பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 நவம்பர், 2016

கொட்டி, சுட்டி காட்டு!

என்னாச்சி???


நண்பர்களே,

முன்பொரு காலத்தில் அகில இந்திய வானொலி- சென்னை வானொலி  நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பல நிகழ்ச்சிகள் வழங்கப்படும்.

அவற்றில், பாப்பா மலர்,இளைய பாரதம்  போன்ற நலம் தரும் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வந்தன, அவை  குழந்தைகளுக்கு பிடித்தமான, பிரயோஜனமாக நிகழ்ச்சிகள்.

அவற்றை வழங்கியவர்களுள், சிறுவர்களால் மட்டுமின்றி பெற்றோர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்டவர்களுள் திரு நடராஜன் என்ற இயற்பெயர்கொண்டவரும் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு சில வருடங்களிலேயே "வானொலி அண்ணா" என்று செல்லமாக அழைக்கப்பட்டவருமான திரு கூத்தபிரான் என்ற புனைபெயருக்கான சொந்தக்காரர்.

அவர்களின் நிகழ்ச்சிகள் அத்துணை சுவாரசியமாகவும் குழந்தைகளை நல்ல சிந்தனையாளர்களாகவும் அறிவாளிகளாகவும் சமூக அக்கறை , பிறர்பால் அன்பு, மரியாதை , இரக்கம், தர்ம சிந்தனை  மிக்கவர்களாக , பொது அறிவு வளர்ப்பவர்களாக,வலுவான பாரதத்தை தேச பற்றை  உருவாக்குபவையாக இருந்தன என்பதை அந்த நிகழ்ச்சியினை கேட்டவர்கள்   அல்லது கேட்டவர்கள்  சொல்ல கேட்டவர்கள் நன்கு அறிவீர்கள்.

அந்த நிகழ்ச்சிகளில் பங்குபெறும் குழந்தைகள் வயதில் மிக மிக இளையவர்களாக இருந்தபோதிலும் அவர்களின் மொழி  - பேச்சுக்கள் எல்லாம் சிறப்பானதாக இருக்கும், எங்கேயேனும் ஒரு துளிகூட கொச்சையாகவோ, மலிவானதாகவோ, பெற்றோர்களை பெரியோர்களை அழைக்கும்போது ஒருமையிலோ அழைக்காதபடி மிகுந்த தரத்துடன் பேசி நடித்து நிகழ்ச்சிகளை தருவார்கள்.

ஆனால் இப்போது  சமீபத்தில்  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை காணும் "பாக்கியம்" கிட்டியது.

அதில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளும் ஆறு வயதிற்குட்பட்டவர்களே.

அந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒரு "அண்ணன்" அந்த சிறுவர்களிடத்தில் கேட்கும்  கேள்விகள், நிகழ்ச்சி பார்த்த  எனக்கு ஏற்பட்டது போன்றே என்னை போன்றோருக்கு  அருவருப்பையும்    கொடுத்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

பெற்றோர்கள் முன்னிலையில், குழந்தைகளிடம் அவர்கேட்கும்   கேள்விகளுள் ஒரு சில இதோ:

1   உங்க அப்பா எந்த நடிகர் மாதிரி இருக்கின்றார்.
2. உங்க அம்மா எந்த நடிகை மாதிரி இருக்கின்றார்.
3.உங்க அப்பா உங்க அம்மாவை என்ன சொல்லி திட்டுவார்.
4. உங்க அம்மா உங்க அப்பாவை என்ன சொல்லி திட்டுவார்.
5.உங்க அப்பா அம்மாவிற்கு என்னென்ன காரணங்களுக்காக சண்டை வரும்.
6.காதல்னா என்ன? 
7. லவ் லெட்டெர்ன்னா என்ன?
8.உனக்கு பாய் பிரண்டு /கேர்ள் பிரண்டு இருக்காங்களா?
9.உங்க தாத்தாவின் தலைமுடி எப்படி கருப்பாக இருக்கின்றது.
10.லவ்வுன்னா என்ன?
11.உங்க அப்பாவிற்கு கேர்ள் பிரண்டு இருக்காங்களான்னு கேட்டு சொல்லு.  
12.உங்க அப்பா உங்க அம்மா கிட்ட பூ கொடுத்தபோது உங்க அம்மா என்ன சொன்னாங்க?
13.உங்க அப்பா அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்போது நீ எங்கே இருந்த?
14.உங்க அம்மா சமையலில் உனக்கு பிடிக்காதது எது?
15.உங்க அம்மா மாதிரி கலராக ஆகணும்னா நான் என்ன செய்யணும்?
16.உங்க வீட்ல சூப்பரா சண்டை போடுவது  யார்,அப்பாவா அம்மாவா?
17.உனக்கு ஏன் மீசை இன்னும் வளரவில்லை
18.உங்க அப்பா தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்க அம்மா  உங்க அப்பாவை  டேய் எருமைமாடு சீக்கிரம் எழுத்துடுடானு கூப்பிடுவாரா?
19.உங்க அம்மா ஜாலியாக இருக்கும் போது உங்க அப்பாவை எப்படி அழைப்பார், கோபமாக இருக்கும்போது எப்படி அழைப்பார். 
20.உங்க அப்பா அம்மா சண்டையில் யார் ஜெயிப்பார்கள்.
21.உனக்கு அப்பாவை  பிடிக்குமா அம்மாவை பிடிக்குமா?
22.உங்க அப்பா உங்க அம்மாவிற்கு  அல்வாவிற்குப்பதில் மைசூர் பாகு கொடுத்ததும் உங்க  அம்மா என்ன சொன்னாங்க?
23.லஞ்சம்னா என்ன?(பதில் சொன்ன, பால்மணம் மாறாத,  சிறுவன் லஞ்சுனா சாப்பாடு என்றான், பாவம் அந்த சிறுவர்களின் பிஞ்சு மனதில் நஞ்சை அல்லவோ  விதைக்க முயல்கிறது இந்த கேள்வி.)
24.குழந்தைகளை அவர் ,  டேய் ,வாடா, போடா, இருடா என்று அவர் அழைப்பதும் ஏற்புடையதாக இல்லை.
25.அந்த அம்மாவை கொஞ்சம் முழு சைஸ்ல காட்டுங்கப்பா என்று ஒளிப்பதிவாளரிடம் சொல்வதும் கேட்க சகிக்கவில்லை.

இதுபோன்ற பல அபத்தமான - சங்கோஜமான கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியின் தரத்தை எங்கோ கொண்டுபோகிற அந்த அண்ணனுக்கு என்னாச்சி?

குழந்தைகளும் தங்கள் பெற்றோரையும் தாத்தா பாட்டி, மற்றும் குடும்பத்தினரையும் ஒருமையில் மரியாதை குறைவாக  பேசுவதையும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கண்டிக்காமல் - நிறுத்தாமல் அவர்களை உற்ச்சாகப்படுத்தும்விதமாக பார்வையாளர்களை கைத்தட்ட சொல்லி நிகழ்ச்சி நடத்துவது பார்க்க அருவருப்பாக இருக்கின்றது.

பிள்ளைகளை இதுபோன்ற  நிகழ்ச்சிகளை பார்க்க உற்சாகப்படுத்துவதையும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்வதையும்  பெற்றோர்கள்  தவிர்க்கவேண்டும்.

திரை படங்களைக்குறித்தும் திரைப்பட பாடல்களை குறித்தும் நடிகர் நடிகைகளை குறித்தும் கேள்விகள் கேட்டு சிறுவர்களின் சிந்தனை சீர்கேட்டிற்கு வித்திடும்  இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஏற்படும் தர குறைவான அம்சங்களை குறித்து தலையில்   "கொட்டி - சுட்டி" காட்டுவதால்   நிகழ்ச்சிகளின் தரம் இனியேனும் கொஞ்சம்  உயரும் என நினைக்கின்றேன்.

நீங்க என்ன நினைக்கின்றீர்கள்?

பின் குறிப்பு:இவ்வளவை பார்த்து நினைவில் வைக்க முடிந்த எனக்கு அந்த நிகழ்ச்சியின் பெயர் மட்டும் நினைவில் இல்லாமல் போய்விட்டதே  என்னாச்சி எனக்கு?.

 நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ6 கருத்துகள்:

 1. அருமையான கட்டுரை நண்பரே மனஆதங்கத்தை கொட்டி விட்டீர்கள் சமூக நலனில் அக்கரையுள்ள ஒரு மனிதருடைய மனசாட்சியுடன் கலந்துறவாடியது போல் உள்ளது எனக்கு.

  நீண்ட காலமாக இதனைக்குறித்து எழுத வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் நாகரீகமாக எழுதியுள்ளீர்கள் எனது எழுத்து கோபத்தால் வரம்பு மீறிவிடும் ஆகவே.... எழுதுவோம் என்று இருந்து விட்டேன்.

  என்ன செய்வது ? இன்றை சமூகத்தினர் இதற்குத்தானே கை தட்டி ஆரவாரம் செய்கின்றார்கள் வாராவாரம் அண்ணாச்சியோடு....
  ஆமா உங்களுக்கு மறதி அதிகமோ... என்னாச்சு ? நம்ம அண்ணாச்சி இதுக்கு ஒரு மருந்து வச்சு இருப்பாரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா.

   சொல்லும்போது நாமும் கொஞ்சம் நாகரீகம் கடைபிடிக்கவேண்டும் அல்லவா?

   நீங்கள் யாரரிட மருந்து இருக்கும் என்று சொல்கின்றீர்கள், யாரைப்பற்றி சொல்கின்றீர்கள்?எனக்கு புரியவில்லை.

   கோ

   நீக்கு
 2. அனைத்து தவறுகளுக்கும் காரணம் பெற்றோர்களே. அவர்கள் இவற்றை ஊக்குவிப்பதால் பலர் நாகரிகமின்றி நடந்துகொள்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா, நீங்கள் சொல்வதுபோல் பெற்றோரின் தவறும் தவறான வழி நடத்துதலும் தான் இது போன்ற அவலங்களின் அரங்கேற்றத்திற்கு காரணம்.

   வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 3. சரியாக சொல்லியுள்ளீர்கள். எனக்கும் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தால் இதே எண்ணம்தான் வரும், அவ்வப்போது கிளிப்பிங் காட்டும்போது பார்த்திருக்கிறேன்.

  அதை நடத்தும் அந்த நபர் செய்யும் சேஷ்டைகளை சிலர் நகைச்சுவை என்று நினைத்து சிரிப்பதைப் பார்க்கும் போது ..... எண்ணத்தைச் சொல்ல?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வர வர எதெற்கெல்லாம் சிரிக்கக்கூடாது என்பதுகூட தெரியாமல் இருக்கும் மக்களை பார்த்தல் சிரிப்புதான் வருகிறது வேதனையை மிஞ்சி.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு காரிகன்.

   நீக்கு