பின்பற்றுபவர்கள்

புதன், 12 அக்டோபர், 2016

வாசல் எங்கும் வானவில்லாய்...

அ(ம்)ன்பு வில்!!

நண்பர்களே,

சில தினங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு சுற்றறிக்கை சுற்றி வந்தது.

அதில் வருகிற 12 ஆம் தேதி, நீங்கள் விரும்பும் வண்ணம், வண்ண வண்ண ஆடைகளை அணிந்துகொண்டு அலுவலகம் வரலாம் என மகிழ்வூட்டும் வாசகத்தோடு  துவங்கிய அந்த சுற்றறிக்கை போகப்போக  வாசிப்பவர்களின் மனதில் ஒரு இறுக்கமான - உருக்கமான சோக செய்தியை படரவிட்டது.

தொடர்ச்சியாக சொன்ன செய்தியில், நம் அலுவலக சக-ஊழியரின் கணவருக்கு ஆயுள் முடியும் கட்டத்தை தொட்டுவிட்ட நிலையில் புற்றுநோய் (TERMINAL CANCER)இருப்பதை மருத்துவர்கள் கண்டு உறுதி செய்தனர் என்றும், இன்னும் சில வாரங்களோ அல்லது ஓரிரு மாதங்களோதான் அவர் உயிருடன் இருப்பார் என்றும் அந்த சுற்றறிக்கை செய்தி சொன்னது.

அரை ஆண்டு கணக்கு முடித்து  தணிக்கை செய்து மேலிடம் அனுப்பும் மும்முரத்தில் அவரவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த வேலை நேரத்தில் இந்த செய்தி அனைவரையும் ஸ்தம்பிக்க செய்துவிட்டது.

சரி கனத்த இதயத்துடன் மேலும் தொடர்கையில், அந்த அறிக்கை சொன்ன ஒரு தகவல் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக அமைந்தது.

முதல் பத்தியில் குறிப்பிட்டதுபோல் , நாளை நீங்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி எந்த ஆடை வேண்டுமானாலும் உடுத்திக்கொண்டு அலுவலகம்  வரலாம்(அலுவலகத்திற்கென்ற DRESS CODE கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய சட்டம் உள்ளது) அதே சமயத்தில் உங்களிடம் இருப்பதிலேயே அதிக வண்ணம் கொண்ட(bright) ஆடைகளை அணிந்து வருவதன் மூலம் துயரத்தில் இருக்கும் அந்த குடும்பத்தினர், கணவன் மனைவி பிள்ளைகளாய் வாழ் நாளின் கடைசி குடும்ப  சுற்றுலா ஒன்று சென்றுவரவும் அந்த நினைவுகளை அவர்களின் மனதில் என்றென்றும் ஒரு இனிய நினைவாக அமையும் பொருட்டு நீங்கள் அனைவரும் மனவுவந்து உதாரத்துவமாக உதவுங்கள் என்றும் அறிக்கை சொன்னது.

(எப்போதெல்லாம்  இதுபோன்று DRESS DOWN கடைபிடிக்கப்படுகிறதோ அப்பபோதெல்லாம் வசூலிக்கப்படும் நன்கொடைகளை ஏதேனும் ஒரு சமூக சேவை - தொண்டு நிறுவனத்திற்கு அளிப்பது வழக்கம்)

இதில் வண்ண ஆடைகள் எதற்கென்றால் நாம் அந்த குடும்பத்தின் சோகத்தில் பங்குகொண்டாலும் நம் உதவி, நாம் மனமுவந்துதான் செய்கின்றோம் அவர்களது இந்த ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு இன்ப சுற்றுலா சென்றுவர மனப்பூர்வமாக உதவுகின்றோம் என்பதை வெளிப்படுத்தவே என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று காலை பல நூறு ஊழியர்கள் பணிபுரியும் அந்த அலுவலக அறைகள் வானவில்லின் அத்தனை நிறங்களிலும்  நிரம்பி இருந்த காட்சி சக ஊழியரின் துயரத்தில் தாங்களும் பங்குகொள்கிறோம்  என்ற சிந்தையின் வெளிப்பாடாகவும் தங்களால் அந்த குடும்பத்திற்கு எதோ ஒரு விதத்தில் ஆறுதலாக இருக்கின்றோம் என்ற மன நிறைவையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

காலை சுமார் 11.00 மணியளவில் நிர்வாகத்தின் காரியதரிசி  ஒவ்வொரு மேசையாக வந்து தான் வைத்திருந்த ஒரு டப்பாவில் நன்கொடைகளை சேகரித்துக்கொண்டு வந்தார், ஏழு  தளங்கள் கொண்ட  அந்த அலுவலகத்தின் இரண்டு தளங்களை கடக்குமுன்னே, கொண்டு வந்த டப்பா நிறைந்து வழிந்ததால் தொடர்ந்து ஒரு சிறிய கூடையில் அந்த நன்கொடைகள் சேகரிக்கப்பட்டது.

வழக்கமாக சில்லறை காசுகளை கொடுக்கும் ஊழியர்கள், இன்று  தாராளமாக உதவி இருந்தது, என் மேசைக்கு வந்த கூடையை  பார்த்து தெரிந்து  மகிழ்ந்தேன்.

இதுபோன்ற மனிதாபிமான செயல்களால்தான் மனிதம் இன்னும் தனது புனிதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என நினைத்து அந்த நோயாளிக்கும் அவர்தம் குடும்பத்திற்காகவும் இறைவனை வேண்டிக்கொண்டேன்.

பொதுவாக வானவில் என்பதை மகிழ்ச்சியின் அடையாளமாக உருவாக படுத்தித்தான் அறிந்திருக்கின்றோம் ஆனால் - இன்று  இந்த வானவில் உள்ளத்தை குத்தி கிழிக்கும் ஒரு கூரிய அம்பு தொடுக்கப்பட்ட வில்லாகவே எனக்கு பட்டது.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. மனதைத் தொட்ட பகிர்வு. எனது பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      வருகைக்கும் தங்கள் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. படித்தபோது ஒரு புறம் சோகமாகவும் மறுபுறம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. //பொதுவாக வானவில் என்பதை மகிழ்ச்சியின் அடையாளமாக உருவாக படுத்தித்தான் அறிந்திருக்கின்றோம் ஆனால் - இன்று இந்த வானவில் உள்ளத்தை குத்தி கிழிக்கும் ஒரு கூரிய அம்பு தொடுக்கப்பட்ட வில்லாகவே எனக்கு பட்டது.//

    பதிவை படித்து முடித்ததும் எனக்கும் இப்படித்தான் தோன்றியது.
    நலம் பெருகட்டும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்தில்குமார்,

      நீண்ட நாட்கள் கழித்து பதிவின் பக்கம் வந்து தங்கள் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

      நலம் பெருகட்டும் உங்களுக்கும்.

      கோ

      நீக்கு