பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 ஜூலை, 2026

பசுமாடும் தென்னை மரமும்! 1

 கெட்டி மேளம் !... குட்டிக்கதை 

நண்பர்களே ,

 இந்த பதிவு எமது முந்தய பதிவில் - (பசுமாடும் தென்னை மரமும்) "சம்பந்தமே இல்லாமல் தமது முழு பேச்சையும் வந்திருக்கும் நிகழ்ச்சி என்ன என்பதை அறியாதவர்கள்போல் ஏதேதோ  பேசிவிட்டு இறுதியில் சம்பிரதாயத்திற்கு மணமக்களை ஓரிரு வார்த்தைகள் சொல்லி வாழ்த்திச் செல்லும் ஒரு நிகழ்ச்சியை காண நேர்ந்த எனது மனதில் நிழலாடிய ஒரு பழைய குட்டிக்கதை நினைவிற்கு வந்தது." என்று குறிப்பிட்டிருந்தேனே  அந்த குட்டிக்கதைதான் இதோ இங்கே உங்கள் நினைவிற்கு:

பள்ளியில் இறுதி ஆண்டு தமிழ் தேர்வில் நாம்  அன்றாடம் பார்க்கக்கூடிய - கவனத்திற்கு வரக்கூடிய- புழக்கத்தில் இருக்கக்கூடிய - பயன்படுத்தக்கூடிய சாமான்யமான  விடயம் குறித்ததான  பொதுவான ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை எழுத சொல்வார்கள் என்று ஆசிரியர் கூறியதும் ,  உதாரணமாக  , மரம்,குளம், ஆறு, ஓடை, கடல், காளை , உழவு , உணவு, அப்பா, அம்மா, நண்பன் , ஆசிரியர்.... போன்று சில தலைப்புகளை  ஆசிரியர் கூறி இருக்கின்றார்.

அந்த வகுப்பிலிருந்து ஒரு மாணவன்  பரீட்சயில்  சிறப்பாக கட்டுரை எழுதவேண்டும் என்று நினைத்து , தமது மனதிற்கு மிகவும் நெருக்கமான தினமும் பார்க்கக்கூடிய , தொட்டு தொட்டு பார்த்துப் பழகிப்போன, எப்போதும் தமது மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்  பசுமாட்டைக்குறித்ததான கட்டுரைதான் கேள்வியில் வரும் என்று முழுமையாக நம்பி  அதற்காக தயாரித்து இருந்தானாம்.

 தேர்வு நாளன்று கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதிக்கொண்டு வந்தான்.

 இறுதியாக கட்டுரைக்கான நேரம்.

கொடுக்கப்பட்ட தலைப்பு என்னவென்று பார்க்காமல், தான் தன்  மனதில் பதித்துவைத்திருந்த பசுமாட்டை குறித்ததான நினைவுகளை அசைபோட்டு...எழுத ஆரம்பித்தான்.

பசு:

வீட்டில் வைத்து வளர்க்கக்கூடிய சாதுவான பிராணிகளுள் முக்கியமான பிராணி பசு.

பசு ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்பட வேண்டிய பிராணி.

பசு பல வீடுகளில் தெய்வமாக வழிபடக்கூடியது.

பசு நான்கு கால்களும் , இரண்டு  கொம்புகளும், இரண்டு காதுகளும், ஒரு நீண்ட வாலும், பெரிய உடலமைப்பையும் கொண்ட  விலங்காகும்.

பசு  புண்ணாக்கு, வைக்கோல், தவிடு, அகத்தி கீரை, புல் , இலை தழைகளை உணவாக உட்கொள்ளக்கூடியது.

பசு மிகவும் சாந்தமான எளிதில் பழகக்கூடிய விலங்கு.

பசு புதிய  வீடு கிரகபிரவேஷம் செய்யும் நாளன்று அந்த வீட்டில் முதன் முதலில் பிரவேசிக்க செய்யும் பிராணி.

பசு பால் கொடுக்கும் அந்த பால் மிகவும் சக்தி வாய்ந்தது. குழந்தைகளின் வளர்ச்சியில் அவர்களின் ஆரோக்கியத்தில் பசுவின் பால் பெரும் பங்கு வகிக்கின்றது.

பசுவின் பால் நோயாளிகளுக்கான ஊட்ட சக்தி உணவாகவும் பயன்படுகிறது.

பாலில் இருந்து தாயிர் , மோர்  வெண்ணெய் , நெய் , பாலாடை, பால் கட்டி, பன்னீர்   போன்ற பொருட்கள் பிரித்தெடுத்து பயன்படுத்தப்படுகிறது.

பசுவின் சாணம் அதன் சிறு நீர் போன்றவை பயிர் நிலத்திற்கு இயற்கை உரமாகவும் , அதன் சாணம் மற்றும் சிறுநீர், எரிவாயு தயாரிக்கவும் பயன்படுகிறது.

பசு ஒவ்வொரு வீட்டின் பொருளாதார சுபீட்சத்தை மேன்படுத்துகிறது.

பசுக்கள் உழவனுக்கு உற்ற தோழனாகவும் விளங்குகின்றன.

தமிழர் திருநாளின் பிரத்தியேக கொண்டாட்டமான மாட்டுப்பொங்கல் அன்று இந்த பசுக்களை குளிக்க வைத்து, சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம் , சந்தனம் பூசி, அதன் கொம்புகளை  சீவி வர்ணம் தீட்டி, அந்த கொம்புகளுக்கு புதிய குப்பிகள் அணிவித்து அதன் கழுத்துகளுக்கு புதிய  கயிறும் மூக்கிற்கு புதிய மூக்கணாங்கயிறு அணிவித்து, நெற்றியில் சந்தன பொட்டும் , குங்குமப்பொட்டு வைத்தும் , உடல் மீது  பன்னீர் தெளித்தும் அதன் கழுத்தை சுற்றி, வடை, கரும்பு, முறுக்கு மாவிலை போன்ற பொருட்கள் பிணைக்கப்பட்ட மாலை  அணிவித்து, சாம்பிராணி தூபம் காண்பித்து, அதற்கு பிரத்தியேகமான வகையில் சமைக்கப்பட்ட , முந்திரி, திராட்ச்சை, பயிறு, பருப்புகள்,  வெல்லம் கலந்த புத்தரிசி பொங்கலிட்டு வணங்கி மகிழ்வார்கள்.

பசு இந்திய மக்களின் வாழ்வோடு, குறிப்பாக தமிழ் மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட குடும்ப உறுப்பினராகவே கருதப்படுகிறது.

பசு மனித வாழ்க்கைக்குப்பல வகைகளில் உதவும் அரிய விலங்கு. இதனை அன்புடன் பராமரித்து பாதுகாத்து, கருணையோடு வளர்க்க வேண்டும்.

இவ்வாறு பசுவைகுறித்தான தமது தயாரிப்பு ஒவ்வொன்றையும் நினைவு படுத்தி  , முகப்பு, சிறப்பு,  என உப தலைப்புகளிட்டு ஒருவழியாக , மனதிருப்த்தியுடன் கட்டுரை எழுதி, முடிவு எழுதும் நேரத்தில் , அனைத்து கேள்விகளுக்குமான சரியான பதில்களை எழுதி இருக்கின்றோமா என சரி பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு இறுதி கட்டுரை கேள்வியில் எழுத கேட்க்கப்பட்டிருந்த தலைப்பு "பசு" அல்ல, அது " தென்னை மரம்".

இப்போது என்ன செய்வது நேரம் முடியப்போகிறது, மேலும் தென்னை மரம் பற்றி நாம் ஒன்றும் படிக்கவில்லை, தென்னை மரம் குறித்து நாம் ஒன்றும் தயாரிக்கவில்லை, நம் மனதில் எப்போதும்  பசுவை பற்றித்தானே சிந்தித்துக்கொண்டிருக்கிறோம், அது மட்டும்தானே நமக்கு தெரியும்... இப்போது என்ன செய்வது?....

மீண்டும், பசுவைப்பற்றி எழுதிய  கட்டுரை பக்கத்தை திருப்பி.... அந்த கட்டுரையின் முடிவுரையாக, " இத்தனை சிறப்பு வாய்ந்த பசுவை தென்னை மரத்திலும் கட்டுவார்கள்" என எழுதி கட்டுரையை முடித்து விடைத்தாளை கொடுத்துவிட்டு தேர்வு மையத்தை விட்டு முழு மனதிருப்த்தியுடன், மகிழ்ச்சியுடன் வெளியில் வந்தானாம்.

இப்படிதான் சிலர், திருமண வீட்டிற்கு சென்று மணமக்களை நல்ல வார்த்தைகள்  சொல்லி வாயார மனதார வாழ்த்துவதை விடுத்து சம்பந்தமே இல்லாத, தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, வன்மம், கோபம், பொறாமை, பொச்சரிப்பு, ஆற்றாமை, அவமானம், தோல்வி, விரக்தி போன்ற எதிர்மறை சிந்தனைகளின் வெளிப்பாடான எண்ணங்களைப்   பிரதிபலிக்கும் வார்த்தைகளை தமது  பேருரையாக(!!!??) நிகழ்த்தி , இறுதியில் ஏதோ ஒரு ச ம்ப்ரதாயத்திற்காக , "வாழ்க மணமக்கள்" என தமது உரையை முடிப்பது  பசுவைக்குறித்து எழுதிவிட்டு இறுதியில் தென்னை மரத்தில் காட்டுவார்கள் என சொல்லி முடிப்பதுபோல் முற்றிலும் ஏற்புடையதல்ல.

இதில் திருமண  வீட்டார் , உறவினர்கள், விருந்தினர்கள் மட்டுமின்றி  திருமணத்தில் இணைந்திருக்கும் அந்த  விழாவின் நடு நாயகமாக விளங்கும் முக்கியமான இருவர்- அந்த மணமக்களின்  மனங்களில்  , இவரை ஏன் அழைத்தோம்? இவரை ஏன் வாழ்த்துரைக்க சொன்னோம்?, இவர் என்ன பேசினார்?, வரின் பேச்சுக்கும் இன்றை நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? மணமக்களுக்கு வாழ்த்தாக , அறிவுரையாக, என்ன சொன்னார்? போன்ற கேள்விகள் அந்த மங்கள  நாளின் மகிமையை , மாட்சிமையை, மகிழ்ச்சியை, சிறப்பை, உன்னதத்தை, உற்சாகத்தை முற்றிலுமாக மழுங்கடிக்கச்செய்து அனைவரின் கோபத்திற்கும் எரிச்சலுக்கும்  ஆளாகும் " சிறப்பு " விருந்தினர், நகைப்பிற்கும்   ஏளனத்திற்கும் உரியவர்கள் என்பது பலரது கருத்து.

உங்கள் கருத்து என்ன?

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக