பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2024

மலை மழலைகள்!

வினோத சிதறல்கள்!!

நண்பர்களே,

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள்,பிளாஸ்டிக் பைகள்,காகிதங்கள், சிகரெட் துண்டுகள், கண்ணாடி பாட்டில்கள் அதுவும் உடைக்கப்பட்டு சில்லு சில்லுகளாக சிதறிக்கிடக்கும் பாட்டில்கள், அறுந்துபோன செருப்புகள்,
வாழைப்பழ தோல்கள், எஞ்சிய உணவுகள் , இலைகள், பொட்டலங்கள் மடித்த காகிதங்கள், காலியான துரித உணவு CONTAINERகள், காலியான சிப்ஸ், பிஸ்கட், மற்றும் கிரிஸ்ப் பாக்கெட்கள் போன்றவற்றை பெருமளவில் எங்கு பார்க்கலாம்? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டால்....

சற்றும் யோசிக்காமல் உடனே சொல்லக்ககூடி இடங்களுள், நமது கடற்கரைகள்  பிரதானமான இடம் வகிக்கும் என்பதில் ஏது சந்தேகம்?

கடந்த மார்ச் மாதம் ஊருக்கு வந்திருந்த சமயத்தில்  சுமார் 3 கடற்கரைகளுக்கு  செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

ஒன்று சென்னை மெரினா கடற்கரை.

அடுத்தது சென்னை பெசன்ட் நகர் கடற்கரை,

 அடுத்தது, 

பாண்டிச்சேரி கடற்கரை.

இவற்றுள் மூன்றாவதாக சென்று பார்த்த கடற்கரை மற்ற இரண்டோடு  ஒப்புமை செய்து பார்க்கும்போது  எத்தனையோ மடங்கு தூய்மையாகவும் வரவேற்கத்தக்கதாகவும்  இருந்தது.

பதிவின் துவக்கத்தில் சொல்லப்பட்ட அத்தனையும், இன்னும் பார்த்து மறந்துபோன அல்லது  சொல்லவே வார்த்தைகள்  கூசும் அளவிற்கான வேறு  இன்னும் சில பொருட்களும்  மற்ற இரண்டு இடங்களிலும் காண முடிந்தது உண்மையிலேயே வருத்தத்தை தந்தது.

காலில்  செருப்பு அணிந்து  சென்றாலும் அங்கு சிதைந்து சிதறி கிடக்கும் உடைந்த கண்ணாடி பாட்டில்கள் மணல் பரப்பில் எங்கு இருக்குமோ எவ்வளவு ஆழத்தில் புதைந்திருக்குமோ என்ற அச்சத்தோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டி இருந்தது.

கடற்கரைக்கு காற்றுவாங்கவும் கண்களையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் கடலலைகளை ரசிக்கும்பொருட்டும், ஆர்ப்பரித்து கரைக்கு வந்து வந்து போகும் அலை நீரில் காலை நனைக்கவும் ஆசைப்பட்டு வந்தால்  இங்கே  பெரும் பீதியுடனும் அச்சத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டி இருந்த சூழலோடு மற்ற தேசத்து கடற்கரைகளை ஒப்புமை படுத்தி பார்க்கும்போது.....

அட டே  நம்ம ஊரிலும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என ஏக்க பெருமூச்சு விடுமளவிற்கு தூய்மையாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்கப்பட்டிருக்கும் உலகின் பெரும்பான்மையான கடற்கரைகள்  கண்களையும், கருத்தையும்  , உள்ளங்களையும் நம் உணர்வுகளையும் ஈர்க்கும்படி இருப்பதை கண்டு, எந்த பயமுமின்றி வெறுங்காலில் எத்தனை தூரமானாலும் நடந்து செல்லலாம் எனும் நம்பிக்கையையம் மகிழ்வையும்  கொடுக்கும் கடற்கரைகளுள் , சமீபத்தில் சென்று களித்த ஜார்ஜியாவின் படுமி கடற்கரையும் ஒன்று.

பொதுவாக எல்லா கடற்கரைகளிலும் காணப்படுவதுபோல் வெறும் மணற்பரப்பை இங்கே பார்க்க முடியாது; மாறாக , கண்ணுக்கெட்டிய தூரம் வரை மழுமழுப்பாக சிறியது முதல் பெரிய அளவிலான பல வண்ண , பல வடிவ  கூழாங்கற்களை  வானத்திலிருந்து யாரோ கொட்டி பரப்பி வைத்தனரோ என்று எண்ணுமளவுக்கு எங்கு பார்த்தாலும் கூழாங்கற்களே.

நம்ம ஊரில் சொல்வதுபோல், " மருந்துக்கு கூட" மணலை பார்க்க முடியாத அளவிற்கு பறந்து விரிந்து கிடைக்கும் கடற்கரை முழுமையும் இந்த கூழாங்கற்களின் ஆக்கிரமிப்புதான்.




சுமார் 7 கி மீ  நீளமும் 30 இலிருந்து 40 அடி  அகலமும் கொண்ட கடற்கரையில்  இதுபோன்ற கூழாங்கற்களைத் தன்னகத்தே கொண்ட கடற்கரையை பார்க்க முடியும். 

பல மில்லியன் ஆண்டுகளாக கடலிலிருந்த மலைகள் பிளந்து, உடைந்து உருமாறி உப்பு கடல் நீரின் தீராத -  தீவிரமான தொடர் தழுவல்களால் கரடு முரடு நீங்கி  உருவத்தில் சிறுத்து இலகுவாகி, பௌதீக, ரசாயன, வானிலை, காலமாற்றங்களால் புதிய அவதாரமெடுத்து அலைகளின் தாலாட்டில் அடித்துவரப்பட்டு  கரை சேர்ந்து குவிந்திருக்கும் இந்த விந்தை குவியலை -  மலை குழந்தைகளின்  வினோத சிதறலை  வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. 

இவை அத்தனையும் இயற்கையின் நன்கொடை.  இத்தனை கூழாங்கற்களும் வெளிறிய நிறத்தில் இருப்பது சூரிய ஒளியில் நவரத்தினங்கள்  போல் காட்சியளிக்கின்றன.










வெறுங்காலோடு எத்தனை நேரம் எத்தனை தூரம்  நடந்தாலும் கூறிய கற்கள் குத்திவிடுமோ என்ற அச்சம் ஏதுமின்றி, தத்தி தத்தி நடக்க ஆரம்பித்த குழந்தைகள் முதல் தட்டுத்தடுமாறி கோலூன்றி நடக்கும் பெரியவர்கள்   வரை  நடந்து செல்லக்கூடிய அழகிய பாதுகாப்பான  கடற்கரை இந்த படுமி கடற்கரை.

இதே போன்று பல வருடங்களுக்கு முன் சென்று பார்த்து அனுபவித்த  Great பிரிட்டனின்  வேல்ஸ் நாட்டின் அப்ரிஸ்வித் (Aberystwyth) எனும் நகரத்தின் வடக்கு பக்கத்திலிருக்கும் ஒரு கடற்கரை -  எங்கு  பார்த்தாலும் கூறிய திடமான  கற்கள் நிறைந்திருக்கும்- கீழுள்ள படத்தில் இருப்பதுபோல்.


அதில் வெறுங்காலோடு நடந்தால் அக்குப்பஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்வதுபோல் இருக்கும் இந்த கடற்கரையும் அதற்குண்டான தனித்தன்மையை உலகுக்கு பறை சாற்றுகின்றது.

இதுபோன்று ஸ்பெயின் நாட்டின் எரிமலை தீவான லான்சராட்டியில்,  கடலில் உருவான எரிமலை குழம்புகள் காலப்போக்கில் குளிர்ந்து இறுகியதால் ஏற்பட்ட கருப்பு நிற கூறிய கற்கள் நிறைந்த கடற்கரையில் நடந்திருந்தாலும் ஜார்ஜியாவின்  கடற்கரை நகரமான படுமின் கடற்கரையில் இருந்த கூழாங்கற்களால் மூடப்பட்டிருந்த  கடற்கரை என்னை பொறுத்தவரை தனி சிறப்பு வாய்ந்ததாகவும் வினோத சிதறல்களாகவுமே  கருதப்படுகிறது.

இது கண்டிப்பாக இயற்கையின் வினோத படைப்புகளில் ஒன்று என நிச்சயம் சொல்ல முடியும்.

இதுபோன்று வெளிநாட்டுகளில்  மட்டும் எப்படி எல்லா கடற்கரைகளும் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன?, ஒருவேளை அரசு பராமரிப்பதால் மட்டுமா?

இல்லை இல்லை அங்குள்ள மக்களும் தங்கள் பொறுப்பையும் கடமையையும் தேச பற்றையும் ஒருங்கே தங்களில் மனதிலும் வாழ்க்கை முறையிலும் கடைபிடிப்பதால் மட்டுமே இத்தனையும் சாத்தியமாகிறது.

எந்த ஒரு பராமரிப்பிற்கும் பொதுமக்களின் தன்னலமற்ற பொறுப்புணர்வு மிகவும் முக்கியம் என்பது நன்கு விளங்குகின்றது.

அங்கிருந்து, அந்த கடற்கரையின் நினைவாக  வீட்டு  மீன் தொட்டியில் வைப்பதற்காக பல வடிவங்களில் ஒரு ஐந்து கற்களை எடுத்துவந்து என் பெட்டியில் வைத்திருந்தேன்.

ஊருக்கு திரும்புகையில் விமான நிலைய பரிசோதகர் பெட்டியை ஸ்கேன் செய்கையில் சந்தேகத்திற்கிடமான ஏதோ (தங்க கட்டிகள்??!!) கடத்தலோ என்று எண்ணி.. திறந்து பார்த்து  கூழாங்கள் இருப்பதை மேலதிகாரியிடம்  சென்று ஆலோசனை பெற்று என்னையும் அந்த கூழாங்கற்களையும்  விடுவித்தார்.

இப்போது அவை என் வீட்டு மீன்தொட்டியில்.

அடுத்தது என்ன எங்கே ?

அதுவரை நன்றியும் வணக்கங்களும், 

தீபாவளி வாழ்த்துக்களுடன்.

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ. 


4 கருத்துகள்:

  1. அழகான கடற்கரையின் படங்கள். இந்தியாவில் சில அழகான கடற்கரைகள் உண்டு - அந்தமான், தியு, ஒடிசா, விசாகபட்டிணம் போன்ற இடங்களில் இருக்கும் கடற்கரைகள் கண்டதுண்டு.

    சென்னை கடற்கரை - என்ன சொல்ல! அதனை பாதுகாப்பது, சுத்தமாக வைத்துக்கொள்வது அனைவருடைய கடமை என்பதை நமது மக்கள் புரிந்து கொள்வதில்லை என்பது வேதனை தரும் உண்மை.

    பதிலளிநீக்கு
  2. வெங்கட்,

    வருகைக்கும் , நம் நாட்டிலுள்ள அழகு மிளிரும் கடற்கரைகளை குறித்த தகவலுக்கும் நன்றிகள்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  3. ஜார்ஜியா கடற்கரை அழகு. அது போல மற்றபடங்களும் அழகு. ஆமாம் அங்கெல்லாம் கடற்கரைகள் மிகவும் சுத்தமாக இருக்கும் மக்களும் அதைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது சிறுவயதிலிருந்தே வந்த ஒன்று.

    இங்கு மக்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும் அரசு மட்டும் போதாது. இங்கு விசாகப்பட்டினம் கடற்கரை செமையா இருக்கும் கோ. மணல்பரப்பு சுத்தமாக இருக்கும். நான் பதிவும் படங்களும் போட்ட நினைவு.

    வெங்கட்ஜி கோவா பற்றி போட்டிருந்த பதிவுகளிலும் கடற்கரை மிகவும் சுத்தமாக இருக்கும் என்பதைக் குறிப்பிட்டிருந்த நினைவு.

    பாண்டிச்சேரியில் இருந்திருக்கிறேனே 5 வருடங்கள் அங்கு கடற்கரை சுத்தமாக இருக்கும். அங்கும் கடற்கரையில் பாறைக் கற்கள் கரையில் நிறைந்திருக்கும் அதற்கு அப்பால்தான் நாம் நடக்கும் பகுதி நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

    சென்னை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கங்கள் பல.

    கடற்கரைகள் குறித்த தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

    யாதொரு சிறப்பிற்கும் அந்தந்த நாட்டு பொதுமக்களின் பங்கும் கடமையும் அரசுடனான ஒத்துழைப்பும் பெரும்பங்கு வகிக்கிறது எனும் தங்களின் கருத்து முற்றிலும் உண்மையே.

    நாம் நமது எனும் சுயநல சிந்தை இதுபோன்ற பொது விஷயங்களிலும் மிளிருமாயின் நமது எல்லா இயற்கை வளங்களும் தூய்மையுடனும் சிறப்புடனும் பாதுகாக்கப்படும்/ கண்களை கவரும் வண்ணம் காட்சிப்படுத்தப்படும்.

    கோவா கடற்கரைக்கு சென்றிருக்கிறேன் சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்.

    விசாகப்பட்டினம் போனதில்லை.

    தங்கள் வருகையும் கருத்துக்களும் மகிழ்வளிக்கின்றது.

    பதிலளிநீக்கு