பின்பற்றுபவர்கள்

திங்கள், 15 பிப்ரவரி, 2016

தானமாக கிடைத்த பசுமாடு !!

"ரகசிய காதலி"

நண்பர்களே,

அலுவலக ஊழியருள், வார இறுதி விடுமுறையில் செல்வோரும், ஓரிரு வார அல்லது மாத  விடுமுறையில் செல்வோரும் , தங்கள் விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் வேலைக்கு திரும்பும் போது, விடுமுறை எப்படி இருந்தது என்று கேட்டால், ஏகோபித்த பதிலாக அனைவரும் சொல்லுவது :
"அதை ஏன் கேட்கின்றீர்கள், ஒரே அலைச்சல், வேலை, ஓய்வெடுக்க கூட நேரமில்லை, எப்படா அலுவலகம் திரும்புவோம் என்று இருந்தது" என்றுதான்.

வேறு சிலர் சொல்வது: "ஐயோ, எப்படித்தான் வாரக்கணக்கில் விடுமுறையில் இருகின்றனரோ தெரியவில்லை, எனக்கு விடுமுறை துவங்கி இரண்டாம் நாளே ரொம்ப போர் அடிச்சி போச்சு, எப்படா விடுமுறை முடியும் எப்படா அலுவலகம் போவோம் என்று இருந்தேன்" என்பது.

இப்படி ஆளாளுக்கு தங்கள் விடுமுறை நாட்களை வெவ்வேறு கோணத்தில் பார்த்தாலும்  பெருவாரியான மக்களின் , பொதுவான கருத்து: அலுவலகத்தில் இருக்கும் சுகம், ஓய்வு, மன நிம்மதி, உடன் ஊழியர்களுடனான நட்பு, பேச்சு வார்த்தைகள், பழக்கங்கள், சுக துக்கங்களை நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளுதல் , மதிய உணவை சேர்ந்து கூடி சாப்பிடும்போது விவாதிக்கப்படும் செய்திகள், கதைகள், நாட்டு நடப்பு,ஜோக்குகள், சிரிப்பு போன்றவை வீட்டில் விடுமுறையில் இருக்கும்போது நமக்கு கிடைப்பதில்லை என்பதுதான்.

இது போன்ற சவுகரியங்களோடு வேறு சில அனுகூலங்களும் இருக்கத்தான் செய்கின்றன அலுவலகத்தில்.

அவையாவன;

அலுவலக நேரத்திலேயே, அலுவலக வேலைகளுக்கிடையிலேயே அன்றைய செய்தி தாட்களை வாசித்து கொள்ளுதல், தங்கள் பர்சனலான ஈமெயில் கடிதங்களை பார்ப்பது, பதிலளிப்பது,, இன்டர்நெட்டில் பல செய்திகளையும் புகை படங்களையும் பார்ப்பது, மேலும்  நண்பர்களோடு, உறவினர்களோடு தகவல் தொழில் நுட்ப உதவியுடன் உரையாடுவது,காணொளி காட்ச்சிகளை பார்ப்பது, காதில் பொருத்தி கேட்கும் கருவி மூலம் பாடல்களை கேட்பது ஆன் லைனில் வர்த்தகம் - பொருட்களை வாங்குவது போன்ற தமது எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்வது. 

வீட்டு மின் கட்டணம், சமையல் ஏறி வாயு கட்டணம், டிவி லைசன்ஸ் கட்டணம், ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட்டு புதுபித்தல் போன்ற எண்ணற்ற வேலைகளை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அலுவலக நேரத்தில் "சம்பளத்துடன்" செய்துகொள்வது.

இதில் , இந்த நிறுவனத்தின் நேரத்தில், இந்த நிறுவனத்தின் சம்பளத்தில் இந்த நிறுவனத்தின் கணணியை பயன்படுத்தி, வேறு நிறுவனத்தின் வேலைக்கு விண்ணப்பிப்பது, மேற் சொன்ன எல்லா வற்றிற்கும்  மகுடம் சூட்டும் செயல்.

பலரும் தங்கள் கடமைகளை செய்த வண்ணமே இதுபோன்ற தமது தனியான வேலைகளை செய்வதிலும் வல்லவர்களாக இருக்கின்றனர்.

இவை யாவும் நிர்வாகத்திற்கு தெரியாமல் இருக்குமா என்றால் இல்லை. 

நிர்வாகமே ஊழியர்களின் ஓய்வு நேரத்தில் ஒரு குறிபிட்ட நிமிடங்களுக்கு இது போன்ற செயல்களை அனுமதிக்கின்றன.

எனினும்  ஒரு சிலர் இந்த சலுகைகளை அளவுக்கு அதிகமாக  துஷ் பிரயோகம் செய்வது நல்லதல்ல அது ஏற்க முடியாததும் கூட.

இப்படித்தான் சில  ஊழியர்கள் தங்களுக்கு நிர்வாகம் கொடுத்த சில சலுகைகளை தவறாகவும் அளவுக்கு அதிகமாகவும் முறையற்ற விதத்திலும் பயன்படுத்தியதோடு, தங்கள் வேலை நேரத்தை இதுபோன்ற சொந்த காரியங்களுக்கு பயன்படுத்தி நிர்வாகத்தின் மின்அணு சாதனங்களான , கணிபொறி,தொலைபேசி, கை தொலைபேசி போன்றவற்றையும் உபயோகித்து   உற்பத்தி நேரத்தை வீணடித்ததை நிர்வாகம் கண்டு பிடித்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு  முதற்கட்ட அறிவுரை வழங்கப்பட்டது.

அதில் அலுவலக நேரத்தில் அவர் தன்னுடைய காதலியுடனும் தமது உறவினர்களுடனும் பல மணி நேரம் உரையாடியது,முன்னும் பின்னும் தகவல்கள் பரிமாறிகொண்டது போன்றவைகளை மேற்கோள்காட்டி இருந்தது.

ஆனால் அந்த ஊழியரோ, தன்னுடைய  தனிப்பட்ட , அந்தரங்க தகவல் பரி மாற்றங்களை, தமது அனுமதி இன்றி தனது முதலாளிகள் கண்காணிப்பதை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கின்றார்.

வழக்கின் தீர்ப்பு முதலாளிகளுக்கு சாதகமாக வந்தது.

அலுவலக நேரத்தில் அலுவலக கருவிகளை பயன்படுத்தி தனிப்பட்ட ஈமெயில் , இன்டெர்நெட், முக நூல், ட்விட்டர், போன்றவற்றை பயன்படுத்துவது கூடாது மேலும் ஊழியர்களின் வேலை நேரத்து அனைத்து செயல் பாடுகளையும் கண்காணிக்க நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது என்றும், அப்படி நிர்வாகத்தின் சட்டதிட்டங்களுக்கும் சலுகைகளுக்கும் மாறாக நடக்கும் ஊழியர்களை கண்டிக்கவும் , தண்டிக்கவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தேவையானால், வேலையை விட்டே எடுக்கவும் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கபட்டிருக்கின்றது.

இத்தனை விபரீத தீர்ப்பிற்கு வித்தாய்  அமைந்தவர்   ருமேனியாவை சார்ந்த Mr Bărbulescu என்பவர்.

அப்படி அவர் செய்த வித்தை என்ன?

அலுவலக நேரத்தில் அலுவலக சாதனங்களை பயன்படுத்தி தன் ரகசிய காதலியுடன் மணி கணக்கில் , அனுதினமும்  ஜொள்ளு சொட்ட சொட்ட கடலை போட்டதால தன் கடமையை செய்யாம கிடப்புல போட்டதுதானம்.

ருமேனியா வழக்கு மன்ற தீர்ப்பை அடுத்து ஐரோப்பிய வழக்கு மன்றமும், அலுவலக நேரத்தில் தொழிலாளர்களின் தனிப்பட்ட தகவல் பரி மாற்றங்களை கண்காணிக்க அவர்கள் சார்ந்த நிர்வாகத்திற்கு உரிமை கொடுத்து தீர்ப்பை உறுதி செய்திருக்கின்றது.

இந்த விஷயத்தை  அறிந்ததும் என் நினைவிற்கு வந்தது  நம்ம ஊர்ல சொல்லுவாங்களே  , " தானமாக கிடைத்த பசுமாட்டை பல்லை பிடித்து பார்க்க கூடாது" என்ற பழமொழிதான்.

இந்த சட்டத்தால் எனக்கு என்ன பாதிப்பு என்றுதானே கேட்கின்றீர்கள்?

இந்த சட்டம் என்னை எந்த அளவிற்கும் பாதிக்காது ஏனென்றால்,  என்னை பொறுத்த வரையில் அலுவலகம் அடைந்ததும் என்னுடைய கைபேசியை கூட எடுக்க நேரமிருக்காது  தலைக்கு மேலே அத்தனை வேலை, பாரம், கடமை (உணர்ச்சி), கண்ணியம், கட்டுப்பாடு.

அப்படி இருக்க காதலியுடன் மணி கணக்கில் உரையாடவோ, தகவல்களை அனுப்பவோ பெற்று கொள்ளவோ நேரம் ஏது என்பதைவிட Mr.Bărbulescu  அவருக்கு கிடைத்த மாதிரி நமக்கு காதலியோ, காதலிகளோ(??) யாரும்  இல்லை (அதற்கெல்லாம் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் - சரிதானே?)  என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

யாரு நம்புகின்றீர்களோ இல்லையோ, திருப்தி மகேஷ் நம்புவார், அது போதும்.

இந்த பதிவைகூட அலுவலக நேரத்தில் அலுவலக கணணி கொண்டு எழுதவில்லை என்பதை நீங்கள் நம்புவீர்கள் என நம்புகிறேன்.

சரிங்க  என்னுடைய   மேலாளர் என்னை நோக்கி வருகிறார் , அவர் காலையில் கொடுத்த ஒரு வேலை இன்னும் செய்து முடிக்கல, நான் அப்புறம் பேசறேன்.

நண்பர்களே,

அலுவலக வேலை நேரத்தில இத படிச்சி மாட்டிக்க போறீங்க , உஷார்.......

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 கருத்துகள்:

  1. இந்த சட்டம் என்னை எந்த அளவிற்கும் பாதிக்காது ஏனென்றால், என்னை பொறுத்த வரையில் அலுவலகம் அடைந்ததும் என்னுடைய கைபேசியை கூட எடுக்க நேரமிருக்காது தலைக்கு மேலே அத்தனை வேலை, பாரம், கடமை (உணர்ச்சி), கண்ணியம், கட்டுப்பாடு./// ஓ! அப்படியா? நம்பிட்டோம்:)))

    அப்படி இருக்க காதலியுடன் மணி கணக்கில் உரையாடவோ, தகவல்களை அனுப்பவோ பெற்று கொள்ளவோ நேரம் ஏது என்பதைவிட Mr.Bărbulescu அவருக்கு கிடைத்த மாதிரி நமக்கு காதலியோ, காதலிகளோ(??) யாரும் இல்லை (அதற்கெல்லாம் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் - சரிதானே?)/// யாருக்கோ பொறாமை:)))

    யாரு நம்புகின்றீர்களோ இல்லையோ, திருப்தி மகேஷ் நம்புவார், அது போதும்.///

    ம்ம்ம் நல்லாஆஆ நம்பிட்டேன் சார்:)

    பாவம் Mr Bărbulescu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      யாருக்கு பொறாமை? நானாவது சொல்லிட்டேன், சில பேர் .... மனசுக்குள்ளேயே....

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. ஆஹா...என்ன ஒரு கடமை உணர்ச்சி..ரசித்தேன் உங்கள் பதிவு...என் சொந்த நேரத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வகுமார்,

      வருகைக்கும் என் கடமை உணர்ச்சியை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

      சொந்த நேரத்தில் வாசித்த உங்களின் பொறுப்புணர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  3. வணக்கம் அரசே,

    சரிங்க மேலாளர் வந்துட்டார்,,, வேலையை முடிங்க உங்கள் சொந்த வேலையை,,,

    ரொம்ப கவலையோ அரசருக்கு,

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த வேலையை அலுவலகத்தில் செய்ய முடியாதுங்க எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம்,உண்மை நேர்மை கடமை கண்ணியம் கட்டுப்பாடு மட்டுமே.

      வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. உங்களை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே நம்பிட்டோம்...கோ..உங்கள் க்டமை உணர்ச்சியை என்னவென்று சொல்ல ..உங்கள் மேலாளர் வரும் சமயத்தில், அலுவலகக் கணினியிலிருந்து எழுதினீர்கள் என்பதை நம்புகின்றோம்....நாங்கள் படிப்பது எங்கள் சொந்த நேரத்தில்...ஹிஹி கீதா வேலை வெட்டியில்லாமல் வீட்டிருப்பதால் எல்லா நேரமும் சொந்த நேரம்தானே. துளசி இடைவேளை சமயத்தில் இருக்கும் போது இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லுதல் ம்க்கும் நாங்க எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப கடமைவாதிகளாக்கும்....ஹிஹிஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே நம்பினதுக்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு