பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 மே, 2021

மலைகளும் மணல் துகள்களும்.

மானம்- ஒழுக்கம்- பொருள் .

நண்பர்களே,

வர வர மனிதாபிமானம் என்பதை பிற்காலங்களில் கல்வெட்டுகளிலும், ஓலை  சுவடிகளில் மட்டுமேதான் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டி இருக்கும்  என்ற  மிச்சமில்லா நம்பிக்கை மேலோங்கி விடுமோ   என  அச்சப்படுகிறேன்.

அய்யன் வள்ளுவன் காலத்தில் இல்லறவியலில் ஒழுக்கம்  ஒன்றே உயிரினும் மேலானது  என்றிருந்தது. 

"ஒழுக்கம் விழுப்பந்  தரலான்  ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும் "(குறள் 131).

அதே அய்யன் குடியியலில் மானம் ஒன்றே உயிரினும் மேலானது என்றும் சொல்லுகின்றார் 

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் மானம் வரின்" . (குறள் 696). 

ஆனால் கலியுகத்தில் எதுபோனாலும் திரும்ப வரும் அல்லது பெற்றுக்கொள்ளலாம்(வயதை தவிர) உயிர்போனால் திரும்புமா என்று சொல்ல கேட்டிருப்போம்., பார்த்திருப்போம் - துப்பினாலும் துடைத்துக்கொண்டு அதன் சுவடே இல்லாமல் தலை நிமிர்ந்து வாழும் மனிதர்களையும்  பார்க்க கூடும்.

அப்படியானால் உயிரின், குறிப்பாக, மனித உயிரின்  உன்னதம், முக்கியத்துவம் மகத்துவம் எத்தனை பெரியது என்பதை உணர முடிகிறது.

அந்த உயிர் தமதாகவோ அல்லது தமது குடும்பத்தினர்,உறவினர், நண்பர்களுடையாதாகவோ இருக்கும் வரை அந்த உயிரை காப்பாற்ற முடிந்தவரை பாடுபடுவார்கள்.

அதே சம்பந்தமில்லாதவருடைய யிரானால் அதை பற்றிய அக்கறை , கரிசனை சிறிதுமின்றி சிலர் நடந்துகொள்ளும் பாங்கை நினைக்கும்போது மனிதாபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோய்க்கொண்டிருப்பதாகவே நினைக்க தோன்றுகின்றது.

உயிர் காக்கும்  பிராணவாயு சிலிண்டர்கள், மருந்துகள் போன்றவற்றை , "எரிகின்ற வீட்டில் பிடுங்கியவரை லாபம்" எனும் கொள்கை அடிப்படையில் ஈவு இரக்கமின்றி கொள்ளை லாம்பம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படும்  படு பாதக சிந்தனை உள்ள மக்களை நினைக்கும்போது உள்ளம் கலங்குகிறது.

அப்படியே பல மணிநேர காத்திருப்பிற்கு பின் மருத்துவமனை படுக்கை கிடைத்தாலும் தேவை இல்லாத பல சோதனைகளை செய்யவேண்டும் என்று கூறி பணம் பிடுங்கும் செயல்களும் ஆங்காங்கே நடப்பதாக அறிந்து வேதனை அடைகிறேன்.

இப்படி அடிப்படை மருத்துவ வசதி கிடைக்காமலும் , பராமரிப்பு இல்லாமலும் மரித்துப்போய்  சடலமான பின்னும், அந்த சடலத்தை உரிய மரியாதையுனும் கவுரவத்துடனும்  எரிக்க, அல்லது அடக்கம் செய்ய  பல மடங்கு காசு பணம் வேண்டி பேரம் நடப்பதையும் கேள்விப்படும்போது  கண்கள் மட்டுமின்றி உள்ளமும் அழுகின்றது மரித்தவர்களை நினைத்தல்ல இந்த மாபாதக செயல்புரியும் அற்பர்களை நினைத்து.

போகவேண்டாம் என குடும்பத்தார்  சொல்லியும் போய்தான் ஆகவேண்டும் என்ற கடமை உணர்வும் , மேலதிகாரிகளின்  கட்டாயமும் நெருக்கடி கொடுப்பதால், வேலைக்கு சென்று அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எத்தனைபேர்.

உத்தர பிரதேசத்தில்  தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 700  ஆசிரியர்களின் மரணம், தமது திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன் இறந்துபோன ஆசிரியை, எட்டு மாத - நிறைமாத கர்ப்பிணி ஆசிரியை  இன்னும் கணக்கில் காட்டப்படாத எத்தனையோ காவலர்கள் , அரசு ஊழியர்கள் நாடெங்கிலும்  இறப்பதற்கு முக்கிய காரணம் மனிதாபிமானம் இல்லாத செயல்களே பிரதானம் என்றால் அது மிகை அல்ல.

கொடிய நோய்க்கிருமி நாடெங்கும் வியாபித்திருக்கும்  கால சூழலில், தேர்தலின் முக்கியதத்துவம்  எங்கிருந்து வந்தது? மனிதாபிமானமும் மக்கள் நலனில் அக்கறையும் உள்ள  எந்த "தலைவனும்" இத்தகு நிலைமையை தவிர்த்திருக்க  அல்லது தள்ளிப்போட்டிருக்கவேண்டும்.

இன்னும்கூட, தாம், தமது கட்சி, தமது அரசியல் செல்வாக்கு, தமது பணம், தமது வருமானம் என்று சுயநல சிந்தையோடு  செயல்படும் சிறு வியாபாரிகள் துவங்கி பெரும் முதலாளிகள், தனியார் மருத்துவ மனைகள், மருந்தகங்கள்  சடலம் எரிக்கும் குழுக்கள் போன்றோர் இந்த நிலையை தொடராமல் மனம் திருந்தவேண்டும்.

இல்லையேல் , காட்டுத்தீபோல கட்டுக்கடங்காமல் பரவிவரும் இக்கிருமியின் தீவிரம் உக்கிரமடையும் சமயத்தில்  வித்தியாசம் பார்க்க தெரியாத இந்த கிருமியின் அடுத்த தாக்குதல், தாண்டவம்  யார் மீதுவேண்டுமானாலும்  இருக்கலாம் எனும் நிதர்சனத்தின் உண்மை முகம் வெளிப்படும் நாள் வெகுதூரமிருக்காது.

இத்தகு மனிதர்கள்   நினைவுகொள்ளவேண்டியது அருளுடமையில் சொல்லப்படும்   ஐயனின்  :

"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு" . (குறள் 247)

தற்காலிக வாழ்வான இம்மையின் பொருளை  மட்டும் பிரதானமாக கருதாமல்  மறுமையின்  பேற்றை - அருளை  பெற்றுக்கொள்ளும் நோக்கோடும் குறளின் பொருளையும் உணர்ந்த செயல்படுவது அவசியம்.

மலைகளையே  சாய்க்கத்தெரிந்த இந்த மாயாவி கிருமிக்கு மணல் துகள்கள் எம்மாத்திரம்.

பி.கு: இந்த கொடிய காலத்தில் மனிதாபிமான அடிப்படியில், பொருளாதார நோக்கம் சிறிதுமின்றி, தன்னலம் கருதாமல்  பரந்த பொது நல  சிந்தனை தெளிவும் மனதில் ஈரமும்  பாரமும் கொண்டு தொண்டாற்றும் தன்னார்வ இயக்கங்கள், குழுக்கள், தனிமனித அன்பர்கர்களுக்கு என் பணிவான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.
 
கோ.

9 கருத்துகள்:

  1. காசு சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் பல மனிதர்களைச் சந்திக்க நேர்கிறது இந்த தீநுண்மி காலத்தில்! ஒரு சிறு துளி எச்சில் கூட அப்படிச் சம்பாதிப்பவர்களைச் சாய்த்துவிடக்கூடும் என்ற நினைவே வராமல் கொள்ளையடித்துக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்ல!

    நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்களின் ஆதங்க கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.

      நீக்கு
  2. அப்படிப் பணத்தைச் சேமித்து வைத்துக்கொண்டு யாருமில்லா உலகில் என்ன செய்வார்களோ...  இரக்கமில்லா மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்களின் ஞாயமான கேள்விக்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்

      நீக்கு
  3. கொரோனாவை அழிக்க முயலும் அனைத்து தன்னார்வ இயக்கங்களும், குழுக்களும், தனி மனிதர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும், காவலர்களும், முன்களப் பணியாளர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக போற்றவேண்டும் , வருகைக்கும் தங்கள் போற்றலுக்கும் மிக்க நன்றிகள் கரந்தையாரே.

      நீக்கு
  4. கொடிய நோய்க்கிருமி நாடெங்கும் வியாபித்திருக்கும் கால சூழலில், தேர்தலின் முக்கியதத்துவம் எங்கிருந்து வந்தது?//

    சரியான கேள்விதான். நடக்கும் சம்பவங்கள் பல மனதை வேதனை அடையச் செய்கிறது. பி கு வை நாங்களும் வழி மொழிகிறோம்.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் பி கு வை வழி மொழிந்ததற்கும் மிக்க நன்றி அன்பிற்கினிய நண்பர்களே.

    பதிலளிநீக்கு