பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 8 ஜூன், 2021

இதய கீதம்!!

நெஞ்சம் மறப்பதில்லை.

நண்பர்களே,

பொதுவாக பேசும்போதும் எழுதும்போதும் நெஞ்சம், மனம், இதயம் என்பவை ஒரே விஷயத்தை குறிப்பதாகவே நடைமுறை வழக்கப்படுத்தியுள்ளது.

என் மனசு யாருக்கு தெரியும், என் நெஞ்சின் வேதனை யாருக்கு புரியும், என் இதயத்தின் குரலை/ குமுறலை  என்னை அன்றி யார் அறிவர்?

அல்லது அவர் மனம் என்ன பாடுபடுமோ, அதை கேட்டவுடன் என் நெஞ்சிக்குள்ளே பெருக்கெடுத்த மகிழ்ச்சியை என்ன சொல்ல? அதை அப்படியே என் இதயத்தில் வைத்து பத்திரப்படுத்தி மகிழ்கிறேன் .... இது போன்ற பேச்சுக்களை கேட்டிருப்போம்.

இவை அத்தனையும் எதையோ ஒன்றை குறித்து சொல்கிறது அதுவும் அந்த ஒன்றை பற்றியே சொல்கிறது என்பது புலப்படுகிறது.

பொதுவாக எல்லா உயிரினங்களின் உடற்கூறுகளின் ஒரு முக்கிய  அங்கமாக காணப்படும் ஒரு உன்னத உறுப்பிற்கு "இதயம்" என்ற பெயரிடப்பட்டும் அதன் உருவம் எப்படி இருக்கும் , அதன் திசுக்கள் எப்படி இருக்கும், அதன் தன்மை இயக்கம், வேலை என்ன போன்ற விவரங்கள் அனைத்தும் எளியவருக்கும் பாமரருக்கும்கூட எளிதாக விளங்கும்படி இந்த நவீன விஞ்ஞான வளர்ச்சியில் நம் கண் முன்னே காட்சிப்படுத்தப்படுகிறது.

ஆனால் அந்த உறுப்பை  , இது தான் நெஞ்சம், இதுதான் மனது என்று எவரும் சொல்வதில்லை  அப்படி சொன்னாலும் எவரும் ஏற்கப்போவதுமில்லை.

அப்படியானால்  நெஞ்சம் வேறு, மனசு வேறு இதயம் வேறு என்றாகிவிடுகிறது. இப்படி இருக்க இந்த மனசெல்லாம் நீதான் இருக்கின்றாய், என் நெஞ்சம்  இதை எப்போதும் நினைவில் நிறுத்தி இருக்கும், என் இதயத்தில்  அந்த நிகழ்சி நீங்காத வடுவாக உள்ளது  என்று சொல்வதெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகளாகக்கூட தோன்றுகின்றது.

இதயத்தை படம் மூலமும் X-RAY மூலமும் காணொளி மூலமும் காண முடிகிறது ஆனால் மற்ற இரண்டும் இதயத்தை குறிக்கும் வெறும் உருவகங்களே.

எந்த ஒரு மகிழ்ச்சியையும் அல்லது பெரும் துயரத்தையும் நம் மனமெனும்  இதயம் பல காலங்களுக்கு மறக்காமல் ஏதோ  ஒரு மூலையில் அவற்றை சேகரித்து வைத்துக்கொள்வதையும் சரியான நேரத்தில் அந்த நிகழ்ச்சி குறித்த நினைவுகள் வெளிப்படுவதையும் நாம் அனுபவித்திருப்போம்.

இப்படி எங்கோ, எப்போதோ, எவருக்கோ நிகழ்ந்த நிகழ்வுகளையே இதயம் நினைவில் வைத்திருக்கும்போது, இதயம்  தமக்கே ஏற்பட்ட சில நிகழ்வுகளை அந்த இதயம் மறப்பது என்பது சாத்தியம் இல்லை. என்றோ ஒருநாள் எப்படியும் அதை ஏதோ ஒரு சந்தர்பத்தில் அந்த இதயம் சம்பந்தப்பட்டவருக்கு வெளிப்படுத்தும் என்பது  உண்மையே.

சர்க்கரை நோயின் அறிகுறியின் ஆரம்ப காலத்தில் மருத்துவர் கேட்கும் கேள்வி,"உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருக்கிறதா?

சாதாரணமாக முடி கொட்டி வழுக்கையானவர்களைக்கூட உங்கள் குடும்பத்தில் யாருக்காவது வழுக்கை தலை இருந்திருக்கிறதா என்ற மருத்துவரின் கேள்வி மிகவும் இயல்புதான்.

சிலருக்கு சரும வியாதிகள் நரம்பு தளர்ச்சி புற்று நோய் போன்றவற்றிற்கும்   குடும்ப பின்னணி குறித்த கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இப்படி இருக்க இதய பலவீனம், இதய கோளாறு, இதய வால்வு பழுது, இதய ரத்த குழாய்களின் சுருக்கம் அல்லது அவற்றில் கொழுப்பு படர்வது போன்ற குறைகாளால் சுகவீனம் அடையும் நபர்களின் அறிகுறிகளை பார்த்த மருத்துவர்கள் கேட்கும் முதல் கேவி, உங்கள் குடும்பத்தில் எவருக்கேனும் இதயம் சம்பந்தமான நோய் இருந்ததா என்பதே.

சம்பந்தப்பட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் இதயம் அதை மறப்பதில்லை; எனவேதான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு யாராயிருந்தாலும் எத்தனை முன்னெச்சரிக்கையோடு , நல்ல  உணவு உடற்பயிற்சி திட்டமிட்ட வாழ்க்கை முறை அமைத்துக்கொண்டிருந்தாலும், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு இருந்த தாக்கத்தின்  சில அறிகுறிகள் அடுத்த தலைமுறையினரையும் பாதிப்பது தவிர்க்க முடியாததாகிறது.

இப்போதிருக்கும் கல்வி கேள்வி விஞ்ஞான வளர்ச்சியின் முதிர்ச்சியால், பெரும்பாதிப்பும் விபரீதமும்   ஏற்படுமுன்னே  அவற்றை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாக வாய்ப்புகள் உள்ளன என்றாலும் பெற்றோருக்கு   இதய கோளாறுகள்  இருந்திருந்தால் அதை எத்தனை தலைமுறை கடந்தும்   இதயம் எனும் நெஞ்சம் மறப்பதில்லை.

26 ஆறு வயது விளையாட்டு வீரன் தன்  அப்பாவுக்கும் தாத்தாவிற்கு தாத்தாவின் அப்பாவிற்கும் இதய நோய் இருந்ததாலும் அவர்கள் இள  வயதிலேயே இறந்துவிட்டனர் என்று அறிந்ததினாலும்  தன்  சிறு வயது முதல் கடுமையான - முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு,திட்டமிட்ட வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டிருந்தான்.

எனினும் ஒரு நாள் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் மூர்ச்சை   அடை ந்துவிட்டான். மருத்துவ மனை கொண்டுவரப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட அந்த இளைஞனிடம் கேட்கப்பட்ட கேள்வி உங்கள் குடும்பத்தில்  யாருக்காவது இதயம் சம்பந்தப்பட்ட  நோய் இருந்ததா? இப்போது அவர்கள் உயிரோடு இல்லை என்றால் அவர்களின் மரணத்திற்கான காரணம் என்ன?

மிகவும் கோபமடைந்த அந்த இளைஞன், ஆமாம் என் தந்தை என்  தாத்தா, அவரின் தந்தை அனைவரும் இதய நோயினால் பாதிக்கப்பட்டு இளமை யிலேயே இறந்துவிட்டனர். அதேபோல எனக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் என் உணவு பழக்க வழக்கங்களை,  உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறைமைகளை ஏற்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ்த்துவந்தேன் அப்படி இருக்க இது எனக்கு எப்படி ஏற்பட்டது?

அதற்கு மருத்துவர் சொன்ன பதில், நீ மேற்கொண்ட எல்லா ஆரோக்கிய நடவடிக்கைகளால்தான் உன் அப்பா, உன் தாத்தா அவரது தந்தை போன்றோருக்கு ஏற்பட்ட மரணம் உனக்கு ஏற்படவில்லை இன்று நீ உயிரோடு இருக்கின்றாய், மேலும்  இதய நோய்களை குறித்த  அவர்கள்  காலத்து விழிப்புணர்விற்கும் உனக்கிருக்கும் விழிப்புணர்விற்கும் , அவர்காலத்து மரு த்த வளர்ச்சிக்கும் உன் காலத்து மருத்துவ வளர்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.

குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அடுத்து வருபவருக்கும்  அதன் பாதிப்பு இருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல சீரான வாழ்க்கை முறையும் சரி விகித உணவும் உடற்பயிற்சியும்  முறையான மருத்துவ ஆலோசனைகளும் நோயின் வீரியத்தையம் அதன் பாதிப்பையும் குறைத்து நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இப்போது நீ இதய நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டாய் இனி மகிழ்ச்சியோடு நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்" என கூறி அவனை அனுப்பி வைத்தனராம். 

இதேபோல இதய நோயினால் கஷ்டப்படும் மக்களுக்கும் மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோம்; அதேபோல சுகம் பெற்று சகஜ வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் அன்பர்களை பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.
நண்பர்களே, இது ஒரு பயமுறுத்தும் பதிவல்ல மாறாக  பலருக்கும் பலனுள்ள பதிவாக அமையும் என்று என் மனதில் பட்டதை  என் இதயத்தின் கீதம்கேட்டு     நெஞ்சத்தின்  யோசனையோடு   பதிவாக்கி இருக்கின்றேன்.

விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வோம் வியத்தகு வாழ்வமைப்போம்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


10 கருத்துகள்:

 1. தங்களது இதய வீணையை சுருதி தவறாமல் உங்களுக்கே உரிய தனி பாணியில் அழகாக மீட்டிருக்கிறீர்கள்.உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மிகச்சரியாக சுட்டிக்காட்டிய பாங்கு அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் வளமான கருத்திற்கும் மிக்க நன்றி முரளி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் மருத்துவரின் ஆலோசனைக்குறித்த தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி தனபால்.

   நீக்கு
 3. சீரான வாழ்க்கை முறையும் சரி விகித உணவும் உடற்பயிற்சியும் முறையான மருத்துவ ஆலோசனைகளும் நோயின் வீரியத்தையம் அதன் பாதிப்பையும் குறைத்து நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

  அருமை
  உண்மை

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.கரந்தையாரே.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு வெங்கட்.

  பதிலளிநீக்கு
 7. இதயம் மறந்தாலும் மறந்துவிடும் என்று ஜீன் அந்த பாதிப்புகளை தன்னோடே வைத்துக் கொண்டே வளர்கிறது!  ஆரம்பத்திலிருந்தே செய்துகொள்ளும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உதவிகரமானவை என்பதில் ஐயமில்லை.

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் ஜீனின் பிறவி குணத்தை குறித்த தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு