முழு உடலுக்கும் காப்பு??
நண்பர்களே,
தேவை படுவோருக்கு அவர்களின் தேவை அறிந்து ஏற்ற காலத்தில் உதவுவதும் நன்மை செய்வதும் எல்லோருக்கும் இருக்கவேண்டிய சராசரி மனித பண்பு.
சிலரது தேவைகள் வெளிப்படையாகவே தெரியும் பலரது தேவைகள் அப்படி வெளியரங்கமாய் தெரிவதில்லை எனினும் அவர்களும் உதவி எதிர்பார்த்து காத்திருப்பவர்களே.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கண்டும் காணாததுமாக கடந்து போவோர் மிகுந்திருக்கும் இந்த சுய நல உலகில், வலிய சென்று பலருக்கும் உதவும் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
கட்டாயத்தின் பேரிலோ, கடமைக்காகவோ நிர்பந்தத்தின் பேரிலோ அல்லாமல் உண்மையான மனித நேயத்தோடு செயல்பட்டு பலருக்கும் பல உதவிகளை செய்துவருபவர்கள் குறித்து நாம் அவ்வப்போது அறிந்து மகிழ்கின்றோம் - அவர்களை மனதார - மானசீகமாக வாழ்த்துகின்றோம்.
முடிந்தால் உதவுவது என்றில்லாமல் முடியும் வரை உதவுவது எனும் தாரக மந்திரத்தை சிரமேற்கொண்டு செயல்படும் எத்தனையோ மனிதர்களை குறித்து வரலாற்றில் மட்டுமல்லாமல் நாம் வாழும் காலங்களிலேயே அறிந்திருக்கின்றோம், அவர்களுள் எல்லோருக்கும் தெரிந்தவரான அன்னை தெரசா போன்றவர்களை சொல்லலாம்.
அதே சமயத்தில் அவரை போல. சமூகத்தில் அருவெறுப்பானவர்கள் என கருதி ஒதுக்கப்பட்ட தொழுநோயாளிகளையும் அரவணைத்து உதவிய அளவிற்கு மற்ற எவரேனும் செய்யமுடியுமா என்பது கேள்விக்குறிகளையும் தாண்டிய பெரும் வியப்புக்குரிய விடயமே.
அதே சமயத்தில் நம் திராணிக்கு எவ்வளவு முடியுமே(விரலுக்கு தகுந்த வீக்கம்) அதை தவறாமல் செய்வதே மன நிறைவைத்தரும் செயலாக கருதப்படுகிறது.
ஊரை கூட்டி மேளம் முழங்கி, விளம்பரபடுத்தி விழா எடுத்து தர்மம் செய்வதாக பறை சாற்றி மகிழும் மக்களும் இருக்கும் இந்த பூ உலகில், எவருக்கும் தெரியாமல், காதும் காதும் வைத்ததுபோல், வலது கை செய்வதை இடது கை அறியாமல் மனித நேயத்தோடு பவ்யமாக உதவி செய்து மகிழும் உள்ளங்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை.
இவ்வகையில் காற்று வழி தவழ்ந்து என் செவியினூடாய் புகுந்த ஒரு விஷயமறிந்து மகிழ்ந்தேன் என்பதைவிட பெருமைகொண்டேன் என்றே சொல்லும் அளவிற்கு பல நாட்களாக நடந்துகொண்டிருக்கும் செய்தியினை இங்கே பகிர்வதில் பரவசமடைகின்றேன்.
முழு ஊரடங்கு எங்கும் வியாபித்திருக்கின்றது. அத்தியாவசியமின்றி வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் சாலைகளில் நடமாட அனுமதி உண்டு.
காலை , நன்பகலில் மட்டுமல்லாது மாலையிலும் ரவி எனும் சூரியனின் கொளுத்தும் வெய்யில்- ஒதுங்க நிழல் இன்றியும் நிலவெனும் சந்திரன் தவழும் இரவு வேளையிலும் கடமை ஆற்றிக்கொண்டிருக்கும் காவலர்கள், அவர்கள் கொண்டுவந்திருக்கும் தண்ணீர் மற்றும் உணவு நாள் முழுமைக்கும் போதாது.
சாலைஓர தேநீர் கடைகளோ , குளிர்பான கடைகளோ இல்லாமல் வெறிச்சோடி இருக்கின்றது பாண்டிச்சேரி மாநிலத்தின் அத்தனை சாலைகளும்.
மக்களோ, தங்கள் வீட்டிற்குள்ளேயே சொகுசாக, குளிரூட்டப்பட்ட அறைகளில் வேளா வேளைக்கு ருசியாக சமைத்து சாப்பிட்டு, தேநீர், காபி, பழச்சாறு என பருகிகொண்டு, தொலை காட்சி, கணனி, கைபேசிகளோடு உறவாடி மகிழ்ச்சியோடு நாட்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த தருணத்தில் சட்டென்று தன்னிலையையும் வெளியிலுள்ள காவலர்களின் நிலையையும் உணர்ந்தவராக வெளியிலுள்ள ஆபத்தையும் பொருட்படுத்தாமல், தமது வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு, தேநீர், காபி, முருங்கைகீரை சூப், பிஸ்கட்டுகள், குளிர் பானங்கள் என பெரிய பெரிய பிளாஸ்குகளில் அடைத்து, ஒரே முறை பயன்படுத்தப்படும் காகித கோப்பைகளையும் கொண்டு சென்றுகாலை மாலை இரண்டு வேளைகளிலும் அவர் வாழும் நகரத்தின் எல்லா சாலைகளிலுமுள்ள காவலர்களை சந்தித்து அவர்களின் தாகத்தையும் பசியையும் ஆற்றி வருகிறார் ஒருவர்.
இந்த சேவை ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொருநாளும் செய்வதை அறிந்து மகிழ்கின்றேன்.
அப்படி செய்யும் அவர் என்னுடைய பள்ளிகாலம்தொட்டு இன்றுவரை நண்பர் என்பதை உள்ளபடியே உள்ளநெகிழ்வுடன் தெரிவிப்பதில் மகிழ்கிறேன், இச்செய்தியை என் மற்ற நண்பர்களுக்கு பகிர நேரிட்டால் அவர்கள் எல்லோரது மனங்களிலும் இவரின் நன்மதிப்பு பல உயரங்கள் தாண்டி நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேநீர், காபி, பழச்சாறு, பிஸ்கட், நொறுக்கு தீனி, தண்ணீர், மோர் சுக்கு மிளகு,சீராக மூலிகை பானங்கள் இவை எல்லாம் சரிதான், கூடவே முருங்கை கீரை சூப்பை எதற்காக தேர்வு செய்தார் என்ற காரணத்தை நோண்டி பார்க்கும்போது ஒருவேளை இந்த உதவும் இனிய உள்ளம் குடியிருப்பது இவரது முருங்கைகாயைப்போன்ற ஒல்லியான தேகத்திற்குள் என்பதால் இருக்குமோ?
நண்பருக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் சொல்லவில்லை என்றாலும் என் செவி வழியாய் கிடைத்த இந்த செய்தி கேட்டு தங்களின் சேவையை பெரிதும் பாராட்டும் இந்த தருணத்தில் ஒரு சிறிய நினைவூட்டல்:கவனமாக இருங்கள் - இருப்பீர்கள் என தெரியும் இருந்தாலும் இது எனது ஆதங்க வெளிப்படு.
வாழ்க உங்களின் தொண்டுள்ளம்.
நன்றி மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
முருங்கை சூப் உடலுக்கு நல்லது
பதிலளிநீக்குஎலும்புகளுக்கு வலிமை தரும்
வருகைக்கும் முருங்கை குறித்த ஆரோக்கிய செய்திக்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே..
நீக்குஉன்னதமான நபர். அவரின் சேவை தொடரட்டும்.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அரவிந்த். தேவை உள்ளவரை அவரது சேவை தொடரும் என நம்புகிறேன்.
நீக்குஅளப்பரிய சேவை கோ உங்கள் நண்பர் செய்யும் சேவை. அதுவும் தினமும். விளம்பரம் இல்லா சேவை.
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள் உங்கள் நண்பருக்குத் தெரிவித்துவிடவும். நீங்கள் இறுதியில் சொல்லியிருப்பது போல் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளச் சொல்லுங்கள்
துளசிதரன்
கீதா
அன்பிற்கினிய நண்பர்களே, தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள். நண்பரிடம் கண்டிப்பாக சொல்கிறேன் உங்களின் பாராட்டையும் அறிவுறுத்தலையும்.
நீக்குநண்பரின் செயல் சிறப்பான ஒன்று. அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.
நீக்குபாராட்டப்பட வேண்டியவர். மற்றவர்கள் கஷ்டத்தை உணர்ந்தவர்.
பதிலளிநீக்குஅடுத்தவர் கஷ்டத்தை உணர்ந்து உதவும் நண்பரின் செயலை பாராட்டும் தங்களுக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
பதிலளிநீக்கு