திருநாமத்தின் பரிணாமம்!!.
நண்பர்களே,
இங்கிலாந்தின் மாகாணங்களுள் ஒன்றான பிரிஸ்டல் எனும் மாநகரை மையமாகக் கொண்டு இயங்கும் நட்சத்ரா எனும் தமிழ்ப்பள்ளியின் பதினோராம் ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை (5.7.25)மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
வெவ்வேறு முழு நேர பணிகளில் ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் வார இறுதிநாள் , ஓய்வு நாட்களில் தன்னலம் மறந்து தமிழ் நலம் ஒன்றையே உள்ளம் எல்லாம் நிறைத்தவர்களாக நம் அடுத்த தலை முறையினருக்கு நம் மொழி மீது பற்றும் அதை குறித்த அறிவும் , தடையின்றி பேசவும் எழுதவும் படிக்கவும் சொல்லிக்கொடுப்பதோடு, நம் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரீக விழுமியங்களை ஒருசேர கற்றுக்கொடுக்கும் அனைத்து தன்னார்வலர்களும் போற்றுதற்குரியவர்கள்.
இந்த சேவையை ஊக்குவிக்கும் வகையிலும் தம் பிள்ளைகள் தமிழ் கற்றவேண்டும் என்ற பெரும் நோக்கோடு தமது பிள்ளைகளை முறையாக , சரியான நேரத்திற்கு அழைத்துவந்து காத்திருந்து அழைத்துச்செல்லும் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இந்த பள்ளியின் வளர்ச்சியில் தொய்வின்றி தங்களை இணைத்துக்கொண்டு தொண்டுள்ளம் கொண்டு சேவை புரிந்துகொண்டிருக்கும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் உங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.
வெறும் 6 மாணவர்களைக்கொண்டு எளியமையாக துவங்கப்பட்ட இந்த பள்ளி இன்று எண்ணிக்கையில் பலமடங்கு பெருகி இன்று சுமார் 100 மாணவர்களை தொடும்தூரத்திலுள்ள மாபெரும் வளர்ச்சி நோக்கி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது.
கடந்த ஆண்டு மற்றுமொரு பள்ளியை அருகிலிருக்கும் மற்றுமொரு மாநகரில் நிறுவி வெற்றியுடன் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதை உங்களில் பலரும் அறிவீர்கள்.
தமிழ் தாய் வாழ்த்து துவங்கி பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் கதம்ப தொகுப்பான அந்த பொன்மாலைப்பொழுது வந்திருந்த எல்லோர் மனங் களிலும் பன்னீர் தெளித்துப்பரவசமூட்டியது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
இந்த பள்ளியின் 11 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின்போது வந்திருந்த சிறப்பு விருந்தினரின் வாழ்த்து செய்தியை இங்கே உங்கள் பார்வைக்கு தருவதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன்.
பிரிஸ்டல் நட்சத்ரா தமிழ்ப் பள்ளியின் 11 ஆம் ஆண்டுவிழா.
நாள்:05.06.2025
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே!
இறைவனின் இன்னடிகளுக்கும் , தமிழன்னையின் பொன்னடிகளுக்கும் இந்த பொன்மாலைப்பொழுதில் என் புகழ்மாலை வணக்கங்கள்.
அவையோர் அனைவருக்கு எனது அன்பான மாலை வணக்கங்கள்.
சோர்வுறும் சிந்தனைகள் ஒருபோதும் நெஞ்சில் வேர்விடாமல் நட்சத்ரா தமிழ்ப்பள்ளியை முனைப்புடன் வழி நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்களே,
பாடங்கள் பயிற்றுவித்து தமிழறிவை ஊட்டிவளர்க்கும் பள்ளியின் ஆசிரியப்பெருமக்களே,
தோளோடு தோள் நின்றும், தோள் சுமந்தும் எதிர்வரும் தடைகளை தகர்த்தெறிய கடும் உழைப்பெனும் உன்னத வாள் சுமந்தும் நெடும்பயணத்திற்கான பாதை சமைத்துக்கொடுக்கும் தன்னார்வல தோழர்களே,
தமிழமுது நித்தம் பருகிவரும் அன்பிற்கினிய மாணவ மாணவியரே,
தாய்மொழியாம் தமிழ்மொழியெனும் செம்மொழியின் மென்மையும் அதன் மேன்மையும் நம் அடுத்த தலைமுறையினருக்கும் பரீட்சயப்படுத்தப்பட வேண்டும், தமிழ் இனி என்றும் வாழவேண்டும், எங்கும் வாழவேண்டும் எனும் தீவிர நோக்கோடு தமது பிள்ளைகளை ஊக்கப்படுத்திவரும் பெற்றோர்களே,
உங்கள் அத்தனைபேருக்கும் எனது இனிய வணக்கங்களும் இந்த தமிழ்ப்பள்ளியின் பதினோராம் ஆண்டு வெற்றிவிழாவிற்கான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தூணென விழுத்துடை ஆலமரம் - சிறு
துரும்பெனும் விதையின் மூலம் வரும்.
அப்படி துரும்பென உதித்த சிறு சிந்தனையின் வெளிப்பாடு,
பேரொளிக்கீற்றாய் பிரவாகம் எடுத்து இன்று
அரும்பென மலர்ந்து கரும்பென சுவைக்கும் படியும்
தூய இரும்பென நிலைக்கும் படியும் - இந்த உலகம்
விரும்பும்படியாகவும் வியந்திடும்படியாகவும்
நட்சத்ரா எனும் திருநாமம் கொண்ட இந்த
தமிழ்ப்பள்ளியின் பரிணாமத்தை
என்னவென்று நானுரைப்பேன்? என் எண்ணமதில் எழுகின்ற
ஏகாந்த மகிழ்வலையை என்னவென்று நானுரைப்பேன்?
வருடங்களின் எண்ணிக்கையில் பதினோராம் ஆண்டை எட்டிப்பிடித்திருக்கும் உங்களின் இந்த இமாலய பயணம் இன்னும் அதன் உச்சியை தொடவேண்டும் அது நிச்சயம் நிறைவேறும்.
ஒன்றென துவங்கிய இந்த பள்ளியின் எண்ணிக்கை இந்த பதினோராம் ஆண்டில் இரண்டாக பரிமளித்து தமிழ் மொழியையும் , பண்பாடுகளையும் , கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் தொண்மையையும் பந்திவிரித்து பரிமாறி வரும் பாங்கையும் அதன் வளர்ச்சியையும் இதில் உங்கள் அத்தனை பேர்களின் தீவிர - தொய்வில்லா பங்கையும் கண்டு உளமார மகிழ்கின்றேன், நலம் சிறக்க வாழ்த்துகின்றேன்.
கணக்கியலின் எண்ணிக்கை வரிசைசையில் இரண்டுக்கு அடுத்தும் இன்னும் எண்ணிலடங்கா எண்கள் உள்ளன என்பதையும், இங்கிலாந்தில் இன்னும் 53 மாகாணங்கள் பாக்கியியிருக்கின்றன என்பதையும் அவற்றிற்கும் அங்குள்ள நம்மவர்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க நீங்கள் வகை செய்யவேண்டும் எனவும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
உங்களது பயணம் தூரமானது என்பதைவிட தூய்மையானது என்பேன்.
உங்கள் பயணம் பாரமானது என்பதைவிட பவித்திரமானது என்பேன்.
உங்கள் பயண நோக்கம் கூர்மையானது என்பதைவிட நேர்மையானது என்பேன்.
உங்களது இந்த புனித பயணம் தொய்வில்லாமல் பல பல மைல்களை கடந்து செல்லவும் உங்கள் பாதம் படுகின்ற பிரதேசமெல்லாம் தமிழ்ப்பள்ளிகளெனும் நறுமண சோலைகள் உருவாகவும் அவற்றில் வண்ணமிகு பட்டாம்பூச்சிகளாய் நம் பிள்ளைகள் தமிழ்த்தேனை பருகி மகிழும்படியாகவும் உங்களின் இந்த பெரும்பணியெனும் அரும்பணி தொடரவேண்டும் எனவும், உங்கள அனைவருக்கும் உடல் நலமும் மனநலமும் ஆரோக்கியமும் கிடைக்கவேண்டும் எனவும் அதற்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரண அருளும் தமிழன்னையின் ஆசியும் என்றைக்கும் உங்களோடும் உங்களை தொடர்ந்தும் வரும் - வரவேண்டும் எனவும் , இந்த பள்ளி வாழைபோல் ஆல்போல் வளரவேண்டும் செழிக்கவேண்டும், தழைக்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
காலைக்கனவினில் காட்சிக்கண்டால் அது கண் விழிக்குக்போது காணாமல் போய்விடும்.
ஆனால் உங்களின் இந்த லட்சியக்கனவு,
காலையில் வந்த வீண் கனவு அல்ல அது நீங்கள் தமிழின்மீது வைத்திருக்கும் காதலால் வந்த தேன் கனவு.
அது, காலை கனவு அல்ல ; தமிழ்ப்பூஞ் சோலைக் கனவு.
அது பகல் கனவு அல்ல, ஒளிரும் தீப அகல் கனவு.
அது உறங்கும் போது வந்ததல்ல ; உங்களை உறங்கவிடாமல் செய்த கனவு.
எனவே தான் இந்த ஒய்யார சிறப்பு.
இந்த சிறப்பை பாராட்டியும் வாழ்த்தியும்:
கம்பன், வள்ளுவன், இளங்கோ, கபிலன், கணியன், அவ்வை, பாரதி போன்றோரின் , முத்த மழை இங்கு கொட்டித்தீராதோ, அதுவும் மொத்தமாக இங்கே கொட்டித்தீராதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
2025ல் பதினோராம் ஆண்டு விழா, இரண்டு பள்ளிகள். மாணவர்களுக்கும் , பெற்றோருக்கும் பள்ளிக்கும் அபார வெற்றி, வாழ்த்துக்கள்.
அடுத்த ஆண்டு 2026-ல், யாருக்கும் யாருக்கும் இடையில் போட்டி, யாருக்கு வெற்றி என்று உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில்,
ஊரறிந்த ரகசியம் ஒன்றை இங்கே உங்கள் முன் பிரகடனப்படுத்த விரும்புகின்றேன்:
தன்நல நோக்கமின்றி , தமிழ்நல நோக்கம் மட்டுமே தலைமேல் சுமந்தவர்களாய் உள்ளமெல்லாம் உவகையுடன் தமிழ் வளரவேண்டும் தமிழ் வாழவேண்டும் எனும் ஒப்பற்ற கொள்கை பிடிப்பின் பிடி தளராமல் கரம் இணைந்து முனைப்புடன் செயல்புரிந்துகொண்டிருக்கும் முன்னணி தளபதிகளான செயல் மறவர்கள் நட்சத்ரா தமிழ்ப்பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர், மாணவர்கள், மற்றும் பள்ளியின் வளர்ச்சியின் நலம் விரும்பிகள் எனும் இந்த மெகா கூட்டணிக்குக்குக்கே மகத்தான வெற்றி என்றும் இந்த வெற்றி என்றென்றும் தொடரும் எனவும் கூறி வாழ்த்துகின்றேன்.
இந்த மெகா கூட்டணியில் சேர விரும்புபவர்களை வரவேற்க, சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என நம்புகிறேன்.
நீங்கள் எப்போதும்போல இந்த உன்னத கூட்டணிக்கு தவறாமல் வாக்களிப்பீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு மீண்டும் உங்கள் அனைவருக்கு இந்த பதினோராம் ஆண்டுவிழா வாழ்த்துக்களை சொல்லி,
வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்.
வாழ்க பாரதம்!
வெல்க தமிழ் !!
நன்றி!!! வணக்கம்!!!!
மீண்டும் சந்திப்போம்!!!!!.
இவாறான சிறப்பு விருந்தினரின் ஊக்கமளிக்கும் வாழ்த்துரை, பள்ளி நிர்வாகத்திற்கு மேலும் உற்சாகமளிக்க வகை செய்யும் என நம்புகிறேன்.
அதை தொடர்ந்து மாணவ மாணவியருக்கான சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்து அறுசுவை உணவு பரிமாறப்பட்டு வந்திருந்த அனைவரையும் விருந்தோம்பலில் மூழ்கடித்தனர்.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக