பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

அதான் இது!... "செந்தில்"அதிரசம் !!

 Two-in-One!!

நண்பர்களே,

இனிப்பு என்ற சொல்லுக்கே நம் உமிழ்நீரை வழியவைக்கும் மகத்துவம் உண்டு, அதிலும் பண்டிகை காலங்களில் செய்யப்படும் விதவிதமான இனிப்புகளை நினைத்தாலே இனிக்கும் என்று ஜொள்ளவும் , அதாவது  சொல்லவும் வேண்டுமோ?

நம் கலாச்சாரத்தோடு ஊன்றிப்போன விதவிதமான விழாக்களின்போது விழாவிற்கு ஏற்றாற்போல  இனிப்பு பலகாரங்களை செய்து மற்றவர்களோடு பகிர்ந்து சாப்பிடும் பாரம்பரியம் கொண்டவர்கள் நாம் என்றால் அது மிகை அல்ல. 

பண்டிகை என்றாலே இதுதான் பண்டிகை என்று ஆளாளுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கும்.

இருந்தாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் அதிகமான உற்சகாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் பண்டிகைகளில் பிரதானமான இடம் வகிக்கும் பண்டிகை எது என்றால் அது இதுதான் என்று சொல்லவைக்கும் பண்டிகை "தீபாவளி".

இந்த பண்டிகையின்போது உலாவரும் பலவிதமான இனிப்புவகைகளுள், நம் தமிழகத்தில் தலைமை அந்தஸ்த்து வகிக்கும் ஒரு இனிப்பு "அதிரசம்".

ஆஹா.... என்ன சொல்றது..போங்க....அதன் சுவையே  தனி தான்.

அதன் தயாரிப்பு பக்குவம் எல்லோருக்கும் கைவந்த கலை என்று சொல்ல முடியாது. அதற்கென்று பல வருட செய்முறை பயிற்சி இல்லாமல் இந்த பலகாரத்தை அதற்கே உண்டான பக்குவத்துடன் செய்து முடிப்பது என்பது சிரமமான ஒன்றுதான்.

அதிலும் வெல்லத்திலும், சர்க்கரையிலும் தனித்தகனியாக  செய்யப்படும் இந்த பலகாரம், விழாவிற்கு இன்னும் கொஞ்சம் மெருகேற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி வெல்லம் கலந்து உருவாக்கும் அதிரசங்கள் எந்த அளவிற்கு சுவையோ அதேபோல சர்க்கரை அதிரசங்களும் தமக்கே உண்டான ஒரு மாறுபட்ட சுவையுடன் நம் நாவையும் மனதையும் மகிழூட்டும்.

இப்படி விழா காலங்களில் முன்னதாகவே  பிரத்தியேகமாக விடுமுறை எடுத்து இதுபோன்ற இனிப்புவகைகளை அடிப்படை செய்முறையான, நெல்லில் இருந்து உமியை பிரித்து,  அரிசியை கழுவி ஊற வைத்து , பின்னர் பக்குவமாக நிழலில் காயவைத்து, கைக்குத்தலாக இடித்து மாவாக்குவார்கள்.

பிறகு வெல்லப்பாகோடு, சாப்பிடுபவர்களை சொக்குபொடி போட்டாற்போல தம் பக்கம் இழுக்க வைக்க  கொஞ்சம் சுக்குப்பொடியை போட்டு , இளம் சூட்டில் கம்பி பதம் வரும்வரை காய்ச்சி  வடிகட்டி பின்னர் அதில் இடித்து வைத்திருக்கும் அரிசிமாவையும் சிறிது உப்பையும் சேர்த்து சூடு ஆறுவதற்குள் கிளறுவார்கள்.

பின்னர் ஆறவைத்து , பாத்திரத்தை ஒரு துணிகொண்டு மூடி சில மணி நேரம் அல்லது அடுத்த நாள் வரை காத்திருந்து பின்னர் எண்ணெய்யிலோ அல்லது நெய்யிலோ வட்டவட்டமாக தட்டி பொன்னிறம் வரும்வரை பொரித்தெடுத்து , உபரி எண்ணெய்யை   பிழிந்து சிறிது நேரம் ஆற வைத்து, பின்னர் பாத்திரத்திலோ  பெரிய டப்பாக்களிலோ அடுக்கி வைப்பார்கள். 

அப்பாடா.... இந்த வெல்ல அதிரசம் செய்து முடிப்பதற்குள்  போதும்போதும் என்றாகிவிடும்.  இருந்தாலும், தீபாவளினா சும்மாவா?

அடுத்து சர்க்கரை அதிரசம்.

இதற்கும் மேற்சொன்ன அனைத்து அடிப்படை வேலைகளையும்  செய்து, வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையை காய்ச்சி, சர்க்கரை அதிரசம் செய்வார்கள்.

இப்படி இந்த இரண்டு வகை அதிரசங்களையும் செய்து முடிப்பதற்கு, செய்யப்படும் அளவை பொறுத்து இரண்டு முதல் நான்கு நாட்கள்வரை ஆகுமாம்.

நவீன யுகத்தில், வேலைகளை எளிதாக்க எல்லாவற்றிக்கும் எந்திரங்கள் வந்திருப்பதுபோல இந்த அதிரசம் தயாரிக்க எந்திரங்கள் வந்திருக்கின்றனவா என தெரியவில்லை.

அப்படி எந்திரம் வந்தாலும் கையால் செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் சுவையும் கிட்டுமா என்பது கேள்விக்குறிய  ஒன்றுதான்.

இயந்திரம்  வரவில்லை என்றாலும், இரண்டுவகையான அதிரசங்களையும் செய்யும் நேரம் பாதியாக குறைத்திருப்பதற்கு இப்போது சந்தையில் கிடைக்கும் மூலப்பொருளான வெல்லத்திற்கு "நன்றி" சொல்ல வேண்டும்.

அதாவது சமீபத்தில் கேட்ட தொலைக்காட்சி  செய்திமூலம் , வெல்லம் அதிக இனிப்புடனும் குறைந்த உற்பத்தி செலவுடனும்   உற்பத்தியாளர்களுக்கு அதிக லாபமும்  உண்டாகும் வகையில்  , ஒருசிலர்(??), வெல்லத்தில் பலவிதமான ரசாயன பொருட்களை சேர்ப்பதுடன், விலை குறைந்த சர்க்கரையை நேரடியாக கலந்து , அதிக இனிப்புள்ள வெல்லம் எனும் தரத்தில்  சந்தையில் விற்பனைக்கு விட்டிருப்பதாக செய்தி அறிந்தேன்.

அடப்பாவமே,   எதில்தான் கலப்படம் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல், காலா காலமாக செய்து சுவைத்து மகிழக்கூடிய   இனிப்புகளிலும் இதுபோன்ற கலப்படங்கள் நிறைந்திருந்தால் நாம் எதைத்தான் நம்புவது.

இதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இனி தாய்மார்கள் வெல்லம் அதிரசம், சர்க்கரை அதிரசம் என்று தனித்தனியாக செய்து நேரத்தை விரயமாக்காமல், இதுபோன்ற "கலப்பட" வெல்லத்தால் ஒரேஒருவகை அதிரசம் செய்து அதை TWO-IN_ONE  அதிரசமாக பரிமாறி உண்டு மகிழலாம்.

இனி ஒரிஜினல் அசல் வெல்லத்தால் செய்யப்பட்ட அதிரசம் என்ற பெயரில்  இவை  விற்பனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யாராவது வெல்ல அதிரசம் இதோ  இங்கே இருக்கு , சர்க்கரை அதிரசம் எங்கே என்று கேட்டால் "அதான் இது " என்று செந்தில் ஸ்டைலில்  தயக்கமின்றி பதில்கூறலாம்.

நல்ல அதிரசம் சாப்பிட அதிர்ஷ்ட்டம் இருந்தால்தான் முடியுமோ என்னவோ?

அனைவருக்கும் கலப்படம் இல்லாத இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

  1. முன்கூட்டியே தீபாவளி வந்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஐயா,

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிவில் கண்ட two-in-one பலகாரம் தயாரா?

    கோ

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நண்பரே அதிரசம் மட்டுமல்ல முருக்கும் நான் விரும்பி சாப்பிடுவேன்
    தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே, முருக்கையும் சேர்த்து சுவைத்து மகிழுங்கள்.

      கோ

      நீக்கு