பின்பற்றுபவர்கள்

சனி, 5 ஜூன், 2021

எனக்கு எப்படிங்க தெரியும்? .

 பின்னுக்குப்பின்னால்...??!!

நண்பர்களே,  

பள்ளி பருவத்தில்  அவ்வப்போது இன்ப சுற்றுலா, உறவினர் வீட்டு திருமணம், ஊர்  பயணம்  போன்றவற்றின் போது தொடர் வண்டி  , பேருந்து, வேன்கள், மகிழுந்துகளில்   பயணம் செய்திருக்கின்றேன்.

வீட்டு பெரியவர்கள் யாருக்கு எங்கே இடம் கொடுக்கின்றார்களோ அந்த இடத்தில் அமர்ந்தும், சில சமயங்களில் சன்னல் ஓரத்து இருக்கையிலும் கூட அமர்ந்து பயணித்து இருக்கின்றேன்.

பின்னர் கல்லூரி காலங்களில் நண்பர்களோடும், சக மாணவர்களோடும் பல இடங்களை சுற்றிப்பார்க்க செல்லும்போதும் நண்பர்களின் வீட்டு விசேஷங்களின்போதும்  இது போன்ற வாகனங்களில் பயணித்திருக்கின்றேன்.

அப்போது நமக்கு பிடித்தமான இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததுண்டு.

அப்படி பல வேளைகளில்  நீண்ட தூரம் பயணிக்க நேரும்போது ஓட்டுனரின் பக்கத்தில் பெரும்பாலும் என்னை தான்  அமர சொல்லுவார்கள், ஏனென்றால் நான் பயணத்தின்போது உறங்க மாட்டேன், அதே சமயத்தில் ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அவரையும் சோர்வடையாமல் பார்த்துக்கொள்வேன் என்பதால்.

கார் ஓட்ட பழகியபோது மட்டுமே  ஓட்டுநர் சீட்டில் அமரும் முதல் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு வேலை செய்த  நிறுவனத்தின் கார்களை ஓட்டி  இருந்தாலும் , வெளி  நாட்டிற்கு சென்ற பிறகு அங்கு வாங்கிய எனது முதல் சொந்தக்காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து முதன்முதலில் ஓட்டும்போது அந்த மகிழ்ச்சிக்கு அளவேது.

இப்படியாக பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் பல்வேறு இருக்கைகளில் அமர்ந்து பயணித்திருக்கின்றேன்.

இப்படி இருக்கும்போது வளைகுடா நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள், நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட, வரவு செலவு, மற்றும் பேலன்ஸ் ஷீட் என்று சொல்லப்படும் இருப்பு நிலை குறிப்புகள்  மற்றும் சில ஆவணங்களை தேசிய வங்கி மேலாளரிடம் காண்பித்து, எங்கள் நிறுவனத்தின்  நிதி நிலையை விளக்கும் ஒரு சந்திப்பிற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தேன்.

அப்போது எங்கள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்களில் ஒருவரும் நிறுவன உரிமையாளரின் மகனுமான அவர்,  தான் வேறு ஒரு வேலையாக அதே வங்கி இருக்கும் பகுதிக்கு செல்வதாக கூறி என்னை அவரின் காரில் வந்தமரும்படி கூறினார். 

அத்தனை பெரிய பொருப்பிலுள்ள மனிதர் தம்மை அவரோடு பயணிக்க அழைக்கின்றாரே எனும் சந்தோஷத்திலும் அவரிடமிருந்த மரியாதையின் நிமித்தமும் ...பளபளக்கும் விலை உயர்ந்த அவரின்காரின்  பின் இருக்கையில் பவ்வியமாக அமர்ந்து கொண்டு , எடுத்து வைத்த முக்கிய தஸ்தாவேகிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தேன்.

கார் இன்னும் புறப்படவில்லை.

ஏன் இன்னும் புறப்படவில்லை என நினைத்து தலையை தூக்கி பார்த்தேன், அப்போதுதான் தெரிந்தது அந்த மேலாண்மை இயக்குனர் என்னை திரும்பி பார்த்துக்கொண்டிருந்ததை.

என்ன ஆச்சு ஏன் என்னை பார்க்கிறார் என்று புரியவில்லை.

முக பாவனை சற்று இறுகிய நிலையில் காணப்பட்ட அவர் என்னிடம்  முன் இருக்கையில் வந்து அமரும்படி கூறினார்.

எனக்கு இன்னும் பெருமிதமாக இருந்தது, என்னையும் தமக்கு சரிசமமாக உட்காரும்படி அழைகின்றாறே என நினைத்து இல்லை பரவாயில்லை  நான் இங்கேயே அமர்ந்துகொள்கிறேன் என்றேன்.

அவர் கொஞ்சம் sarcastic தோரணையில் நான்  உங்களுக்கு   கார் ஓட்ட வேண்டுமா?, முன்னால்  வந்து அமருங்கள் என கூறினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை, நாம் எங்கு அமர்ந்தாலும் அவர்தானே கார் ஓட்டப்போகிறார்,  பின்னே ஏன் இந்த அர்த்தமற்ற கேள்வி?

எனினும் , என்ன சொல்கின்றார்? நான் முன்னால் வந்தமரவேண்டுமா? ஒருவேளை என்னை ஓட்ட  சொல்கிறாரா? இத்தனை விலை உயர்ந்த காரை என்னை ஓட்ட  சொல்லுவாரா?அப்படி நான் ஓட்ட வேண்டுமானால் அவர் காரை விட்டு இறங்கி இருக்கை  மாற்றியல்லவா  அமரவேண்டும்  , அப்படி இல்லாமல் ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்திருக்கிறாரே?

என்ன  சொல்கின்றீர்கள்? 

முன்னால் வந்து அமர சொல்கிறேன்?

உடனே முன்னிருக்கையில் அவருக்கு பக்கத்தில் மிக மிக பவ்யமாக  அமர்ந்து சீட் பெல்ட்டை போட்டதும் காரை எடுத்தார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பயணம் முழுவதும் அமைதியாகவே இருந்தவர், வங்கி கார் நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டுவிட்டு உங்கள்  வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் இங்கே வந்து எனக்காக காத்திருங்கள், ஒருவேளை என்னுடைய வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் நான் உங்களுக்காக இதே இடத்தில் காத்திருப்பேன் என கூறி காரை விட்டு இறங்கி அவர் வேறு அலுவலக கட்டிடம் நோக்கி நடக்க துவங்கினார்.

நானும் வந்த வேலைகளை முடித்துக்கொண்டு கார் நிறுத்தும் இடத்திற்கு வந்து, காத்திருந்த அவரின் காரின் முன் இருக்கையில் அமர்ந்து வங்கி மேலாளருடன் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு அலுவலகம் வந்தடைந்தேன்.

பின்னர் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு என்னுடைய அலுவலக அறைக்கு சென்றுவிட்டேன்.

இன்னும் என் குழப்பம் தீரவில்லை அவர் ஏன் என்னை முன்னால்  வந்து அமர சொன்னார்   பிறகு அவரே   நான்  உங்களுக்கு கார் ஓட்ட  வேண்டுமா  என கேட்டார் ? அவர்தானே என்னை தமது காரில் வரும்படி கூறினார்?

அப்போது அந்த  நிறுவனத்தில் என்னைவிட பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  பணிபுரியும் கோவாவை சார்ந்த ஒரு கணக்காளர் என்னை பார்க்க என் அறைக்குள் நுழைந்தார்.

அவர் எந்த வேலைக்காக வந்திருக்கின்றார் என்றுகூட கேட்காமல் நடந்தவற்றை கூறி என் சந்தேகத்தை கேட்டேன்.

அவர் சொன்னார் ,  அதாவது பெரும்பாலானோர்,  பின்னால் உட்காருபவர்கள் முதலாளிகள் அல்லது தங்களைவிட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் அல்லது சக இனத்தவர்கள் (ஷேக்) என்றும்,   ஓட்டுனர்கள் என்பவர்கள்  அவர்களுக்கு சேவை புரிபவர்கள் அதாவது வேலை ஆட்கள் எனும் மன நிலையில் பிடிப்புள்ளவர்கள் எனவே தான் அவரிடம் பணிபுரியும் நம்மை போன்றவர்கள் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும்  அவர்கள் ஓட்டும்போது நாம் பின்னால்  உட்காருவதை  சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

அடடே... இப்படியும் ஒரு அர்த்தம் இருப்பது எனக்கு தெரியாமல் போனதே... நாம் மரியாதை என்று நினைத்து பின்னால் உட்கார்ந்த செயலுக்கு பின்னால் இத்தனை அர்த்தங்களா?

நம்ம ஊரில் எத்தனையோ முதலாளிகள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் செல்வந்தர்கள், திரைப்பட  பிரபலங்கள்  என காரின் முன் இருக்கையில் ஓட்டுனருக்கு பக்கத்தில்  சகஜமாக அமர்ந்து பயணிப்பதை பார்த்திருக்கின்றோம் , அப்போதெல்லாம் இதுபோன்ற பாகுபாடுகளை எவரும் பார்த்ததில்லை இங்கு இவர்கள் மத்தியில் இப்படி ஒரு பாகுபாடான  எண்ணமா? என திகைத்துப்போனேன்.

பின்னர் ஓரிரு மாதங்கள்   கழித்து நிறுவன தலைவரும் மேற்சொன்ன நபரின் தந்தையுமான பெரியவர்,  நான் வங்கிக்கு செல்லும்போது என்னுடன் என்னுடைய காரில் வருவதாக கூறினார்.

அவர் காரில் ஏறுமுன்னே ஏற்கனவே எப்போதும் ( நிறுவன ஊழியரால்) தினமும் காலையில் துடைத்து தூய்மையாக இருக்கும் எனது சொந்த காரின் பின் இருக்கையை மீண்டும் ஒருமுறை துணி கொண்டு துடைத்து அவரை அமரும்படி காரின் பின் கதவை  திறந்து காட்ட அவரோ முன் இருக்கையில்  வந்து அமர்ந்து கொண்டு சீட் பெல்ட்டை போட்டுகொண்டு போகலாம் வந்து ஏறுங்கள் என்றார்., எனக்கு  இப்போதும் ஒன்றுமே புரியவில்லை. (காலையில் ஒரு வண்டியும், பிற்பகல் வேறு வண்டியும் , மாலை வேறு ஒரு வண்டியும் பயன்படுத்துபவர் இன்று நம் வண்டியிலா?) 

ஒருவேளை பாதியில் வண்டியை  நிறுத்த சொல்லி  இடம் மாறுவாரோ?  எந்த சலனமும் இன்றி இயல்பாக - ஜாலியாக என்னுடன் பேசிக்கொண்டே வந்தவர் வங்கி வந்தடைந்ததும் இறங்கி எனக்கு இங்கே வேலை ஒன்றும் இல்லை; நான் லாபியில் அமர்ந்திருக்கிறேன் நீங்கள் வேலையை முடித்துவிட்டு வாருங்கள் என கூறிவிட்டு லாபியில் இருந்த இருக்கையில் அமர்ந்து அன்றைய செய்தி தாளை புரட்ட ஆரம்பித்துவிட்டார்.

என்ன நடக்கின்றது? சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நினைவில்   நிழலாட இன்றைய நாளின் நிகழ்ச்சி நெஞ்சில் வியப்பூட்டியது.

மீண்டும் அலுவலகம் வரும்போதும் அவர் எனக்கு பக்கத்தில்தான் அமர்ந்து வந்தார் கலகலப்பாக பேசிக்கொண்டு வந்தார் , இறங்கியதும்  நன்றாக கார் ஓட்டுகின்றீர்கள் என்ற பாராட்டுடன் எனக்கு நன்றியும்  சொன்னார்.

அப்போதுதான் புரிந்தது , முன்னாள் நடந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்ட மனப்பான்மை  "அவர்களின்" பொதுவான மனப்பான்மை அல்ல என்றும் அது தலைமுறை இடைவெளியின் தவறான புரிதலினால் ஏற்பட்ட மனப்பான்மை என்றும்.

(ஒருவேளை மகனின் செயல் எனக்கு வருத்தத்தை தந்திருக்கும் என அவர் யார்மூலமோ அறிந்து இப்படி செய்தாரோ?)

அதற்கடுத்த பல சந்தர்ப்பங்களில் மகனோடும் தந்தையோடும் பயணிக்க நேர்ந்தபோதெல்லாம், கவனமாக முன் இருக்கையில் அமர்ந்து செல்வதை மறக்காமல் இருந்தேன்.

இப்போதும் யாருடைய காரிலாவது பயணிக்க நேரும்போதெல்லாம் எனக்கு பல வருடங்களுக்கு முன்னாள் நிகழ்ந்த அந்த ,பின்னால் அமர்ந்த, பழைய நினைவுகள் நெஞ்சின் முன்னால் வந்து  நிழலாட  தவறுவதில்லை.

பி.கு: பல சந்தர்ப்பங்களில் மனைவியை, வசதியாக இருக்கட்டும் என்றெண்ணி, பின் சீட்டில்  அமர செய்து கணவர்கள் கார் ஓட்டும்போது  மனைவியை முதலாளி  என்றும் தான்  சாதாரண ஓட்டுநர் மட்டுமே  என்றும் (எந்த கணவனும்) நினைப்பதில்லையே.

ஒருவேளை கணவர்கள் கார் ஓட்ட பின் சீட்டில் அமர்ந்து பயணிக்கும்  மனைவிமார்களுக்கு அப்படி தாம் ஒரு முதலாளி என்றும் கணவன் நமது காரோட்டி  என்றதான  எண்ணம் கொஞ்சம்  இருக்குமோ? -    எனக்கு எப்படிங்க தெரியும்?

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

























20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம் அதுவும் ஒரு நல்ல அனுபவம்தான்.வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.

      நீக்கு
  2. எனக்கும் இதே அனுபவம் உண்டு.  அப்போது இதே எண்ணங்கள் எனக்கும் ஏற்பட்டு குழம்பித் தெளிந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் இதுபோன்ற அனுபவத்தை பெற்றது குறித்து நினைவுகூர்ந்தமைக்கும் வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இந்தியாவிலும் கூட பெரும்பாலான அதிகாரிகள், தாங்கள் கார் ஓட்டுகையில் பின்னிருக்கையில் எவரையும் உட்கார அனுமதிப்பதில்லை. உங்களுக்குக் கிடைத்தது ஒரு அனுபவப் பாடம். ஓட்டுனர், நான் மற்றும் அதிகாரி ஒரு முறை காரில் பயணித்தபோது கூட, நான் ஓட்டுனர் அருகே அமர, அதிகாரி பின்னால் அமர்ந்தார். அதிகாரியுடன் நாம் அமர்ந்து கொண்டால் அவருக்கு பிடிக்காது! ஆனால் சில அதிகாரிகள் நம்மை அப்படி நடத்தாமல், அவர்களுக்கு சரிசமமாக நடத்துவார்கள். இரண்டு விதமான அனுபவங்களும் எனக்குக் கிடைத்திருக்கிறது.

    நல்லதொரு பதிவு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவிலும் இத்தகு மன நிலை இருந்ததை நான் அனுபவிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்ன செய்வது அதிகாரம் கண்ணை மறைக்கும் என்பார்களே அது இதுதான்.

      வேலையை இழந்து வேறு வேலைக்கு போன பின்பும் அல்லது ஓய்வு பெற்ற பின்னும் அவர்களின் மதிப்பும் மரியாதையும் உடன் பணிபுரிந்தவர்கள் மத்தியில் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்தால் இதுபோன்ற ஆணவ போக்குகள் அதிகாரிகள் மட்டத்தில் குறையுமோ?
      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு வெங்கட்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. என்ன செய்வது - இருக்கின்(றது)றார்களே.
      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் நன்றி திரு தனபால்.

      நீக்கு
  5. நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவம் புரிந்து கொள்ள முடிந்தது. அறிந்திருப்பதால்.

    //ஒருவேளை கணவர்கள் கார் ஓட்ட பின் சீட்டில் அமர்ந்து பயணிக்கும் மனைவிமார்களுக்கு அப்படி தாம் ஒரு முதலாளி என்றும் கணவன் நமது காரோட்டி என்றதான எண்ணம் கொஞ்சம் இருக்குமோ? - எனக்கு எப்படிங்க தெரியும்?//

    நீங்களே உங்கள் வீட்டம்மாவிடம் ஆராய்ந்து விடுங்கள்! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் ஆலோசனைக்கும்(?!!) மிக்க நன்றிகள் அன்பிற்கினிய அம்மையீர்.

      நீக்கு
  6. அருமையான பதிவு.வாழ்கையின் ஒவ்வொரு சிறிய அனுபவமும் சிறந்த கற்கும் வாய்ப்பை வழங்குகிறது. உணர்ந்தவர்கள் முன்னேறி சமூகத்திற்க்கு பயனுள்ளவராகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் முரளி.

      நீக்கு
  7. இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். முன் இருக்கை காலியாக இருக்கும் போது பின் சீட்டில் அமர்ந்தால் நாம் முதலாளி அந்தஸ்தில் கருதப்படுகிறோம். மனைவிக்கு எப்போதும் தான் தான் முதலாளி என்கிற நினைப்பு பிறந்த வீட்டிலிருந்தே விதைக்கப்படுகிறது. வித்தியாசம் என்னவென்றால் முதலாளி நம்மிடம் பயணத்தின் போது இயல்பாக பேசினால் மிக்க மகிழ்ச்சி. மனைவி பேசாமல் வந்தால் நாம் பெற்ற வரம் மகிழ்ச்சி யோ மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன்முதலில் எம் தளத்தில் தங்கள் வருகையெனும் தடம் பதித்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்கள் கருத்துப்படி பார்த்தால் இந்த விஷயத்தில் பெருத்த அனுபவத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளானவர் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

      வங்கியில் கடன் வாங்கினால் தவணை முறையில் திருப்பி செலுத்தி கடனை அடைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விடலாம் ஆனால் மொத்த வங்கியையே கடனாக பெற்றால் என்றைக்கு அடைப்பது? வாழ் நாள் முழுவதும் அந்த கடன் நம்மையே சுற்றி சுழலும் அல்லவா? அதுபோலத்தான் கட்டிய மனைவியும் என்பதாக எங்கேயோ படித்தது.

      இதில் பெண்களுக்கு பிறந்த வீட்டிலேயே முதலாளி எனும் சிந்தை வளர்க்கப்பட்டுவிடுவதாக தாங்கள் சொல்வது எல்லோருக்கும் பொருந்துமா என்பது அவரவருக்கு அமைந்திருப்பதை பொறுத்து என்றே நினைக்கின்றேன்.

      பின் சீட்டில் அமர்ந்திருக்கும் மனைவிமார்கள் பேசாமல் வருவது பெருத்த மகிழ்ச்சியே என்பதை பெரும்பாலான ஓட்டுநர் - கணவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே, தொடர்ந்து எமது மற்ற பதிவுகளையும் பார்த்து தங்கள் கருத்துக்களை பகிரவும்
      நன்றி.

      நீக்கு
  8. இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். முன் இருக்கை காலியாக இருக்கும் போது பின் சீட்டில் அமர்ந்தால் நாம் முதலாளி அந்தஸ்தில் கருதப்படுகிறோம். மனைவிக்கு எப்போதும் தான் தான் முதலாளி என்கிற நினைப்பு பிறந்த வீட்டிலிருந்தே விதைக்கப்படுகிறது. வித்தியாசம் என்னவென்றால் முதலாளி நம்மிடம் பயணத்தின் போது இயல்பாக பேசினால் மிக்க மகிழ்ச்சி. மனைவி பேசாமல் வந்தால் நாம் பெற்ற வரம் மகிழ்ச்சி யோ மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன்முதலில் எம் தளத்தில் தங்கள் வருகையெனும் தடம் பதித்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி.

      தங்கள் கருத்துப்படி பார்த்தால் இந்த விஷயத்தில் பெருத்த அனுபவத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளானவர் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

      வங்கியில் கடன் வாங்கினால் தவணை முறையில் திருப்பி செலுத்தி கடனை அடைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விடலாம் ஆனால் மொத்த வங்கியையே கடனாக பெற்றால் என்றைக்கு அடைப்பது? வாழ் நாள் முழுவதும் அந்த கடன் நம்மையே சுற்றி சுழலும் அல்லவா? அதுபோலத்தான் கட்டிய மனைவியும் என்பதாக எங்கேயோ படித்தது.

      இதில் பெண்களுக்கு பிறந்த வீட்டிலேயே முதலாளி எனும் சிந்தை வளர்க்கப்பட்டுவிடுவதாக தாங்கள் சொல்வது எல்லோருக்கும் பொருந்துமா என்பது அவரவருக்கு அமைந்திருப்பதை பொறுத்து என்றே நினைக்கின்றேன்.

      பின் சீட்டில் அமர்ந்திருக்கும் மனைவிமார்கள் பேசாமல் வருவது பெருத்த மகிழ்ச்சியே என்பதை பெரும்பாலான ஓட்டுநர் - கணவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே, தொடர்ந்து எமது மற்ற பதிவுகளையும் பார்த்து தங்கள் கருத்துக்களை பகிரவும்
      நன்றி.

      நீக்கு
  9. என்னுடைய கருத்திற்கு அருமையான அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள். உளப்பூர்வமான நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  10. நல்லது, வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. நல்லது, வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. நல்லது நண்பரே, வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு