பின்பற்றுபவர்கள்

வியாழன், 10 ஜூன், 2021

முதல்வர்!

உழைப்பாளி!  

நண்பர்களே,   

அவர் ஒரு கடின உழைப்பாளி, எளிமையானவர், கற்பதில்  மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர், ஏற்ற தாழ்வு பாராமல் எல்லோரிடத்திலும் அன்பு கொண்டவர்.

ஊரில் பெரிய தலைக்கட்டு எனும் அந்தஸ்துடன் இருந்தாலும் விவசாயமே அவர்களது குடும்ப ஆதாரம் - அடையாளம்..

பல நூறு ஏக்கர் விளை  நிலங்கள், தென்னை ,மாந்தோப்புகள், வாழை தோட்டங்கள்,  தொழிலாளிகள் என்று  பலரும் இவர்களின் சேவைக்காய் அமர்த்தப்பட்டிருந்தாலும்  இவரின் தந்தையார் தாம் பெற்ற அனைத்து பிள்ளைகளையும் நிலத்தில் இறங்கி பாடுபட்டு உழைக்கவும் பயிற்றுவித்திருந்தார்.

நாற்று நடும் சமயங்களிலும், அறுவடை செய்யும் நேரங்களிலும், தோட்டங்களை இரவு வேளைகளில் காவல் புரியும் நேரங்களிலும்கூட  யார் வேலை ஆட்கள்   யார் உரிமையாளர்கள் என்று பாகுபடுத்தி பார்க்க இயலாதபடி , அனைவரும் களத்தில்  இறங்கி வேலை செய்துவந்தனர்.

களத்து  மேட்டிற்கு நெற்கதிர் கட்டுகளை சுமந்து வருவதிலிருந்து உழவு மாடுகளையும் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் பசுமாடுகளை தொழுவத்தில் கட்டுவது - பராமரிப்பது  பால் கறந்து சொசைட்டிக்கு எடுத்து செல்வது, மேட்டு  பகுதியிலிருக்கும் மாங்காய் தோப்பில் புதிதாய் வைத்திருக்கும் மாங்கன்றுகளுக்கு மாட்டு வண்டியில் நீர் எடுத்து சென்று ஊற்றுவது     வரையிலும்  தமது குடும்ப மக்களையும் ஈடுபடுத்திவந்தார்   குடும்ப தலைவர்.

அந்த குடும்பத்தலைவர் அவரை சார்ந்த மூன்று  தம்பிகள் மற்றும்  தங்கைகளின் பெருங்குடும்பங்களுக்கும் அவரே தலைவராக எல்லோராலும் ஏகோபித்து மகுடம் சூட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வந்தவர்.

இப்படி நிலம் உழவு, பயிர்,வேளாண்மை என்றிருந்தாலும் தம் மக்களை ஓரளவு சிறப்பாக  அடிப்படை கல்வி பயிலவும் செய்திருந்தார் இவரின் தந்தையார்.

நான்கு வயது நிரம்பி இருந்த இவரை கொஞ்சம் தொலைவிலுள்ள ஒரு ஆங்கில தொடக்க பள்ளியில் சேர்த்து பயில செய்தார்.

மகன் மிடுக்குடன் பள்ளி சீருடை, டை , ஷூ, பேட்ஜ்  என அணிந்து செல்வதையும்  பள்ளியின் வேனில் ஏறி இறங்கி பவனி வருவதையும் கண்டு பூரிப்படைந்தார்.

படிப்படியாக தொடக்க பள்ளி கல்வி முடிந்து உயர் நிலை ,மேல் நிலை வகுப்புகளுக்காக தூரத்திலுள்ள டவுனுக்கு சென்று படிக்க வேண்டிய சூழலில் அத்தனை தூரம் அனுப்ப வேண்டுமா என அக்கம் பக்கத்தவர் சொல்வதோடு நிறுத்தாமல், உங்களுக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி நம்ம ஊரிலேயே ஒரு உயர் பள்ளிக்கூடம் கொண்டுவந்தால் சுற்றுப்புறத்து மக்களுக்கும் பயன்படுமே என கூற வேறு சிலரோ, வேண்டாம் வேண்டாம் பள்ளிக்கூடம் வந்துவிட்டால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்விட்டால்  எங்கள் ஜீவனம்  -பிழைப்பு எப்படி ஆகும்?

பெரியவர் யோசித்தார். நம் பிள்ளைகள் உள்ளூரிலேயே படிக்கவேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே பள்ளி என்பது சரி அல்ல.

மேலும் கிராமத்தில் வளர்ந்த பிள்ளைகள் தூரத்திலுள்ள பெரிய  டவுன்களுக்கு சென்று படித்தால்தான் நாட்டு நடப்பின் - நான்கு  விஷயங்களை கற்க முடியும் மேலும் தைரியத்தையும்  வளர்த்துக்கொள்ளமுடியும் எனவே தூரத்து டவுனுக்கு சென்று வர வசதியாக , தமது நற்பெயரை  பயன்படுத்தி, பள்ளி சென்று வரும் நேரங்களில் தடை இன்றி  பயணிக்கும்படி சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தி இருந்தார்.

இதனால் விருப்பமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் தூரத்து  டவுனுக்கு அனுப்பி படிக்க வைத்தனர்.

இவரும் நன்றாக படித்ததோடு, காலை, மாலை, விடுமுறை நாட்களில் தமது பெற்றோருக்கு உறுதுணையாக. செங்கல் சூளை,  வயல், தோப்புகளில் ஒத்தாசையாக இருந்தார்.

பள்ளி மேல் நிலை வகுப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

இதனிடையில் பெரியவருக்கு வயதாகிக்கொண்டிருந்தது.

சரி படித்தது போதும்  இதற்குமேல் பிள்ளைகள்  நிலங்களை நிர்வாகித்து, தோப்பு துறவுகளை கவனித்துக்கொண்டும், செங்கல் சூளைகளை பார்த்துகொண்டும்   பிழைத்துக்கொள்ளட்டும் என முடிவெடுத்தார் பெரியவர்.

இதற்கிடையில் அரசு அனுமதியுடன்  கள்ளுக்கடைகள் மாநிலமெங்கும் வியாபிக்க தொடங்கி இருந்தது.

அதன்மீது அத்தனை ஈடுபாடு இல்லை என்றாலும் ஊர் தலைக்கட்டு எனும் விதத்தில்  வலிய வந்து இவரிடம் சில கடைகளுக்கான உரிமம் திணிக்கப்பட்டது.

சரி , ஆயிரம் தென்னை மரங்களுக்கு மேல் உள்ள தமதுதோப்பிலிருந்து சுமார் நானூறு மரங்களை கள்ளுக்காகவும்   மீதமுள்ள மரங்களையும்  நிலங்களையும் விவசாயத்திற்காக பயன்படுத்தினாலும் நம்மிடம் வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாது என்று எண்ணி அந்த கடைகளை நடத்த முடிவு செய்தார்.

பதினேழு வயதே நிரம்பிய தன்  மகனை இனி இந்த இரண்டு கடைகளையும் நீயும் உன் அண்ணனும்தான் நிர்வகிக்க வேண்டும் என கூற படிப்பில் ஆர்வம் கொண்ட நம் கதையின் கதா நாயகன் அதிர்ச்சியுற்றார்.

அப்பாவிடம் எதிர்த்து பேசி பழக்கமில்லை அதே சமயத்தில் தமக்கு விருப்பமானதை விட்டுக்கொடுக்கவும் மனதில்லை.

இரவு உணவிற்கு பிறகு அடுத்த நாள் காலை உணவிற்காக ஊற வைத்த அரிசியை அரைத்துக்கொண்டிருந்த தன்  அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து சன்னமான குரலும் சந்தடி இல்லாமல் சிந்திய  கண்ணீருமாக தனது விருப்பத்தை சொல்கிறார். 

சரி நான் சொல்லிப்பார்க்கிறேன் நீ போய்  தூங்கு.

வழக்கமாக காலையில் ஒலிக்கும் சுப்ரபாதத்தின் சுலோகங்கள் மட்டுமல்ல குரலும் சுருதி பிறழ்ந்து  கேட்டது இவருக்கு. விழித்து கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தவருக்கு, அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்ததும் அதில் அப்பாவின் குரல் ஓங்கி ஒலிப்பதையும் கேட்டு பயத்தில் நடுங்கிப்போனார்.

எதற்காக இந்த வாக்குவாதம் ? கூர்ந்து கவனித்தவருக்கு புரிந்தது அது நமது விவகாரத்தின் விபரீதமென்று. பயந்துபோனவர்  கதவிற்கு பின்னால் மறைந்துகொண்டு பெற்றோரின் வாக்குவாதத்தை செவி குவித்து கேட்ட்க ஆரம்பித்தார்.

எல்லாவற்றையும் நானே நிர்வகிக்க முடியாது, பிள்ளைகள் இருப்பதால்தான் இந்த புதிய வியாபாரத்திற்கு ஒப்புக்கொண்டேன் இப்போது இவன் கல்லூரிக்கு போய்விட்டால்...... ? 

காலை எட்டு  மணிக்கு கள் கேன்களை கடைக்கு எடுத்து செல்லவேண்டும் , மீண்டும்  காலி கேன்களை திரும்ப கொண்டு வந்து நிரப்பி இரண்டு மணிக்கு திருப்பி கொண்டு சேர்த்துவிட்டு நான்கு மணிக்கு வீட்டிற்கு வரவேண்டும் , பின்னர் கேன்களை கழுவி சுத்தம் செய்து அடுத்த நாள் காலை நிரப்ப தயார் படுத்தி வைக்கவேண்டும் , இதற்கு நாளின் பகல்  நேரம் முழுமையும்  சரியாக இருக்கும் இதில் எப்படி அவன் கல்லூரிக்கு போக முடியும்?

பெற்றோரின் வாக்குவாதம் விரிந்துகொண்டே இருக்க இவரின் சிந்தனையும் விரிந்துகொண்டே  போனதன் விளைவாக, அப்பாவிற்கும் வருத்தம் அளிக்காமல் அதே சமயத்தில் நம் படிப்பும் பாதிக்காதபடி மாலை கல்லூரிக்கு சென்று படித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, தைரியமாக பெற்றோரிடம் தமது எண்ணத்தை சொல்லிவிட்டார்.

அம்மாவிற்கு ஒருபுறம் வருத்தம் மறுபுறம் இப்படி ஒரு வாய்ப்பிருந்தால் பயன்படுத்தி அவன் விருப்பப்படி படித்து கொள்ளட்டுமே என நினைத்து மகிழ்ந்தார்கள்.

அப்பா அதற்கு ஒப்புக்கொண்டதினால் இவரும்  மகிழ்ந்தார்.

மாலை கல்லூரி வகுப்புகள் மாலை 7 மணிக்கு ஆரம்பித்து 10 வரை வகுப்புகள் நடக்கும். மாலை தன்  வீட்டிலிருந்து 2 மணி  நேரம்  பேருந்து மூலம் மத்திய பேருந்து நிலையம் அங்கிருந்து டவுன் பஸ் பிடித்துஅரை மணி நேரம் பயணித்து      கல்லூரிக்கு போகவேண்டும்.

மீண்டும் கல்லூரியில் இருந்து பேருந்து மூலம் மத்திய பேருந்து நிலையம் வந்து அவரது  கிராமத்திற்கு போகும் கடைசி பேருந்து பிடித்து வீட்டிற்கு வர வேண்டும் . அப்படி வீட்டை அடைவதற்கு நள்ளிரவு பனிரெண்டை  தாண்டிவிடும்.

அதன் பிறகு அன்றைக்கு கற்ற பாடங்களை அசைபோட்டபடி களைப்பு நீங்க  சில மணி நேரம் உறங்க வேண்டும், மீண்டும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து  அன்றைய கடமைகளை செய்யவேண்டும் , மாலை மீண்டும் கல்லூரிக்கு செல்லவேண்டும். இப்படி மூன்றாண்டுகள் அவர் பட்ட பாடுகள் அத்தனையையும் அவர் கல்வியின் பாலுள்ள  தீராத  மோகத்தால் மகிழ்வுடன் அனுபவித்தார், தான்   விரும்பியபடி இளங்கலை பட்டமும் பெற்றார்.

அத்தோடு நிற்காமல் தபால் மூலம் சென்னை பல்கலை கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

செல்வந்தரின் மகனாகவும் , வேலையாட்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரிடம் எனக்கு பிடித்த பல பண்புகளில் சில:

எளிமை, நேர்மை, கடின உழைப்பு, தர்ம  சிந்தை  , கல்வியின்பால் அவருக்கிருந்த காதல் , ஏறக்குறைய அவர் பிறந்த கிராமத்தின் பெரும்பாலான வீடுகளுக்கு  படி அளக்கும் குடும்பத்து பிள்ளையாக இருந்தாலும், விவசாயத்தின் மேன்மையை முற்றும் உணர்ந்ததின் விளைவாக  ஒரே ஒரு சோற்றுப்பருக்கையைக்கூட வீணாக்காமல் தேவையான அளவிற்கு மட்டுமே சாப்பிடுவது, உடுக்கை இழந்தவன் கைபோல நண்பர்களின் இடுக்கண்களின்போது உதவுவதில் முதல்வராக  திகழும் பண்பு அவரின்  நற்குண  மகுடத்தின்  ரத்தினங்கள்.

பெற்றோரின் பெருஞ்செல்வத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட தனது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளாமல், தன்னுடைய சொந்த முயற்சியால் பல தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் தொழிலதிபராக வெற்றி கொடி  நாட்டிவரும் இவரின் தெய்வ நம்பிக்கையும் பக்தி பாடல்கள் பாடி பக்கதர்களை நல்வழிப்படுத்தும் ஆன்மீக சேவைகளும்  போற்றுதலுக்குரியது.

இப்படியாக கடின உழைப்பின் மறு  உருவமாக திகழும் இந்த சிறந்த மனிதர் என் நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் உள்ளபடியே கர்வம் கொள்கிறேன்.

இவரோடு படித்து இன்றைக்கு உலகமெல்லாம் வியாபித்திருக்கும் அனைத்து நண்பர்களையும் WhatsApp   எனும் ஒற்றை நூலில்   ஒருங்கிணைத்து நட்பு பாலத்தை இறுக்கி கட்டியதில் மட்டும்  முதல்வராய் இல்லாமல்  எங்கள் தோழமைகளுள் திருமணம் ஆன முதல்வரும் இவரே.

உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கடுஞ்சொல் பேசாமல், இனிமையாக பேசி இடைபடும் இடறல்களை எளிமையாக எதார்த்தமாக தீர்த்து வைப்பவர்.  

அழகான குடும்பம், மகன் - மகள் மருமக்கள்  பேர  பிள்ளைகள் என ஐந்தாயிரம்  மைல்களுக்கு அப்பால்  வாழ்ந்துவரும் இவரின் நேற்றைய தொலைபேசி அழைப்பும் அவரோடு அளவளாவிய  மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும்  அவரை குறித்த இந்த ஞாபக பதிவு வெளிபடுகிறது. 


இவரை நல்ல ஆரோக்கியத்துடனும்  நீண்ட ஆயுளுடனும் இதே ஈரம் காயாத நட்புடனும்  வாழ வாழ்த்தியும்  இறையருள்  பூரணமாய் இவர் மீது பொழிய வேண்டியும்   இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ


6 கருத்துகள்:

 1. கடின உழைப்பின் அடையாளமாக விளங்கும் தங்கள் நண்பர் ஒரு நூறாண்டு எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் நண்ருக்கான தங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் நண்ருக்கான தங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் திரு தனபால்.

   நீக்கு
 3. நல்ல மனிதர் குறித்து அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் குறித்து பதிவேற்றம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான் . வருகைக்கும் தங்கள் மகிழ்ச்சி பகிர்விற்கும் மிக்க நன்றிகள் அரவிந்த்.

   நீக்கு