பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 நவம்பர், 2024

டால்பின் சாகசம்!

தரமான சம்பவம்  !!

நண்பர்களே,

பயணம்  தொடர்கிறது...

முன் பதிவுகளை காண மலை மழலைகள்.  

அடுத்ததாக, தங்கி இருந்த ஹோட்டல் அறையிலிருந்து  வெளியில் கிளம்பலாம் என்று நினைத்து தரை தளத்திற்கு வரும் வேளை  வானம் மேகமூட்டத்துடன் கரம் சேர்ந்து  பிசு பிசு வென்ற மழை தூறலை  பூமி மீது தூவிக்கொண்டிருந்தது.

குடை பிடித்துக்கொண்டு சுற்றுலா செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை ; அதே சமயத்தில் மழை கோட்டு  அணிந்துகொண்டு செல்வதும் எனக்கு பிடிக்காத ஒன்று.

சரி ஒரு பத்து நிமிடம் காத்திருப்போம் என நினைத்து ஓட்டலின் தரை தளத்திலிருந்த காட்சிப்பொருட்களை பார்த்தவாறே இங்குமங்குமாக நடந்துகொண்டிருந்ததை பார்த்த ஓட்டல் சிப்பந்தி,  வெளியில் போக குடை வேண்டுமா என கேட்க்க, நன்றி,வேண்டாம்  என்று சொல்லிவிட்டேன்.

தொடர்ந்து என்னிடம் பேசியவர் இது போன்ற எதிர்பாராத மழை சில நாட்களில் தொடர்ந்து பெய்துகொண்டுதான் இருக்கும் ஆனால் கடுமையாக இருக்காது, நீங்கள் எங்கு போகவேண்டுமென்று சொல்லுங்கள் நங்கள் எங்கள் மகிழுந்தில் உங்களை கொண்டுபோய் விடுகிறோம்  என்றார்.

அதற்கும் நன்றியோடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே முன் பதிவு செய்து வைத்திருந்த டால்பின் காட்சி நேரம் இன்னும் சில மணி நேரங்கள் இருப்பதாலும் அந்த dolphinarium சுமார் ஒரு 10 நிமிட நடை தூரமே இருந்ததாலும் மழையில் நனைந்துகொண்டு போக வேண்டாம் என்று நேரத்தை கடத்திக்கொண்டிருந்தேன். 

திப்லிசியிலிருந்து படுமிக்கு பயணப்  பதிவு செய்து, தொடரியில் டிக்கெட் முன்பதிவு செய்து முடித்து, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் படுமியில்  வானிலை -  மழையும் சூறாவளியும் பெருங்காற்றும் இருக்கும் என்று  அறிக்கை வந்திருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க கூடாது என்றெண்ணி, வருவது வரட்டும் என்று புறப்பட்டு வந்தாயிற்று.

ஒருவேளை அந்த வானிலை அறிக்கைபடி இப்போது மழை தூர ஆரம்பித்துவிட்டதோ  என்று நினைத்துக்கொண்டிருக்கையில்  மழை நின்றுவிட்டது.

அதுமட்டுமல்ல அங்கே  தங்கி இருந்த அத்தனை நாட்களும் வருண பகவான் மேகங்களை விட்டு இறங்கவே இல்லை , படுமியின் பருவ நிலை படு சுவாரஸ்யமாக இதமாக பதமாக இருந்தது பெருஞ் சிறப்பு.

மனித உரிமை சட்டங்கள்போல், மிருக /கடல் வாழ்/   உயிரின  உரிமை மற்றும் பாதுகாப்பு  சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதாலும் , அரசு நிர்ணயித்த வரைமுறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் இருந்த சிரமங்கள், சமாளிக்க முடியாத   பொருளாதார தேவைகள் மற்றும் நிர்வகிக்க ஏற்படும் செலவுகள் போன்றவற்றின் நெருக்கடிகளால் தொடர்ந்து நடத்தமுடியாமல் இங்கிலாந்தில் இருந்த பல dolphinariumகள்  1991 ஆம் ஆண்டு முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டன.

எனவே இங்கிலாந்து மக்கள்  பிள்ளைகளோடு வேறு ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் இதுபோன்ற டால்பின்  காட்சிகளை காண தவறுவதில்லை.

அவ்வகையில் இதற்கு முன் எகிப்து, துபாய், மால்டா, சிங்கப்பூர்  போன்றநாடுகளில் டால்பின் காட்சிகளை பார்த்து ரசித்து மகிழ்ந்திருந்தாலும் ஜார்ஜியாவில் உள்ள இந்த  டால்பின் காட்சியை காண  வேண்டும் என்ற ஆவல் பன் மடங்கு அதிகரித்திருந்தது.

அவ்வகையில் சுமார் 900 மக்கள் அமர்ந்து பார்த்து ரசிக்கும்படி அமைக்கப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான கேலரி முன் அமைக்கப்பட்டிருந்த  ஆழமான குளத்தில் சுமார் 10 அழகிய டால்பின்களின் சாகச விளையாட்டுகள் ஒரு 45 நிமிட நேரத்திற்கு நடத்தி காட்டப்பட்டது.



இசைக்கேற்ப அவை நடனமாடுவதும் , ஒரு கரையில் குதித்து  மறு கரைக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் உள்   நீச்சல் அடித்து மேல் வந்து எல்லோரையும் பார்த்து சிரிப்பதுபோல் நீந்தி செல்வதும், 

பள்ளிக்கூடத்து மாணவர்கள் சீரான வரிசையில் நின்று அசெம்பிளிக்கு போவது போலும்,

தங்கள்  மூக்கின் மீது பந்தை வைத்துக்கொண்டு வாலால் தண்ணீரின் மேல் மட்டத்தில் நடந்து செல்வதும்,

நீரை விட்டு பல அடி  உயரத்திற்கு மேலே தாவி மீண்டும் நீரின் ஆழத்திற்கு இமைக்கும் நேரத்தில் திரும்பி வருவதும்,

வளையங்களுக்குள் சர்வசாதாரணமாக டைவ்  செய்வது,

பயிற்சியாளாரை சுமந்தவண்ணம் நீந்தி செல்வதுமான 30க்கும் மேற்பட்ட சாகசங்களை செய்து காட்டி எல்லோர் இதயங்களிலும் இன்ப ஊற்றை, மகிழ்ச்சி வெள்ளத்தை  பாய்ச்சிய    அந்த கண்  கொள்ளா காட்சி உள்ளபடியே உள்ளம் நிறைந்த காட்சிகளாக  வந்திருந்த பார்வையாளர் எல்லோரும்  உணர்ந்திருப்பார்கள் எனபது உண்மையே.

இதில் காட்சி காண வந்திருந்த சிறுவர் சிறுமியர் குழந்தைகளின் குதூகலத்தை சொல்ல ஏது  வார்த்தைகள்?

இந்த பத்து டால்பின்களில் இரண்டு சிறுசுகள் அவைகளும் பலவித சிறுபிள்ளைத்தனமான வேடிக்கைகளை காட்ட தவறவில்லை.

இவை அத்தனையையும் பயிற்றுவித்து வித்தைகள் புரியவைத்த  பயிற்சியாளர்கள் அத்தனை பேரும்  மிக மிக கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

மழை வெயில் போன்ற எந்த கால நிலையிலும் தொய்வின்றி நடைபெறும் இந்த நிகழ்ச்சி , ஆங்கிலத்திலும் உள்ளூர் மொழியிலும் எல்லா சாகச  காட்சிகளையும்   வர்ணனைப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது - 5 நட்சத்திர புள்ளிகளுக்கு தகுதிவாய்ந்த தரமான சம்பவம் அது.

நான் எடுத்த வீடியோ பதிவை இங்க பதிவிறக்கம் செய்ய முயன்று முடியாமல் போனதால், யாரோ ஒரு புண்ணியவான், யாரு பெத்த புள்ளையோ, இரண்டாண்டுகளுக்கு முன் எடுத்து youtube ல்  பதிவேற்றம் செய்த வீடியோ  பதிவினை  உரிமையாளருக்கு  நன்றி  கூறி இங்கே கொடுத்திருக்கிறேன் உங்கள் பார்வைக்கு, thank you - you-tuber !!

Batumi Dolphinarium - May 2022 #Dolphinarium #Batumi #Show

இருப்பது ஆண்டுகளாக மூடப்பட்டு மீண்டும் 2011 ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் இந்த அழகிய காட்சியை கண்டு களித்து முழு மன  திருப்த்தியுடன் -  மகிழ்வுடன் வெளிவந்தேன்.

விளக்கொளியில் மிளிரும்  நகரின்  அழகிய சாலைகளில் நடந்து சென்று படுமின் சிறப்பிற்கு சிறப்புக்கு  சேர்க்கும் மற்றுமொரு - கண்களுக்கு இதமாகவும் இதயத்திற்கு  சுகமாகவும்  அதே சமயத்தில் கண்களை குளங்களாக்கி இதயத்தில் சற்று சோக வடுவை ஏற்படுத்திய   காட்சி ஒன்றை காண மீண்டும் அந்த இசைக்கேற்ப நடனமாடும் செயற்கை நீரூற்றுகளை  பார்த்தவண்ணம் அதை கடந்து சென்றேன்.




சென்ற இடத்தில் பல நூறு  மக்கள் கூடி இருந்து, "அதை" சுற்றி சுற்றி  புகைப்படம் , வீடியோ, செல்ஃபி எடுத்துக்கொண்டு அங்கிருந்த தகவல் பலகையில் சொல்லப்பட்ட செய்தியை வாசித்து மனமிளகி கண்கள் பனிக்க... ........

அப்படி அங்கு என்ன ?

பிறகு சொல்கிறேன்.

அதுவரை,

நன்றியும் வணக்கங்களும்.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


1 கருத்து:

  1. டால்ஃபின்களைப் பார்ப்பதே ஒரு சுகம் அவற்றின் சாகசங்கள் ஒரு சில சென்னையில் முன்பு கிஷ்கிந்தா அருகில் இவற்றிற்கென்றே வைத்திருந்தார்கள் அங்கு பார்த்திருக்கிறேன். இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இங்குள்ள தட்பவெப்ப நிலை அவற்றிற்குச் சரியாகுமா தெரியவில்லை. பாவம்.

    கடைசியில் சொல்லியிருப்பது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அடுத்த பதிவை வாசிக்கிறேன், கோ

    கீதா

    பதிலளிநீக்கு