பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 மே, 2016

தொலை(ந்துபோன)பேசி எண்கள்.

மீண்டும் தொடர்பில்...

நண்பர்களே,

பள்ளி, கல்லூரியில் பல வருடங்கள் ஒன்றாக இணைந்து படித்திருந்தாலும், படிப்பிற்கு பின்னர், அவரவர் பாதையில் பயணிக்க நேரும்போது  நண்பர்களை பிரிந்து செல்வது வாடிக்கை.
இப்படி பிரிந்து சென்ற நண்பர்களுள் பெரும்பான்மையானவர்களை , நம் வாழ்வில் மீண்டும் சந்திப்பது சாத்தியமில்லாததாகிபோகிறது.

அதிலும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும்கூட வந்து நம்மோடு பயிலும் மாணவர்கள், படிப்பு முடிந்து தத்தம் இடங்களுக்கு திரும்பி சென்றவுடன் அவர்களை தொடர்பு கொள்வது கொஞ்சம் சிரமம்தான்.

படிக்கின்ற காலங்களில் இப்போதிருப்பதுபோல் நவீன தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம் பெருகி இல்லாத கால கட்டங்களில் அதிகபட்சமாக, ஆட்டோகிராப் என்று ஒரு சிறிய குறிப்பு புத்தகத்தில் நம்மை பற்றி நண்பர்கள் எழுதிகொடுத்த விடயங்கள் அடங்கிய குறிப்புகளை தவிர வேறொன்றும் இல்லாமல் இருந்தது.

அப்படியே வீட்டு விலாசம் , லேண்ட்லைன் தொலை பேசி எண்களை கொடுத்திருந்தாலும் காலபோக்கில் அந்த எண்கள் மாறிபோயிருக்கவும் அல்லது அவர்களது குடியிருப்பு பல காரணங்களுக்காக  புலம் பெயர்ந்தும் போய்  இருக்கலாம்.

இப்படி பட்ட சூழ்நிலையிலும், அவரவர்களின் சொந்த வாழ்க்கை மாற்றங்கள், வேலை, குடும்பம், கடமைகள் , வயது போன்றவற்றின் நிமித்தம் கல்லூரி நண்பர்களை தொடர்பில் வைத்து இருப்பது சாத்தியமல்ல.

அதே சமயத்தில் இன்றைய நவீன அறிவியல் சாதனங்களின் விளைவால் முக நூல், ட்விட்டர், கூகுல் போன்ற வசதிகள் இருந்தாலும் அவற்றில் தங்கள் தகவல்களை பதிந்துவைத்தும் , அவற்றை சிரத்தையோடு பின்பற்றுபவர்களும் தொடர்பவர்களும் எத்தனைபேர்?

அப்படியே, சிரமத்துடன் கண்டு பிடிக்கலாம் என்று நேரம் செலவழித்தாலும் நாம் தேடும் நபரை கண்டுபிடிப்பது அத்தனை எளிதல்ல.

நிலைமை இப்படி இருக்க:  சில  வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்து சென்றிருந்தபோது , எடின்பர்க் - வேவர்லி (சொல்லும்போது "எடின்ப்ரா" என்று சொல்லவேண்டும்எனும் ரயில் நிலையத்தில்   எனக்கு எதிர் திசையில் 11 வது பிளாட்பாரத்தில் அவசர அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் எனக்கு தெரிந்தவர் போல மனதில் பட்டது, கல்லூரியில் நான் படித்த சமகாலத்தில்  அதே கல்லூரியில் வேறு துறையில் பயின்ற எனக்கு மிகவும் இனிய நண்பனாக விளங்கியவர்.

ரயிலும் வந்துவிட்டது, அந்த ரயிலில்தான் அவர் பயணம் செய்யவேண்டி இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டே, நீங்கள் .....ரவிராமன் தானே? நான்தான் "கோ" ... என சொல்லி முடிப்பதற்குள் என்னை அடையாளம் கண்டுகொண்ட அந்த மனிதர் என்னை கட்டி தழுவி பேச வார்த்தைகள் இன்றி , கையில் வைத்திருந்த பயண  பெட்டியை கீழே வைத்துவிட்டு என் இரண்டு தோள்களையும் அழுத்தி பிடித்து , கண்கள் பனிக்க , "கோ எப்படி இருக்கின்றீர்கள்?  என்னை சரியாக அடையாளம் கண்டுகொண்டீர்களே, ஆச்சரியமாக இருக்கின்றது எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன நாம் சந்தித்து....."

பேசி கொண்டிருக்கும்போதே ரயில் புறப்படும் நேரம் நெருங்கியது....  தான் ஜெர்மனியில் இருப்பதாகவும் இங்கே கம்பனி விஷயமாக ஒருவாரம் இருக்கபோவதாகவும் இப்போது , ஸ்காட்லாந்திலுள்ள அபர்டீன் எனும்  வேறு ஊருக்கு போவதாகவும் சொல்லிகொண்டிருந்தார்.

பிறகு  அவர் என் கைகளை பிடித்து அழுத்தி குலுக்கிவிட்ட சமயத்தில் , மீண்டும் எப்போது சந்திப்போம்.. சரி என் தொலைபேசி எண்ணை குறித்துகொள்ளுங்கள்  என தனது எண்களை சொல்ல அந்த நேரத்தில் பேப்பரிலோ அல்லது  என் தொலைபேசியிலோ அவர் எண்களை குறிப்பெடுக்க அவகாசமில்லாததால், என் உள்ளங்கையில் அவர் சொல்ல சொல்ல அவசரத்தில் எழுதிக்கொண்டே அவருக்கு விடையளித்தேன் - அது ஜெர்மனி நம்பர். கண்டிப்பாக தொடர்புகொள்ளுங்கள், நிறைய பேசணும் என  கூறிக்கொண்டே ரயில் ஏறி உள்ளே சென்றுவிட்டார்.

இங்கே ரயில் நிலையத்தில் அறிவிப்பு சத்தங்கள் அதிகமாக இருப்பதால் அதற்கு பிறகு நடந்தவற்றை அப்பால - நாளை சொல்கிறேன்.

அதுவரை   தொடர்பு எல்லைக்கு அப்பால போகாம இப்பாலயே  இருங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. நெகிழ்ச்சியாக இருந்தது உங்களது சந்திப்பு. தொடர்பு எல்லையிலேயே இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும், தொடர்பில் காத்திருப்பதற்கும் மிக்க நன்றிகள்.

    அடுத்த பாகம் விரைவில்.

    நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  3. தங்கள் சந்திப்பு மகிழ்ச்சியில் நாங்களும்,,,,, அவரைத் தாங்கள் தொடர்புகொண்டீர்கள் தானே,,,
    நன்றி,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே,

      பிறரது மகிழ்ச்சியில் பங்குபெறுவது நல்லதுதான். அடுத்த பதிவில் தெரியும் எங்கள் சந்திப்பு.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. உலகம் சிறியது என்பது பலசமயங்களில் இப்படித்தான் தெரியவருகின்றது....தங்கள் சந்திப்பைத் தொடர்ந்து இதோ அடுத்த பகுதிக்குச் செல்கின்றோம். சத்தம் அடங்கிவிட்டதுதானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      விடுமுறை நாட்கள் சிறப்புடன் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
      ஆமாம் உலகம் சிறியது என்றாலும் உங்களை போன்ற நல்லவர்களை பார்ப்பது மிகவும் அரிது.

      அந்த சத்தம் அடங்கிவிட்டது, இனி உங்கள் சத்தம்(பின்னூட்டங்கள்) ஆரம்பிக்கட்டும்.

      வருகைக்கும் பதிவினை தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு