பின்பற்றுபவர்கள்

புதன், 11 மே, 2016

"தலை(முறை) காக்கும்"

அ(ம்மா)தர்மம் ...தாயே..!!..  

நண்பர்களே,

தர்மம் தலைகாக்கும்  என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு சொல்லபட்டுகொண்டிருக்கும் ஒரு பழமொழி.

தலை காக்கும் என்பதன் நேரடி அர்த்தம், நாம் செய்யும் எந்த தர்ம காரியங்களும் நமக்கு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை காக்கும் என்பதுவே.

தர்மம் செய்வது நல்லதுதான்.  இந்த தர்மத்திற்கு அளவுகோலாக  சிலர் சொல்வது, "தனக்கு மிஞ்சிதான் தானம் தர்மம்" என்று .

அப்படி தனக்கு மிஞ்சியதை தானமாக கொடுப்பது என்பது ஒருபோதும் தர்மம் ஆகாது என்பது என்னுடைய கருத்து.

தமக்கு மிஞ்சி எது எவ்வளவு இருந்தாலும் அது பிறர்க்குரியது எனும்போது அந்த பிறர்க்குரியதை பிறரிடம் கொடுப்பது எப்படி தர்மமாகும்.

இருப்பது தம் தேவைக்கே போதாது என்றபோதும் பிரதி பலன் எதிர்பாராமல் அடுத்தவருக்கு கொடுத்து அல்லது அடுத்தவரோடு பகிர்ந்து  மகிழ்வதே தர்மம்.

அப்படி தர்மம் செய்ய தருணமும் திராணியும் இருந்தபோதும் தர்மம் செய்யாமல் இருப்பது அதர்மம்.

சிறு வயதில் பள்ளிகூடத்தில் சொல்லிகொடுத்த நன்னெறி - நல்லொழுக்க பாடங்களின்போது இடையில் சில நீதி கதைகளை கேட்டதுண்டு.

அவற்றுள் ஒன்று:

வயது முதிர்ந்த ஒரு விதவை தாய் அவர்களுக்கு ஒரு  மகன்.

அந்த தாய் தன்  முதிர் வயதிலும் தன்னால் ஆன சிறு வேலைகள் செய்து தன் மகனையும் பராமரித்து பிழைப்பு நடத்திவந்தாள். தினமும் ஒருவேளை அல்லது இரண்டு வேளைகள் மட்டுமே ,அதுவும் அரை வயிறு நிரம்பும் அளவிற்கே அவரது வருமானம் இருந்தது.

பல நாட்கள் அருகில் இருக்கும் வயல் வெளிகளில் கூலி வேலை செய்தும் அங்கே பயிர் நிலங்களில் அறுவடைக்கு பின் சிதறி இருக்கும் தானியங்களை சேகரித்தும் இருவரும் தங்கள் ஜீவிதத்தை க(ந)டத்திவந்தனர். 

திடீரென நாடு முழுவதும் பஞ்சமும் வறுமையும் ஆட்கொண்டது.  விளை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன, கால் நடைகள் நீரும் உணவும் இன்றி மடிந்து போயின.  மக்கள் எல்லோரும் பிழைப்புத்தேடி வேறிடம் சென்று விட்டனர்.

நாட்கள் செல்ல செல்ல தன் சேமிப்பு தானியங்கள் குறைந்துபோக, அன்றைக்கு தனக்கும் தன் மகனுக்கும் மட்டுமே ஆளுக்கு ஒரு ரொட்டி தயாரிக்க இருந்த மாவை எடுத்து ரொட்டி தயாரித்துகொண்டிருந்த வேளையில், யாரோ ஒரு வறியவர்,இந்த மூதாட்டியின் வாசல் வந்து பசிக்கிறது சாப்பிட ஏதேனும் கிடைக்குமா என வினவுகிறார்.

வந்தவர்  முன் பின் தெரியாதவராக இருந்தபோதிலும், தமக்கும் தன் மகனுக்கும் இருக்ககூடிய இந்த இரண்டு ரொட்டிகள் தவிர வேறு எதுவும் இல்லாதபோதும் தங்களது ஜீவன் பிரியும் முன் கடைசியாக தாங்கள் சாப்பிடபோகும் அந்த இரண்டு ரொட்டிகளை தவிர வேறு எதுவும் இல்லாதபோதும், வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல், பசியுடனும் ஏக்கத்துடனும்  அம்மாவை பார்த்துகொண்டிருக்கும் தன் மகனை அரவணைத்தபடியே, தாம் செய்துகொண்டிருந்த அந்த ரொட்டிகளை வந்தவரிடம் சாப்பிட கொடுத்துவிட்டார்.

சாப்பிட்டவர் கேட்டார் நீங்கள் சாப்பிடவில்லையா என.

அப்போதுதான் அந்த மூதாட்டி சொன்னார் இல்லை ஐயா,நானும் என் மகனும் கடைசியாக சாப்பிட்டுவிட்டு சாக இருந்தோம், பரவாயில்லை எப்படியும் சாகபோகும் எங்களுக்கு இந்த ரொட்டிகள் என்ன செய்ய  போகிறது, நீங்களும் பசியாய் இருந்ததாக சொன்னீர்கள்.

வந்திருப்பவர் யார் என்றுகூட தெரியாத சூழ்நிலையில் , பசி என்று கேட்ட மாத்திரத்தில் தங்களுக்கென்று கொஞ்சமும் எடுத்துகொள்லாமல் இருந்த அத்தனையையும் கொடுத்து தம் பசி ஆற்றிய அந்த தாயுள்ளத்தையும் அந்த சிறுவனின் தர்ம சிந்தையையும் வந்தவர் வெகுவாக பாராட்டிவிட்டு அந்த இடத்திலிருந்து கனத்த இதயத்துடன் கடந்து செல்கிறார்.

வாசலில் நின்றுகொண்டு தங்கள் கண்களில் இருந்து மறையும் வரை அந்த வறியவர் சென்ற வழியையே பார்த்துகொண்டிருந்த அந்த தாயும் மகனும், வீட்டிற்கு உள்ளே வந்து தங்களது குடிசையின் கதவை சார்த்திவிட்டு , குடத்தின் அடியில் இருந்த சொற்ப  தண்ணீரை ஆளுக்கொரு முடக்கு குடிக்க குடத்தில் கையை விட்டவருக்கு பெருத்த ஆச்சரியம்.!

குடம் முழுவதும் தூய குடிநீராலும் அருகிலிருந்த மாவு பானையில் கழுத்துவரை உசித கோதுமை மாவும் , அதனருகில் இருந்த எண்ணெய் கலயத்தில், வழியும் மட்டும் எண்ணெயும் இருந்தது கண்டு  ஆச்சரியத்தாலும் அதிர்ச்சியாலும் உறைந்து போய்விட்டனர் அந்த தாயும் மகனும்.

மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் மேலோங்க , தம் வீட்டுக்கு வந்தவரை ஓடி சென்று அழைத்து அவருக்கு இன்னும் கொஞ்சம் சாப்பிட கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கதவை  திறந்துகொண்டு அவர் சென்ற பாதையில் தன் மகனை அனுப்பி அவரை அழைத்து வர சொன்னார் அந்த மூதாட்டி.

ஆனால் தன் மகன் எத்தனை தூரம் சென்றும் அவரை காணாமல் திரும்பினான்.

திரும்பிய மகனிடம் சொல்லி அந்த ஊரில் எஞ்சி உள்ள அனைவரையும் தன் குடிசைக்கு வர வழைத்து அவரவர்களுக்கு தமது பானையிலும் , கலயத்திலும் இருக்கும் மாவையும் எண்ணெய்யையும் தண்ணீரையும் கொடுத்து உதவிய நேரத்தில் அவர்களுக்கு இன்னுமொரு அதிசயம் காத்திருந்தது.

அது, அந்த ஊர் மக்கள் எடுக்க எடுக்க குறையாமல் மாவும் எண்ணெயும் தண்ணீரும் பெருகிக்கொண்டே இருந்தது, அவர்கள் தலை முறை தலைமுறையாக மற்றவர்களோடு சேர்ந்து அந்த ஆசீர்வாதத்தை அனுபவித்தனராம்..

நண்பர்களே,

இது உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவம் என மறை நூலில்  விவரிக்கப்பட்டதாக  பள்ளிப்பருவத்தில் சொல்ல கேட்டிருக்கின்றேன்.

தமக்குள்ளதையும் பிறருக்கு கொடுத்துதவும் தர்மம் தலைகாக்கும் என்பது ஆபத்தில் இருக்கும் நமக்கு மட்டுமல்லாது நம் தலைமுறையையே காக்கும் என்பதுதான் இதன் உண்மையான உட்பொருளும் நியதியும்.

இந்த காலத்தில் இதுபோன்றதொரு தர்மத்தை பார்க்க முடியாது செய்யவும் முடியாது என்பது நடைமுறை நிதர்சனமானாலும் முடிந்தவரை மற்றவர்களுக்கு பிரதி பலன் எதிர்பாராமல் உதவுவோம்.

அப்படி செய்வது நம்மைமட்டுமின்றி நம் சந்ததியினரையும் காக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எம்பதற்கு நம் முன்னோர்கள் செய்த தர்மத்தின் விளைவாக இந்த அளவிற்கு  சுகமாக வாழும் நாமே நல்ல சாட்சிகள் தானே?

தமக்கு தலைமுறை என்று சொல்லிக்கொள்ளவே யாரும் இல்லை என்றிருப்போர் தர்மம் செய்யலாமா?  கண்டிப்பாக செய்யலாம்; அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு - வானுறையும் தெய்வத்தில் வைக்கபடுவர். அவர்கள் இருந்தாலும் மறைந்தாலும் இந்த உலகம் அவர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டே இருக்கும் இவர்போல யாரென்று.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

 1. பலன் கருதாமல் நாம் செய்யும் உதவிகள் நிச்சயம் ஒரு நாளில் நாம் வேண்டியோ வேண்டாமலோ நமக்கு எதிர்பாராமல் திரும்ப கிடைக்கும். நல்லதொரு பதிவு

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. பேராசிரியருக்கு,

   தங்களின் பின்னூட்டம் கிடைக்கப்பெற்றிருந்தால் நிச்சயம் இங்கே இடம் பெற்றிருக்கும்? சீக்கிரம் அனுப்புங்கள்.

   கோ

   நீக்கு
 4. தமக்குள்ளதையும் பிறருக்கு கொடுத்துதவும் தர்மம் தலைகாக்கும் என்பது ஆபத்தில் இருக்கும் நமக்கு மட்டுமல்லாது நம் தலைமுறையையே காக்கும் என்பதுதான் இதன் உண்மையான உட்பொருளும் நியதியும்.

  நல்ல விளக்கம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியருக்கு,

   விளக்கத்தை அங்கீகரித்த உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் கோடி தர்மம்.

   கோ

   நீக்கு