தண்ணி தொட்டி தேடி வந்த... !!
நண்பர்களே,
ஒரு சில விஷயங்களில் ஒருசிலருக்கு ஓரளவிற்குதான் புத்திமதி சொல்ல முடியும், அல்லது ஓரளவிற்குதான்வழி காட்ட முடியும்,அல்லது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் அழைத்து செல்ல முடியும் மற்றபடி அவர்களை, நாம் சொல்லும் அல்லது நாம் காட்டும் வழியை அல்லது நாம் போதிக்கும் போதனைகளை ஆலோசனைகளை ஏற்க வைக்க முடியாது.
அப்படி கடை பிடிப்பதும் கைவிடுவதும் அவரவர்களை பொறுத்தது என்னும் கருத்தை சுட்டிக்காட்ட ஆங்கிலத்தில் ஒரு கூற்றை சொல்லுவார்கள்,"you can lead a horse to water but you can't make it drink". அதாவது ஒரு குதிரையை தண்ணீர் தொட்டிவரைதான் நம்மால் அழைத்து செல்லமுடியும் ஆனால் அதை குடிக்க வைக்க முடியாது, அந்த குதிரை விருப்பபட்டால்தான் அது தண்ணீர் குடிக்கும் என்பது அதன் பொருள். அது உண்மையும் கூட.
நம்ம ஊர்ல கூட இந்த பொருள்பட , "நாம சொல்லத்தான் முடியும்" என பலர் பேசுவதை கேட்டிருப்போம் .
திடீர் என்று இந்த சொற்றொடர் என் நினைவிற்கு வர காரணம், சமீபத்தில் விலங்குகளுக்கான பிரத்தியேக தொலைக்காட்ச்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த ஒரு உண்மை நிகழ்வுதான்.
அமெரிக்காவிலுள்ள மியாமி மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் பண்ணையில், பல குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
ஆள் உயர புள் பூண்டுகள் நிறைந்திருந்த அந்த பண்ணையில் இருந்த குதிரைகளுள் பல உடல் மெலிந்தும், ஆரோக்கிய குறைவாகவும் காணப்பட்டன.
அதிலும் குறிப்பாக ஒரு குதிரை கொஞ்சம் கால் தாங்கி தாங்கியும் எம்பி எம்பியும் நடந்து கொண்டிருந்தது.
சுற்றிலும் கம்பி வேலி அடைக்கப்பட்டு பெரிய உயரமான இரும்பு கேட்டுகள் கொண்ட பாதுகாப்பான அந்த பண்ணை பிரதான சாலை ஓரத்தில் அமைந்திருந்ததால், சாலையில் போவோர் வருவோர் உள்ளே இருக்கும் விலங்குகளை சுலபமாக பார்க்க முடியும்.
அப்படி அந்தபக்கமாக போன ஒரு விலங்குகள் பாதுகாப்பு காவல்துறை அதிகாரியின் கண்களில் இந்த பண்ணையும் அதிலுள்ள குதிரைகளும் பட்டிருக்கின்றன.
உடனே தன் வாகனத்தை நிறுத்தி இறங்கி அந்த பண்ணையை நோட்டமிட, அங்கிருந்த அனைத்து குதிரைகளும் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததையும் அதிலும் ஒரு ஆண் குதிரை நடக்க சிரம படுவதையும் கண்டு அந்த பண்ணைக்குள் சென்று அதன் உரிமையாளரை சந்திக்க அந்த பண்ணையின் பிரதான இரும்பு கேட்டை திறக்க முயற்சிக்க அது பூட்டபட்டிருப்பதை அறிந்து அதன் பக்க வாட்டு கம்பி வேலியருகே சென்று உள்ளே நோட்டமிட்டிருக்கின்றார்.
அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்திருக்கின்றது.
அதாவது, அங்கே குதிரைகள் குடிப்பதற்காக ஒரு தண்ணீர் தொட்டி வைக்க பட்டிருந்தது.
அதுவும் ஒரு பழைய குளியல் தொட்டியின் ஓட்டையை அடைத்து குதிரைகளுக்கான தண்ணீர் தொட்டியாக மாற்றப்பட்ட ஒன்று.
கொஞ்சம் கண்களை சுருக்கி, உன்னிப்பாக பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
வெள்ளை நிறத்திலான அந்த தண்ணீர் தொட்டி முழுவதும் பாசி படிந்தும் படர்ந்தும் இருந்ததைகண்ட அந்த காவலருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது.
வாயில்லா ஜீவன்களுக்கு குடிப்பதற்கு ஒரு சுகாதாரமற்ற தொட்டியில் நீர் நிறப்பபட்டிருப்பதையும் அங்குள்ள குதிரைகளின் பரிதாபமான நிலைமையையும் தனது தலைமை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார்.
கூடவே பூட்டபட்டிருந்த அந்த பண்ணையின் பிரதான இரும்பு கேட்டிற்கு தான் கொண்டு வந்திருந்த ஒரு பச்சை நிற துணியை சுற்றி சீல் வைத்துவிட்டு அந்த பண்ணையின் உரிமையாளருக்கு ஒரு குறிப்பு சீட்டையும் அந்த கேட்டில் சொருகி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
தகவல் அறிந்த பண்ணையார் உடனடியாக தமது பண்ணைக்கு வந்து சேர , அப்போது அங்கு வந்திருந்த காவல்துறை அதிகாரி அவரிடம் சர மாரியாக புகார் சொல்ல, அவரோ சர்வ சாதாரணமாக இது நல்ல தண்ணிதான் நான்கூட இதிலிருந்துதான் எடுத்து குடிப்பேன் என சொல்லியவாறே பாசி படிந்திருந்த அந்த தொட்டியில் பாசிகளை விலக்கி தன் இரண்டு கரங்களால் தண்ணீரை எடுத்து பருகி காட்டுகிறார்.
அதற்கு அந்த அதிகாரி சொன்ன பதில், " நீங்கள் இந்த தண்ணீரை குடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் இந்த தண்ணீரை குதிரைகளுக்கும் இங்குள்ள கால் நடைகளுக்கும் கொடுப்பதை அனுமதிக்க முடியாது, உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டும், அதேபோல சுகவீனமாயிருக்கும் விலங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லையேல், இங்குள்ள அனைத்து கால் நடைகளும் அரசின் பாதுகாப்பிற்கு மாற்றப்படும்.
நீங்கள் எப்போது இந்த பண்ணையில் பாதுகக்கபட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி செய்கின்றீர்களோ அப்போதுதான் உங்களுக்கு இந்த கால்நடைகள் திரும்ப கிடைக்கும், மேலும் நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும்.
அப்படி நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கும் அதிகமான நாட்கள் ஆகியும் நிலைமையை சீர் செய்யவில்லை என்றால் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டி இருக்கும்" என கூறி மேலும் அந்த பண்ணையின் மற்ற இடங்களையும் பார்த்து ஆராய்ந்துவிட்டு சென்று விட்டனர்.
நண்பர்களே,
இந்த நிகழ்ச்சியை கண்டபோது, குதிரையை தண்ணீர்தொட்டி வரைதான் அழைத்து செல்லமுடியும் ஆனால் குடிக்க வைக்க முடியாது எனும் கூற்றை இந்த பண்ணையார் பொய்யாக்கி பாவம் அந்த குதிரைகள், கிடைத்தால் போதும் என்று இந்நாள் வரை அந்த பாசி படிந்த அழுக்கு தண்ணீரை குடித்துகொண்டிருந்திருக்கின்றன.
மேலும் வெளி நாட்டு குதிரைகள், கால் நடைகள் குடிக்கும் தண்ணீர் கூட தூய்மையானதாக , சுத்திகரிக்கபட்டதாக இருக்கவேண்டும் என்று அந்த நாட்டு அரசுகளுக்கு இருக்கும் கரிசனம் பாராட்டுக்குரியது.
நம்ம ஊரிலுள்ள நீர்தேக்க தொட்டிகளை ஆண்டுக்கு ஒருமுறையேனும் சுத்தம் செய்கின்றார்களா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
நம்ம ஊரிலுள்ள நீர்தேக்க தொட்டிகளை ஆண்டுக்கு ஒருமுறையேனும் சுத்தம் செய்கின்றார்களா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
மக்கள் குடிக்கும் தண்ணீர் தூய்மையானதாகவும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான தண்ணீராகவும் இருக்கவேண்டும் என்று நம்ம நாட்டு அரசுகள் கவலைபடவில்லை என்றால் கூட பரவாயில்லை குறைந்தது தினமும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தால் போதாதா?
அப்படி மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட அரசுகள் அமைவது குதிரை கொம்புதானோ என்னவோ?
இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் அமெரிக்காவில் குதிரையாக பிறக்க இப்பவே புண்ணியம் செய்ய ஆரம்பிக்கணும்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
உண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குஆனாலும் சுத்தமும் சுகாதாரமும் முதலில் மக்களிடமிருந்து தொடங்க வேண்டும்அல்லவா?
நாம் தான் அனைத்தையும் தெருவில் வீசி எறிகிறோமே
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.
நீக்குசுகம்தானே.
கோ
இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் அமெரிக்காவில் குதிரையாக பிறக்க இப்பவே புண்ணியம் செய்ய ஆரம்பிக்கணும்.///
பதிலளிநீக்குஓ! ம்ம்ம் உங்க ஆசை அதுவா சார்? புண்ணியம் செய்வதை இன்றே ஆரம்பிக்க!
எனக்கு அடுத்த ஜென்ம்அம் ஒன்று இருந்தால் நடிகையின் வீட்டு நாய்ஆக பிறக்க வேண்டும்!!!
இது எப்படி? ஹி,ஹி!:)
மகேசு....
நீக்குபுரிகிறது உங்க சொல்லில் (ஜொள்ளில்) இருக்கும் அர்த்தம்.
அப்பா உங்கள பார்க்கணும்னா வால் சீட்டு, I mean கால் சீட்டு வாங்கிட்டுதான் வரணும்.
கோ
நாங்கள் தண்ணீரை வியாபாரப்பொருளாக்கி ரொம்ப நாள் ஆச்சு...
பதிலளிநீக்குமனுசனுக்கே அந்த நிலைமைதான் ...எங்க போய் குதிரைய பார்க்க?
செல்வகுமார்,
நீக்குஅந்த ஆதங்கத்தால் உருவானதுதான் இந்த பதிவு.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
குதிரையாக மட்டுமல்ல குடிகாரனாக இருந்தாலும் மேலை நாட்டில்தான் பிறக்க வேண்டும். காரணம் இங்குதான் மிக "நல்ல தண்ணி" கிடைக்கும் குடிக்க
பதிலளிநீக்குநண்பரே,
நீக்குஉங்களுக்கு எப்போதும் "நல்லதண்ணி" கிடைப்பதை குறித்து சந்தோஷம்.
வருகைக்கும் தங்கள் "மேலான" கருத்திற்கும் மிக்க நன்றிகள்
கோ
நல்ல தொடக்கம் அரசே,
பதிலளிநீக்குஅறிவுரைச் சொல்வது எளிது, ஆனால்,, எது எப்படியோ வாயில்லா ஜீவன்களுக்கு கவலைப்படுவது நல்ல செயல் தான்.
தொடருங்கள்.
நன்றி அரசே...
வருகைக்கு மிக்க நன்றி
நீக்குநல்ல தலைப்புதான்...தலைப்பு சரிதான்..இங்கு தண்ணீர் சுத்திகரிப்பா ஹஹஹ் நல்லா சொன்னீங்க...மக்களுக்கே நல்ல தண்ணீர் கிடைக்காத போது இவர்கள் நாலு கால் செல்லங்களுக்கா செய்யப் போகின்றார்கள்? இங்குள்ள விலங்கியல் பூங்காக்களைப் பார்த்தாலே தெரியும்....உண்மை நிலவரம்..பாவம் அந்தச் செல்லங்கள்
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி, நாம மட்டும் பாவம் பார்த்து என்ன செய்ய?, சம்பந்தப்பட்டவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்கனுமே.
நீக்கு