போன வாழ்வின் இனிய எல்லைகளை  இணைந்து கடக்க முடிவெடுத்த இந்த தருணத்தில் தமது இதய ஓட்டம் நின்றுவிடும் என அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லைதான்.

தேன் நிலவை தொடர்ந்து தங்களது வாழ்வு என்றென்றும் பிரகாசிக்கும் பவுர்ணமியாய் பரிணமளிக்கும் என்று மகிழ்வுடன் கூடிய அவர்களின் வாழ்வில் இப்படி இந்த தேன் நிலவு அமாவாசை இருளை அழைத்துவரும் என்று அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லைதான்.

என்ன செய்வது?  

இந்த ஏமாற்றத்தை ஏற்க மறுக்கிறது நம் இதயங்களும்தான்.

இத்தனையும் நடந்தது மெக்சிகோவில் என்பது கூடுதல் தகவல்.

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


4 கருத்துகள்:

  1. மெக்சிகோவில்(?)நிச்சயமாக இது இந்தியாவில் இருக்காது என்பதை படிக்கும் போதே தீர்மானித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு