பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 நவம்பர், 2016

வழக்கு இன்னும் நிலுவையில்...

குற்றச்சாட்டு.

நண்பர்களே,

என்னை வசித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான நண்பர்களுக்கு தெரியும் இன்று என்னுடைய தந்தையாரின் நினைவு நாள்  என்று.

காலை முதல் என் தந்தையாரை குறித்த நினைவுகள் அதீதமாக என் நெஞ்சிற்குள் வியாபித்திருந்தது.

கடைசியாக அவரின் முகத்தை பார்த்த அந்த நாளும் அந்த நிமிடங்களும் அச்சரம் பிறழாமல் இன்னும் நினைவு பந்தலில் ஞாபக துளிகளாய்   விழுந்துகொண்டே இருந்தது.

நினைவு நாளை கடந்த வருடம் வரை அம்மாவோடு கூடி அனுசரித்த  எங்கள் குடும்பத்தில் இந்த வருடம் அம்மாவும் இல்லை என்பதால், இரட்டிப்பு சோகத்தில் துக்கத்தில் இருந்த என் உடன் பிறப்புகளோடு பேசவேண்டி தொடர்புகொண்டேன்.

என்னோடு பேசிய என் மூத்த சகோதரி, துக்கம் தாளாமல் தழுதழுத்த குரலில் என்னோடு பேசிக்கொண்டிருந்தார்.

அருகில் இல்லாமல் பல ஆயிரம் மையில் தொலைவில் இருக்கும் எனக்கு அவர்கள் குரலை கேட்பதுமட்டுமே முடிந்தது அருகிருந்து என்னுடைய உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவித்தேன்.

எத்தனை படித்தவர்களாயினும், இயற்கையினை உணர்ந்தவர்களாயினும், பகுத்தறிவு நிறைந்தவராயினும்  குடும்ப உறவுகளை இழக்கும்போது இடிந்துதான் போகிறார்கள்.

ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்ற என் சகோதரியும் இதற்கு விதிவிலக்கல்ல.

இப்படி பேசிக்கொண்டிருந்தசமயத்தில் சமூகத்தில் நிகழ்ந்த ஏமாற்றுகளும் நயவஞ்சகமும் குறித்த பேச்சு வந்தது.

அப்போது நல்லவர்களுக்கெல்லாம் ஏன் இதுபோன்று நிகழ்கின்றது, எனக்கு கடவுளின்பேரில் கொஞ்சம் வருத்தம் உண்டு என்றார்.

கடவுளின்மீது வருத்தம் ஏற்படுகின்றது என்றால் அவரை உங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்  என்பதுவும் ஒரு காரணம் என்றேன். 

சம்பந்தமில்லாதவர்களையும் , நமக்கு அன்பில்லாதவர்களையும் நாம் உரிமையுடன்  கோபித்துக்கொள்ள முடியாது.

இறைவனின் பார்வை என்பது மனிதனின் பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

நாம் செய்வது நல்லது என்று நாம் நினைத்திருப்பது இறைவனின் பார்வைக்கு அத்தனை நல்லதாக படாமல் போய்  இருக்கும் அல்லது , இதைவிட சிறப்பாக இவன் செய்திருக்கவேண்டும் என்றுகூட நினைத்திருக்கலாம்.

எப்படி ஒரு மாணவன் பரீட்சை எழுதிவிட்டு வெளியில் வந்து எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் எழுதி இருக்கின்றேன் கண்டிப்பாக எனக்கு குறைந்த பட்சம் நூற்றுக்கு தொண்ணூறு மதிப்பெண்கள் கிடைக்கும் என நினைத்துக்கொண்டிருக்கையில் அவன் நினைத்தபடி முடிவுகள் அமையவில்லை என்றால், இவன் கணிப்பு  வேறு அதை திருத்திய ஆசிரியரின் கணிப்பு   வேறு என்பதுதானே உண்மை.

அதுபோலவே, பல நேரங்களில் நாம் நம் சிற்றறிவிற்கு ஏற்ப சில நிகழ்வுகளை வகைப்படுத்தி, மதிப்பெண் அளிக்கின்றோம் ஆனால் இறைவனின் கணக்கும் மதிப்பீடும் அதற்காக தரப்படும் நன்மைகள் - சன்மானங்கள் வேறுவிதமாக அமையும்போது அதை ஏற்க மனம் மறுக்கின்றது.

நம் தந்தை நம்மோடு இன்னும் சில காலங்கள் இருந்திருக்கலாமே, இறைவன் ஏன் அவரை அத்தனை சீக்கிரம் எடுத்துக்கொண்டார், நாம் எல்லோரும் சிறுவர்களாக இருந்து அப்பா இல்லாமல் எத்தனை கஷ்ட்டப்பட்டோம், அப்பா முடிந்தவரை அனைவருக்கும் நல்லதுதானே செய்தார்?

எத்தனையோ குடும்பங்களில் அப்பாக்கள் புகை பிடிப்பவர்களாகவும் குடிகாரர்களாகவும், கெட்ட பழக்கங்களுக்கு அடிமைகளாகவும்  , குடும்பத்தை பராமரிக்காமல், ஊதாரிகளாகவும் இருக்கின்றார்கள்.

எந்த தீய பழக்கங்களுக்கும் ஆளாகாமல், சமூகத்தில் அவரை விட பெரியவர்கள்கூட அப்பாவிடம் ஆலோசனைக்கேட்டு அதன்படி செயல்படும்படியும் ஏழை மாணவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்தவர், நம் குடும்பத்திற்காகவே ஓடாக உழைத்தவர், இறை நம்பிக்கை மிகுந்தவர், பணி ஓய்வுபெற பல வருடங்கள்  இருக்கும்போதே,  அவர் அத்தனை சீக்கிரம் மறைந்துவிட்டதை இன்னும் நம்மால் எப்படி ஏற்க முடியும்? 

 நம் அப்பாவை நம்மை விட்டு பிரித்துவிட்டதினால் எனக்கு இறைவனை மீது இன்றளவும் வருத்தமே என்று அவர்கள் அப்பாவின் இந்த 32 ஆம் ஆண்டு நினைவு நாள் அன்றும் விரக்கிதியுடன் சொன்னது எனக்கும் ஏற்புடையதாகவே  இருந்தது. 

இருந்தாலும், நமக்காவது நம் அம்மா இத்தனை காலங்கள் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்தினார்களே அதை நினைக்கும்போது இறைவனின் கருணை நம்மீது நிழலாடியதாகத்தானே கருதவேண்டும் என என் மனதில் தோன்றியதை அவர்களிடம் சொல்லிக்கொண்டே என கண்ணீரை துடைத்துக்கொண்டேன். 

அப்பா உயிரோடு இருந்த காலங்களில் எனக்கு நினைவுதெரிந்தவகையில் அவரின் பெற்றோரின் ஒவ்வொரு நினைவு நாள் அன்றும் எங்கள் தாத்தா பாட்டி  படங்களின் அருகில், அன்று  விசேஷமாக சமைக்கப்பட்ட பலவிதமான காய்கறி பதார்த்தங்களோடு வாழை இலையில் சோறு போட்டு படைத்துவிட்டு பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து எங்களுக்கு உருண்டைகளாக உருட்டி கொடுத்து நினைவு நாட்களை  அனுசரிப்பார்.

இன்று எங்கள் தந்தையின் புகைப்படம் அருகே  இருக்கும் ஊதுவர்த்தி, சாம்பிராணி, பூக்களின் இடையில் நானும் ஒரு மெழுகாக இருந்து அவரின் தியாகங்களை எண்ணி  மானசீகமாக உருகுவதை நிறுத்தமுடியாமல் சகோதரியினுடனான தொலை பேசி தொடர்பிலிருந்து விடைபெற்றேன்.

அம்மா அப்பா இருவரின் ஆசிர்வாதங்களும் அவர்களது வழி நடத்துதல்களும் எங்களை தொடரும் என்று நம்பிக்கையோடும் இவர்களை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு  நன்றியோடும் எங்கள் அப்பாவின் ஆன்மாவிற்கு இந்த நினைவு பதிவு  அஞ்சலியாகிறது.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக