பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 ஜூலை, 2026

தொட்டவனை(யும்) விடமாட்டேன்.

யாராக இருந்தாலும்!!!  

நண்பர்களே,

உழைத்த பலன் உழைத்தவனுக்கே  உரியது.

அதை யாரேனும் வஞ்சனையால், சூழ்ச்சியால், நம்பிக்கை துரோகத்தால், அபகரித்து தமது நலனுக்காக தமது வாரிசுகளின் நலனுக்காக  பயன்படுத்துவது மாபெரும் குற்றம் -  மன்னிக்கமுடியாத பாவச்செயல்.

ஞாயமாக உழைத்து சம்பாதித்ததில் ஒரு பங்கை அரசிற்கு வரியாக செலுத்துவதும் , மேலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அந்த வருவாயிலிருந்து ஒரு பகுதியை காணிக்கையாக செலுத்துவதும், வேறு சிலர் , அதின் ஒருபகுதியை இல்லாதவர்கள், நலிந்தவர்கள் போன்றோரின் நல உதவிக்காக தாமாக முன்வந்து கையளிப்பதும் வழக்கம்.

அதே சமயத்தில் நாட்கணக்கில், மாதக்கணக்கில் கடினமாக உழைத்து, காடு மலை மேடுகள் கடந்து, கடுமையான மழை, வெள்ளம், புயல், சூறாவளி, பனி,வெயில் போன்ற சூழல்களிலும், பல மையில்கள்  பயணப்பட்டு  ஓயாமல் பாடுபட்டு  சம்பாதித்து தமக்கும் தம் குடும்பத்தின் நலனுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும்  சிறுக சிறுக சேர்த்து வைத்த செல்வத்தை, தமக்கிருக்கும் அபரிமிதமான அதிகார பலத்தின் ஆணவத்தால், இவர்களால் நம்மை  என்ன செய்யமுடியும் என்கின்றதான அகங்கார சிந்தையுடன்  பகல் கொள்ளை அடித்து தமது வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொண்டு வாழ்பவர்கள் தண்டனைக்குரியவர்களே.

இதுபோன்று  மற்றவர்களின் உழைப்பை தொட்டவர்கள் யாராக இருந்தாலும், நாம் அவர்களைவிட சிரியவர்களானாலும் தட்டிக்  கேட்டு மட்டும் அல்ல கொட்டியும் காட்டும் வல்லமை துணிச்சல் நமக்கு வேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கும் ஒரு நிகழ்ச்சியை  சமீபத்தில் காண நேர்ந்தது.

வீசி அடிக்கும் சூறாவளி எதிர்காற்றை எதிர்த்தும், புரட்டி எடுக்கும் மா மழை பொழிவுகளை சமாளித்தும், எதிர்ப்படும் எதிரிகளை சமாளித்து, தம் உடல் வருத்தி, எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்று உழைத்து  சிறுக சிறுக கொண்டுவந்து தம் வீட்டில் சேகரித்துவைத்து தேவைப்படும்போது  -  வறட்சி காலத்தில் - குளிர்காலத்தில்  தம் குடும்பத்திற்காக காத்து  வைத்திருக்கும் உழைப்பின் சேமிப்பை,  கன்னமிட்டு அபகரிக்கும் நோக்கத்தில் ஒரு  பலம் வாய்ந்த குழு  அந்த பொக்கிஷத்தில் கைவைத்தது.

ஒரு பெரும் குழுவின் மொத்த நபர்களையும் எதிர்க்க  நம்மிடம் வலுவிருக்கிறதா? சமாளிக்க முடியுமா? நமது சேமிப்பை காத்துக்கொள்ள முடியுமா? என்றெல்லாம் யோசித்து கொஞ்சம் பொறுமை காக்க நினைத்தாலும், ஏமாற்றத்தில் விளைந்த பெரும் சினத்துடனும் , இத்தனை நாட்கள் நாம் பட்ட பாடுகளின் பலனைத்தனையையும் ஒரு நொடியில்  அலட்சியத்துடன் அபகரித்து விட்டனரே  என்கின்ற ஆதங்க  ஆற்றாமையின் வெளிப்பாடாக தமது  சிறகுகளை விரித்தன அந்த தேன்கூட்டின் மொத்த தேனீக்களும்.

எவனெல்லாம் தொட்டானோ அவர்களை  ஒவ்வொருவனாக துரத்தி துரத்தி அவர்களின் எந்தெந்த உடல் பாகங்கள் தமது கண்களுக்கு  தெரிகிறதோ அங்கெல்லாம் ,  அவற்றின் மீது தமது கூறிய கொடுக்குகள் கொண்டு கொட்டி ட்டித்தீர்த்தபின்னும் தமது கோபம், ஏமாற்றம் தீர்ந்தபாடில்லாமல், அவர்களது, கண்கள், காதுகள், கன்னங்கள், கைகள், கால்கள் என எல்லா இடங்களிலும் பரவலாக மொய்த்து உட்கார்ந்து தொட்டவர்களின்  உருவங்கள் தெரியாதவண்ணம் அவர்களை வலி  வேதனை என்னும் சித்தரவதையால்  சிறைபிடித்தன.

மேலும் இந்த சிறைத்தண்டனை இவர்களுக்கு போதாது என்று தமக்குள் தமது தேன்மொழியில் அங்கலாய்த்தும் இருக்கும் என நினைகின்றேன்.

அவர்கள் அந்த "கொடுக்குச்சிறையில்" இருந்தபோது  பட்ட வேதனையைவிட  மருத்துவ மனை சிகிச்சையில்  இருந்தபோது அனுபவித்த  வேதனைகளே  அதிகம்  என்று அக்கம் பக்கத்தினர் பேசிக்கொண்டது  அந்த தேனீக்களுக்கு தெரிந்திருக்குமா?

இதை பார்த்த  பலரும், இதனை கேள்விப்பட்ட பலரும் இதுபோன்று செய்ய திட்டமிட்டிருந்த பலரும்,  இனி நாமும் இதுபோன்று மற்றவர்  உழைப்பை - மற்றவர்க்கு சொந்தமானதை அது எதுவாக இருந்தாலும் தொடக்கூடாது என்ற முடிவுக்கு வந்ததாக சொல்லக்கேட்டேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக