மன்றம் வந்த தென்றல்!!
நண்பர்களே,
கொண்டாட்டம் தொடர்கிறது.....
முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-2
பறை இசை முழக்கம் மக்களின் மனதை நிரப்பி காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்க, ஆட்டத்தால் ஆங்காங்கே சிதறி நின்று கொண்டிருந்த அனைவரும் அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளினி அறிவித்ததும் ஆர்வத்துடன் அவரவர் இருக்கைகளில் வந்தமர தொடங்கினர்.
எல்லோரும் வந்தமர்ந்ததும், நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுத்த நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் ஒருவரை குறித்த சில அறிமுக விவரங்களை கூறி அவரை மேடைக்கழைத்தார்.
மேடைக்கு வந்தவரை வரவேற்று கவுரவிக்கும்பொருட்டு அவருக்கு பூச்செண்டு (பூந்தொட்டியில் பூக்களோடிருந்த உண்மையான ரோஜா செடி) கொடுத்து மேடையில் போடப்பட்டிருந்த பிரத்தியேக நாற்காலியில் அமர செய்தனர்.
பின்னர் அவர் வாயிலாக மற்றும் சிலரை மேடைக்கு வரும்படி செய்து மேடை யில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமரும்படி செய்தனர்.
இப்போது மேடையில் மொத்தம் 7 பேர்கள்.
இரண்டு பக்கங்களிலும் தலா மூன்று பேர்கள், மத்தியில் ஒருவர்.
இப்போது தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சி பட்டிமன்ற நிகழ்ச்சி என்று யூகித்திருப்பீர்கள்.
ஆம் அது ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சிதான் .
தலைப்பு:
நம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உகந்தவர்கள்:
"கனிவான பெற்றோரே"
"கண்டிப்பான பெற்றோரே".
அனைவருக்கும் வணக்கம் கூறிய பட்டிமன்ற நடுவர், கூடி இருந்த அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
அதாவது, சமீபத்தில் இந்திய காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத வன்முறை கொடுஞ்செயலால், உயிரிழந்த நம் சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகளின் நினைவாக அவர்களுக்கு நம் அஞ்சலியை செலுத்தும் வகையில் சிறிது நேரம் எழுந்து நின்று மெளனமாக நிற்கும்படி அன்பாக கேட்டுக்கொண்டார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று உளப்பூர்வமாக அவையில் இருந்தவர்களோடு மேடையில் இருந்த அனைவரும் சிறிது நேரம் அமைதிகாத்தபின்னர் நடுவர் அனைவருக்கும் நன்றி கூறி அமர செய்தார்.
பின்னர் , பட்டிமன்ற நடுவர் இரண்டு அணியினரின் உறுப்பினர்களை சபைக்கு அறிமுகம் செய்து வைத்து , பட்டிமன்றத்தலைப்புகள் குறித்து ஒரு முன்னுரை வழங்கி , பின்னர் இரண்டு அணியினரையும் மாறி மாறி பேச அழைத்து , இடையிடையே தமது கருத்துக்களையும் கேள்விகளையும் கேட்டு சபைக்கு சோர்வு ஏற்படாதவண்ணம் சிறிது கலகலப்பூட்டி பேச்சாளர்களின் வாதங்களை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இரண்டு அணியினரும் கடும் தவமென பல நாட்களாக அவரவர் பக்கத்து ஞாயங்களுக்கு வலு சேர்க்க சிரத்தைக்கொண்டு உண்மையாய் உள்ளார்ந்த பொறுப்புடன் தங்களது உரைகளை வாதங்களை தயாரித்திருந்தது அவர்களின் பேச்சுக்களில் எதிரொலிக்க தவறவில்லை.
பல தகவல்கள் பல ஆராய்ச்சி குறிப்புகள் பல மேதைகளின் மேற்கோள்கள், பல உதாரணங்கள் பல உவமைகள் மூலம் தங்கள்பக்கத்து ஞாயங்களை குறிப்பிட்ட நேர அளவிற்குள் பக்குவமாக அழுத்தமாக அதே சமயத்தில் ஆணித்தரமாக பண்பட்ட வழக்கறிஞர்கள்போல் பட்டிமன்ற மேடையில் வாதிட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்ததற்கு அடையாளம், அவர்கள் ஒவ்வொருவரும் பேசும்போதும் பேசி முடித்த பின்னரும் எழுந்த கைத்தட்டல்களும் சீழ்க்கை ஒலியுமே.
இத்தனைக்கும் இவர்களுள் பெரும்பான்மையானவர்களுக்கு அது ஒரு கன்னி மேடை - கன்னிப்பேச்சு. ஆனால் பேச்சில், கருத்து வீச்சில், சேகரித்து முன்மொழிந்த கருத்துக்களில் இவர்கள் எவரையும் முதன்முறை பேச்சாளர்கள் என்று சற்றும் இனம் காண முடியாதபடி தெளிந்த சிந்தை யுடனும் பதற்றமற்ற நிதான வேகத்துடனும் , எதிர் அணியினரின் கருத்துக்களை எதிர்த்து வாதிடும் போது இருந்த தீர்க்கமான அணுகுமுறையும் சொல்லாடலும் அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரையும் புருவம் உயர்த்த செய்தது என்றால் அது எள்ளின் முனையளவும் மிகையல்ல.
ஆங்கில மண்ணில் தங்கள் வாழ்வினை பதியன் போட்டு ஆண்டுகள் பல ஆகி இருந்தாலும், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றைக்கும் மங்காத தமிழ்தான் என்கின்ற வகையில் ஒவ்வொரு பேச்சாளரும் தங்கள் வாய் மொழிந்த தேன் மதுர தமிழ்மணம் தென்றலோடு கரம் இணைந்து மேடையெனும் மன்றத்திலிருந்து வழிந்து அரங்கம் முழுமையையும் ஆட்கொண்டு சில்லென வீசி அவையோரின் முகங்களையும் அகங்களையும் குளிரவும் மலரவும் செய்தன என்பதை சொல்லவும் வேண்டுமோ?
இரண்டு தரப்பினரின் வாதங்களும் பிரதிவாதங்களும் முற்றுபெற்றபின் நடுவரின் தீர்ப்பிற்காய் இரு அணி பேச்சாளர்களோடு அரங்கம் ஆவலோடு நிசப்தமாக காத்திருக்க...
நடுவர் , பங்குபெற்று சிறப்புடன் பேசிய இரு அணி பேச்சளர்களையும் வெகுவாக பாராட்டி அவர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் அரங்கத்தினரை மீண்டும் ஒருமுறை கைதட்டி பாராட்டும்படி கேட்டுக்கொள்ள, கைதட்டல் அடங்குவதற்கு சிறிது நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.
சரி தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும் என்றும் நீங்கள் எந்த அணியினர் பக்கம் என்பதையும் தெரிவியுங்கள்.
நடுவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று ஆவலோடு காத்திருந்த அவையோர் போல, நீங்களும் கொஞ்சம் காத்திருங்கள், தீர்ப்பு என்ன என்பதை நாளை பார்ப்போம்.
அதுவரை நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
பட்டிமன்றம் என்றதும் நம் நட்பு விசு வந்திருந்தாரோ என்று நினைத்தேன்..ஆனால் நீங்க மறைமுகமாகவும் குறிப்பாகவும் எதுவும் சொல்லவில்லை என்பதால் அவர் இல்லை என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஎன்னைப் பொருத்தவரை, கனிவுடனான கண்டிப்பு தேவை. கனிவு என்பதிலேயே அக்கறையும் கண்டிப்பும் அடங்கிவிடும். குழந்தைகளுக்கு அழுத்தம் தராத வகையில்.
கீதா
வணக்கம்.
நீக்குதாங்கள் சொல்வதுபோல் கனிவும் கண்டிப்பும் தேவைதானா? பொறுத்திருந்து பார்ப்போம், பட்டிமன்ற நடுவரின் நடுவர் என்ன தீர்ப்பளிக்கின்றார் என்று.