பின்பற்றுபவர்கள்

சனி, 5 செப்டம்பர், 2020

என் நண்பன் போல யாரு மச்சான்….

 உறவுகள் தொடர்கதை….
நண்பர்களே,

உலகில் பல நண்பர்கள், பள்ளி கல்லூரி தோழர்கள்,உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் வேலை இடத்து சக ஊழியர்கள் மற்றும் பல குழுக்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்திற்காகவும் தங்கள் உறவுகளை தொடர்வதற்காகவும் உறவுகளை   மேம்படுத்திக்கொள்வதற்கும்  தங்களுக்குள் பலவகையான தொடர்பு முறைமைகளை பயன்படுத்தி வருகின்றனர்.


முன்  காலத்தில், கடித தொடர்பு, தொலைபேசி தொடர்பு போன்றவற்றின் பரிணாம வளர்ச்சியாக  சாதாரண  கை  பேசி  போன்றவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, மின் அஞ்சல்,  குறுஞ்செய்திகள்,   முக நூல், வாட்ஸ் ஆப் போன்றவற்றின் வருகையால் இப்போது உலகின் எந்த மூலையில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு  இலவசமாக துரிதமாக முகம் பார்த்து பேசும்படியும் தகவல்பரிமாற்றம் செய்துகொள்ளவும் பேருதவியாக இருப்பது மனிதகுலத்திற்கு கிடைக்கப்பெற்ற    வரப்பிரசாதம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அறிவியல் , தொழில்  நுட்பத்தின் கண்டுபிடிப்புகள் அவற்றை யார் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றோம் என்பதை பொறுத்து அதன் நன்மை தீமை விளங்குகின்றது.

எல்லா கண்டுபிடிப்புகளும் அறிவியல் சாதனங்களின் வரவுகளும் மனித குலத்திற்கு முற்றிலும் நன்மை மட்டுமே என்று சொல்லமுடியாவிட்டாலும், பெரும்பான்மையான அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்கானவை என்பதிலும் சந்தேகம் இல்லை.

அப்படி கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களுள் கைபேசி செயலிகளுள்   ஒன்றான WhatsApp என்பதன் பயன்பாடு மிக முக்கிய ஒன்று என்பதைவிட மிக அத்தியாவசியமானது என்று சொல்வதே சால  பொருத்தம்.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் கைபேசி இல்லாதவர்களே இல்லை அதிலும் இந்த WhatsApp செயலி இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு எவரிடத்திலும் சர்வ சாதாரணமாக தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக இந்த செயலி விளங்குகின்றது.

முதலில் இந்த செயலியின்மூலம் குழுக்கள் அமைத்து உறவுகளை உயிரோட்டத்துடன்  வைத்து நட்பை போற்றும் அனைத்து  குழுக்களுக்கும் எமது பாராட்டை தெரிவிக்கும் அதே சமயத்தில் இந்த உறவுகளுக்குள் சலிப்பை ஏற்படுத்தி உறவுகளின் தொடர்பு இருட்டடைப்பு  செய்யும்படியான  சூழலை இந்த குழுக்கள் தவிர்ப்பது நல்லது என்ற என் கருத்தையும் இங்கே பதிவாக்கம் செய்வது அவசியம்  என கருதுகிறேன்.

நீண்ட  வருடங்களுக்கு பின் பார்க்க நேர்ந்த நம் நண்பர்களிடம், நம் உறவினரிடம்  நாம் கொடுக்கும் நம் தொடர்பு WhatsApp எண்களால் ஆரம்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சியும் புளங்காகிதமும் சொல்லில் அடங்காதது.  

அதே சமயத்தில் போக போக அந்த தொடர்புகளால் சலிப்பு ஏற்படுவதுவும்  தவிர்க்கமுடியாமல் போகிறது.

குழுக்கள் மட்டுமின்றி தனி நபர் தொடர்பு நண்பர்கள் உறவினர்களிடமும்  சந்தோஷத்தைவிட சலிப்பு மிகையாகிப்போவது நடைமுறை எதார்த்தம்.

எதனால்?

WhatsApp எண் கிடைத்த அடுத்தநாள்  விடிந்தும் விடியாத காலை பொழுதில்  "காலை வணக்கம்", பனிரெண்டு மணியை தாண்டியதும் " நன் பகல் வணக்கம்" பின்  "மாலை வணக்கம்," " இரவு வணக்கம்" போன்ற செய்திகளால் மகிழ்ச்சியடைபவர்களைவிட எரிச்சல் அடிபவர்களே அதிகம் என்பது சமீபத்தைய ஆய்வின் வெளிப்பாடு.

அதே சமயத்தில் தொடர்பில்லாத , சம்பந்தமே இல்லாத forwarded செய்திகளை , என்ன ஏது  என்று தெரியாமலேயே அடுத்தவருக்கு அனுப்பும்போதும், அடுத்தடுத்து 40 , 50 செய்திகளை அடுத்தவரின்  சூழ்நிலை அறியாமல் அனுப்புவதாலும்  பல பக்கங்கள் நிரம்பும் செய்திகளை அனுப்புவதாலும் ஆண்  பெண் வித்தியாசமின்றி செய்திகள் அனுப்புவதாலும் செய்தி பெறுபவர் பெரும் சலிப்பிற்கும் அலுப்பிற்குள்ளாவதும் அனுப்புபவரின் மீது கொஞ்சம் அன்பும் மரியாதையும் குறைவதுவும்  தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

அன்போடும் நட்போடும் எதிர்பார்ப்போடும் கொடுக்கப்பட்ட WhatsApp  எண்களால், எரிச்சலும் ஏமாற்றமும் ஏற்படுவதுவும் அதனால் அந்த நண்பர் அல்லது உறவினரின் எண்களை  block செய்யும் நிலைமையும்  ஏற்படுவதும் உண்டு.

எனவே தேவையான செய்திகள், அவசியமான, அவசரமான  தகவல்கள், பெறுபவருக்கு தொடர்புள்ள, பயனுள்ள  புகைப்படங்கள்  மட்டுமே அனுப்புவதும் அடிக்கடி இல்லாமல் வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை நலம் விசாரித்து தகவல் அனுப்புவதாலும் உறவுகள் மன  மகிழ்ச்சியுடன் தொடருவதோடு  நீடித்து நிலைபெறும் என்பது என் கருத்து.

சமீபத்தில், பல பத்து ஆண்டுகளுக்கு முன் என்னோடு பள்ளி நாட்களில் படித்த, ஒத்த சிந்தனையுள்ள  -  எதார்த்தங்களையம், நிதர்சனங்களையும்   உணர்ந்த  என் நண்பர்களை இணைத்து, அவர்களோடு தகவல் பரிமாற்றங்கள் செய்து மன மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்   ஒரு WhatsApp  குழுவை அமைத்து தொடர்பு ஏற்படுத்தி,  மகிழ்ச்சியையும் புளங்காகிதத்தையும் ஏற்படுத்தி  இருக்கும் என் இனிய நண்பருக்கு இந்த பதிவின்மூலம் நன்றியையும்  என் பள்ளி கல்லூரி நண்பர்களுக்கு மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து  குழு உறுப்பினர்களுக்கும்  எந்தன்  அன்பான வணக்கங்களையும், உங்களின் நட்புகளும்  உறவுகளும் நீடித்து தொடர   வாழ்த்துக்களையும்  தெரிவித்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
 கோ.




8 கருத்துகள்:

  1. தினமும் வாட்ஸ்அப்பிற்காக 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்குகிறேன். சுமார் 30க்கும் மேற்பட்ட குழுவில் இணைத்துள்ளனர். அதனைப் பார்ப்பதில்லை. தனியாக வரும் செய்திகளை மட்டுமே படிக்கிறேன். காலை வணக்கம்..போன்று செய்திகளை அனுப்புவோருக்கு "வணக்கம், forwarding செய்தியைப் பகிர வேண்டாம் என அன்போடு வேண்டுகிறேன். காலை வணக்கம், மாலை வணக்கம் தவிர்க்கவும். சொந்தமாக உங்கள் கருத்தை, சொந்த அனுபவத்தை பகிர வேண்டுகிறேன், அவ்வாறு எழுதும்போது நமக்கு எழுத்துப் பயிற்சி கிடைப்பதோடு நினைவாற்றல் மேம்படும், வாழ்த்துகள்." இந்த பதிவு நல்ல பலனைத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள் , ஆமாம் ஐயா சில forwarded செய்திகள் பலமுறை நமக்கு வரும்போதும் காலை மாலை வணக்கங்கள் காலம் நேரம் தெரியாமல் (international) நேர வித்தியாசம் தெரியாமல் வரும்போது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கின்றது.

      நீக்கு
  2. காலை வணக்கம் - :) இரவு பன்னிரெண்டு மணி ஆனதுமே இப்படி காலை வணக்கம் அனுப்பும் நண்பர் ஒருவர் உண்டு! தினம் தினம் இப்படி அனுப்பும் சிலரால் குழுவை விட்டு விலகும் எண்ணம் பலமுறை வந்ததுண்டு.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி வெங்கட்.
      காலை மாலை வணக்கங்கள் தவிர முக நூல் செய்திகளையும் இணைத்து செய்திகள் மற்றும் அரசியல் மதம் சார்ந்த செய்திகளும் வருவதால் என் நண்பர்கள் குழுவிலிருந்து பலர் விலக முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. பொறுப்பும் தேவைப்படுகிறது நண்பர்கள் வட்டாரத்தில்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் தனபால்.

      நீக்கு
  4. மிகவும் சரியானது என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. தங்கள் அனுமானம் சரி என்றே தோன்றுகின்றது. வருகைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு