பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 அக்டோபர், 2016

மீண்டும் சந்திப்போம்!!

இரட்டிப்பு மகிழ்ச்சி !!

நண்பர்களே,

நமக்கு யாரையாவது பிடித்திருந்தாலோ, அல்லது அவர்களை பற்றி யார் மூலமோ, பத்திரிகை, தொலைகாட்சி, ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தாலோ   நமக்கு அவர்களோடு பேசவேண்டும் பழகவேண்டும்   என்று வாஞ்சை மிகுந்திருக்கும்.

அதே சமயத்தில் எப்படி போய் பேசுவது,  அவர்களை எப்படி தொடர்புகொள்வது அவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள், என்று எண்ணி நமது  வாஞ்சையை உள்ளத்திலே அடக்கிக்கொள்வதுண்டு.

இத்தனைக்கும் நாம் அடிக்கடி பார்பவர்களாகவோ அவர்கள் யார் என்பதை அறிந்தவர்களாகவோகூட இருக்கலாம், எனினும் பேச தயங்குவோம்.

இன்னும் ஒருபடிமேலேபோய் அவர்களை பற்றிய நினைப்புகள் அடிக்கடி நமது மனதில் வந்து போவதும் உண்டு.

இப்படித்தான் சில வருடங்களாக நான் அறிந்திருந்த ஒருவரை குறித்து என் மனதில் அடிக்கடி நினைவுகள் எழுவதுண்டு.

அவர்களை நான் அறிந்திருந்த அளவிற்கு அவர்களுக்கு என்னைப்பற்றி ஒன்றும் தெரியாதுதான், எனினும் அவர்களிடம் நான் பேசவேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதை எப்போதும் ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்புவரை அவர்களை தினமும் தூரத்தில் இருந்து பார்ப்பதும் அவர்கள் பார்க்கிறார்களா என்றுகூட தெரியாதபோதும் அவர்களுக்காக ஒரு புன்னகையை வீசுவதுமாக இருந்தேன்.

ஏனோ சில மாதங்களாக அவர்களை பார்க்கமுடிவதில்லை. என்றாலும் அவர்களின் நினைவுகள் மட்டும் அவ்வப்போது என் மனதிறையில் நிழலாடுவது வழக்கம்.

நேற்று காலையில்கூட  அவர்களை குறித்த நினைவு என்னுள் தோன்றியது; அவர்கள் எப்படி இருக்கின்றார்களோ, என்ன செய்துகொண்டிருக்கின்றார்களோ போன்ற சிந்தனைகளின் துளிகள் என் மனதில் தூறலாக வீசிக்கொண்டுதான் இருந்தது.

வேலை நேரத்திலும் சம்பந்தமே இல்லாத சூழ்நிலையிலும்  அவர்களை குறித்த எண்ணம் மின்னலாய் அவ்வப்போது வந்து வெளிச்சம் வீசிவிட்டு போனது.

வேலை முடித்து வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன்.  நான் வரிசைப்படி இருபதாவது ஆளாக நின்று கொண்டிருந்தேன், எனக்கு பின்னால் வரிசை இன்னும் நீண்டுகொண்டுதான் இருந்தது.

சிறிது நேரத்தில் வந்த ஒரு பேருந்து எனக்கானதல்ல, எனினும் எனக்கு முன்னே இருந்த அத்தனை பேர்களும் அந்த பேருந்தில் ஏறினார்கள்.

எனக்கு பின்னால் நிற்பவர்கள் யாருக்கேனும் அந்த பேருந்து சேவை தேவைப்படும்  என்றெண்ணி வரிசையில் இருந்து ஒதுங்கி அவர்களுக்கு வழிவிட்டேன், பேருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிச்சென்றது.

இப்போது வரிசையில் முதல் ஆள் நான்.

பின்னால்  வரிசையில் இருந்தவர்கள் முன்னுக்கு வர ஆரம்பித்தனர். 

சரி நமக்கு பின்னால் இன்னுமெத்தனைபேர்கள் இருக்கின்றார்கள் என பார்ப்பதற்காக திரும்பினேன்.

என்ன ஆச்சரியம்!!, என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.

பலமாதங்களாக பார்க்க முடியாமல் போயிருந்த, அதே சமயத்தில் அவர்களிடம் எப்படியாவது பேசவேண்டும் என்று வாஞ்சையோடு காத்திருந்த ,இன்றுகூட காலைமுதல் என் மனத்திரையில் தோன்றிக்கொண்டிருந்த "அவர்கள்"தான் எனக்கு அடுத்தபடியாக நின்றிருந்தனர்.

ஆச்சரியமும் மகிழ்ச்சியும் இரண்டற கலந்த உணர்வில் என்ன செய்வதென்று திக்குமுக்காடி, பின்னர் ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு அவர்களை பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு, " மாலை வணக்கம் எப்படி இருக்கின்றீர்கள்? நீண்ட நாட்களாக உங்களை நான் அறிவேன், எனினும் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஏன் கடந்த சில மாதங்களாக உங்களை எங்கும் காணவில்லை?  உங்களை மீண்டும் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி"... என நான் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தேன்.

ஆனால் அவர்களோ என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை, மாறாக ஒரே ஒரு  முறை மட்டும் என்னை பார்த்து புன்னகித்தார்கள், அதுவே எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

இப்போது எனக்கான பேருந்து வந்தது, அதற்காகத்தான் அவர்களும் காத்திருந்தனர் என்று எனக்கு தெரியும்.

பேருந்தில் வரிசைப்படி நான் தான் முதலில் ஏறி இருக்கவேண்டும், மாறாக அவர்கள் முதலில் ஏறட்டும் என்று வழிவிட்டு ஒதுங்கி நின்றேன்.

அவர்களும் நன்றி சொல்லும் விதமாக என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேருந்தில் ஏறி முதல்  இருக்கையில்  அமர்ந்துகொண்டார்கள்  .

அவர்களை  தொடர்ந்து ஏறிய என்னை பார்த்து அருகில் அமருமாறு இருக்கையை காட்டினர்.

என் மகிழ்ச்சி இப்போது இரட்டிப்பாக குதூகலத்துடன்  அவர்களுக்கருகில் இருந்த இருக்கையில்அமர்ந்துகொண்டேன்.

பயணம் முழுவதும் அவர்களிடம் நான் பல  விஷயங்களை குறித்து பேசிக்கொண்டே வந்தேன், அவர்களின் பதில்கள் அளவாகவே இருந்தன, எனினும் அனைத்து பதில்களும் புன்னகை பூச்சுடனே இருந்தன. 

நாற்பது நிமிடங்கள் கழித்து அவர்கள்  இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும், என் கைகளை நட்புடன் குலுக்கிவிட்டு, போய்  வருகிறோம், மீண்டும் சந்திப்போம் என உணர்த்திவிட்டு கீழே இறங்கியபின்னும் கைகளை அசைத்துவிட்டு சென்றார்கள்.

அதன் பிறகு என் மகிழ்ச்சியை  நான் என்னவென்று சொல்வது, நேற்று இரவு முழுவதும் அவர்களின் நினைப்பும் அவர்களோடு  இணைந்து பயணித்த பேருந்து பயண மகிழ்வும்  என்னை அதிகாலைவரை இனிய நினைவுகளால் மூடி மறைத்துக்கொண்டிருந்தது.

யார் அவர்கள்?

சுமார் 60 வயதை கடந்தவர்கள், பிறவியிலேயே பேசும் திறனையும் கேட்கும் திறனையும் இழந்தவர்களாயினும் கணவனும் மனைவியுமாக இணைந்துஇவர்களைப்போன்றே பிறவியிலேயே  பேச்சு திறனையும் கேட்கும் திறனையும்  இழந்த, ஒரு  குழந்தைகள் காப்பகத்தில் ஊதியமில்லா ஊழியராக சேவை செய்பவர்கள்.

அவர்களுடனான என் சம்பாஷணைகள் பலவும் எனக்கு தெரிந்த பிரிட்டிஷ் சைகை மொழி (BRITISH SIGN LANGUAGE -ALPHABETS)மூலம்  நடந்தது.

இவர்களை குறித்து , இவர்கள் மூலம் உதவிபெற்று கல்வி பயின்று என்னுடன் பணிபுரிந்த மாற்று திறனாளி நண்பர் மூலம் பல வருடங்களுக்கு முன் அறிந்திருந்தேன் என்பது கூடுதல் தகவல்.

வாழ்க!இந்த இரண்டு தொண்டுள்ளங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ



6 கருத்துகள்:

  1. வித்தியாசமான அனுபவம் ஐயா. பெருமனது படைத்தவர்களின் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா. உங்களின் வாழ்த்து அவர்களுக்கு நலம் சேர்க்கும் என நம்புகிறேன்.

      கோ

      நீக்கு
  2. நானும் வாழ்த்துகிறேன் நண்பரே அந்த நல்ல உள்ளங்களை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பா . உங்களின் வாழ்த்து அவர்களைபோய்ச்சேரும் என நம்புகிறேன்.

      கோ

      நீக்கு
  3. a novel experience ji

    atleast now people would try moving with handicapped people...

    பதிலளிநீக்கு