பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 9 ஜூன், 2026

புரோட்டா கால்!!!

யார் பொறுப்பு?

 நண்பர்களே,

போகி , பொங்கல்,  தீபாவளி, ரம்சான், கிறிஸ்மஸ்   போன்ற விசேஷ விழாக்காலங்களில் எங்கள் ஊர் மட்டுமல்லாது பொதுவாக எல்லா ஊர்களிலும் , கடைகளும் சந்தைகளும் வழக்கமான நேரங்களைவிட கொஞ்சம் சீக்கிரமாகவும் நுகர்வோரின் வசதிக்காக  நேரம் கடந்தும் திறந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே.

அப்படி தீபாவளிக்கு முன்தினம் எங்கள் ஊரில்  மாலை சுமார் ஆறுமணிக்கு பிறகே திறக்கப்பட்டு விடிய விடிய வியாபாரம் ஜெகஜோதியாக நடைபெறும் கடைகளுள் நம்ம கலீல் பாயின் ஆட்டிறைச்சி கடையும் ஒன்று.

வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் பிரத்தியேகமான "பளீச்" வெளிச்சம் வீசும் பெரிய விளக்குகள் கொண்டும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடையை சுற்றி பெருவாரியான ஆட்கள் தங்கள்  கைகளில் சிறிதும் பெரிதுமான தூக்கு பாத்திரங்களை ஏந்திக்கொண்டு நின்றிருப்பார்கள்.

நம்ம கலீல் பாய் தமது மகன் மன்சூருடனும் இன்னும் கூடுதலாக  இரண்டு உதவியாளர்களுடனும் வந்து  சைக்கிளில் கட்டி கொண்டுவந்திருக்கும் சுத்தம் செய்யப்பட்ட முழு ஆட்டு உடல்களையும் , கூடுதலாக அவற்றின் உள்ளுறுப்புகளையும் அந்த கடை பந்தலின் உட்புறத்திலுள்ள  இரும்பு கொக்கிகளில் மாட்டி அவற்றின் ஈரம் காயாமலிருக்க அதன் மீது மெல்லிய துணிகளைச்  சுற்றி தண்ணீர் தெளித்து காட் சிப்படுத்தியிருப்பார்.

இவைமட்டுமன்றி   ஆட்டின் வெளி உறுப்புகளான தலை மற்றும் கால்களையும் அவர் கடை யின் மேசைமீது அடுக்கி வைத்திருப்பார்.

இறைச்சியை ஆவலோடு வாங்கும் அதே சமயத்தில், அதன் உள்ளுறுப்புகள் மற்றும் தலை கால்களை வாங்கும் கூட்டமும் அலைமோதும்.

இதில் விசேஷம் என்ன வென்றால் அன்றிரவே சுத்தம் செய்யப்பட்டு நெருப்பில் வாட்டி தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கால்களை வாங்கி , மீண்டும் அவற்றை வீட்டில் இன்னொருமுறை நெருப்பில் காட்டி , குழம்பு வைப்பதற்கு முன்னால்  அதன் குளம்புகளின்  இடுக்கிலுள்ள சிறு சிறு ரோமங்களை அகற்றிவிட்டு மஞ்சள் தடவி ஓரிருமுறை சுத்தமான நீரில் கழுவி அதனோடு சேர்க்க வேண்டிய மசாலா பொருட்களை சேர்த்து , உறை போன்ற நீளமான  அமைப்பிலுள்ள அடுப்பில் மரம் அறுத்த ரம்ப தூள்களை சிறிது நீர்தெளித்து கொஞ்சமாக ஈரப்படுத்தி அதனை அந்த அடுப்பில் போட்டு நன்றாக அழுத்தி அழுத்தி அதன் கீழே உள்ள விசேஷித்த துளை வழியாக தீமூட்டி அதன்மீது மசாலா போடப்பட்டு காத்திருக்கும்   ஆட்டுக்கால் சட்டியை போதுமான நீரூற்றி  வைத்துவிடுவார்கள்.

அந்த அடுப்பின் பெயருக்கேற்ப (இரவு அடுப்பு) இரவெல்லாம் புகைந்துக்கொண்டிருக்கும்  மிதமான சூட்டில் கால்கள் வெந்து பஞ்சுபோல , சுவைப்பதற்கும் கடிப்பதற்கு ஏற்ற விதத்தில் பதமாக வெந்து காத்திருக்கும்.

பின்னர் காலையில் அதை எடுத்து மீண்டும் வேறு அடுப்பில் வைத்து இன்னும் கூடுதலாக வெங்காயம் தக்காளி, இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், மிளகு,பட்டை லவங்கம் , ஏலக்காய்  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், கரம் மசாலா தூள், மிளகுத்தூள், கசகசா  போன்று பலவற்றை  இட்டு தேவையான அளவு உப்புபோட்டு நன்றாக கொதிக்கவைத்து சிறிது தேங்காய் பாலூற்றி, பின்னர் கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு இறக்கி வைப்பார்கள். 

அப்படியே அருகிலுள்ள மற்றோரு அடுப்பில் நீராவியில் வெந்து பூத்திருக்கும் மல்லிப்பூ இட்டிலியையும் பதமாக எடுத்து அன்று காலை உணவிற்கு குடும்பத்து உறுப்பினர்கள்  அனைவருக்கும் அன்போடு வாழை  இலையில் பரிமாற பண்டிகை குதூகலத்துடன் இந்த  ஆட்டுக்கால் குழம்பும் ஆவிபறக்கும் இட்டிலியின் சுவையும் கொண்டாட்டத்தை பலமடங்கு உயர்த்தி வாயின் வாயிலில் இருந்து உமிழ் நீரை சுரக்கச்செய்யும்.

அப்போதெல்லாம், காலை உணவாக இட்டிலி, அல்லது தோசை, அல்லது இடியாப்பம், அல்லது ஆப்பம் போன்றவற்றையே இந்த ஆட்டுக்கால் குழம்புடன் பரிமாறுவார்கள்.

புரோட்டா என்பது அப்போதெல்லாம் வீட்டில் செய்வது எனக்கு தெரிந்து இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

எனவே புரோட்டா + கால் என்பது ஒருசில ஓட்டல்களில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் சமீப காலங்களில் இந்த புரோட்டா  வீடுகளிலும் தயாரிக்கப்பட்டு காலோடு  பரிமாறப்படுவதை யூ ட்யூப் , மற்றும் சில சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது. மேலும் கடந்த வருடம் அமெரிக்காவிலுள்ள உறவினர் வீட்டிலும் இந்த புரோட்டா தயாரித்து காலோடு பரிமாறியதை நன்றியோடு நினைவுகூருகிறேன்.

அப்படி சமீபத்தில் செய்தி ஊடகங்கள், வலைத்தளங்கள் வாயிலாக பரவலாக - பரப்பரப்பாக  பார்க்க நேர்ந்த புரோட்டா கால்தான் இந்த பதிவை எழுத தூண்டியது என்றால் அது மிகை அல்ல.

இன்பமாக , மகிழ்ச்சியாக , வயல் வெளிகளிலும் , புல்  வெளிகளிலும் காலார மேயர  ஆட்டின் காலை குழம்புவைத்து புரோட்டாவோடு  சாப்பிடும்போது ஜீவகாருண்ய சிந்தை  அவ்வப்போது மேலிட்டாலும் அதனதன் சங்கல்பம்  அப்படியிருந்தால் நாம் என்ன செய்யமுடியும், எது நடக்கனுமோ அது நடந்துதான் ஆகவேண்டும்  எது நடக்கக்கூடாதோ அது நடக்காமல்தான் போகும்  எனும் எதார்த்த நடைமுறை  சிந்தையும் எழாமலில்லை.

எப்படி இருந்தாலும் இவற்றை படைத்த , நமக்கும் மேலுள்ள ஒருவனின்  ஆளுகைக்கு மரியாதை கொடுத்து எதை எதை  எப்படி கையாளவேண்டுமோ அதை அதை அப்படி  கையாள்வதையும், மரியாதை செய்வதையும் , மதிப்பளிப்பளிப்பதையுமே   இந்த புரோட்டாகால் நமக்கு புலப்பபடுத்துவதாக எண்ணி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

இதைத்தான் ஆங்கிலத்தில் "PROTOCOL"  என்றைழைக்கின்றனரோ?

தலைப்பைப்பார்த்தம் இது எதோ தலைப்பு  சமாச்சாரம் என்று நினைத்து வாசிக்க ஆரம்பித்திருந்தால்  அதற்கு யார் பொறுப்பு?

உங்களுக்கும் இப்படி புரோட்டாகால் பற்றிய  அனுபவம் உண்டென்றால் மறக்காமல் பின்னூட்டத்தில் வந்து உங்களது அனுபவத்தை இங்கே பின்னுங்கள்.

பி.கு: சில ஊர்களில் இதை புரோட்டா  என்றும் சில ஊர்களில் பரோட்டா  என்றும் சொல்கிறார்கள் இதில் எது இந்த காலுக்கு சரியாக இருக்கும் என்று எனக்கு கால் பண்ணி  சொல்ல மறக்காதீர்கள். ஒருக்கால் தொலைபேசி விவரம் இல்லாதவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். 

நன்றி,

வணக்கம்,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


2 கருத்துகள்:

  1. நாக்கில் எச்சில் ஊறியது மிக அருமை சிறந்த சிந்தனை நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நண்பரே,

    பதிவை வாசித்து ரசித்து ருசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி., தங்கள் விவரம் தந்திருந்தால் ஒருகால் என் மகிழ்சி இன்னும் கூடியிருக்குமோ?

    பதிலளிநீக்கு