ப்ராக்( PRAGUE)பயணம்!!
பயணம் நண்பர்களே,
பயணங்கள் என்பவை பெரும்பாலான நம் எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான். ஊர் ஊராக சென்று புதியவற்றை ஆவலோடும் ஆச்சரியத்தோடும் மகிழ்வோடும் குதூகலத்தோடும் பராக்கு பார்க்க சிறுவர் மட்டுமின்றி பெரியவரும் விரும்புகின்ற ஒன்றுதான்.
அதிலும் ஆண்டு முழுதும் கடுமையாக உழைத்து களைத்து கொஞ்சம் ஓய்வெடுக்க உடலும் உள்ளமும் ஏங்குபோது, வீட்டிலேயே சிலர் அமைதியாக தமது அன்றாட அலுவல் வேலைகளிலிருந்து சற்று தளர்ந்து, கெடுபிடி நேர கட்டுப்பாடுகளை புறம்தள்ளி விருப்பமான நேரத்தில் துயில் எழுவதும், விருப்பமான நேரம் வரை விழித்திருப்பதும் , விருப்பமான உணவுவகைகளை அரக்கப் பறக்க சாப்பிடாமல் நிறுத்தி நிதானமாக ரசித்து ருசித்து சாப்பிடுவதும், பின்னர் நண்பர்கள் உறவினரோடு தொலைபேசியிலோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக மணிக்கணக்கில் பேசுவதும், குடும்பத்துடன், கோவில், கடைத்தெருக்களுக்கு போவதும், உணவு விடுதியில் சென்று சாப்பிட்டு மகிழ்வதுமாக தங்கள் ஓய்வு நாட்களை கழிப்பவர்கள் உண்டு.
சிலர், தூரத்து உறவினர் நண்பர்கள் வீட்டுக்கு சென்று சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு புத்துணர்வு பெறும்வகையில் தங்கள் விடுமுறையை கழிப்பவர்களும் உண்டு.
வேறு சிலர் ஆண்டு கணக்கில் திட்டமிட்டு அதற்கான சேமிப்பை உறுதிப்படுத்திக்கொண்டு வெளி ஊர்களுக்கும் சிலர் வெளி நாடுகளுக்கும் சென்று தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதுண்டு.
எப்படி இருந்தாலும் பரபரப்பான இந்த உலகில், சிறுவர் முதல் பெரியவர் வரை விடுமுறை நாட்களை சிறப்பான முறையில் செலவழித்து, மனமும் உடலும் புத்துணர்வு பெறும்படி அவற்றை கொண்டாடி மகிழ்வதென்பது இன்றியமையாததாகிவிடுகின்றது.
அவரவர் வாய்ப்புக்கும் வசதிக்கும் ஏற்ற வகையில், கடன்படாமல் விரலுக்கு தகுந்த வீக்கமான விடுமுறையை திட்டமிடுதல் மிக முக்கியம்.
அவ்வகையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் எனக்கான விடுமுறை நாட்களை, எங்கள் ஊருக்கு மிக அருகில், சுமார் இரண்டும் மணி நேர விமான பயண தூரத்தில் இருக்கும், ஜெர்மனி, போலந்து, உக்ரைன், ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளால் சூழப்பட்டிருக்கும் மத்திய ஐரோப்பிய தேசமான செக்கோஸ்லோவேக்கியா எனும் அந்த அழகிய நாட்டில், கழிப்பதென்று முடிவெடுத்தேன்.
அதன்படி ஜூன் இரண்டாம் தேதி எங்கள் பெரு நகரின் விமான நிலையத்திலிருந்து இரண்டு மணி நேர பயணயத்திற்குப்பின் செக்கோஸ்லோவேக்கியா வின் தலைநகர் பிராக் (PRAGUE) வந்தடைந்தேன்.
இங்கிலாந்திற்கும் செக்கோஸ்லோவேக்கியாவிற்கும் ஒருமணி நேர வித்தியாசம். அதாவது, அவர்களது பூமி இங்கிலாந்தைவிட விட ஒருமணிநேரம் முன்னதாகவே பயணிக்கின்றனது.
முதலாம் உலகப்போரின் இறுதியில் உருவாக்கப்பட்ட நாடுதான் இந்த செக்கோஸ்லோவேக்கியா. இது 1918 முதல் 1992 வரை ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் பேரரசின் கட்டுப்பாட்டிலும் ஆதிக்கத்தில் இருந்து 1993 ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. அதன்பின்னார் தனி நாடாக உருவெடுத்து செக் குடியரசு மற்றும் ஸ்லோவிக்கியா (CZECH REPUPLIC AND SLOVIKIA ) என்று பெயர் மாற்றத்துடன் திகழ்ந்துகொண்டிருந்தது.
அதன் பின்னர் இரண்டாம் உலக போரின்போது 1938 லிருந்து 1945 வரையிலான கால கட்டத்தில் ஜெர்மனியின் நாசி ஆதிக்கத்தின் செல்வாக்கின் பேரிலும் அதன் அதிகாரத்தின் பேரிலும் ஸ்லோவிக்கியா ஒரு தனி நாடாக உருவாயிற்று.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு பொது உடமை(கம்யூனிஸ்ட்) நாடாக விளங்கியது.
அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி அன்று புத்தாண்டோடு சேர்ந்து இந்த புது நாடும் "செக் குடியரசு" எனும் பெயரில் முடிசூடிக்கொண்டு இன்றளவும் பராகை(PRAGUE) தலை நகரமாக கொண்டு ஒரு சிறப்பான நாடாக உலக அரங்கில் வெற்றி நடைபோடுகின்றது.
இந்த நாடு, உலகிலேயே , மதங்களற்ற அல்லது மாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத நாடுகளுள் ஒன்றாக திகழ்கின்றதாம்.
கத்தோலிக்க கிறித்துவ பாரம்பரிய நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் மற்ற கிருத்துவ பிரிவினரான, ப்ரொடெஸ்டண்ட் வழிபாட்டாளர்களும் இரணடர கலந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக கிருத்துவ மதத்தை பின்பற்றுபவர்கள் வெறும் 12% மட்டுமே என்பது கொஞ்சம் வியப்பிற்குரிய விடயம்தான்.
கிறித்துவ தேவாலயங்கள் அதிக அளவில் காணப்பட்டாலும் இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் தங்களை மதங்களற்ற மனிதர்களாகவே அல்லது கடவுள் மறுப்பாளர்களாகவே அல்லது தமக்கு எந்த மதத்திலும் உடன்பாடுமில்லை,முரண்பாடுமில்லை என்கின்ற மனப்பான்மையையோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.
மதம் சம்பந்தமான எந்த ஒரு அச்சுறுத்தலோ, வற்புறுத்தலோ, நிர்பந்தமோ, கட்டுப்பாடோ இல்லாமல் மத சுதந்திரத்துடன் வாழ்வது இங்கே நிலவும் ஒரு சிறப்பு.
இரண்டு மணி நேர விமான பயணத்திற்குப்பின்னர், காத்திருந்து அழைத்துச்சென்ற மகிழ்வுந்து சாரதி அண்டை நாடான உக்ரைனின் பிரஜை என்றும் அவரது நாட்டின் இன்றைய நிலை குறித்தும் அங்கேயே இருக்கும் அவரது வயதான பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை குறித்தும் மனம் திறந்து பகிர்ந்துகொண்டார், அந்த 28 வயதே ஆன இளைஞர்.
அன்றே , அருகிலிருக்கும் பல இடங்களை சுற்றிபார்த்துவிட்டு அடுத்தநாள், அங்குள்ள கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கிபி 880 வாக்கில் சுமார் 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு இன்றளவும் செறிவூட்டப்பட்டு - பலப்படுத்தப்பட்டு பயன்பாட்டிலுள்ள அழகிய பிரமாண்டமான, நாட்டின் ராஷ்ட்ரபதி பாவனாகவும் அவரது அலுவலகமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கும் கோட்டையைக்கண்டு பிரமித்துபோனேன் எனும் கூற்று மிக மிக சாதாரணம்.
பிரமிப்பைவிட இன்னும் கூடுதல் உயர்வு நவிற்சி வார்த்தைகள் என்னவெல்லாம் இருக்குமோ அவற்றின் மொத்தமான உணர்வையே அடைத்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
பல கூம்பு வடிவிலான அமைப்புகள் கொண்டிருக்கும் இந்த கோட்டையின் ஒட்டுமொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் உள்ளது மற்றுமோர் பிரமிப்பு.
அதுவரை நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக