கோடி கொடுத்தாலும்!!
நண்பர்களே,
நவீன உலக அதிசயங்களுள் ஒன்றாக இணைக்க பரிந்துரைக்கப்பட்ட எட்டு அடுக்குகளையும் 294 படிக்கட்டுகளையும் சுமார் 56 மீட்டர் உயரமும் கொண்ட உலக பிரசித்திப்பெற்ற இத்தாலியிலுள்ள பிசா நகரத்து சாய்ந்த கோபுரம் நாம் அறிந்ததே.
ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பன்னாட்டு பார்வையாளர்களை வசீகரித்து சுமார் 210 லட்சம் அந்நாட்டு பணத்தை(ஈரோ) வருமானமாக ஈட்டும் அதை நேரில் சென்று பார்த்தபோதும் அதன் மேலுள்ள 7 வெண்கல மணிகளைத்தொட்டு பார்த்தபோதும் அந்த ஏழு மணிகளும் இசையின் 7 ஸ்வரங்களை பிரதிபலிக்கும் ஓசையில் ஒலிக்கும் அதிசயத்தை கேட்டறிந்தபோதும் ஏற்பட்ட பரவசம் எழுத்தில் அடங்காது.
அதே போல சுமார் 29 முறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்ட கிழக்கைரோப்பிய நாடுகளுள் ஒன்றான ஜார்ஜியா நாட்டிலுள்ள புகழ்பெற்ற நகரமான டிபிலிஸியின் சாய்ந்த கோபுரம் என வர்ணிக்கப்படும் ஒரு மணிக்கூண்டு.
வழக்கத்திற்கு மாறான வினோத,வடிவமைப்பிலுள்ள கட்டிடமாக அமையப்பெற்றுள்ள, அதே சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் என்ற தோற்றத்தில் காணப்படும் இந்த மணிக்கூண்டைப் பார்த்தபோதும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உள்ளே இருந்த ஒரு தேவதை வெளியில் வந்து தன் கையிலுள்ள ஒரு சிறிய சுத்தியலைக்கொண்டு மணி அடிப்பதுபோலவும் அதை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கும் மாலை 7 மணிக்கும் அந்த மணிக்கூண்டின் கீழ் தளத்தினுள் மனித வாழ்க்கை சுழற்சியை ஒரு பொம்மலாட்டம் மூலம் சித்தரிக்கும் காட்சியையும் கண்டு உண்மையிலேயே அசந்துபோனேன் என்றுதான் சொல்லவேண்டும்.
அதேபோல பல முறை நேரில் சென்று பார்த்து வியந்த உலகப்புகழ்ப் பெற்ற இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலுள்ள பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான பிரமாண்டமான மணிக்கூண்டான Big Ben ஐ பார்த்து வியக்காதவர்களே இருக்க முடியாது.
அதன் மணி ஓசையை கேட்க்கும் பொருட்டு காத்திருப்போரும் மணி அடித்து முடித்ததும் கூடி இருக்கும் அத்தனைபேரும் மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் ஆஹா Big Ben ஓசையை கேட்டுவிட்டோம் என்ற பரவசத்தில் கைத்தட்டி தங்களுக்குள் மகிழ்ந்துகொள்வதும் இந்த ஓசையை தங்கள் கைப்பேசியில் பதிவு செய்த்து தங்கள் அழைப்பு மணியாக வைத்துக்கொள்வதுமாக விளங்குவது இந்த மணிக்கூண்டும் அதன் ஓசையும்.
லண்டன் வருபவர்கள் கட்டாயம் தங்களை இணைத்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களுள் இந்த Big Ben கண்டிப்பாக இடம் பெரும்.
அதேபோல கடந்த மாதம் சென்றிருந்த செக் குடியரசின் தலைநகர் பராக் நகரத்தின் பழைய டவுனில் அமைந்திருக்கும் வானியல் கடிகாரத்தை தா ங்கியிருக்கும் மணிக்கூண்டைப் பார்த்தும் பிரமித்துப்போனேன்.
உலகத்தின் மூன்றாவது பழைய வானியல் கடிகாரமாகவும் உலகில் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கும் மிகப்பழமையான வானியல் கடிகாரமாகவும் திகழும் இந்த கடிகாரம், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அழகிய மணி ஓசையை சுமார் 27 வினாடிகளுக்கு எழுப்புகிறது.
அது மட்டுமல்லாமல், அந்த நேரத்தில் அதன் உச்சியிலிருக்கும் பால்கனி போன்ற அமைப்பின் கதவுகள் திறக்கப்பட்டு அதனுள்ளே இருக்கும் 12 புனிதர்களின் உருவத்திலிருக்கும் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி செல்வதுமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கடிகாரம், அழகும் சிறப்புமாக காட் ச்சி அளிக்கின்றது.
இது 14ஆம் நூற்ராண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகவும், இந்த கடிகாரம் பாபிலோன், மற்றும் ஜெர்மனி போன்ற ஏழு நாடுகளின் நேரத்தை காட்டும் படியாகவும் அமைக்கப்பட்டிருப்பது வியப்பிற்குரியது.
சூரியன் சந்திரன் மற்ற கோள்களின் இயக்கத்தை காட்டுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பதால் இதனை வானியல் (அஸ்ட்ரோனாமிகல்) கடிகாரம் என்று அழைக்கின்றனர்.
என்னதான் உலகிலுள்ள இத்தனை கடிகாரங்களை நேரில் சென்று பார்த்து அதன் ஒலிகளை கேட்டு மகிழ்ந்து வியந்திருந்தாலும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்த பள்ளிக்கூடத்து காம்பவுண்ட் சுவரின் மூலையில் உட்புறத்திலிருந்த மரத்தில் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்த ரயில் தண்டவாளத்தின் இரண்டடி நீள கனத்த இரும்பு துண்டை சுத்தியல் போன்ற ஒரு கனத்த இரும்பு கம்பிக்கொண்டு அடிக்கும்போது கேட்ட ஒலிக்கு இவை ஏதாவது ஒன்றாவது ஈடாகுமா?
அந்த மணியின் ஓசை வாகனப்போக்குவரத்தும் மக்கள் பெருக்கமும் அதிகமில்லாத அந்தக் காலத்தில்(!!) சுமார் 2 கிலோமீட்டர்வரை கேட்க்கும்.
அதிலும் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்ததை அறிவிக்கும் அந்த நாளின் கடைசி நீள(Long Bell) மணியோசை மனதில் ஏற்படுத்திய இன்ப அதிர்வுகளும் மகிழ்ச்சி கீதமும் ஏகாந்த நாதமும் அது ஏற்படுத்திய பரவசமும் இன்றுவரை எந்த மணியோசையும் எனக்கு ஏற்படுத்தவில்லை என்று சொல்வது நெல்லின் முனையளவு அல்ல எள்ளின் முனையளவும் மிகையல்ல.
கோடி கொடுத்தாலும் ஆரம்பப்பள்ளிக்கூட மணியோசைக்கு இவை எவையேனும் ஈடாகுமா?
இத்தகு பள்ளி மணியை அடித்துப் பரவசமூட்டிய எங்கள் பள்ளி ஊழியர் ரத்தினம் அண்ணன் அவர்களுக்கு இந்த பதிவை அர்ப்பணித்து நிறைவு செய்கிறேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக