நன்றியுடன்.
நண்பர்களே,
1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு ராஜாங்க படு கொலையை தொடர்ந்து ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரிய பேரரசுகளின் ஆதிக்கத்திற்கெதிராக சர்பிய தீவிரவாதக்குழுக்களால் தொடங்கப்பட்ட வன்முறை சம்பவங்கள் நாளடைவில் அக்கம் பக்கத்து நாடுகளையும் பாதித்தது.
பின்னர் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத தொடக்கத்தில் சர்வ தேச போராக உருவெடுத்து முப்பதிற்கும் மேலான நாடுகள் பங்குகொண்ட முதலாம் உலக போர் முடிவுக்கு வந்த 1918ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாளை , உலக நாடுகள் பலவற்றிலும் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அதன் நேச நாடுகளிலும் போரில் பங்குகொண்டு தங்கள் இன்னுயிரை தாய் நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை போற்றும்வகையிலும் அவர்களை நினைவு கூறும் ஒரு நினைவுநாளாகவும் அனுசரிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு பிரிட்டிஷ் மற்றும் காமன் வெல்த் நாடுகளில் முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மற்றும் உலகெங்கிலும் நடை பெற்ற- நடை பெறுகின்ற அனைத்து போர்களிலும் உயிர் நீத்த பிரிட்டிஷ் மற்றும் காமன்வெல்த் நாட்டு வீரர்களை, அவர்களது தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு , நினைவு ஞாயிறு என்று ("Remebrance sunday ") அனுசரிக்கப்படுகிறது.
அவ்வகையில் இங்கே பிரிட்டனில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடைபெற்றிருக்கும்..
இந்த வழிபாட்டில் மத நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை போன்ற வேறுபாடுகளின்றி யார்வேண்டுமானாலும் பங்குபெறலாம்.
தங்கள் குடும்பத்தில் போர்வீரர்களாக இருந்த தாத்தா, அப்பா, கணவன், பிள்ளைகள், சகோதரன் சகோதரி ,மாமா, மைத்துனன், அக்கா, தங்கை என்று போரில் நேரடையாகவோ, மறைமுகமாகவோ, பின்னனியில் இருந்து, உணவு, மருத்துவம், தொழில் நுட்பம், செய்தி தொடர்பு போன்ற பணிகளில் ஈடுபட்ட எவரேனும் இருந்திருப்பின் அவர்களை நினைத்து நன்றி சொல்வதற்காக இந்த வழிபாட்டில் கலந்துகொள்வார்கள்.
இதில் இரண்டாம் உலகப்போரிலும் அதற்குப்பின் நடைபெற்ற உலகளாவிய போர்களிலும் பங்குகொண்டு ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களும் தங்களது தள்ளாத வயதிலும் இந்த வழிபாட்டில் பங்குபெறுவாரகள்.
அத்தகைய வீரர்களை - real ஹீரோக்களை நேரில்பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பதுண்டு; அது மட்டுமின்றி அவர்களோடு அளவளாவுவதும் அவர்களோடு இணைந்து புகைபடமெடுத்துக்கொள்வதையும் பெருமையாக கருதுவார்கள்.
அப்படி வருபவர்கள், தாங்கள்- தங்கள் உறவினர் பெற்றிருந்த பதக்கங்கள், சான்றிதழ்கள், புகைபடங்கள் போன்றவற்றை கொண்டுவந்து அதன் நினைவுகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து மகிழ்வார்கள்.
அவ்வகையில் நேற்று - நவம்பர் 10 ஆம் தேதி( ஒரு நாள் முன்னதாகவே) ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் சிறப்பு ஆராதனையும் வழிபாடும் நன்றி படையலும் நடைபெற்றிருக்கும்.
அதேபோல நினைவுநாளான இன்று, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பொது மக்கள் , கடைக்காரர்கள் சரியாக காலை 11.00 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
அவ்வகையில் இன்று சரியாக 11 மணிக்கு நானும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினேன்.
மேலும், போரில் மரித்தவர்களுள் எனக்கு உறவினர் யாரும் இல்லை என்றபோதிலும் ,சுயநலமின்றி தாய் நாட்டு எல்லைகளையும் தம் நாட்டின் பிரஜைகளையும் காக்கும்பொருட்டு களத்தில் போராடி உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் எனது அஞ்சலியை செலுத்தினேன்.
அதே சமயத்தில் போர்களத்திலன்றி கடும் போருக்கு இணையான வாழ்க்கை போராட்டத்தில் பங்குகொண்டு, பிள்ளைகளை பெற்று வளர்த்து படிப்போடு பண்புகளையும் ஊட்டி ஆளாக்கிய எனது தந்தையாரின் நினைவுநாளும் இதே நவம்பர் 11 ஆம் தேதி என்பதால் அவருக்கு எனது உள்ளார்ந்த நன்றியை ஏற்றிவைத்த மெழுகு உருகி வடிந்ததுபோல் என் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் மலர்களை காணிக்கையாக்கி அஞ்சலி செலுத்தினேன்.
இன்னமும் யுத்த களத்திலும், எல்லை பாதுகாப்பிலும் வாழ்க்கைக் களத்திலும் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து போர் வீரர்களுக்கும், தாய் தந்தையர்க்கும் நன்றி கூறும் விதமாக இந்த பதிவை அவர்களின் பாதங்களில் காணிக்கையாக படைத்து நிறைவு செய்கிறேன்.
நன்றி வணக்கம்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
ஸாரி கோ, நீங்கள் பதிவுகள் போடத் தொடங்கிவிட்டீர்கள் போலும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்(டோம்)
பதிலளிநீக்குஅப்போது மட்டுமா? இப்பவும் உலகில் போர்கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. இஸ்ரேல், ஈரான், பாலஸ்தீன், ரஷ்யா உக்ரைன் என்றும் அவ்வப்போது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்கள் உயிர் நீத்தல் என்று.
எனவே நீங்கள் கடைசியில் சொல்லியிருப்பது போல் எப்போதும் நாடுகளின் எல்லைகளைக் காக்கும், பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள் அனைவரையும் போற்றி பிரார்த்தனை செய்வோம். வீர மரணம் எய்தவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் இனியும் பணியில் தொடர்ந்து கொண்டிருக்கும் வீரர்களுக்கும் குடும்பத்திற்கும் என்று.
உலக அமைதிக்காகவும் என்று சொல்ல முடியவில்லை மனிதன் இருக்கும் வரை இந்த அகங்காரமும் சுயநலமும் மண் ஆசையும் விடாமல்தான் இருக்கும் போல.
உங்கள் தந்தையின் நினைவுதினமும் அதே தினத்தில். உங்களுக்கு அவர்களது ஆசி எப்பவும் இருக்கும், கோ
பழைய பதிவுகளையும் பார்க்கிறேன்.
கீதா
வணக்கங்கள் பல.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் கருத்தும் மிகவும் வரவேற்கப்படுகிறது.
உலகில் ஆங்காங்கே நடைபெறும் போர் கலவரங்களைக்குறித்த தங்களின் கவலை , தங்கள் பின்னூட்டத்தில் பிரதிபலிப்பதத்தை உணர முடிகிறது.
உலகில் பேராற்றலும் பெரும் செல்வமும் படை பலமும் கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வல்லரசுகள் கூட இத்தகு போர்களை நிறுத்த போதுமான முன்னெடுப்புகளை செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி பொதுமக்களும் இரு தரப்பு போர்வீரர்கள் மட்டுமே.
போர் காலங்களில் அழிக்கப்படும் சொத்துக்கள் , கட்டடங்கள், பாலங்கள், அணைகள்,மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், கலை கூடங்கள், நூலகங்கள், அருங்காட்சி, ஆவண சேமிப்பு கிடங்குகள் போன்றவற்றை மறு சீரமைப்பு செய்வதற்கு ஆகும் பணம் போன்றவை பாதிக்கப்பட்ட நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மட்டுமே சீரமைக்கப்படும் என்பது எதார்த்த வேதனை. அதுவும் அழிந்த பலவற்றை மீட்டெடுக்க எத்தனை காலம் ஆகும் என்று நினைக்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.
இத்தகு நிலை உலகம் உள்ளவரை தொடரு(ம்)மோ என்று நினைக்கும்போது வேதனையின் வீரியம் உயர்கிறது, அச்சமும் கவலையும் அதன் உச்சசத்தை தொடுகிறது.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
ஓ இதைத்தான் முன் பதிவில் சொல்லியிருந்தீங்களோ?
பதிலளிநீக்குஅழிந்தவை நாட்டு மக்களின் வரிப்பணத்தில்தான் மீட்டெடுப்பார்கள் என்றால் அப்போ வரிப்பணம் அதிகம் செலுத்த வேண்டியிருக்குமே. ஏற்கனவே எல்லாம் இழந்து நிற்கும் அப்பாவி மக்கள் எப்படிக் கட்டுவார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது. வேதனையும் கலந்து வருகிறது.
மனிதன் இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும். ஒரு வேளை எதிர்கால சமுதாயம் நல்லபடியான மன முதிர்ச்சியுடன் வளர்ந்தால் இல்லாமல் போகலாம் ஆனால் சில நாடுகளைப் பார்க்கும் போது அப்படித் தெரியவில்லை. வெறித்தனம் கூடி வருவது போலதான் இருக்கிறது.
கீதா