பின்பற்றுபவர்கள்

வியாழன், 28 செப்டம்பர், 2017

டுபா(ய்) கூர்!!!

தொப்பை குறைய....தம் பை நிறைய.. 

நண்பர்களே ,

ஒவ்வொருமுறையும் நான் துபாய் என்று தட்டச்சு  செய்யும்போதெல்லாம் முதலில்  டுபாய் என்றுதான் எழுத்துக்கள் பதிவாகின்றன பிறகே அவற்றை துபாய் என்று மாற்றிவருகிறேன்.

அப்படி டுபாய் என்று வரும்போதெல்லாம் எனக்கு டுபாக்கூர் என்ற வார்த்தையும் மனதில் தோன்றி மறையும்.

இந்த டுபாக்கூர் என்ற வார்த்தை எந்த மொழியை சார்ந்தது என்று தெரியாவிட்டாலும் எந்த பள்ளிக்கூடத்திலும் படித்தறிந்திராவிட்டாலும் இந்த வார்த்தை ஏதோ, ஏமாற்று வேலை அல்லது பொய் , பித்தலாட்டம் தொடர்பான அர்த்தத்தை கொடுப்பதாக உணர்ந்திருப்போம்.  

ஆரம்ப காலங்களில் இந்த டுபாக்கூர் என்ற வார்த்தையை கேட்கும்போதெல்லாம் டுபாய் என்ற ஊரைத்தான்  டுபாய்  ஊர்  -  டுபாக்கூர் என்று சொல்கின்றனரோ என்று , கொஞ்சம் ஏடாகூடமாக இருந்தாலும், சின்ன வயதில் அப்படித்தான் நினைத்திருந்தேன்.

சமீபத்தில் டுபாய் -துபாய் சென்றிருந்த நேரத்தில் டுபாய்க்கும்  டுபாக்கூருக்கும் உள்ள தொடர்பை நேரடியாக பார்த்து அறிய முடிந்தது.

சொல்லப்போகும் விஷயம் உலகில் எல்லா இடங்களிலும் நிகழ்வதுதான் என்றாலும் இந்த செயலின் பெயர் துபாய்க்கு நன்றாகவே பொருந்தி போகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

முந்தைய பதிவான சீதை கோடில் சொன்னதுபோல் தூய்மையான டுபாய் மெட்ரோவிலிருந்து இறங்கி நடக்கையில் ,  அருகிலிருந்த அங்காடி தெருவை கடக்க நேர்ந்தது.

அந்நேரத்தில்  எனக்கு முன்னால் பத்து அல்லது இருபது அடி தூரத்தில் நடந்து கொண்டிருந்த ஒருவரை வழி மறித்து இரண்டுபேர்கள் அவரிடம் எதோ பேசிக்கொண்டிருந்ததாக பின்னால் வந்து கொண்டிருந்த எனக்கு தோன்றியது ..

அவர்களை நான் நெருங்க நெருங்க நிறுத்தப்பட்டவருக்கும்  நிறுத்தியவர்களுக்கும் இடையே எந்த நட்புரீதியான  தொடர்பும் இல்லை எனவும் வழி மறிக்கப்பட்டவர், மறித்தவர்களின் பேச்சைக்கேட்டு கொஞ்சம் திகைத்து போய், என்ன சொல்வதென்று புரியாமல் நிற்பதையும் உணர்ந்துகொண்டேன்.

கொஞ்சம் வேகமாக நடந்து அந்த நபர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்து , என்ன விஷயம் , ஏதேனும் பிரச்சனையா என்று கேட்டேன் , நம்மால் ஏதேனும் உதவமுடியுமா என்ற எண்ணத்தில்.

நிறுத்தப்பட்டவர்(ஆஸ்திரேலியர்) சொன்னார் இவர்கள் எதோ என்னிடம் கேட்கிறார்கள் எனக்கு புரியவில்லை என்றார்.

என்ன ஏது என்று விசாரித்ததில் நிறுத்தப்பட்டவரின் தொப்பையை  ஒரே வாரத்தில் குறைக்க தாம் அவரிடம் ஒரு உணவு கலவையை சாப்பிடும்படி சொன்னதாகவும் , எந்த ஒரு வியாபார நோக்குடனும் இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சொல்வதாகவும் சொன்னார்கள்.

அப்படி என்ன உணவு கலவை என்று கேட்டதற்கு , பேரீச்சை  பழ ஜாமும் அதில்  வாயில் நுழையாத இதுவரை கேட்டறிந்திராத , நோக்க்ரா,  கோக்கரா... என ..சில பொருட்களின் பெயரையும் சொல்லி வேண்டுமென்றால் தாங்களே அவரை அருகிலிருக்கும் பல சரக்கு கடைக்கு அழைத்து சென்று வாங்கி கொடுப்பதாகவும்  அவரிடம் சொன்னதாக என்னிடம் சில ஆங்கில சொற்களையும் பல ஹிந்தி, உருது , அரபு சொற்களையும்  கலந்து சொன்னார்கள்.

