பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 15 மே, 2022

தண்டவாளம் ஏறிய வண்டவாளம் !

மயில்  பயணம்!

நண்பர்களே,   

வண்டவாளம் என்ற பதத்தை   பொதுவாக "யோகியதை" என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்துவார்கள். அந்த யோகியதை என்பது எப்போதும் எதிர்மறையான குணநலனை மட்டுமே குறிப்பதாக அமைந்துவிடுகிறது. அதை  ஏன் நேர்மறையான குணநலனை குறிக்க பயன்படுத்தக்கூடாது?

அப்படி  தண்டவாளம் ஏறி பயணித்த பயணத்தின் நேர்மறையான  "வண்டவாளம்" தான் இந்த  பதிவு.  

ஏற்கனவே சில முறை சாலை மார்கமாக  அயர்லாந்தை தவிர மற்ற எல்லா UK    நாடுகளுக்கும்  சென்றிருந்தாலும் கடந்த வாரம் மீண்டும் ஒருமுறை ஸ்காட்லாந்து சென்று வந்தது  எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவ பயணமாகவே அமைந்தது  என்றே சொல்ல வேண்டும்.

பயணத்தைக்குறித்து சொல்லும் முன், தெரிந்த விடயம் என்றாலும், மீண்டும் ஒரு  நினைவு தூண்டல்:

இங்கிலாந்து, கிரேட் பிரிட்டன், யுனைட்டட் கிங்டம்   என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும்  இந்த வெள்ளையர் நாட்டின் தனித்துவ வேறுபாடுகள்:

London  ஐ தலை நகரமாக  கொண்டு இயங்கும் தனி நாடு இங்கிலாந்து.

Cardiff ஐ தலை நகரமாக கொண்டு இயங்கும் தனி நாடு Wales 

Edinburgh வை தலை நகரமாக கொண்டு இயங்கும் தனி நாடு ஸ்காட்லாந்து. 

Belfast ஐ தலை நகரமாக கொண்டு இயங்கும் ஒரு தனி நாடு வடக்கு அயர்லாந்து.

இங்கிலாந்து + ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்   நாடுகளின் கூட்டை Great பிரிட்டன் என்றும், 

இங்கிலாந்து + ஸ்காட்லாந்து + வேல்ஸ் + வடக்கு அயர்லாந்து    யுனைட்டட் கிங்டம் என்று அழைக்கப்படுகிறது.

இப்போது பயணத்தோடு பயணிப்போம்:

பெரும்பாலும்  நாடுவிட்டு நாடு சொல்வதாயின் விமானத்தில் மட்டுமே பயணித்து பழகி இருந்த எனக்கு, இந்தமுறை - Cross Country - தொடர்வண்டியில் இரவு நேரத்தில் பயணித்தால்  எப்படி இருக்கும் என தோன்றியது.

லண்டனில் இருந்து Glasgow செல்வதாயின் சுமார் 8 மணி நேரம் எடுக்கும் , இத்தனை மணிநேரம்  இருக்கையில் அமர்ந்து செல்வது  அத்தனை கடினம் இல்லை தான்.  தொலைதூர பயணத்தின்போது விமானத்திலும்  பனிரெண்டு மணி நேரம் வரை அமர்ந்து சென்ற அனுபவம் இருக்கிறதுதான் இல்லை என்று சொல்வதற்கில்லை.

எனினும் இரவு நேரத்தில் புறப்படும் தொடர்வண்டியில்  கை  கால்களை நீட்டி சுகமாக படுத்து சென்றால் எப்படி இருக்கும்?

இரவு சரியாக 11:55 மணிக்கு புறப்படும் வண்டியாதலால் பயணத்தின்போது வெளியில் பார்த்து ரசிக்க இயற்கை காட்சிகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியாது என்பதாலும் , இந்த Sleeper தொடர்வண்டியில் செல்ல முடிவு செய்தேன்.

படுத்துக்கொண்டு, உறங்கிக்கொண்டு செல்லும் வசதிகொண்ட  அந்த தொடர்வண்டியின் சிறப்பை சொல்வதற்குமுன், அந்த வண்டியில் பயணிக்கும் சிறப்பு வகுப்பு பயணிகளுக்கென்று  தொடர்வண்டி நிலையத்தில் அமைந்திருக்கும் பயணியர் தங்கும்(ஓய்வு) இடம் - 1st class Guest Lounge பற்றி சொல்லவேண்டும்.

அந்த குறிப்பிட்ட ஸ்லீப்பர் வண்டியில் நான்கு வகையான (வசதி) - வகுப்புகள் உள்ளன.

1. அமர்ந்து செல்லும் இருக்கை  - வகுப்பு (SEATED) 

2. கிளாசிக்  - வகுப்பு 

3. கிளப் வகுப்பு 

4. டபுள் வகுப்பு .

இதில் கிளப் மற்றும் டபுள் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் இந்த தங்கும் அறைகள் அனுமதிக்கபடுகின்றன. 

ஏற்கனவே குறிப்பிட்டபடி OVERNIGHT TRAIN என்பதால், முன்கூட்டியே வந்தவர்கள் நடை மேடைகளிலோ அல்லது ரயில் நிலைய வளாகங்களில் காத்திருக்காமல் பாதுகாப்பான சொகுசான இடத்தில் தங்கி இருந்துவிட்டு ரயில் புறப்படும் அறிவிப்பு வந்தவுடன்,   எழுந்து ரயிலில் ஏறிக்கொள்ள வசதியாக இந்த தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதி குறித்த தகவலை ஏற்கனவே அறிந்திருந்ததால் , என்னுடைய பயண சீட்டை காண்பித்துவிட்டு ரயில் நிலயத்திற்குள்ளேயே அமைந்திருக்கும் தங்குமிட கட்டிடத்திற்குள் நுழைந்தேன், அப்போது மணி சுமார் இரவு 10.00.

இது என்ன பயணிகள் ஓய்வு கூடமா அல்லது ஐந்து நட்சத்திர விடுதியின் வரவேற்பறையா?




மிடுக்கான சீருடை  அணிந்த  பணியாளர்கள், பவ்வியமாக வணங்கி வரவேற்று  நம் விருப்பத்திற்கேற்ப இடங்களில் அமர வைத்தனர். 

குளிரூட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எந்த குளிர்பானத்தையும் எடுத்து பருகிக்கொள்ளலாம்   சூடான பானம்  வேண்டுவோருக்கு வித விதமான- அப்போதே வறுத்து அரைத்த காபி தூள் கொண்டு காபி மற்றும்  டீ போன்றவற்றை தயாரித்து வழங்குகிறார்கள்.

சிற்றுண்டிகளாக   - நொறுக்குதீனிகளாக பலவிதமான  freshly made cakes , பிஸ்கட்டுகள், உலர்ந்த  பழங்கள், வறுத்த பாதம் பிஸ்தா, முந்திரி, போன்றவைகளும் , ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம்   போன்றவைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சிறப்பாக பராமரிக்கப்பட்டிருக்கும்  நவீன வசதிகள் கொண்ட குளியல் அறைகள், கழிவறைகள், heating/air condition  சிஸ்டம், விளக்குகள் , இருக்கைகள் என அனைத்தும்  பயண சீட்டின் விலையில் அடக்கம்.(ஆனால் அவர்கள் சொல்வது இது ஒரு courtesy  - hospitality   - விருந்தோம்பல்  என்று).

சரியாக இரவு பதினொறு மணிக்கு வண்டி புறப்பாடு குறித்த அறிவிப்பு பயணிகளுக்கு  கேட்கும் வண்ணம் ஒலி  பெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது.

அப்போது அங்கிருந்து ரயில் நிலையத்திற்குள் சென்று  அவரவர் தங்களின் முன்பதிவிற்கேற்ப அந்தந்த compartment களில் ஏறிக்கொள்ளலாம், தடுமாற்றம் இருந்தால் உதவுவதற்கு ஆங்காங்கே நடத்துனர்கள்- (Stuarts) இருக்கின்றனர், பயணம் முழுவதும் அவர்களும் அதே வண்டியில் நம்மோடு பயணிக்கின்றனர்.

எனது compartment கிளப் வகை என்பதால் அதை அடைய சுமார் 15 பெட்டிகளை கடக்க வேண்டி இருந்தது, மொத்தம் 21பெட்டிகள் என்ஜினை சேர்க்காமல்.

எனது கம்ப்பார்ட்மென்டை அடைந்து  எனக்கான அந்த தனி அறையை திறந்து பார்த்த எனக்கு மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமும் மகிழ்ச்சியும்  ஏற்பட்டது ,  முதன்முறை cross country - overnight sleeper train பயணமாயிற்றே இருக்காதா பின்னே. (அப்படியே என் நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கி நகர்ந்தன-  சென்னையில் இருந்து திருச்சிக்கு இரவு நேர ஸ்லீப்பர் ரயிலில் பயணித்த அனுபவம் நினைவிற்கு வந்தது- இந்த இடத்தில் "சொர்க்கமே என்றாலும்...." என்ற பாடலின் ரீங்காரத்தை சட்டென துண்டித்தேன் - No  comparison).

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட electronic கார்ட் மூலம் கதவை திறந்து  அறையில் நுழைந்ததும் இடது பக்கம் தூய்மையான மெத்தை, தலையணை, போர்வை. எதிரில் ஒரு வாஷ் பேசின் , டவல், hand wash . வலதுபக்கம்    நவீன குளியல் மற்றும் கழிவறை இருந்தது.

கூடவே complementary பொருட்களாக, ஒரு சோப்பு,முகம் துடைக்க ஒரு flannel, toothpaste , brush, razor, mineral water  bottle  போன்றவையும் வைக்கப்பட்டிருந்தன

ஏற்கனவே பயணியர் தங்குமிடத்தில் freshen-up செய்திருந்தாலும் , மீண்டும் அந்த குளியல் அறை shower ல் ஒரு இதமான சூடு தண்ணீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு (காசு கொடுத்திருக்கோம்ல) கதவு, ஜன்னல் திரைகளை மூடிவிட்டு உறக்கம் வரும்வரை I-PADஇல் "தமிழக" செய்திகளை பார்த்துவிட்டு   (WIFI இணைப்பு உண்டு) உறங்கப்போனேன்.




அடுத்த 7 மணிநேரம் "மயில் இறகு" தொட்டிலில் உறங்குவதுபோன்று அமைதியான சுகமான உறக்கம். 

காலையில் 6:00 மணி  சுமாருக்கு எழுந்து காபி குடிக்கலாம் என்று கிளப் CAFETERIA வுக்கு செல்லும் பாதி தூரத்தில் எதிரில் வந்த Stuart, காலை வணக்கம் சொல்லி ஏதேனும் உதவி   வேண்டுமா என கேட்க்க, பரவாயில்லை, நான் காபி குடிக்கத்தான்   போகிறேன் என்று சொன்னேன்.

அவரோ, நானே கொண்டுவருகிறேன் என சொல்லிவிட்டு சுட சுட காபியும் கூடவே இரண்டு packet Scottish short bread பிஸ்கட்டும் கொண்டுவந்து கொடுத்தார்.

அருந்திவிட்டு, மீண்டும் ஒரு குளியல் போட்டுவிட்டு, இன்னும் அரை மணி நேரத்தில்  அடையப்போகும்  Glasgow ரயில் நிலையத்தை எதிர்பார்த்து சன்னல் வழியில் விழிகளை பதியவைத்தேன்.

நேற்று மாலை லண்டனில்  என்னை வழி அனுப்பிய   அந்த சூரியன் பிரகாச ஒளியுடன் என்னை வரவேற்க  Glasgow வில் காய்ந்துகொண்டு.... இல்லை இல்லை காத்துக்கொண்டிருந்தது.

நான் பயணித்த வண்டி நிறுவனத்தின்  பெயர் Caledonian Sleeper Train. 




இந்த ரயில் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்தின் Edinburgh, Glasgow, Inverness, Aberdeen  மற்றும் Fort William போன்ற  ஒரு சில குறிப்பிட்ட  நகரங்களுக்கு மட்டுமே பயணபடுகிறது.

எனவே மேற்சொன்ன அனைத்து ஊர்களுக்குமான பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படும். 

நான் சென்ற ரயில் Glasgow விற்கும்  Edinburghக்கும் நேரடியாக செல்லும் வண்டி. 

லண்டனில் ஏறும்போது 21 பெட்டிகளாக இருந்த ரயிலில் Glasgowவில் இறங்கும்போது 15 பெட்டிகளை  காணவில்லை; ரயிலில்  கொள்ளை கேள்விப்பட்டிருக்கின்றோம் இங்கே ரயிலே கொள்ளைபோய்விட்டதோ? விசாரித்ததில் .....

லண்டனில் இருந்து புறப்படும் இந்த 21 பெட்டிகளைக்கொண்ட ரயில்  Carlisle என்ற ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு, Edinburgh மற்றும் Glasgow செல்லும் பயணிகளின் பெட்டிகள்  தனியாக பிரிக்கப்பட்டு வேறு வேறு பாதைகளில் பயணிக்கின்றன என்ற தகவல் கிடைத்தது.

சும்மா ஒரு ஐடியாவிற்காக கீழே உள்ள You Tube லிங்கை விருப்பமும் அதற்கான நேரமும் இருந்தால் க்ளிக்  செய்து விளம்பரங்களை தவிர்த்துவிட்டு  பார்க்கவும், இது 2020 மார்ச் மாதம் யாரோ ஒரு யூ-டூபரால் எடுக்கப்பட்ட காணொளி. அதில் அவர் போடும்  அனுபவ குறிப்புகள் அவரது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே.

Caledonian Sleeper Club Room Review : Is it worth it? - YouTube

மலைகள், பள்ளத்தாக்குகள், ஆற்று மேம்பாலங்கள், கடற்கரை ஒட்டிய பாதைகள், குகைகள் , வயல் வெளிகள், காட்டு பாதைகள் என்று எழில்கொஞ்சும் அந்த இயற்கை அழகு பொங்கி வழியும்  வழித்தடங்களில் பயணித்து Glasgow நகரை அடைந்து , ஓட்டலில் உடமைகளை வைத்துவிட்டு பின்னர் எங்கெங்கு சென்றேன் என்னவெல்லாம் பார்த்தேன் , பிறகு அங்கிருந்து  Edinburgh  சென்றதையும் அங்கு பார்த்த இடங்களின் சிறப்புகளையும்  நினைவு படுத்தி பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; இப்போதே சொல்வதாயின் பதிவு லண்டன் to ஸ்காட்லாந்து இருப்புபாதைபோல நீண்டுகொண்டே போகுமே.

பிகு: ஊர் பெயரின் spelling, Edinburgh என்றிருந்தாலும் உச்சரிக்கும்போது "எடின்Bரா"  என்ற ஓசையில்  தான் சொல்லவேண்டுமாம்  (Ed - in  -Bruh )

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ. 

   

27 கருத்துகள்:

  1. சிறப்பான ரயில் பயணம். நம் ஊர் இரயில் பயணங்களுடன் ஒப்பீடு செய்ய முடியாது. முன்பை விட தற்போது வசதிகள் அதிகம் என்றாலும் பராமரிப்பும், மக்கள் அவற்றை பயன்படுத்தும் விதமும் நிறைய மாற வேண்டும். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராமரிப்பு முதலிடம் வகிக்கின்றது என்பது உண்மை..வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்.

      நீக்கு
  2. தெரிந்த விஷயம்தான் என்று நீங்கள் சொல்லி இருக்கும் விஷயத்தை இன்றுதான் தெரிந்து கொண்டேன்!

    இப்படிப்பட்ட பயணம் செய்ய கொடுத்து வைத்திருக்கத்தான் வேண்டும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய செய்தி அறிந்துகொண்டதாக கூறி இருக்கின்றீர்கள், மகிழ்ச்சி திரு ஸ்ரீராம்

      நீக்கு
  3. பதில்கள்
    1. பதிவினை ரசித்தமைக்கு நன்றிகள் தனபால்..

      நீக்கு
  4. சென்ற பதிவிற்கு உங்கள் பதிலும் பார்த்துவிட்டேன் அரசே!!!!!

    தலைப்பு ஈர்ப்பு எனக்கு ரயில், ரயில் பயணம் ரொம்பப் பிடிக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயில் பயணம் பிடிக்காதவர்கள் வெகு சிலரே.தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அம்மையீர்.

      நீக்கு
  5. அருமையான ரயில் பயணம் கோ! அதானே மன்னருக்கு ஏற்ற பயணம்!

    //அப்படி தண்டவாளம் ஏறி பயணித்த பயணத்தின் நேர்மறையான "வண்டவாளம்" தான் இந்த பதிவு. //

    ஹாஹாஹா

    அழகான பயணம், என்னென்ன வசதிகள்! வாவ்! அதான் காசுகொடுத்திருக்கோம்ல அப்ப எல்லாத்தையும் அனுபவித்து விட வேண்டும்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே அது ஒரு சுகமான பயணம்தான், மறுமுறை இந்த பக்கம் வந்தால் கொஞ்சம் அந்தப்பக்கமும் போய்ட்டுவாங்க.

      நீக்கு
  6. நம்ம ஊர் ரயில் நிலைய வசதிகள் பற்றி ஒப்பிட முடியாதுதான். காரணங்கள் பல. நம் ஊரில் ஏழை எளிய மக்கள் நடுத்தரவர்க மக்கள்தான் அதிகம் என்று தோன்றுகிறது. மற்றொன்று மக்கள் அங்கு போல் இங்கு பராமரிக்க ஒத்துழைப்பதில்லை.

    ரயில் பயணத்தில் நான் விரும்புவது பெரும்பாலும் பகல் பயணம் 8, 9 மணி நேரப் பயணம் என்றால். ஜன்னல் வழி இயற்கையை ரசிக்கலாமே என்று

    நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் வழி நெடுக இயற்கை நிறைய...பகல் பயணம் நன்றாக இருக்கும் இல்லையா?

    யுட்யூப் பார்க்கிறேன் கண்டிப்பாக. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

    ஆமாம் எடின்பர்க் - எடின்ப்ரோ...

    நெருங்கிய உறவினர் பெண் அங்கு படித்தாள் அந்தப் பல்கலைக்கழகத்தில்.

    ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். நம்ம ஊர் வசதிகளை ஒப்பிட முடியாதுதான். வெங்கட் சொன்னதுபோல, பயன்பாடும் பராமரிப்பும் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன.
      தாங்கள் சொல்லும் கருத்திற்கு உடன் படுகிறேன், ஏழை எளிய மக்கள் , நடுத்தர மக்கள் உண்மைதான், இருந்தாலும் அவர்கள் செல்லும் பொது போக்குவரத்து வாகனங்களை எப்படி வைத்துக்கொள்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் பயணிக்கும் பள்ளிக்கூட பேருந்திலேயே எத்தனை கவனக்குறைவாக பராமரிப்பு.
      எனக்கும் இரவு பயணம் மிகவும் பிடிக்கும், திரும்பி வரும்போது பகல் ரயிலில் வருவதென்று ஏற்கனவே முடிவுசெய்து ஒழுங்கு செய்திருந்ததால் எந்த இயற்கை காட்சியையும் மிஸ் பண்ணவில்லை.
      பதிவினை ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றிகள் அம்மையீர்.

      நீக்கு
  7. உங்களின் மயிலாகிய ரயில் பயணம் அதன் வசதிகள் வியப்பாக இருக்கிறது. தங்கும் அறை உட்பட. அழகான ரயில் பயணம். விவரங்கள் அனைத்தும் அறிந்து கொண்டோம்.
    மிக்க நன்றி கோ

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே.

      நீக்கு
  8. காபிக் கொட்டையை பொடியாக்கி உடனே காஃபி!!!! மணக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி மணம் சென்னைவரை வீசி உங்கள் மனதை கொள்ளை அடித்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எத்தனை சிறப்பான காபி என்று.
      உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?

      நீக்கு
  9. உங்களோடு சேர்ந்தே பயணம் செய்ய வைத்தீர்கள், நன்றி

    பதிலளிநீக்கு
  10. கவிஞரின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. பயணத்திற்குப் வந்து விட்டோம். இனிதான் நிகழ்வுகள் போலும்.

    நீங்கள் சொல்லும் ரயில் பயணியர் தங்கும் விடுதியின் வசதிகள் தேவகோட்டை ரஷ்யாவை மிஞ்சி விட்டதைப் போல் இருக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் நண்பரே.

    பயணியர் தங்கும் இடம்,ரஷியாவை மிஞ்சுமா என்பது தெரியவில்லை ஆனால் தேவகோட்டையை நெருங்க கூட முடியாது என்பதை திடமாக நம்பலாம்.

    வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. ஒரு புதிய உலகிற்கு சென்று வந்ததைப் போலிருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

      பதிவை பாராட்டிய விதம் மகிழ்வளிக்கிறது, நன்றிகள் ஐயா.

      நீக்கு
  14. பணம் கொடுத்தால் வசதிகள் கிடைக்கும் என்ற நிச்சயத்தன்மை அங்கு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள்தொகை மிகுந்த இந்தியாவிலேயே இரயில்வேயில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையும் கவனிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு வணக்கம்,

      பணம் கொடுத்தால் வசதிகள் கிடைக்கும் என்ற நிச்சயம் இங்கு இருப்பதாலும் , வாக்களித்த வசதிகள் நிறைவானதாக இல்லாமல் போனால் அதனை ஈடுசெய்யும் நேர்மையும் இங்கு இருப்பது சிறப்பு.

      இப்போதெல்லாம் நம் திருநாட்டின் ரயில் போக்குவரத்தில் பல முன்னேற்றங்கள் நிகஸ்வது குறித்து மிக்க மகிழ்ச்சி.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  15. வணக்கம் அரசே ரயில் பயணம் அருமை. அதை தாங்கள் சொன்ன விதம் ,,,,,,,,,, மயில் இறகு அருமை அருமை உவமை உவமேயம் எல்லாம் கொண்டு
    லண்டன் முதல் ஸ்காட்லான்ட தூரம் என்ன தொடரும் போடுங்கள் அஹா அஹா

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் பேராசிரியரே.

    மயிலிறகு உவமையை உன்னிப்பாக கவனித்து கருத்திட்டமை பாராட்டுக்குரியது.

    லண்டனில் இருந்து ரயில் மூலம் ஸ்காட்லாந்து செல்ல சுமார் 4 முதல் 6 மணி நேரம் வரை ஆகும், பயணிக்கும் ரயில் மற்றும் தடம் போன்றவற்றை பொறுத்து.

    எப்போ பயணிக்க போகிறீர்கள் தெரிவியுங்கள், புளியோதரையம், புடலங்காய் பொரியலும் ஸ்டேஷனுக்குகொண்டு வந்து தர ஏற்பாடு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்

    பதிலளிநீக்கு