பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

அப்பாவோடு

ந்த நாட்களில் ...

நண்பர்களே, 

இந்த வலைதளத்தில் பதிவுகள் எழுத ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வாசித்துவரும் வாசகர்கள் அறிந்தவண்ணம், என் தகப்பனாரின் நினைவு நாள் இன்னும் சில மாதங்களில் என்பது நினைவிற்கு வரும்.

குடும்ப மேம்பாட்டிற்கும், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும்  அவரின்  தியாகங்களை நினைத்து நன்றி செலுத்தும் இந்த  நேரத்தில் , அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும்  அவரது 97 வது பிறந்த நாளையும் நினைவுகூருகிறேன்.

பணி  ஓய்வு பெறுமுன்னரே தமது ஐம்பத்து ஆறாம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்ட அவரின் 100 வது பிறந்த நாள் வரப்போகும் 2028 இல் தான் இந்த பதிவை எழுத நினைத்தேன்.

ஆனால் உலகம் போகும் இந்த நிலையற்ற நிச்சயமற்ற வாழ்க்கை  சுழற்சியில் என்னென்ன மாற்றங்கள் நம்மில் நிகழும் என்பதை அவதானிக்க இயலாத இந்த சூழலில், எனக்கு நினைவு இருக்கும்போதே இதை எழுதிவிடலாம்  எனக்கருதி இந்த பதிவினை தொடர்கிறேன்.

இந்தப்பபதிவில் , ஆசிரியரான என் அப்பாவுடன் பணிபுரிந்த, எனக்கு  அறிமுகமான, என் நினைவில் இன்னமும் ஞாபகப்பதிவேட்டில் படர்ந்திருக்கும் ஒரு சிலரின் பெயர்களை இங்கே குறிப்பிடுவது என் அப்பாவின் ஆன்ம மகிழ்விற்கு கூடுதல் சுவைசேர்க்கும் என்று திடமாக நம்புகின்றேன்.

அவ்வரிசையில்,  எங்கள் ஊரிலிருந்து தூரத்தில் இன்னும் கொஞ்சம் பின்னோக்கி அமைந்திருந்த ஒரு அழகிய கிராமமான கழிஞ்சூர் எனும் பகுதியிலிருந்து சைக்கிளில் வருபவர் எங்கள் வீட்டைத்  தாண்டித்தான் பள்ளிக்கு செல்லவேண்டும்.

அப்படி செல்லுகையில் என் அப்பாவை தமது சைக்கிளின் பின் இருக்கையில் அமர்த்திக்கொண்டு பயணம் செய்வார், பல வேளைகளில் திரும்பி வரும்போதும்  அழைத்து வருவார்.  ஒவ்வொரு நாளும் முழுமையான நட்ப்புடன் மன மகிழ்ச்சியுடன் மலர்ந்த முகத்துடன் அப்பாவுடன் நட்ப்புப்பாராட்டியவர், அவர் பெயர் திரு.கோவிந்த ராஜ்.

வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் சற்றேறக்குறைய இரன்டு அல்லது 3 கிலோமீட்டர் தூரம் என்பதால் மழைக்காலமல்லாத, கடும் கோடையில்லாத   பெரும்பாலான நாட்களில் அப்பா நடந்துதான் பள்ளிக்கூடம் செல்வார். என் அப்பா சைக்கிள் ஓட்டிப்பழகாதவர்.

அடுத்ததாக அதே கழிஞ்சூர் கிராமத்திலிருந்து  மற்றுமொரு ஆசிரியர், அவரும் சைக்கிளிலில் பள்ளிக்கூடம் செல்பவர், இவருக்கும் முன்னவருக்கும் சில வேளைகளில் போட்டி இருக்கும் யார் முதலில் வந்து என் அப்பாவை அழைத்து செல்வது என்பதில். இவர் முன்கூட்டியே அப்பாவிடம் சொல்லிவைத்திருப்பார் நாளை காலையில் அவர்களுக்காக காத்திருக்கும்படி. அத்தனை அன்பும் நட்ப்பும் கொண்டிருந்த அவரின் பெயர்  திரு.ஷண்முகம். 

இவரின் மூத்த மகன் பார்த்த சாரதி என்னோடும், இளைய மகன் ராஜ சேகர் என் தம்பியோடும் இணைந்து  ஆரம்பப்பள்ளி கல்வி பயின்றவர்கள்.

திரு ஷண்முகம் ஆசிரியர் பணியிலிருக்கும்போதே, உடல்  நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோனதால்  அப்பாவிற்கேற்பட்ட  மன வருத்தத்தை நாங்கள் பல காலங்கள் உணர முடிந்தது.

அடுத்ததாக, திரு.சொக்கலிங்கம். இவர் பெரும்பாலான  வார இறுதி நாட்களான சனி மற்றும்  ஞாயிற்றுக்  கிழமைகளில் வீட்டிற்கு வந்து நேரம் போவதே தெரியாமல் அப்பாவிடம்  அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நாட்டு நட ப்புகளைக்  குறித்து  அளவளாவிக்கொண்டிருப்பார்.

அடுத்ததாக, திரு. அப்பாதுரை ஆசிரியர். இவர் என் அப்பாவை வாயா போயா என்று உரிமையுடன் அழைத்து நட்டப்பை நெருக்கமாக்கிக்கொண்டவர், நகர மையத்திலிருக்கும் மக்கான் எனும் இடத்தை சார்ந்தவர். ஒருமுறை என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அவரது நிலத்தில் விளைந்த அரிசி மூட்டையோடு ரிக்க்ஷாவில் ஏற்றி அனுப்பியது இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. என் அப்பாவோடு அத்தனை பரஸ்பரம் நடப்புப்  பாராட்டியவர்.

அடுத்ததாக, திரு.அய்யாதுரை ஆசிரியர். சில நேரங்களில் எனக்கு திரு அப்பாதுரை அவர்களுக்கும்  திரு.அய்யாதுரை   அவர்களுக்குமான பெயர் வித்தியாசம் விளங்காமல் போனதுண்டு. பள்ளித்தோழர்கள்போல் பரஸ்பரம் பழகியவர்.

அடுத்ததாக, திரு.மோசஸ் ஆசிரியர். இவர் ஏறக்குறைய என் அப்பாவைப்போலவே உருவ ஒற்றுமையும் தலைமுடியம் கொண்டவர்கள். என் அப்பாவைப்போலவே இவரும் நேர்கோடு எடுத்து தலை சீவி இருப்பார், ஒல்லியான , அப்பாவைப்போலவே உயரமான தோற்றம் கொண்டவர். இவர் அப்பாவைப்போலவே பேண்ட்டும்  முழு கை  சட்டையும் அணிந்திருப்பார். இவர் அப்பாவைப்போலவே இருந்ததால் இவரிடம் எனக்கு ஒரு கூடுதல் ஈர்ப்பு.

அடுத்ததாக, திரு.பெரியசாமி ஆசிரியர். இவர் கொஞ்சம் வணிக சிந்தை மிக்கவர். நகரத்தின் மண்டித்தெரு என சொல்லப்படும் வணிக வீதியில் மாட்டுவண்டிகள் போலவே இருக்கும் ஆனால் மாடுகள் இல்லாத சிறிய ரக கட்டை வண்டிகள் பலவற்றிக்கு சொந்தக்காரராக இருந்தார். 

இவரிடம் தின  வாடகைக்கு ஆட்கள் இந்த வண்டியை எடுத்து சிறிய வியாபாரிகள் மற்றும்  வீடுகளுக்கு மளிகை சாமான்களை ஏற்றிக்கொண்டு கைகளால் இழுத்துச்சென்று பொருட்களை சேர்ப்பித்து கூலி பெறுபவர்கள்.

மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டபிறகு இவர் மண்டித்தெருவிற்கு சென்று வண்டிக்கான வாடகை வசூலிப்பார். அதே போல சில ரிக்க்ஷா  வண்டிகளுக்கும் சொந்தக்காரராக இருந்தார், மேலும் பல வீடுகளுக்கும் உரிமையாளராக இருந்தார். 

அமைதியானவர், எத்தனை வசதி சொத்துக்கள் இருந்தாலும் எல்லோரிடமும் அன்புடனும் பொறுமையுடனும் சிரித்தமுகத்துடனும் பழகும் தன்மைகொண்டவர்.

அடுத்ததாக, திரு.முருகேசன் ஆசிரியர். இவர் நல்ல உயரமும் ஆஜானுபாகுவான உருவமும்  கொண்டவர். எப்போதும் கருப்பு கண்ணாடி அணித்திருப்பார், நெற்றியில் விபூதி மற்றும் குங்குமம் வைத்திருப்பார். தேவைப்படுவோருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தார் என்றும்  கொடுக்கல் வான்களில் நேர்மையும் கறாறுமாணவர் என  அறிந்திருக்கிறேன்.

முருகேசன் என்ற பெயரில் மற்றுமொரு இளைய ஆசிரியரும் பின்னாளில் இதே பள்ளியில் சேர்ந்து பணிபுரிந்தவர், சீனியரான அப்பாவிடம் மிகுந்த நட்பும்  மரியாதையும் கொண்டிருந்தார்.

அடுத்ததாக திருமதி.செல்வ ராணி  ஆசிரியை . அப்பாவை அவர் அண்ணன்  என்றுதான் அழைப்பார். நகர மையத்தில் இருந்த பிரபலமான திரை அரங்கின் பக்கவாட்டில், சைக்கிள் நிறுத்துமிடம் போகும் பாதையில் இவரது வீடு இருந்தது. இவர்களை, பிள்ளைகள் நாங்கள்  அனைவரும் ஆன்டி என்றுதான் அழைப்போம்.

அதேபோல, திருமதி.நிர்மலா சீனிவாசன், இவர்கள் திருவண்ணாமலையிலிருந்து மாற்றம் பெற்று இங்கு வந்தவர்கள். புதிதாக பணியில் சேர்ந்திருந்ததாலும் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருந்த மின்சார வாரியத்தில் அவரது கணவர் பொறியாளராக இருந்ததாலும்  எங்கள் வீட்டருகே இருந்த E B காலனி எனும் குடியிருப்பில் இருந்ததாலும் அடிக்கடி அவர்கள் எங்கள் வீட்டிற்கும் நாங்கள் அவர்களது வீட்டிற்கும் செல்வது வழக்கமாயிருந்தது. இவர்களை நாங்கள்  அண்ணி என்று அழைப்போம். அவர்கள் வீட்டு தோசையும்  முள்ளங்கி சாம்பரும் இன்னமும் என் மனதில் மணம் வீசிக்கொண்டிருக்கின்றது என்பது மிகை அல்ல.  இரண்டு ஆண்  ஒரு பெண் குழந்தைகள் இவருக்கு. மூத்தமகன் பெயர் கார்த்தி என நினைக்கின்றேன். 

அண்ணி எப்படி இருக்கின்றீர்கள்.

அடுத்தாக திருமதி.மார்கரெட்  ஆசிரியை. இவரும் அப்பாவினிடத்தில் மிகுந்த அன்புடனும் மரியாதையுடன் நட்புப் பாராட்டியவர். எப்போதேனும் அப்பா தற்காலிக விடுப்பு எடுக்க நேர்ந்தால் விடுமுறை விண்ணப்பத்தை இவர்கள் மூலம் தான் பள்ளிக்கு அனுப்புவார்; அதை கொண்டு சென்று இவரின் வீட்டில் கொடுப்பது என் வேலை. அப்படி போகும்போது என்னை அன்பாக உபசரித்து அனுப்புவார். அதேபோபோல மார்கரெட் ஆன்டி விடுப்பு எடுத்தால்  அவரது கணவர் எங்கள் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் விடுமுறை விண்ணப்பத்தை கொண்டுவந்து கொடுப்பார். இருவர் வீடும் அருகருகேதான் இருந்தது. பின்னாளில் நான் வளைகுடா நாட்டில் பணிபுரிந்த சமயத்தில் இவர்களது மகள் ஹேனா அவர்களை சந்தித்தபோது அவர்களது அம்மா அப்பாவின் நலன் குறித்து விசாரித்து அறிந்துகொண்டேன்.

அப்பாவுடன் பணிபுரிந்த மற்றுமொரு ஆசிரியை, திருமதி.மீனாட்சி. அவர் சில காலம் பள்ளியின் பொறுப்பாசிரியராக இருந்தவர். கொஞ்சம் கராறானவர் என மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்.  இவரிடம் அத்தனை நெருக்கம் நட்புரீதியாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

அப்பாவின் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த இரண்டு பேரை பற்றி இங்கே கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.

இவர்கள் இருவரும் பள்ளியின் உதவியாளர்கள், மணி அடிப்பது, ஓய்வு நேரங்களில் பிள்ளைகளை  பார்த்துக்கொள்வது, ஆசிரியர்களுக்கான உதவிகளை செய்வது, வருகைப்பதிவேட்டை வகைஉப்புகளுக்கு எடுத்து செல்வது  பின்னர் அவற்றை கொண்டுபோய் அலுவலகத்தில் சேர்ப்பிப்பது, துப்புரவு பணியாளர்களை வேலை வாங்குவது மாலையில் எல்லா வகுப்பறைகளை சரிபார்த்து பின்னர் பள்ளியை மூடி பூட்டுவது, காலையில் எல்லோரும் வருவதற்கு முன் எல்லா வகுப்பறைகளை தயார்  நிலையில் வைப்பது, மாலையில் பிள்ளைகளை அழைத்து செல்ல பெற்றோர் வருகை தாமதித்தால் அவர்கள் வரும்வரை பிள்ளைகளை பத்திரமாக பாதுகாப்பது  போன்ற எல்லா அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகளை செய்தவர்கள்.

இவர்களின் பணியின் அடிப்படையில்   ஒருவரை பாய்மா என்றும் மற்றவரை தாய்மா என்றும் அழைப்பாரகள் அவர்களது உண்மையான பெயர்கள் இன்றுவரை எனக்கு மட்டுமல்ல அந்த பள்ளியில் பணிபுரிந்த பெரும்பாலான ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கூட தெரியாது. ஒருவேளை என் அப்பாவிற்கு தெரிந்திருக்கும். ஆனால் இவர்கள் இருவரின் முகங்கள் உருவங்கள் என் மனத்திரையில் இன்னமும் பசுமையாக நிலைத்திருக்கின்றன,

இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள இந்த சிலரைத்தவிர இன்னும் பலரும் அப்பாவோடு பணிபுரிந்திருந்தாலும் இவர்கள் மட்டுமே என் நினைவு இருப்பவர்கள்.

இவர்கள் அனைவரும், உடன் ஊழியரைப்போலல்லாமல், பள்ளி  கல்லூரி காலத்து நெருங்கிய நண்பர்களைப்போலவும் , பந்த பாசம் மிக்க சொந்தக்காரர்கள்போலவும் அன்பான , அரவணைப்பான   நட்ப்பை தொடர்ந்தனர் என்பதை  இக்காலத்தோடு எந்தவகையிலும் ஒப்புமைப்படுத்தியோ அல்லது இணைத்துப்பார்க்கவோ முடியாது.

இவர்கள் அத்தனைபேரும் ஒரே பள்ளியில் பலகாலம் பணிபுரிந்தவர்கள் அல்ல. நகராட்சி  பள்ளிக்கூடத்தில் பல சந்தர்ப்பங்களில் பல பள்ளிக்கூடங்களில்  ஒன்றாக வேலை செய்தவர்கள், எனினும் இவர்களது நட்ப்பு  தொய்வின்றி நீண்டகாலம் நிலைபெற்றிருந்ததால்தான் இன்றுவரை அப்போது சிறுவனாக இருந்த என் ஆழ் மனதில் இவர்கள் இன்னமும் குடிகொண்டிருக்கின்றனர்.

இப்படியாக என் மனதில் தோன்றிய, என் அப்பாவோடு இணைந்து அறப்பணி  புரிந்த சில ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக்குறித்த  இந்த ஞாபகக்குறிப்புகளை  இந்த நேரத்தில் இங்கே பதிவாக்கியது சம்பந்தப்பட்டவர்களுக்கோ அல்லது அவரகளது வாரிசுகளுக்கோ எதோ ஒருவகையில் மகிழ்வைத்தரும் என்பதோடு, என் அப்பாவின் மனமும் மகிழும் என்று உளமார நம்புகின்றேன்.

மேலும் இவர்களிடத்தில் படித்த மாணவ மாணவியர்  மற்றும்  அவர்தம் குடும்பத்தினருக்கும் இது ஒரு ஞாபகத்தூண்டலாக அமையும் என உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

இதுபோன்று நீங்களும் உங்கள் தந்தையாரோடு உடன் படித்தவர்கள், பணி  புரிந்தவர்கள், பயணித்தவர்களை குறித்து  இந்தத்தருணத்தில் நினைவுகூர இந்த பதிவு ஒரு தூண்டுகோலாக அமையும் எனவும்  திடமாக  நம்புகிறேன்.

பி.கு: இத்தனை பெயர்களை குறிப்பிட்ட நான் ஏன் என் அப்பாவின் பெயரை குறிப்பிடவில்லை என்று பலரும் யோசிக்கலாம், நேரடியாக பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை ஆசிரியர்கள் ஆசிரியைகள், ஊழியர்கள் பற்றி  குறிப்பு அறிந்தவர்கள்  நிச்சயமாக என் அப்பாவை அறிவார்கள் மேலும் பதிவுகளில் குறிப்பிடும் கோயில்பிள்ளை என்ற பெயரைப்பார்த்தாலே என் அப்பாவின் பெயர்  கண்டிப்பாக நினைவிற்கு வரும்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக