பொன் செய்யும் மருந்து!!
நண்பர்களே,
பரிட்சயமான அல்லது அப்போதுதான் அறிமுகமான, அல்லது முன்பின் தெரியாதவர்கள் எவரையேனும் முகமுகமாய் அல்லது தொலைபேசி வாயிலாக அல்லது கடிதங்கள் , குறுந்தகவல்கள், நவீன தகவல் தொடர்பு வாயிலாக தொடர்புகொள்ள நேரும் சமயங்களில் , நாமோ அல்லது அவர்களோ, வணக்கத்திற்குப்பிறகு சம்பிரதாயத்திற்கேனும் அடுத்ததாக கேட்கப்படும் கேள்வி...எப்படி இருக்கின்றீர்கள் என்பதே.
அப்படி கேட்கப்படும்போது பெரும்பாலானவர்களின் பதில், நலமாக இருக்கிறேன் , சுகமாக இருக்கிறேன், ஏதோ இருக்கிறேன், பராவாயில்லை , ஏதோ போய்க்கொண்டிருக்கிறது , சௌக்கியம்.... போன்ற நேர்மறையான பதில்களை சொல்லுவார்கள்.
வேறு சிலர், என்னத்த சொல்ல, கஷ்டம் தான் , சொல்றமாதிரி ஒண்ணுமில்ல., சொல்லும்படி ஏதும் இல்ல. ஏதோ பொழப்பு ஒருமாதிரியா போகுது... நிலைமை சரியில்லை, உடம்பு சரி இல்லை, மனசு சரியில்லை,குடும்பம் சரி இல்லை, வயிற்றுக்கு வாயிற்குமே போதவில்லை, கடன்காரன் தொல்லை..... போன்ற எதிர்மறையான, பதில்களை கூறுவார்.
நேர்மறையான பதில்களிலும் எதிர்மறையான பதில்களிலும் எத்தனை சதவீதம் நிதர்சனம் / உண்மை என்று தெரியாவிட்டாலும் இதுபோன்ற பதில்களையே பெரும்பாலோர் சொல்லி நாம் கேட்டிருப்போம், அல்லது நாமேகூட சொல்லி இருப்போம்.
மனித வாழ்க்கையில் யாரும் யாரிடமும் இருப்பதை இருப்பதுபோல் சொல்வது இப்போதெல்லாம் குறைந்துகொண்டே போகின்றது என்பதைவிட, மாய்மாலம் , வஞ்சனை, வஞ்சகம், சூது, வாது பொறாமை, காழ்ப்புணர்வு பெருகிவிட்டது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
நன்றாக இருக்கிறேன் என்று சொல்வதால் , கேட்பவர்களின் பொறாமைக்கு ஆளாகிவிடுவோம், "கண்" பட்டுவிடும், திருஷ்டியாகிவிடும் போன்ற அபரிமிதமான கற்பனை நம்பிக்கையில் நம்பிக்கை கொண்டவர்கள், நன்றாக இருந்தாலும் சுமாராக இருப்பதாக கூறிக்கொள்வார்கள்.
"நன்றாக" என்ற பதத்திற்கு நேரடியாக - பொதுவான அர்த்தம் -விளக்கம் ஏதும் இல்லை , அது அவரவர்களைப் பொறுத்தது.
உண்ண உணவு , உடுக்க உடை, இருக்க இருப்பிடம், அமைதியான- அளவான-அன்பான குடும்பம், நோயற்ற உடம்பு , கடனில்லா வாழ்க்கை, அன்றாட தேவைக்கு போதுமான வருமானம் இவற்றை கொண்டவர்கள் தாங்கள் "நன்றாக" இருப்பதாக சொல்லலாம், சொல்கிறார்களா? ... சொல்லுவார்களா?
அல்லது ஆடம்பரமான வாழ்க்கை, தேவைக்கதிகமான பெருஞ்செல்வம் , கார் பங்களா, சமூகத்தில் உயர்ந்த அங்கீகாரம், மதிப்பு, கவுரவம் போன்றவற்றை கொண்டவர்கள் தாங்கள் நன்றாக இருப்பதாக சொல்லிக்கொள்ளலாம், சொல்கிறார்களா?... சொல்வார்களா?
அல்லது, தெருவோர வாழ்க்கை , தினக்கூலி, மூன்று வேளைகள் இல்லாவிட்டாலும் இரண்டு அல்லது ஒருவேளை சாப்பாடு நிம்மதியான தூக்கம் ... இந்த நிலையில் இருப்பவர்களும் தாங்கள் நன்றாக இருப்பதாக கூறலாம், கூறுகிறார்களா?...கூறுவார்களா?
அப்படி என்றால், " நன்றாக" என்பதன் வரையறை அவரவர்களின் மனதையம் வாழ்வியல் ரீதியான அவர்களது பக்குவப்பட்ட அனுபவங்களையும் பொறுத்ததே.
இப்படி இருக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரே, தனது தகுதி, உழைப்பின் அளவு, தமது ஊதியம், வருமானம் , அலைச்சல் இல்லா அமைதியான வாழ்க்கை, பிள்ளைகளின் படிப்பு, வேலை, திருமணம் போன்ற நிறைவேற்றிய கடமைகள், தரமான , கவுரவமான , நேர்மையான செயல்கள், மனதிற்கு அமைதித்தரும் பொது நல சேவைகள், பக்தி மார்க்கமான செயல்கள் போன்றவற்றால் திருப்த்தி அடைந்து, மற்றவர்களை பார்த்து பொறாமை கொள்ளாமல், அடுத்தவர் வளர்ச்சி கண்டு மகிழ்வது, மனம் திறந்து பாராட்டுவது, உதவிகேட்டு வருபவர்களுக்கு உதவும் நிலையில் இருப்பது போன்ற தன்னிறைவு கொண்ட வாழ்க்கையை வாழ்பவர்களிடத்தில் எப்படி இருக்கின்றீர்கள் என்று கேட்க்கும்போது அவர்கள் சொல்லும் பதில், "நிறைவாய்" இருக்கிறேன் என்பது.
இந்த நிறைவு என்ற பதத்தின் அர்த்தம் - அதன் கன பரிமாணத்தை பொறுத்து ஒருவருக்கொருவர் மாறுபடும்.
இன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட என் நண்பரிடம் நலம் விசாரிக்கையில் அவர் என்னிடம் சொன்ன பதில் தான் இன்றைய பதிவில் எழுத தூண்டிய வார்த்தை " நிறைவாய் இருக்கிறேன்".
அவரின் நம்பகத்தன்மையை பால்யகாலந்தொட்டு அறிந்தவன் என்ற வகையில் அவர் பதிலிலிருந்த உண்மையான உணர்வை அங்கீகரித்து ஆமோதிக்கிறேன்..
நண்பர்களே, நம்மில் எத்தனை பேர் வாழ்வின் எதார்த்தங்களை புரிந்துகொண்டு நமது கல்வி, தகுதி, வேலை, வருமானம், குடும்ப மகிழ்ச்சி, தினமும் உண்ண போதுமான உணவு, மானம் காக்கும் உடை, நிம்மதியாக மழை வெயில் புயல் போன்றவற்றிலிருந்து பயமின்றி உறங்க தலைக்கு மேலே ஒரு கூரை கொண்ட வீடு , சுக துக்கங்களை கரிசனையோடு பகிர்ந்துகொள்ள உறவுகளும், சோர்வுற்ற வேளைகளில் தலை சாய்க்க தோள் கொடுக்கும் நண்பர்களும் இருந்தும் , நிறைவாக இருக்கிறேன் என கூற முடியும்?
பொன்னும் மணியும் பணமும், மாளிகையும், வாகனமும், வங்கி இருப்பும் நிறைவைத்தருமா? அப்படியானால் இவைகளை அபரிமிதமாக கொண்டவர்கள் ஏன் இன்னும் நிம்மதியின்றி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்?
எப்போதும் நம்மைவிட மேலுள்ளவர்களை நினைத்து நாம் இன்னும் நிறைவடையவில்லையே என நினைப்பதைவிட, உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற வகையில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அழகிய வாழ்க்கைக்கு, நமக்கு மேலுள்ள இறைவனுக்கு நன்றி கூறி, போதுமென்ற மனதுடன், இருப்பதை கொண்டு திருப்த்தியும் மன நிறைவும் கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் மகிழ்ந்திருப்போம்.
நிறைவான வாழ்க்கையை நமக்கென்று சுவீகரிப்போம்.
நன்றி.
வணக்கம்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
நிறைவான வாழ்க்கை - அருமையான பதில். இதற்கு நம் தத்துவங்களிலும். உளவியலிலும் சொல்லும் ஒரே கருத்து எதிலும் பற்று வைக்காமல் இருத்தல். detachment.
பதிலளிநீக்குபற்றிருந்தால் குறைகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
கீதா
அன்புடை மேடம் ,
பதிலளிநீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.