பொய்யை எந்த மொழியில் சொன்னாலும் சொல்பவரின் கண்களும் முக பாவமும் உடல் மொழியும் அவர்கள் சொல்வது பொய் என்று நமக்கு புலப்படுத்தும்.

அவ்வகையில் அந்த தனி மனிதரை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என புரிந்துகொண்ட நான் அந்த மனிதருக்கு "புரியும்படி" எடுத்துரைத்து அவரை அந்த ஏமாற்று காரர்களிடமிருந்து விடுவித்து அவருக்கு கை குலுக்கி அனுப்பிவிட்டு திரும்பி பார்த்தால் அந்த இரண்டு டுபாக்கூர் மனிதர்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் சென்று மறைந்து விட்டிருந்தனர்.

இதை குறித்து  தங்கி இருந்த விடுதி பணியாளரிடம் சொல்கையில் , இதே போல வேறொரு பயணியிடம் அவரது வெள்ளை தாடி ஒரே இரவில் கருப்பாக மாற்றும் மருந்து இருப்பதாக சொல்லி கடைக்கு அழைத்து சென்று இதேபோல பேரீச்சை  பழ ஜாமையும் வேறு சில பொருட்களையும் வாங்கி கொடுத்து அதை எப்படி சாப்பிடவேண்டு என்று சொல்லிவிட்டு  வாங்கிய பொருட்களின் விலையைவிட பல மடங்கு அதிகமாக காசு வாங்கியதுமல்லாமல் அவர்கள் செய்த இந்த "உபகாரத்திற்கு" நன்கொடையாக பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும் சொன்னதை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன்..

இனி இதுபோன்று சாலை  ஓரத்து மனிதர்கள் உங்களை அணுகி உங்களின் வழுக்கை தலையில் ஒரே இரவில் முடி முளைக்கவோ, அல்லது மாநிறமுள்ள உங்களை ஒரே இரவில் மாம்பழ நிறத்திற்கு மாற்றவோ அல்லது வெள்ளை முடியை கறுப்பாக்கவோ, குட்டையாக இருப்பவர்களை ஒரே இரவில் நெட்டையாக வளருவதற்கான    மருந்து இருப்பதாகவோ தங்களிடம் சொல்லி வழி மறித்தால், அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் , ஆண்டவன் கொடுத்த இந்த நிறமும் உயரமும் , தலைமுடியம் , வசீகரமும் போதும் என்று சொல்லி விடுபட்டு விடுவிடு என நடக்க பாருங்கள்.

சொல்ல மறந்த மருந்து: நண்பர்களே, மூளை இல்லாதவர்களுக்கு விரும்பும் அளவில் மூளை உண்டாகவும் , மூளை இருந்தும் போதிய சிந்தனை திறமை இல்லாதவர்களுக்கு ஒரே இரவில் சிந்தனை சக்தி அதிகரித்து பொங்கி வழியும் அளவிற்கு உதவும் மருந்து ஒன்று என்னிடம் இருக்கின்றது, தேவைப்படுபவர்கள் தயக்கமின்றி அணுகவும்.

கட்டணம் அவரவர் சொத்து மதிப்பை பொறுத்து (எளிய) ஒரே தவணை செலுத்தும்விதமாக.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


12 கருத்துகள்:

 1. eppadiyo ungalin uthaviyaal Australia napar thappithaar.

  ippadi kuda dubaila emaatrupavarkal irukkiraarkala enpathai ariyum poothu aacharyamaakathan irukku.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் மருந்து தேவைப்படும்போது தொடர்புகொள்வேன். டுபாக்கூர் என்ற சொல் அண்மைக்காலமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு அநேக வணக்கங்கள்.

   இன்னும் ஏழேழு பிறவிக்குமாக சேர்த்து அபரிமிதமாகவும் சம்பூரணமாகவும் இறைவன் தங்களை ஆசீர்வதித்திருப்பதால் என் வசமுள்ள மருந்து தங்களுக்கும் தங்கள் வம்சாவழியினருக்கும் எப்போதும் தேவைப்படாது.

   சொல்லின் பயன்பாடு சமீபமே எனும் தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   கோ

   நீக்கு
 3. ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை
  ஏமாற்றுகிறவர்களும்இருக்கத்தான் செய்வார்கள்
  எச்சரிக்கையுடன் இருப்போம்
  அருமையானபதிவு
  நன்றிநண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சரியாக சொன்னீர்கள். நீரும் நிலமும் சேர்ந்ததுதான் இந்த உலகம் என்பதுபோல இந்த இரண்டு கூறுகளும்(டூபாக்கூரும் ) இணைந்திருந்தால்தான் உலகம் முழுமை அடையுமோ என்னமோ?

   வருகைக்கு மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

   கோ

   நீக்கு
 4. துபாயே டுபாக்கூர்ன்னா நம்மூர்லாம்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டுபாக்கூர் என்பது நம்ம ஊரை பொறுத்தமட்டில் மிக மிக சாதாரணம் , எனவே வேறு ஏதேனும் பொருத்தமான சொல் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

   வருகைக்கு மிக்க நன்றிகள் ராஜி .

   கோ

   நீக்கு
 5. டுபாக்கூரே தான்!!! நாங்கள் இப்படி எல்லாம் வருபவர்களிடம் பேச்சுக் கொடுப்பதே இல்லை...விழிப்புணர்வுடன்??!!! ஹிஹிஹிஹிஹி....

  நீங்கள் அந்த ஆஸ்திரேலியரைக் காப்பாற்றியது நல்ல விஷயம்.

  கீதா: அட நீங்களும் சொல்ல மறந்த மருந்து என்று பி கு வில் சொல்லியிருப்பதைத்தான் நான் ஒரு பதிவாகவே என் மூளை செர்வீஸ் சென்டர் போய் அங்கு மாறி மாற்று மூளை ஒன்றை தற்போதைக்கு என்று பொருத்திக் கொண்டு அலைந்தேன்....அதான் பாருங்க இப்பல்லாம் பதிவு எழுதவே சுணக்கம்...என் மூளை எப்போது கிடைத்து ஹும்.,.....

  கிடைச்சதும் உங்க மருந்துக்கு வரேன்...ஆனா ஒன்னு, நண்பர் என்னிடம் கட்டணம் எல்லாம் வாங்க மாட்டீங்கனு நம்பிக்கை ஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் எப்பவுமே உஷார் பார்ட்டிகள் என்பது உலகறிந்த உண்மை செய்தி.

   இந்த மருந்து மறை கழன்றவர்களுக்கு என்று புரிந்துகொண்ட என்னிடம் கேட்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

   இருந்தாலும் பரவாயில்லை, தேவைப்படும்போது சொல்லி அனுப்புங்கள்.

   கட்டணம் உங்களுக்கு கூடுதலாகும் ஏனென்றால் இப்போதிருக்கும்(??) மூளையை பட்டி பார்த்து, டிங்கரிங் சால்டரிங் எல்லாம் செய்த பின்னரே மருந்து கொடுப்பதைபற்றி யோசிக்க வேண்டும்.

   வியாபாரம் வேறு நட்பு வேறு - நான் ரொம்ப கறாரு!! மேலும் மருந்து இலவசமாக பெற்று பயன்படுத்தினால் அது வேலை செய்யாது.

   வேணும்னா ஏஜெண்சி எடுத்து செய்தால் கமிஷன் கிடைக்கும்.

   யோசித்து சீக்கிரமே சொல்லுங்கள் , வியாபாரம் அமோகமாக உள்ளது , பின்னர் இருப்பு தீர்ந்துபோனால் நீங்கள் சோர்ந்துபோய்விடுவீர்கள்.

   வருகைக்கும் வழக்கமான துள்ளல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 6. நண்பரே ஆறே வாரத்தில் சிகப்பழகு என்று அறுபது வருடமாக இந்தியாவில் (ஏ)மாற்றி வருகின்றார்களே..... அதைவிடவா இது கொடுமை ?

  சரி அது கிடக்கட்டும் ஏதோ கறிக்கடையில் மூளை விற்பனைக்கு உள்ளதாக சொன்னீர்களே முக்கால் கிலோ தேவகோட்டை பார்சல்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,


   சிகப்பழகு விளம்பரத்தால் நீங்கள் ஏமார்ந்ததை எண்ணி வருந்துகிறேன் எனினும் மனம் தளராமல், இப்போது இருக்கும் உங்கள் ராஜ களை அழகுடன் மகிழ்ச்சியாய் இருங்கள்.

   ஆனால் நம்ம சரக்கு அப்படி இல்லை.

   இது மூளை விஷயம் என்பதால் முக்கால் கிலோ அரை கிலோ என்று எல்லாம் வெட்டி கொடுக்க முடியாது, இது அவரவர் மண்டை ஓட்டின் கன பரிமாணங்களை பொறுத்தே கொடுக்கப்படும்.

   தங்களுக்கு இதுபோன்ற அனுபவம் அபுதாபியில் ஏற்பட்டதுண்டா? அல்லது கேள்விப்பட்டதுண்டா?

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு