பின்பற்றுபவர்கள்

சனி, 3 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5

 மாறும் காட்சி மன்றத்தின் மாட்சி ! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-4..

அரங்கத்தின் ஆரவாரம் அடங்குவதற்கு சிறிதுகாலம் தேவைப்பட்டபோதிலும் அவையோரை பார்த்து, போதும் , போதும் என்பதுபோல் மேடையிலிருந்து நடுவர் கையுயர்த்தி சமிக்ஞ்சை செய்ததும் நிசப்தம் ஆட்கொண்ட அவையோரை நோக்கி:

பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உகந்தவர்கள் கனிவான பெற்றோரே என தீர்ப்பளிக்கலாம்  நினைகின்றேன்  எனினும்,.......

இப்படி  அவர் சொல்ல ஆரம்பித்ததும் முன்பிருந்த மகிழ்ச்சியும் ஆரவாரமும் முழுமையாய் அடங்கிப்போக, கனிவு அணியை சார்ந்தவர்களும் அரங்கமும் கொஞ்சம் குழப்பமடைந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். 

நடுவர் தொடர்கிறார்,

கட்டுப்பாடற்ற சுதந்தரம் காட்டாற்று வெள்ளம்போல, வெள்ளம் செல்லுகின்ற இடமெல்லாம் பெரும் சேதத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தும்.

சேதங்களையும் பேரழிவையும்  தடுக்க வேண்டுமாயின்  கரைகளை உயர்த்த    வேண்டும் , தடுப்பணைகள் போட்டு தடுக்க வேண்டும். அப்படி கரைகளை பலப்படுத்தி கால்வாய்கள் அமைத்து  நீரை முறைப்படுத்தினால்  அவை  பயிர்காக்கும் பாசன நீராகவும் உயிர் காக்கும் குடிநீராகவும் பயன்படும்.  

செடிகளுக்கு நீரூற்றுவதைப்பார்க்கிலும் , உரமிடுவதைப்பார்க்கிலும்  பாதுகாப்பு வேலி  அமைப்பது மிக மிக முக்கியம்.

அதுபோல பெருகிவரும் சமூக சீர்கேடுகளிலிருந்து நம் பிள்ளைகள் காக்கப்பட்டு முன்னேற்றப் பாதையில் முனைப்புடன் பயணிக்க செய்ய வேண்டுமானால் கண்டிப்பு எனும் வேலி கண்டிப்பாக அவசியம்.

தேவையற்ற திசைகளில் படரும் மர  கிளைகளை வெட்டுவதுபோல். சமூகம் வெறுக்கும் தேவையற்ற  நடப்புகள், தீய பழக்கங்கள் இருக்குமாயின் அவற்றை  இனம்கண்டு கண்டிப்புடன் களைந்தெறிய வேண்டியது கண்டிப்பாக  அவசியம்.

கனிவு பட்டங்களின்   வால் போன்றதென்றால், கண்டிப்பு அதன் நூல் போன்றது.

வாலறுந்த பட்டங்கள் ஆங்காங்கே வானத்தில் பறந்துகொண்டுதான் இருக்கின்றன, ஆனால்  நூலறுந்த பட்டங்களின்  நிலைமையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

அவை காற்றடிக்கும் திசைகளிலெல்லாம் அடித்து செல்லப்படும், கலங்கடிக்கப்படும், மரக்கிளைகளில் சிக்கிக்கொள்ளலாம் , மின்சார கம்பிகளில்  மாட்டிக்கொண்டு மேற்கொண்டு பறக்க முடியாமல் முடங்கிப்போகலாம்.

கண்டிப்பு எனும் நூல்  இருந்தால் சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் , தடைகள் தவிர்க்கப்பட்ட தெளிவான வானில் உயரமாக ஒய்யாரமாக பறக்க செய்ய முடியும்.

அதுபோல, பெற்றோரின் கண்டிப்பு எனும் நூலின் கட்டுப்பாடு, பிள்ளைகள்  சிக்கலற்ற தெளிவான சமூகமெனும் வானில் உயர்ந்து சிறக்க முடியும். 

தங்கம் ஆபரணமாக வேண்டுமென்றால், நெருப்பு எனும் கண்டிப்பை  சந்தித்துதான் ஆகவேண்டும்.

வைரம் ஜொலிக்க வேண்டுமாயின் கண்டிப்பு எனும் பட்டை தீட்டப்பட்டுதான் ஆகவேண்டும்.

வேலி  போடுவது செடிகளுக்கு பிடிக்காதுதான்.

நெருப்பிலிடுவது தங்கத்திற்கு பிடிக்காதுதான்.

பட்டை தீட்டுவது வைரத்திற்கு பிடிக்காதுதான். 

நூல் கொண்டு  கட்டுப்படுத்தப்படுவது  பட்டத்திற்கு பிடிக்காதுதான்.

அணைகள் போட்டு தடுப்பதும் கரைகளமைத்து முறை படுத்துவதும் வெள்ளத்திற்கு பிடிக்காதுதான்.

செடிகள் உயர்ந்து வளர வேண்டுமாயின், தங்கம்போல், வைரம்போல் மேன்மையான நிலையை அடைய வேண்டுமாயின் கண்டிப்பு எனும் படிநிலைகளை சந்தித்துதான் ஆகவேண்டும் அவற்றை கடந்துதான் ஆகவேண்டும்.

அதுபோல பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் உன்னத நிலையை அடையவேண்டுமாயின் - நற்கனிகளை கொடுக்க வேண்டுமாயின், கண்டிப்பு எனும் கட்டுப்பாட்டு கோட்பாடுகளோடு, வரைமுறைகளுக்கு  உட்படுத்தி  வளர்க்கப்படுவது  மிக மிக மிக அவசியம். 

இதுபோன்ற  நடைமுறை  அவசியங்களையும் , எதார்த்த சூழலையும், மனதில்கொண்டு பிள்ளைகள்  பாதை  பிறழாமல், முன்னேற்றப்  பாதையில் முழுமையாய்  வீறு நடை போடவேண்டுமாயின்,  வெற்றிக்  கொடி  நாட்டவேண்டுமாயின்,  பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உகந்தவர்கள்,

 கண்டிப்பான பெற்றோரே! 

என தீர்ப்பளித்து இத்துடன் இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்து.... 

என்று  நடுவர் தமது உரையை  தொடர  முடியாதபடி, இப்போது, சற்றுமுன்புவரை சோர்வுற்றிருந்த கண்டிப்பு அணியினர் புது உற்சாகம் அடைந்து , கோடையிலும், " புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது, இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது " என்கின்ற அளவில் உள்ளம் மகிழ்ந்து உவப்படைந்த காட்சியையும்  அவர்களோடிணைந்த அரங்கத்தினரின் ஆரவார கைத்தட்டலில் மிதந்த ஆனந்த மகிழ்ச்சியையும்  உண்மையிலே உச்சரித்து சொல்ல வார்த்தைகள் இல்லை என்றே சொல்லவேண்டும்.

அந்த உற்சாக பேரொலி  அடங்குவதற்கு கொஞ்சம் நாழிகை ஆனதால் நடுவர் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருந்தார் தமது உரையை முழுமை படுத்தி நிகழ்சியை நிறைவு செய்ய.

சரி இந்த குதூகல கொண்டாட்ட மகிழ்ச்சியை மக்கள் இன்னும்  கொஞ்சம் நேரம்   அனுபவிக்கட்டும். அதுவரை நீங்களும் கொஞ்சம் உங்களை  ஆசுவாச படுத்திகொண்டு மீண்டும் இணைந்துகொள்ள நாளைவரை காத்திருங்களேன்.

அதுவரை நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


2 கருத்துகள்:

  1. பெயரில்லா4 மே, 2025 அன்று 7:33 PM

    கட்டுப்பாடற்ற சுதந்தரம் காட்டாற்று வெள்ளம்போல, வெள்ளம் செல்லுகின்ற இடமெல்லாம் பெரும் சேதத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தும்.//

    இதுதான் சரி.

    சுதந்திரம் தேவை ஆனால் அதில் கட்டுப்பாடும் தேவை.

    ஓ! இன்னும் நடுவர் தீர்ப்பளிக்கவில்லையா....எனக்கென்னவோ இரண்டும் தேவை என்றே முடிப்பார் என்று நினைக்கிறேன்

    நல்ல நிகழ்வு. ரொம்பவே எல்லோரும் களித்திருப்பார்கள் நீங்களூம் தான் என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்.
    தங்களின் யூகம் சரியாக இருக்குமோ?பொறுத்திருந்து பார்ப்போம், பட்டிமன்ற நடுவரின் நடுவர் தீர்ப்பு வரும்வரை.

    மக்களோடு சேர்ந்து நான் மிகவும் ரசித்து மகிழ்ந்த பட்டிமன்றம் அது.

    பதிலளிநீக்கு